படகு சவாரி, மலையேற்றம் என அர்ப்பணிப்பின் உச்சம் ஆசிரியை உஷா குமாரி!

0

பாடப்படாத நாயகர்கள் பலர் நம்மைச் சுற்றிலும் இருந்து கொண்டே இருக்கிறார்கள். கல்வி மட்டுமே எதிர்காலத்திற்கான ஒளியாக இருக்கும் நிலையில், சமூக மாற்றத்திற்காக கல்வியை ஆயுதமாக்கும் நாயகர்களை புகழ் பாட வேண்டியது அவசியம்.

கேரளாவின் குன்னத்துமலாவில் இருக்கும் அகஸ்திய ஏக அத்யபாகா வித்யாலயாவில் கடந்த பதினாறு வருடங்களாக பாடம் நடத்திக் கொண்டிருக்ப்பவர் உஷாகுமாரி. திருவனந்தபுரத்தில் இருக்கும் அம்புரியில் இருக்கிறது உஷா குமாரியின் வீடு. 

காலை ஏழரை மணிக்கு ஸ்கூட்டியில் தொடங்குகிறது அவரின் பயணம். கும்பிக்கல் கடவை வந்தடைந்ததும், ஒரு படகில் தொடர்கிறார். படகை செலுத்துவதும் உஷா குமாரியே தான். பிறகு, சில தூரம் காட்டுப்பாதையில் நடை. இப்படி தான் அகஸ்திய ஏக அத்யபாகா வித்யாலயாவிற்கு வந்தடைகிறார்.
Image Courtesy : The NEws Minute
Image Courtesy : The NEws Minute

ந்யூஸ் மினிட் தளத்திற்கு பேட்டியளித்திருந்த உஷா குமாரி, பழங்குடியினத்தை சேர்ந்த பதினான்கு குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியராக இருப்பதை பற்றி பகிர்ந்திருக்கிறார். 

”1999 ஆம் ஆண்டு ஒரு ஆசிரியர் திட்டத்தை பழங்குடியின கிராமங்களுக்கு கேரள அரசு அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்னரே மலப்புரத்தில் இந்த திட்டம் இருந்தது” என்று கூறியிருந்தார்.

ஒன்றாம் வகுப்பு முதம் நான்காம் வகுப்பு வரை இருக்கும் இந்த பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் என அத்தனை பாடங்களையும் நடத்துவது உஷா குமாரி தான். படிப்பில் மட்டும் இல்லாமல், விளையாட்டுகளிலும் மற்ற துறைகளிலும் மாணவர்களை ஈடுபடுத்துகிறார் இவர். இது மேல்நிலை பள்ளியில் படிப்பை தொடர குழந்தைகளுக்கு உதவும் என நம்புகிறார்.

உஷா குமாரியின் இந்த பயணம் எளிதில் தொடங்கியிருக்கவில்லை. அவருடைய தினசரி பயணத்தை கடந்து அவர் சந்தித்த மேலுமொரு சவால், குழந்தைகளை பள்ளிக்கு வரவைப்பது. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாராக இருக்கவில்லை. குழந்தைகளும் கூட பள்ளிக்கு வர விரும்பவில்லை.

“குழந்தைகள் பெற்றோரோடு வயலுக்கு சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு வாங்கிய புத்தகங்கள் அத்தனையும் நெருப்பில் இடப்படும். நாங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பள்ளிக் கல்வியின் அவசியத்தை குறித்து பேசுவோம்” என்று சொல்கிறார். 
Image Courtesy : indianwomenblog.org
Image Courtesy : indianwomenblog.org

இந்த பிரச்சாரத்தின் வழியே, அந்த சமூகத்தில் மாற்றம் உண்டாகியிருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறார்கள், ஆசிரியர்-பெற்றோர் கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்கள்.

அவ்வப்போது தாமதமாக வரும் சம்பளம், காட்டுப்பாதையில் தனியே நடப்பதில் இருக்கும் சிரமம் என நிறைய பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார் உஷா குமாரி. இந்த பள்ளிக்கு கூடுதலாக ஒரு ஆசிரியர் இருந்தால், பள்ளியை இன்னமும் வளர்க்கலாம் என்பது அவருடைய ஆசையாக இருக்கிறது.

ந்யூஸ் மினிட் தளத்திற்கு அளித்திருக்கும் வீடியோ பேட்டியில், 

“இந்த பாதையில் நடப்பது மனதிற்கு ஒரு அமைதியை தருகிறது...” என்று நிறைவு செய்கிறார். 

கல்வியை பரப்ப வேண்டும் என்று தீர்க்கமானதொரு முடிவோடு செயல்படும் களப்பணியாளர் உஷா குமாரி நிச்சயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே தான் இருப்பார்.

கட்டுரையாளர்: ஸ்னேஹா, தகவல் உதவி: தி நியூஸ் மினிட்

Related Stories