தடைகளை உடைத்து டாக்டர் பட்டம் பெற்று துணைப்பேராசிரியர் ஆன மனிதக் கழிவுகள் அகற்றும் பெண்!

0

கெளஷல் பன்வார், ஹரியானாவில் ஏழாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது அவருக்கு சம்ஸ்கிரத மொழி மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. பின் தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த குறிப்பாக பெண்கள் சம்ஸ்கிரதத்தை கற்க முட்டுக்கட்டை இருந்ததை எதிர்த்து போராட முடிவெடுத்தார். ஆனால் அவரின் ஆசிரியர் மேல் வகுப்பை சேர்ந்தவர் என்பதால், மனிதக்கழிவுகளை அப்புறப்படுத்தும் குடும்பத்தில் இருந்து வந்த கெளஷல், அவர்களின் குலத்தொழிலை செய்யாமல் சம்ஸ்கிரத மொழியை எப்படி படிக்கலாம் என்பதில் தீவிரமாக எதிர்ப்பை காட்டினார். இதுவே கெளஷல் ஒரு போராளியாக மாறி, அதே மொழியில் முனைவர் பட்டம் பெரும் அளவிற்கு செய்தது. 

கெளஷல் பால்மிகி பழங்குடி இனத்தை சேர்ந்தவர். இவர்கள் சமுதாயத்தை சேர்ந்த பெரும்பாலானோர் இந்தியா முழுதும் மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் இன்னமும் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆசிரியரின் எதிர்ப்பை மீற தீர்மானித்த கெளஷல் தொடர்ந்து சம்ஸ்கிரத வகுப்புகளுக்கு சென்றார். அவரை கடைசி வரிசையில் உட்காரவைப்பார் அந்த ஆசிரியர். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மொழியை கற்பதில் கவனம் செலுத்தினார் கெளஷல்.

பெற்றோர்களுக்கு துணையாக கூலி வேலைகளை செய்து கொண்டே படிப்பை தொடர்ந்தார் கெளஷல். அவர் படிப்பில் கெட்டிக்காரியாக திகழ்ந்தார். மேல்தட்டு மாணவர்களால் பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு பதிலளித்ததற்காக பல தண்டனைகளை வாங்கியுள்ளார் அந்த பெண். 

ஆசிரியரை போலவே அவருடன் படித்த சக மாணவர்களும் கெளஷலை மோசமாக நடத்தினர். சேரிப்பகுதியில் வசிப்பவர் என்பதாலும், மனிதக்கழிவுகள் அள்ளுபவர் என்பதாலும் கெளஷலை ஏளனப்படுத்தினர். லைவ்மிண்ட் பேட்டியில் பேசிய கெளஷல்,

“என் குழந்தைப்பருவம், பதின்பருவம், பள்ளி, ஹரியானா கல்லூரி, டெல்லி பல்கலைகழகம் என்று எல்லா இடத்திலுமே என் ஜாதியை குறிப்பிட்டு என்னை கேவலமாக நடத்தியுள்ளனர். இந்தியாவில் ஜாதிக்கொடுமை ஒழியவே இல்லை. அது வேறு ஒரு பரிமாணத்தில் மாறியுள்ளது. அவ்வளவுதான்,” என்கிறார். 

ஆனால் இது எதுவுமே அவரின் வளர்ச்சியை தடுக்கவில்லை. சம்ஸ்கிரத மொழியை ஆழமாக படித்து, வேறுபாடுகளுக்கான உண்மையான காரணங்களையும் அது நடைமுறையில் இருப்பதற்கான புரிதலையும் அடைந்தார். இதனால் அவரால் இன்னும் அதிகமாக போராட முடிந்தது. சம்ஸ்கிரத மொழியில் பி.எச்.டி பெற்று, டெல்லி மோதிலால் நேரு கல்லூரியில் துணை பேராசிரியராக தற்போது பணிபுரிகிறார் கெளஷல். 

இப்போதும் தன் ஜாதி மற்றும் சமுதாய மக்களைப் பற்றி பேச அவர் தயங்குவதில்லை. அவ்வாறு பயந்து ஓடுவதால் மக்களின் கிண்டல்கள் நின்றுவிடப்போவதில்லை என்கிறார். தன்னை போன்றவர்கள் தங்கள் பின்னணியை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, வேறுபாடை எதிர்த்து போராடுவதே வெற்றியில் முதல் படி என்று நினைக்கிறார். 

இன்றும் 70 சதவீத பழங்குடி மக்கள் கல்லூரிக்கு செல்வதில்லை. ஒதுக்கீடுகள் இருந்தாலும் நான்கில் ஒருவர் மட்டுமே இதனால் பயன் பெறுவதாக ஆய்வுகள் குறிக்கிறது. அதையும் தாண்டி இந்தியாவில் மனித கழிவுகள் அள்ளும் பணிகளில் சுமார் 13 லட்சம் மக்கள் இருப்பதாக ஃபர்ஸ்ட் போஸ்ட் செய்தி வெளியிட்டது. இந்திய ரயில்வே துறையில் தான் அதிகமாக இந்த ஊழியர்கள் இருக்கின்றனர். 2019-க்குள் மனித கழிவுகள் பணிகள் முற்றிலும் அகற்றப்படவேண்டும் என்ற இந்தியாவின் கனவு நினைவாகும் வரை காத்திருக்க வேண்டும். 

கட்டுரை: Think Change India