இல்லத்தரசிகள் வெற்றித் தொழில் முனைவர் ஆக ஊக்குவிக்கும் நிறுவனம்!

0

ஷாப்பர்ட்ஸ் (Shopperts) என்கிற ஸ்டார்ட் அப் 2016-ம் ஆண்டு சுமித் மிட்டல், தீபன்ஜன் சக்ரபோர்த்தி ஆகிய நிறுவனர்களால் நிறுவப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த இந்நிறுவனம் ஆன்லைன் விற்பனைப் பிரிவில் செயல்படுகிறது. இந்த ஸ்டார்ட் அப் சிறு வணிகர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் வெற்றிகரமாக செயல்பட ஆதரவளித்து வருகிறது. ஏஞ்சல் முதலீடு நிதி உயர்த்தியுள்ளது.

சைன்-அப், பகிர்தல், சம்பாதித்தல் – இந்த மூன்று எளிய முறைகளுடன் டெல்லியைச் சேர்ந்த ஷாப்பர்ட்ஸ் இல்லத்தரசிகள் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற உதவுகிறது.

ஷாப்பர்ட்ஸ் ஒரு ஆன்லைன் மறுவிற்பனைத் தளம். இதில் ஈடுபடும் நபர் சமூக விற்பனையாளர் என அழைக்கப்படுகிறார். இவர்கள் 200-500 நபர்கள் அடங்கிய தங்களது தனிப்பட்ட குழுவில் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் வாயிலாக பொருட்களை ஊக்குவிக்கின்றனர்.

”இந்த சமூக விற்பனையாளர்களுக்கு தரமான அதே சமயம் பயனருக்குத் தேவையுள்ள சரியான பொருட்களை வழங்கவேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும். எங்களது சமூக விற்பனையாளர்களில் பல பெண்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுகின்றனர். அவ்வாறு அவர்கள் வீட்டிலிருந்தே வருவாய் ஈட்ட உதவுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்றார் ஷாப்பர்ட்ஸ் இணை நிறுவனர் சுமித் மிட்டல்.

ஷாப்பர்ட்ஸ் என்கிற வார்த்தை ’ஷாப்பிங் வித் எக்ஸ்பெர்ட்ஸ்’ (Shopping with Experts) என்கிற வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது. இவர்கள் குர்தி, புடவைகள், சல்வார்-குர்தாக்கள், டிரஸ் மெட்டீரியல், மேற்கத்திய உடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், செயற்கை நகைகள் போன்ற பெண்களுக்கான பல்வேறு பொருட்களை பல்வேறு சிறு விற்பனையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர். பின்னர் இந்தப் பொருட்கள் சமூக விற்பனையாளர்களால் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் வாயிலாக இந்த ஸ்டார்ட் அப் சிறு ப்ராண்ட்களை அதிகளவிலான வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

25 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண் தொழில்முனைவோரை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. பெரும்பாலும் இல்லத்தரசிகள் அல்லது புதிய பொருட்களை ஊக்குவிக்கத் தேவையான நேரம் இருப்போரை இலக்காகக் கொண்டுள்ளது. தங்களது சமூக வட்டத்திற்கு உகந்த அல்லது தேவையான தரமான பொருட்களை அணுகமுடியாததே சமூக விற்பனையாளர்கள் சந்திக்கும் அடிப்படை சவாலாகும். அந்தந்த சமூக விற்பனையார்கள் எளிதாக விற்பனை செய்ய முடியும் பொருட்களில் ஷாப்பர்ட்ஸ் கவனம் செலுத்துகிறது.

ஷாப்பர்ட்ஸ் செயல்பாடுகள்

ஷாப்பர்ட்ஸ் 2016-ம் ஆண்டு ஐபிஎம் டெல்லியில் ஒன்றாக பணியாற்றிய சுமித் மற்றும் தீபன்ஜன் சக்ரபோர்த்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் 14 பேர் அடங்கிய ஷாப்பர்ட்ஸ் குழு சமூக விற்பனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் உரையாடி அவர்களது சவால்கள், தேவைகள், லாபம் போன்றவற்றை கேட்டறிந்தனர். அத்துடன் அவர்களது வாடிக்கையாளர் தொகுப்பை வலுப்படுத்துவதற்காக அவர்களது சமூக வட்டத்துடனான உறவு குறித்தும் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து பல்வேறு தொழில்முனைவு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் கேபி சித்ரபுரா (ப்ராக்டோ - முன்னாள் விபி மற்றும் வணிக தலைவர்), பிப்லவ் ஸ்ரீவஸ்தவா (ஐபிஎம் ரிசர்ச் – மாஸ்டர் இன்வெண்டர்), ரஜதீஷ் முகர்ஜி (இண்டீட் – சிபிஓ), உல்லாஸ் நம்பியார் (விபி டெக் மற்றும் சென்லேப்ஸ் (Zenlabs) தலைவர், ஏவிபி – டேட்டா சயின்ஸ், மிந்த்ரா) ஆகியோர் ஷாப்பர்ட்ஸை ஆதரித்து வருகின்றனர்.

ஷாப்பர்ட்ஸ் அறிமுகமாவதற்கு முன்பு சிறு விற்பனையாளர்கள், உள்ளூர் ப்ராண்டுகள், இலக்காகக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் ஆகியோர் பிரிவுபடுத்தப்பட்ட சந்தையில் செயல்பட்டு வந்தனர். பொருட்களுக்கான தொகையை வசூலிப்பது, லாபம் ஈட்டுவது போன்றவை கடினமாக இருந்ததால் ஆர்டர் தேவைகளை பூர்த்தி செய்வதில் பலர் சிக்கல்களை சந்தித்தனர்.

”தற்போது இந்தச் சூழல் மாறியுள்ளது. அனைவரும் ஷாப்பர்ட்ஸை சார்ந்தே செயல்படுகின்றனர்,” என்றார் சுமித்.

சந்தை வாய்ப்பு மற்றும் போட்டி

இந்தியாவில் ஆன்லைன் மறுவிற்பனைக்கான சந்தை மிகப்பெரிய அளவில் உள்ளது. தற்போது இரண்டு மில்லியன் சமூக விற்பனையாளர்கள் உள்ளனர் என்றும் 40 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 2022-ம் ஆண்டு 48 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சந்தை ஆய்வு நிறுவனமான Zinnov தெரிவிக்கிறது.

ஷாப்பர்ட்ஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைச் சார்ந்து செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பமானது சரியான சமூக விற்பனையாளரிடம் சரியான பொருளை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுகிறது.

ஐஐடி கராக்பூர் பிடெக் பட்டத்தாரியான சுமித், திபன்ஜனுடன் இணைந்து பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். மொபைல் சென்சிங், மொபைல் அனாலிடிக்ஸ், தொழில்நுட்ப கம்ப்யூட்டிங் போன்ற பிரிவுகளில் தொழில்நுட்பம் சார்ந்த காப்புரிமைக்காக அமெரிக்காவில் விண்ணப்பித்துள்ளார்.

”தொழில்நுட்பப் பின்னணியைக் கொண்டிருப்பதாலும் சந்தையில் தேவை நிலவுவதாலும் இது எங்களுக்கு முக்கியமாகிறது. நாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பமும் நட்புறவுடன்கூடிய எங்களது அணுகுமுறையும் எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.”

மீஷோ, ஷாப்பிஃபை உள்ளிட்டவை ஷாப்பர்ட்ஸ் நிறுவனத்தின் போட்டியாளர்களாகும். ஒவ்வொரு சமூக விற்பனையாளரும் அவர்களது சமூக வட்டத்தின் தேவையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்றார் சுமித்.

டெல்லியில் வசிப்பவர்களை இலக்காகக் கொண்டே ஷாப்பர்ட்ஸ் செயல்பட்டாலும் நாடு முழுவதும் இருந்து சமூக விற்பனையாளர்கள் இந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுடன் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்பு கொள்கின்றனர். டெல்லியில் பல்வேறுபட்ட மக்கள் இருப்பதாக இக்குழுவினர் கருதுகின்றனர்.

”டெல்லியில் பல்வேறு சமூக வட்டங்களில் இருந்து சமூக விற்பனையாளர்களைக் கண்டறிந்தோம். இந்த நகரில் பல்வேறு விருப்பங்களைக் கொண்ட மக்கள் உள்ளனர்,” என்றார் சுமித்.

தற்போது இவர்களுடன் ஆயிரக்கணக்கான சமூக விற்பனையாளர்கள் இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

ஒருவர் அடுத்தவருக்கு பரிந்துரைப்பதன் வாயிலாகவே பெரும்பாலான சமூக விற்பனையாளர்கள் எங்களை அணுகுகின்றனர். சில சமயங்களில் சமூக ஊடக தளங்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்கிறோம்,” என்றார்.

தொழில்முனைவோராக உருவாவதற்கு பின்பற்றவேண்டிய மூன்று எளிய வழிமுறைகள்

ஷாப்பர்ட்ஸ் உடன் தொழில்முனைவோராவது எளிதாகிறது. உங்களுக்குத் தேவையானதெல்லாம் மொபைலில் முகநூல், வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மட்டுமே. நீங்கள் ஷாப்பர்ட்ஸ் மொபைல் செயலியில் உள்நுழைந்து பதிவு செய்துகொள்ளலாம். உங்களது சமூக வட்டத்தில் பொருட்களை ஊக்குவிக்கலாம். செயலி வாயிலாக ஆர்டர்களை பெற்றுக்கொள்ளலாம் அல்லது ஆர்டர் செய்து பயனடையலாம்.

தற்போது அதன் ஆண்டிராய்ட் செயலி வாயிலாகவே அனைத்து இலக்குகளும் எட்டப்படுகின்றன. ஆர்டர் செய்யப்பட்டதும் பொருட்கள் ஷாப்பர்ட்ஸ் நிறுவனத்தால் இறுதி வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது.

ஷாப்பர்ட்ஸ் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து ஒரு நிதிச்சுற்றை உயர்த்தியுள்ளது. தற்போது சீரிஸ் ஏ சுற்று நிதியை உயர்த்த இக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். 2020-ம் ஆண்டில் ஷாப்பர்ட்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மில்லியன் சிறு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போதைய வருவாய் மற்றும் விற்பனை தொடர்பான தகவல்களை நிறுவனர்கள் வெளியிடவில்லை. ஆனால் இவர்கள் விற்பனை வாயிலான சிறு கமிஷன் தொகை மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். 

”பொருட்களை வாங்குவது, ஆர்டர்களை பூர்த்தி செய்வது போன்ற நடவடிக்கைகளுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் செலவிடுகிறோம். எங்களது திறமையான குழு மற்றும் செயல்முறைகள் செலவை கட்டுக்குள் வைத்துள்ளது,” என்றார் சுமித்.

ஆங்கில கட்டுரையாளர் : அபூர்வா பி | தமிழில் : ஸ்ரீவித்யா