சிறப்புக் குழந்தைகளின் வாழ்வில் அர்த்தத்தை ஏற்படுத்த அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ஆசிரியை !

அமெரிக்காவில் ஆசிரியர் மற்றும் கவுன்சிலராக இருந்த வசுதா பிரகாஷ், 2001-ல் இந்தியா திரும்பி V-Excel கல்வி மையத்தை தொடங்கி இதுவரை 35 ஆயிரம் சிறப்புக்குழந்தைகளுக்கு கல்வி அளித்துள்ளார். 

0

வெறும் 11 மாணவர்களுடன் ஒரு சிறிய கற்றல் மையமாக துவங்கப்பட்ட ஒரு மையம் தற்போது ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாக செயல்படுகிறது. இந்நிறுவனம் நகர்புற மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த சிறப்பு கவனம் தேவைப்படும் 35,000 தனிநபர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வி-எக்செல் (V-Excel) கல்வி அறக்கட்டளை 2001-ம் ஆண்டு வசுதா பிரகாஷ் என்பவரால் நிறுவப்பட்டது. இவர் ஒரு கல்வியாளர் மற்றும் ஆலோசகர். நியூ ஜெர்சியின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கல்வியில் டாக்டரேட் பெற்றுள்ளார்.

வசுதா; எப்போதும் இந்தியாவின் கல்வித் துறையில் பணிபுரியவே விரும்பினார். அமெரிக்காவில் டாக்டரேட் பயிற்சியில் இருந்தபோது தனது ஆராய்ச்சி பேப்பர்களுக்கு இந்தியாவை அடிப்படையாகக் கொண்டே ஆராய்ந்தார். இங்குள்ள சிறப்புக் கல்வியின் நிலையை புரிந்துகொள்ள முயற்சித்தார்.

வசுதா இந்தியாவிற்கு திரும்பியதும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இது பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்தது. இவர்கள் சிறப்புக் குழந்தைகளுக்கு போதுமான பள்ளிகளோ சேவைகளோ இல்லாததை வசுதாவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். சில ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு V-Excel துவங்கினார்.

தற்போது வி-எக்செல் இந்தியா முழுவதும் சென்னை, திருநெல்வேலி, ஈரோடு, நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்பது மையங்களைக் கொண்டுள்ளது. எங்களது மையங்கள் ஆயுட்கால கல்வி மையம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது நாங்கள் ஆரம்பத்திலேயே கண்டறிவதில் துவங்கி அவர்கள் பணியில் இணையும் வரையிலோ அல்லது பிரத்யேக பணிகளை மேற்கொள்ளத் துவங்கும் வரையிலோ உடனிருந்து ஆதரவளிக்கிறோம்.”

பேச்சு சிகிச்சை தவிர தேவையான பிற சிகிச்சைகளை வழங்குகிறோம். ஏனெனில் நாங்கள் ஆட்டிசம் பாதித்த நபர்களை கையாள்கிறோம். இது ஒரு பேச்சுக் குறைபாடு அல்ல. ஆனால் சரியான மனநிலையில் இருந்து பேசுவதில் சிக்கல் இருக்கும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை வெளியில் பரிந்துரைக்கிறோம் என்றார் வசுதா.

அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் பணி கிடைப்பதற்கான உரிமை

மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான சட்டம் 2016-ன் படி அரசு நிதியுடன் இயங்கும் கல்வி நிறுவனங்களும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களும் குறைபாடுள்ள குழந்தைகளையும் உள்ளடக்கி கல்வி வழங்கவேண்டும். எனவே வசுதா கூறுகையில்,

”தற்போது பள்ளிகள் அனைவரையும் உள்ளடக்கியிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு குறைபாடு இருப்பதால் எந்த ஒரு குழந்தையும் நிராகரிக்கப்படக்கூடாது. ஏனெனில் அனைவரும் உள்ளடக்கிய ஒரு பள்ளியில் ஒரு பகுதியாக இருப்பது அவர்களது சட்டபூர்வமான உரிமையாகும்.”

குறைப்பாடுள்ளவர்கள், சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் என ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பதற்கான உரிமை உள்ளபோதும் அனைவரையும் உள்ளடக்குவதற்கான எதிர்ப்பு தொடர்ந்து இருந்துவருகிறது. மாற்றுத்திறனாளிகளை எவ்வாறு கையாளவேண்டும் என்கிற விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கியக் காரணம்.

பள்ளியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் சாதாரண மாணவர்களுக்கும் புரிதலை ஏற்படுத்துவதற்காக வசுதாவும் அவரது குழுவினரும் பல்வேறு பகுதிகளில் விரிவான விளக்கங்களை அளிக்கின்றனர். உதாரணத்திற்கு சிறப்புக் குழந்தைகளையும் ஏற்றுக்கொள்வதற்கு பள்ளிகளை தயார்படுத்துதல், சிறப்புக் குழந்தைகளுக்கு ஏற்றவாறு தங்களை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சாதாரண மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பகுதிகளில் குழுவினர் கவனம் செலுத்துகின்றனர்.

பணியிடத்தில் அனைவரையும் உள்ளடக்கிய சூழலை ஏற்படுத்துவதைப் பொருத்தவரை இது சற்று கடினமாகவே இருந்தது என்று தெரிவிக்கும் வசுதா, ஆனால் அதை திறம்பட எதிர்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

 தற்போது எங்களது மாணவர்களில் 12-13 பேர் அனைவரையும் உள்ளடக்கிய சூழலில் பணிபுரிய தயார்நிலையில் உள்ளனர். ஆனால் அவர்களை ஏற்றுக்கொள்பவர்களை நாங்கள் தயார்படுத்த வேண்டும். இந்த செயல்முறையில் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரையிலாவது மாணவர்களை ஏற்றுக்கொள்பவர்களோடு கைகோர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அது வெற்றிகரமாக அமையும்.

அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குவது தொடர்பான கருத்தை பரப்புவதற்கும் மக்கள் இதுகுறித்த புரிதலை பெறவும் பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்கிறது V-Excel  ”நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் பணிபுரிகிறோம். அவர்கள் உள்ளடக்கிய சூழலை புரிந்துகொள்ள தொடர்ந்து உதவியளித்து வருகிறோம். ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்காக ’க்ளாஸ் அபார்ட்’ என்கிற மூன்று நாள் பயிற்சி பட்டறைகளை நடத்துகிறோம். மருத்துவர்களுக்கான பயிற்சி பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து பரிந்துரைக்குமாறும் வலிப்பு அல்லது மருத்துவ பிரச்சனைகள் இல்லாதவரை மருந்துகள் அளிக்கவேண்டாம் என்றும் ஆலோசனை வழங்குகிறோம். மேலும் குழந்தை வளர்ப்பு குறித்து கார்ப்பரேட் பகுதியிலும் பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்கிறோம்,” என்றார் வசுதா. பல்வேறு பொது மன்றங்களில் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பினை இவர் தவறவிடுவதில்லை.

சவால்களை சமாளித்தல்

பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பெரியவர்களின் மனநிலையை மாற்றுவதே இவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாகும். இவர்கள் குழந்தைகளை அளவுக்கதிகமாக பாதுகாத்து செல்லமாக வளர்க்கத் துவங்குகின்றனர்.

வெளியுலகிற்கு குழந்தைகளை அனுப்பத் தயங்குகின்றனர். அவர்களது குழந்தைகளின் திறமை என்ன என்பதையும் அவர்களால் எந்தப் பணியில் சிறப்பிக்க முடியும் என்பதைக்கூட அறியாத அளவிற்கு செல்லமாக வளர்ப்பார்கள். குழந்தைகளின் வயதிற்கேற்றவாறு அவர்களை நடத்துமாறும் ஆதரவளிக்குமாறும் எப்போதும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகிறேன்.

நிதி சார்ந்த பிரச்சனையே இவர்கள் சந்திக்கும் அடுத்த மிகப்பெரிய சவாலாகும். கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகள் வாயிலாக நிதி கிடைத்தாலும் அவர்கள் எப்போதும் எண்களை கருத்தில் கொண்டே கேள்வியெழுப்புவார்கள் என்கிறார் வசுதா.

நாங்கள் பணியாற்றும் விதம் வேறுபட்டதாகும். ஒரு குழந்தையுடன் குறைந்தது எட்டு பேர் பணிபுரிகின்றனர். எனவே வழக்கமான கல்வியைக் காட்டிலும் சிறப்புக் கல்வி முறையானது முற்றிலும் வேறுபட்டது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே எங்களது மையத்தின் நடவடிக்கைகளை ஆவணங்கள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக அவர்களுக்கு காட்டுகிறோம்,” என்றார். அத்துடன் சரியான வளங்களைக் கண்டறிவதும் சிக்கலாக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் பலர் இந்தத் துறையில் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.

நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள்

இந்த மையம் 0-7 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஆரம்பகட்டத்திலேயே கண்டறியும் சேவை வழங்குவதுடன் கல்வி, தொழில் பயிற்சி, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவற்றிற்கும் இந்த மையம் முக்கியத்துவம் அளிக்கிறது. வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கலை, இசை, விளையாட்டு, தொழில்முறை சிகிச்சை போன்றவற்றை வழங்கி உதவுகின்றனர். அதே போல் சாதாரண பள்ளியில் பயிலும் மாணவர்களில் பாடதிட்டம் சார்ந்த மற்றும் பாடதிட்டம் அல்லாத நடவடிக்கைகளில் வயதிற்குத் தேவையான அளவு புரிதல் இல்லாதவர்களுக்கு தீர்வளிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

தொழில் பயிற்சி யூனிட் உள்ளது. இதில் தொழிற் பயிற்சியில் இணைவதற்கு முன்பு மாணவர்களுக்கு கார் வாஷ் செய்தல், தோட்டப்பணி, சமையல், தச்சுவேலை போன்ற பணிகளுக்கு பயிற்சியளிக்கப்படும். மாணவர்கள் வெளியில் பணிபுரிவதற்காகவே இந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. சென்னையில் இரண்டு மையங்கள் உள்ளன. இங்கு தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு பேக்குகள், மக், நினைவுப்பொருட்கள், சானிட்டரி பேட் போன்ற பொருட்களை மாணவர்கள் தயாரிக்கின்றனர். வசுதா கூறுகையில்,

மாணவர்கள் தொழிற் பயிற்சிக்கு முந்தைய நிலையில் இருக்கும்போது சில மாணவர்களால் உள்ளடக்கிய சூழலில் இணைய முடியாது என்பதை தெரிந்துகொள்வோம். எனவே அவர்களை மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பணிச்சூழலில் செயல்படுவதற்கோ அல்லது மறுவாழ்வு மையங்களுக்கோ மாற்றிவிடுவோம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக இடங்களில் பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு சானிட்டரி நேப்கின்கள், தாம்பூலப்பைகள், குடை போன்ற பொருட்களைத் தயாரிக்க பயிற்சியளிக்கபடும். இதன் ஒரு பகுதியாக பெற்றோர்கள் சுயமாக தொழில் துவங்க வாய்ப்பளிக்கப்படும்.

மேலும் பெற்றோர் சிறிய அளவில் சுயமாக தொழில் துவங்க ஊக்குவிப்போம் அல்லது பெற்றோர் நடத்தி வரும் தொழிலுக்கு ஏற்றவாறு குழந்தைகளுக்கு பயிற்சியளிப்போம்.

இந்த அறக்கட்டளை பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறது. இதுவரை விழுப்புரத்தில் 10 ப்ளாக்குகளில் செயல்படுத்தியுள்ளனர். மாதந்தோறும் 680 கிராமங்கள் முழுவதும் 4,500 சிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். தற்போது இரண்டாம் நிலை நகரங்களில் மையங்களை திறப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இது தவிர பல்வேறு நடவடிக்கைகளில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. மையத்தில் ‘ப்ளூ ப்ளூ ஸ்கை’ என பெயரிடப்பட்ட பாடகர் குழுவும் உள்ளது. வசுதா உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னையிலுள்ள பள்ளிகளுக்கு இந்த பாடகர் குழுவை அழைத்துச் செல்கிறார். மேலும் ’சமர்த்’ என்கிற உணவகம் வாயிலாகவும் பரப்புரை செய்கிறார். இந்த உணவகம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திறந்திருக்கும். இங்கு மாணவர்கள் சமையல் செய்து பரிமாறுகிறார்கள்.

மாணவர்களுக்கு பேக்கிங், சலவை, ட்ரை க்ளீனிங், சானிட்டரி பேட் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளிலும் பயிற்சியளிக்கப்படுகிறது. அத்துடன் கலை குறித்து கற்றுக்கொள்ள கலைக்கூடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள். பெற்றோர்களும் அவர்களது தரப்பிலிருந்து சுற்றுலா ஏற்பாடு செய்கின்றனர்.

நடந்துகொண்டிருக்கும் பணிகள்….

சமீபத்தில் ஐஆர்ஏ ஆசிரியர் பயிற்சி திட்டத்தை துவங்கியுள்ளனர். இது டாக்டர் ருடால்ப் ஸ்டெய்னர் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். எந்தவித முன் தகுதியும் தேவையில்லை.

செயலிகள் சிறப்பாக மக்களை சென்றடையும் என வசுதா கருதுவதால் ஆரம்பநிலையிலேயே கண்டறிதலை மதிப்பிடுவதற்காக மொபைல் செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது இந்த மையம்.

இறுதியாக வசுதா நிறைய செண்டர்களைத் திறக்க திட்டமிட்டுள்ளார். முதல் ஐந்து அல்லது ஆறு வருடங்களில் குறைந்தபட்சமாக 100 மையங்களை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தவேண்டும் எனபதே அவரது திட்டமாக இருந்தது. ஆனால் கொள்கைகளை அப்படியே தக்கவைத்துக்கொள்வது கடினம் என்கிற பயம் ஏற்பட்டது.

”ஏதேனும் ஒரு பகுதியில் மையத்தை துவங்கினாலும் திறமையான சிறப்பு பயிற்சியளிக்கும் ஆசிரியர்களை தக்கவைத்துக்கொள்வதும் கடினம். ஆனால் இன்று பல விஷயங்களை தரப்படுத்தியுள்ளோம். ஓராண்டில் 10 முதல் 15 மையங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த இரண்டு முதல் மூன்றாண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வி-எக்செல் மையங்கள் திறக்கப்படும்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : மயூரி ஜெ ரவி