கூகிள் வேலையை விட்டு, சமோசா விற்பனையில் 50 லட்ச ரூபாய் விற்றுமுதல் கண்ட இளைஞர்!

18

ஒரு நிலையான அதுவும் நல்ல சம்பளத்துடன் கூடிய பணியை விடுத்து தங்களுக்கு பிடித்த ஒன்றை செய்வதற்கான துணிச்சல் எல்லாருக்கும் அவ்வளவு எளிதாக வந்துவிடாது. மல்டி நேஷனல் நிறுவனமான கூகிளில் பணி செய்து கொண்டிருந்த முனாஃப் கபாடியா தனக்கு பிடித்தமான சமோசா விற்பனையை செய்ய அந்த வேலையை விட்டார் என்றால் யார் தான் ஆச்சரியப்படமாட்டார்கள். அவர் கொண்டிருந்த நம்பிக்கையால் இன்று சமோசா நிறுவனத்தின் விற்றுமுதல் 50 லட்சங்கள் ஆகியுள்ளது. 

ஐடி வேலையில் இருக்கும் பலரின் கனவு இடம் கூகிள். அந்நிறுவனம் பெயரளவில் மட்டுமின்றி ஊழியர் நலனில், சம்பளத்தில் நிலைத்தன்மையில் சிறந்த இடமாகும். இருப்பினும் தன் கூகிள் வேலையை விட்டுவிட்டு முனாஃப், சமோசா தயாரித்து விற்கும் ‘தி போஹ்ரி கிட்சன்’ ’The Bohri Kitchen’ என்ற நிறுவனத்தை மும்பையில் தொடங்கினார். 

முனாஃப் எம்பிஏ பட்டதாரி. இந்தியாவில் சில வருடப் பணிக்குப்பின் கூகிளில் சேர்ந்து அமெரிக்காவில் பணியில் இருந்தார். சில  வருடங்களுக்கு பின் தனக்கான ஒன்றை தேடலானார். அப்போது தொழில் தொடங்கும் ஆசை வர, இந்தியா திரும்பி தன் சொந்த நிறுவனம் தொடங்க முனைந்தார். 

முனாஃபின் தாயார் நஃபீசாவிற்கு சமையல் நிகழ்ச்சிகள் எனறால் அதீத ஆர்வம். டிவியில் அது போன்ற நிகழ்ச்சிகளை பார்த்து தாமும் வீட்டில் அற்புதமாக சமைப்பார். அதைக்கண்டு வியந்த முனாஃப் தான் உணவுத்துறையில் தொழில் தொடங்க முடிவெடுத்தார். அவரின் அம்மாவின் கைப்பக்குவத்தை பலரிடம் சோதித்தார். சுவையான உணவுவகைகள் பலருக்கு பிடித்துப்போக ‘தி போஹ்ரி கிட்சன்’ உருவானது. மும்பையில் இயங்கும் இந்த ஹோட்டலின் சிறப்பு ஐயிட்டம் சமோசா.

இவர்களின் சமோசாக்கள் மும்பை முழுதும் பிரபலம். பல நடிகர்கள் முதல் ஐந்து நட்சத்திர விடுதிகள் வரை போஹ்ரி கிட்சன் சமோசாக்களை கேட்டு வாங்கிச்செல்கின்றனர். சமோசா தவிர, நர்கீஸ் கெபாப், டப்பா கோஸ்ட் என்று விதவிதமான வகைகள் இங்கே கிடைக்கும். 

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த நிறுவனத்தின் விற்றுமுதல் 50 லட்ச ரூபாய் என்றால் அதன் வளர்ச்சி நமக்கு புலப்படுகிறது. இதை பெரிய அளவில் விரிவாக்கம் செய்து, ஆண்டு விற்றுமுதலாக 5 கோடி ரூபாயை எட்ட முனாஃப் உழைத்துக்கொண்டிருக்கிறார். 

சாப்பிட இடம் கிடைக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதே இந்த ஹோட்டலின் சிறப்பு. முனாஃப், ஃபோர்ப்ஸ் 30 வயதின் கீழ் வெற்றியாளர் பட்டியலில் இடம்பெற்று தன் அம்மாவிற்கு தன் முழு வெற்றியையும் சமர்ப்பிக்கிறார்.

கட்டுரை: Think Change India