உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் தங்கம் வென்ற 102 வயது இந்திய பாட்டி!

0

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை நிரூபித்துள்ளார் மன் கவுர். பஞ்சாபின் பட்டியாலா பகுதியைச் சேர்ந்த 102 வயது பெண் தடகளவீரர் சமீபத்தில் ஸ்பெயினின் மலாகா பகுதியில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்றுள்ளார்.

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் மூத்த குடிமக்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள் போன்ற நிகழ்வுகளாகும். இந்த சாம்பியன்ஷிப்பில் ட்ராக் அண்ட் ஃபீல்ட், கிராஸ் கண்ட்ரி, ஓட்டப்பந்தயம் போன்றவை 35 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு நடத்தப்படும்.

மன் கவுர் 100-104 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளார். 3 நிமிடங்கள் 14.65 விநாடிகளில் ஓடி தங்கம் வென்றார்.

முதல் முறை ஆக்லண்டில் நடைபெற்ற 2017 மாஸ்டர்ஸ் போட்டியில் 100 மீட்டர் பந்தயத்தை ஒரு நிமிடம் பதினான்கு விநாடிகளில் முடித்து வெற்றி பெற்றார்.

இந்தியாவில் இந்த பட்டத்தை வென்ற முதுபெரும் பெண்மணி இவரே. சர்வதேச போட்டிகளில் அறிமுகமாவதற்கு முன்பு 2007-ம் ஆண்டு சண்டிகர் மாஸ்டர்ஸ் தடகள மீட்டில் முதல் பதக்கத்தை வென்றார்.

இவரது 79 வயது மகன் குருதேவ் சிங், மன் கவுருக்கு 93 வயதிருக்கையில் விளையாட்டில் ஈடுபட ஊக்குவித்துள்ளார். குரு தேவ் சிங்கும் உலக மாஸ்டர்ஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆரம்பத்தில் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்க தனது அம்மாவிற்கு உடலளவில் தகுதியிருப்பதை உறுதிசெய்துகொண்டதாக ’தி பெட்டர் இண்டியா’ குறிப்பிடுகிறது.

’சண்டிகரின் அதிசயம்’ என அழைக்கப்படும் இவர் உலக சான்பியன்ஷிப்களில் தங்கம் வெல்வது இது முதல் முறையல்ல. அமெரிக்காவில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் தங்கம் வென்றபோது உலகளவில் மக்கள் கவனத்தை ஈர்த்ததாக ’தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.

மன் ஓட்டப்பந்தயம் மட்டுமின்றி ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போன்றவற்றிலும் 2017 உலக மாஸ்டர்ஸ் போட்டிகளில் பங்கேற்றார். தற்போது ஜப்பானில் நடைபெற உள்ள உலக மாஸ்டர்ஸ் 2020-க்கு தன்னைத் தயார்படுத்தி வருகிறார்.

’தி பெட்டர் இண்டியா’ உடனான நேர்காணலில் கதாநாயகி, மாடல் மற்றும் உடற்பயிற்சி நிபுணரான மிலிந்த் சோமான் குறிப்பிடுகையில்,

”நான் சந்தித்த நபர்களில் மன் கவுர் மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய நபராவார். பின்கதானில் பங்கேற்றவரும் அம்பாசிடரும் ஆன இவர் எங்களுடன் உலகம் முழுவதும் பயணித்து உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதன் ரகசியம் குறித்து ஆயிரக்கணக்கான பெண்களுக்கு எடுத்துரைத்தார். அவரது அபார சாதனைகளைக் கேட்கும் அனைவருக்கும் நம்பிக்கையும் ஊக்கமும் பிறக்கும்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA