கபாலி திரைப்படத்துக்கு இலவச டிக்கெட்- வாடிக்கையாளர்களை அசத்தும் அடதாவின் அடடே சி.இ.ஓ!

0

தொடங்கிய ஒரே வருடத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஆப் டெவலப்பர்களுக்கு, மார்கெட்டிங் சேவை செய்து வரும் "அடதா" (Adatha), தன் இனிவரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 27-ந் தேதி வரை ஒரு ஸ்பெஷல் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை காலகட்டத்தில் வரும் வாடிக்கையாளர்களுக்கு, ஆப் பதிவிறக்கம் செய்யும் விலையில் 50% தள்ளுபடியும், 'கபாலி' படத்துக்கு இரண்டு இலவச டிக்கெட்களும் கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார், 'அடதா' சி.இ.ஓ, வெங்கடேஷ் ராஜேந்திரன்.

சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகனான நிறுவனர் வெங்கடேஷ் ராஜேந்திரன் குறித்தும், அவரது 'அடதா' நிறுவனம் பற்றிய விவரங்கள் இதோ!

மூன்று நிறுவனங்களின் நிறுவனர்

மதுரையைப் பூர்விகமாக கொண்ட வெங்கடேஷ், 1995-இல் அண்ணா பல்கலைகழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தவர். பின், 2000 ஆண்டில் சுயமாக "டாட் காம் இன்போவே" எனும் சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனத்தின் மூலம் பாரத் மேட்ரிமோனி, நாச்சுரல்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களுக்கும், அதிகளவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் சாப்ட்வேர் டெவல்ப்மென்ட் மற்றும் மார்க்கெட்டிங் செய்து வந்துள்ளார்.

அதே வருடத்தில் "கலாட்டா.காம்" எனும் ஒரு சினிமா என்டர்டைன்மென்ட் இணையதளத்தை, மதுரையிலும் சென்னையிலும் சக்தி எனும் பங்குதாரருடன் இணைந்து தொடங்கியுள்ளார். பரம்பரையாக துணி வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்து, தொழில்நுட்பத்தில் ஈடுபட்டு கலக்கும் முதல் தலைமுறை தொழில்முனைவர் வெங்கடேஷ். 2008-இல் ஏற்பட்ட மொபைல் புரட்சியால், ஆப் டெவல்ப்மென்ட் தொழிலிலும் ஈடுபடத் தொடங்கினர். 10 பேர் கொண்டு தொடங்கிய டாட் காம் இன்போவே நிறுவனத்தில், இன்று 300  ஊழியர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடதாவின் அம்சங்கள்

இதே வெற்றியுடன் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 'அடதா' எனும் ஒரு ஆப் சந்தைப்படுத்துதல் நிறுவனத்தை சுயமாகத் தொடங்கினார் வெங்கடேஷ். சென்னையில் 12 பேர் குழுவைக் கொண்டு, இந்தியாவிலும், தாய்லாந்து, வியட்னாம், இந்தோனேசியா முதலிய கடற்கடந்த தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், ஹாங்காங், அமெரிக்கா, கனடா முதலிய வெளிநாடுகளிலும் உள்ள ஆப் டெவலப்பர்ஸ்களுக்கு, ஆப் மார்கெட்டிங் செய்து வருகிறது இந்நிறுவனம்.

முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் இன்றி சிறந்த குழுவுடன், திட்டமிட்ட டிஜிட்டல் மார்கெட்டிங் மூலம், இவர்களது செயலி ஒரு நாளுக்கு சராசரியாக 25,000 பதிவிறக்கம் செய்யப்படுகிறது. வூனிக்.காம் எனும் ஷாப்பிங் ஆப்பை, பெரியளவில் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இவர்களையே சேரும். ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஓலா போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள், இவர்களது குறிப்பிடத்தக்க ஆப் மார்கெட்டிங் வாடிக்கையாளர்கள் என்று வெங்கடேஷ் கூறினார்.

கையாளும் மார்கெட்டிங் வியூகம்

பொதுவாக ஆப் மார்கெட்டிங் நிறுவனங்கள், "டாட் ஃபார்ட்" (Dot fraud) அல்லது "கிளிக் ஃபிராட்" (Click fraud) முறைகள் மூலம் ஆப்களை டவுன்லோட் செய்ய வைப்பதுண்டு. ஆனால், நாங்கள் எந்த வித ஏமாற்று வழியும் பயன்படுத்தாமல், வெளிப்படையாக, முறையே மார்கெட்டிங் செய்வது, "அடதா" -வின் சிறப்பு அம்சம். பெரும்பாலும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தியே ஆப் மார்கெட்டிங் செய்து வருகிறோம். மேலும், வாடிக்கையாளர்கள் செயலிகளிலும் 'டெக்ஸ்ட் ஆட்' (Text ad) மூலம் மார்கெட்டிங் செய்வதுண்டு. ஷாப்பிங் ஆப்கள், கேம்ஸ் ஆப்கள், சமூக வலைத்தள ஆப்கள் இவர்களது பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள்.

சவாலும் சாதனையும்

இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களை ஒப்பிட்டு பார்க்கையில், சென்னையில் ஆப் மார்கெட்டிங்-இல் வெற்றி காண்பது, சவாலாக உள்ளது. தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால், இந்நிலையில் சமீபத்தில் சற்று முன்னேற்றம் காண முடிகிறது என்றார் வெங்கடேஷ்.

வெங்கடேஷ், ஒரு தலைமை நிர்வாக அதிகாரி மட்டுமல்லாமல், இந்தியன் ஏன்ஜெல் நெட்வர்க் நிறுவனத்தின் ஒரு உறுப்பினரும் ஆவார். பெட்யூன் (Paytune) மற்றும் ஒரு கழிவு மேம்படுத்தும் நிறுவனம் என மொத்தம் மூன்று நிறுவனங்களுக்கு முதலீட்டாளராக இருக்கிறார். அத்துடன், இந்தியாவில் நடத்தப்படும் 'செலிபிரிட்டி போர்டு லீக்' எனும் பாட்மிண்டன் போட்டியில், இந்த வருடம் தமிழ்நாடு குழுவிற்கு இவர்தான் உரிமையாளர். மேக்ஸ்டர்.இன்க் (Magzter.Inc) எனும் டிஜிட்டல் மாத இதழ்கள் இணையதளத்தின் துணை நிறுவனரும் ஆவார்.

அதுமட்டுமின்றி, குளோபல் மொபைல் ஆப் சம்மிட் அண்ட் அவார்ட்ஸ் 'ஜி.எம்.ஏ.எஸ்.ஏ' (GMASA) எனும் நிகழ்வையும் வருடந்தோறும் நிகழ்த்தும் அமைப்பையும் தொடங்கியுள்ளார். இந்த வருடத்திற்கான ஜி.எம்.ஏ.எஸ்.ஏ நிகழ்வு, சமீபத்தில்தான் பெங்களூரில் நடந்தது.

ஆப்ஸ்ஃபிளையர் (Appsflyer) அறிக்கைப்படி, இந்தியாவில் ஆப் மார்க்கெட்டிங்-இல் அடதா 5 ஆவது இடம் பிடித்திருக்கிறது என்றும் பெருமிதம் கொண்டார், வெங்கடேஷ். மேலும் ISV இந்தியன் அவார்ட்ஸ் வழங்கிய 'சிறந்த மொபைல் மார்க்கெடிங் ஏஜென்சி' என்ற விருதை அண்மையில் அடாதா பெற்றதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். 

வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன் தீவிர ரசிகன் என்பதால், இந்த வாரம் கபாலி படம் வெளியாக இருக்கையில், அடதா நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபராக, ஒரு ஆப் டவுன்லோட் செய்தால், மற்றொரு ஆப் டவுன்லோடுக்கான மார்கெட்டிங் இலவசமாக செய்து தரப்படும் என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன், வாடிக்கையாளர்களுக்காக சென்னை மற்றும் பெங்களூரில் கபாலி பட டிக்கெட்கள் ப்ரீ-பூக்கிங் செய்து, இதுவரையில் 150 டிக்கெட்கள் வாங்கி வைத்துள்ளனர். ஜூலை 27-க்கு முன் வரும் வாடிக்கையாளர்களுக்கு, இரண்டு கபாலி டிக்கெட்கள் வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.

இறுதியாக,

"ஆரம்பத்தில் சந்திக்கும் தோல்விகளைக் கண்டு வீழ்ந்து விடாதே, விடாமுயற்சியால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்"

என்று இளம் தொழில்முனைவோர்களுக்கு அறிவுரைத்தார், வெங்கடேஷ் ராஜேந்திரன்.     

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்