பள்ளியை பாதியில் விட்டு பல சவால்களை தாண்டி நீதிபதி ஆகியுள்ள முதல் திருநங்கை!

0

மேற்கு வங்கத்தில் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த ஜோயிடா மொண்டல் மூன்றாம் பாலினமாக பிறந்ததால் பல இன்னல்களை சந்தித்தார். பள்ளியில் பாதியில் இருந்து அனுப்பப்பட்டு, பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கி, தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இந்த சவால்களை தாண்டி, இன்று அவர் இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதே முக்கியம்.

29 வயதாகும் ஜோயிடா, ஜோயோண்டோ என்ற ஆணாக கொல்கத்தாவில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவர் எந்த பாலினத்தை சேர்ந்தவர் என்ற குழப்பம் நிலவியதால் பள்ளியில் இருந்து பாதியில் நின்றார். அந்த நாட்களை நினைவுக்கூர்ந்த அவர்,

“என் பள்ளியில் உள்ள ஆண் மாணவர்கள் என்னை எப்படி ஏளனப்படுத்தினர் என்று நான் வீட்டில் சொல்லவில்லை. எனக்கு தினஜ்பூரில் ஒரு வேலை கிடைத்ததாக மட்டும் என் அம்மாவிடம் தெரிவித்தேன். அருகாமை மாவட்டமான தினஜ்பூருக்கு செல்ல விரும்புவதாக நான் அவரிடம் சொன்னேன். அங்கே சரிவரவில்லை என்றால் இரண்டு மாதத்தில் திரும்பிவிடுவதாக அம்மாவிடம் சொல்லி அனுமதி பெற்றேன்,” என்றார். 

தினஜ்பூர் அடைந்த ஜோயிடா மீண்டும் தன் வீட்டுக்குச் செல்லவேயில்லை. ஆரம்ப நாட்களில் ஹிஜ்ரா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது தவிர, அவர் திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடினார். பின்னர் சமுதாயத்தில் பாதிக்கப்படும் எல்லாத்தரப்பினருக்கும் குரல் கொடுக்க ஆரம்பித்தார். 

தன் பணிகளுக்கிடையே, தொலைதூர கல்வி மூலம் சட்டத்தில் டிகிரி பெற்றார். 2010-ல் வாக்காளர் அட்டை பெற்ற முதல் திருநங்கை இவரே ஆவார். சில வருடங்களில் ஜோயிடா, தினஜ்பூரில் ஒரு சமூக அமைப்பை தொடங்கி, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவும் பணிகளை செய்து வந்தார். 

கஷ்டப்பட்ட நாட்களில் ஹோட்டல்களில் அறை கிடைக்காத காரணத்தினால் பஸ் ஸ்டாண்டில் உறங்கினார். தன் வீட்டைவிட்டு பிரிந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்த நிலையில், லோக் அதாலத் (சிவில் கோர்ட்) ஜட்ஜ் ஆக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் படுத்து உறங்கிய அதே பேருந்து நிலையத்தில் இருந்து சில நிமிட தூரத்தில் அமைந்துள்ளது அந்த கோர்ட். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் கூறிய ஜோயிடா,

”எல்லா அரசுகளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமித்துவிட்டு, அச்சமூகத்தின் குரலை ஒடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதை நடக்க விடமாட்டேன். என் மாவட்டத்தை சேர்ந்த 2-3% திருநங்கைகளுக்கு நல்ல வேலை கிடைத்தால் கூட எனக்கு கிடைத்துள்ள இந்த பொறுப்பிற்கு அர்த்தம் இருக்கும்.”

"100 முதல் 200 ரூபாய்காக அவர்கள் பாலியல் தொழிலுக்கு செல்லாமல், நல்ல நிம்மதியான உறக்கத்தை பெறவேண்டும் என்று நினைக்கிறேன். நான் இப்போது ஏசி காரில் வலம்வர, என் இன மக்கள் இன்றும் காலை, மாலை என பாராமல் பிச்சை எடுத்து கஷ்டப்படுவது வேதனை அளிக்கிறது,” என்கிறார் ஜோயிடா. 

கட்டுரை: Think Change India