இந்த மாற்றுத்திறனாளிகள் உலகை வென்றது எப்படி?

0

அருணிமா சின்ஹா, முன்னாள் தேசிய கைப்பந்து வீராங்கனை. உலகின் மிக உயரமான மலையை ஏற இரண்டு கால்கள் தேவையில்லை என்று நிரூபித்திருக்கிறார். ஏப்ரல் 2011ல் நேரிட்ட ரயில் விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்தார் அவர். ஆனால் அவருடைய மன வலிமையை சிதைக்கமுடியவில்லை. 2013ல் அவர் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி அடைந்த முதல் இந்திய பெண் மாற்றுத்திறனாளி.

இவரைப் போலவே மற்றவர்களும் அசைக்கமுடியாத துணிச்சலைக் காட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில அசாத்தியமான மனிதர்கள், தங்களுடைய சாதனைகளின் மூலம் உதாரணங்களாக அமைந்திருக்கிறார்கள். இந்த மாற்றுத்திறனாளி மனிதர்களின் சாதனைகளுக்காகவே 'லிம்கா புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' ஸ்பெஷலி ஏபில்டு என்ற புதிய பிரிவை உருவாக்கி, ஆண்டின் சிறந்த மனிதர்கள் என்று விருது வழங்கி கெளரவம் செய்திருக்கிறது.

அருணிமா சின்ஹா

ஏப்ரல் 2011ல் நேரிட்ட ரயில் விபத்தில் கால் ஒன்றை இழந்தார் அருணிமா. மருத்துவனையில் சிகிச்சை பெற்று குணமாகி வந்ததும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக ஏதாவது செய்யவேண்டும் என்று அவர் உறுதிகொண்டார். தடைகளைத் தாண்டி எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார். கடந்த 2013ம் ஆண்டு மிக உயரமான அந்த சிகரத்தை அடைந்தார். அடுத்த ஆண்டிலேயே அவரு்கு மறைந்த ஏபிஜே அப்துல்கலாம் அவர்களால் 'அற்புத இந்தியன்' என்ற விருது அளிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் டென்சிங் நார்கே விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் நாட்டின் பெருமைக்குரிய பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது. அருணிமா, 'பார்ன் எகெய்ன் ஆன் த மவுண்டைன்' என்றொரு புத்தகமும் எழுதியுள்ளார். அந்நூலை பிரதமர் நரேந்திர மோடி, 2014 டிசம்பரில் வெளியிட்டார்.

கே.எஸ். ராஜன்னா

ராஜன்னா குழந்தைப் பருவத்திலேயே போலியோவின் பாதிப்பால் இரண்டு கால்களையும் இழந்தவர். எனினும், அவருடைய அர்ப்பணிப்பால் குறைபாடுகளைக் கடந்து வாழ்வில் சாதித்தார். 2002ம் ஆண்டு நடந்த பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதலில் தங்கமும், நீச்சலில் வெள்ளியும் பெற்றார். இவர் மெக்கானிக்கல் என்ஜினிரியங் டிப்ளமோ படித்தவரும்கூட. 2013ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையராக நியமிக்கப்பட்டார். சொந்தமான நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, 350 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார். அதில் மாற்றுத்திறனாளிகளும் இருக்கிறார்கள்.

ஜாமீர் தாலே

ஜாமீர் தாலே பார்வையற்றவர், காதுகேளாமை மற்றும் பேச்சுத் திறன் குறைபாடும் இருக்கிறது. ஆனால், அவருடைய குறைபாடுகளால் மற்றவர்களிடம் இரக்கத்தைத் தேட அவர் விரும்பவில்லை. ஜாமீர் எஸ்எஸ்சி தேர்ச்சி பெற்றவர். நவீன தொழில்நுட்பத்தில் புலி. தன் லேப்டாப் மற்றும் மொபைலில் தொடர்புகொள்வதற்கான மென்பொருளைப் பயன்படுத்துகிறார்.

பிரெய்லியை கருவியை பயன்படுத்தி எழுத்துகளைப் புரிந்துகொள்கிறார். மேலும், சமூக வலைதளங்களில் சிறப்பாகவும் செயல்படுகிறார். சென்ஸ் இன்டர்நேஷனல் இந்தியா நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றிக்கொண்டே, ஆலோசனை வழங்கும் பிரச்சாரத் திட்டங்களை வளர்ப்பதும் செயல்படுத்துவதுமாக இருக்கிறார். காதுகேளாமை, பன்முக குறைபாடு உடையவர்கள் மற்றும் பார்வைத் திறனற்றவர்களுக்கான உதான் அமைப்பின் தலைவராக இருக்கிறார்.

ராதிகா சந்த்

பிறக்கும்போதே டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டவர். ஆனால் அந்தக் குறைபாடு அவரது தரமான வாழ்க்கையை பாதிக்கவிடவில்லை. டெல்லி, ஹாங்காங் மற்றும் சிட்னியில் உள்ள சிறப்புப் பள்ளிகளில் அவர் கல்வி பயின்றார். சிட்னியில் படிக்கும்போது ஓவியம் தீட்ட ஆரம்பித்தார். நீர்வண்ணங்கள் மற்றும் அக்ரலிக் ஓவியங்கள் வரைந்தார். 1992 ஆம் ஆண்டு, முதல் பத்து தனி ஓவியக் காட்சிகளை வைத்துள்ள ராதிகா, பல குழு காட்சிகளிலும் பங்கேற்றுள்ளார். அவர் டெல்லியில் உள்ள வஸந்த் வேலி பள்ளியுடன் கடந்த இருபது ஆண்டுகளாக இணைந்திருக்கிறார். 2012ம் ஆண்டு செல் ஹெலன் கெல்லர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைக்கான வாய்ப்புகளை உருவாக்கியதற்காக அந்த விருது அளிக்கப்பட்டது.

ரன்வீர் சிங் சைனி

பதினான்கு வயதான ரன்வீர், பிறக்கும்போதே ஆட்டிஸ பாதிப்புள்ளவர். ஆனால் அவர் 2015ம் ஆண்டில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர். குர்கோவனில் வசிக்கும் இந்த பதின்வயது இளைஞருக்கு இரண்டு வயதிலே நரம்பு பாதிப்பு மற்றும் ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது ஒன்பதாம் வயதில் விளையாட்டுப் பக்கம் போனார். 2013ம் ஆண்டு சைனி, மக்காவ் நகரில் நடந்த சிறப்பு ஒலிம்பிக்ஸ் ஆசிய பசிபிக் கோல் இன்டர்நேஷனலில் இரண்டு தங்கம் வென்றார்.

சைலி நந்திகிஷோர் ஆகவானே

சைலிக்கு பிறப்பிலேயே சிறு மன பாதிப்பு இருந்திருக்கிறது. ஆனால் அவர் தன் படிப்பையெல்லாம் முடித்துவிட்டார். ஒன்பது வயதில் கதக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பிறகு சமகால நாட்டிய வடிவங்களைக் கற்றுக்கொள்ள 2007ல் சியாமக் தவாரின் நடனப் பள்ளியில் சேர்ந்தார். அவர் பல நடனப் போட்டிகளில் பங்கேற்று ஆடியுள்ளார். பாங்காக் நகரில் 2010ல் நடந்த உலக ஒலிம்பியாட் நடனப் போட்டியில் வெண்கலம் வென்றார்.

டாக்டர் சுரேஷ் அத்வானி

எட்டாவது வயதில் சுரேஷ் அத்வானி போலியோவால் பாதிக்கப்பட்டார். அது கீழ் மூட்டுகளில் பக்கவாதமாக மாறியது. 1965ல் பள்ளிப்படிப்பை முடித்ததும் – அந்தக் காலத்தில் இன்டர்காலேஜ் பட்டப்படிப்பாக இருந்தது – கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு மறுக்கப்பட்டது. அறுபதுகளின் கடைசியில், அவருக்கு உள் வேலையும் மறுக்கப்பட்டது– கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களின் கிளினிக்கல் பயிற்சி வகுப்புகள் அவை. டாக்டர் அத்வானி இன்று இந்தியாவின் முதல் புற்றுநோயியல் மருத்துவர், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சையில் புகழ்பெற்றவர். மைலாய்டு லூக்கேமியாவால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். இந்தத் துறையில் மிகச்சிறந்த விருதுகளைப் பெற்றுள்ளார். தன்வந்திரி விருது, 2002 ல் பத்ம விருது, 2012ல் பத்மபூசன் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

கேஒய். வெங்கடேஷ்

வெங்கடேஷ் உயரவளர்ச்சி பாதிக்கப்பட்டவர், அவர் 4 அடி 2 அங்குல உயரம் உடையவர். பல கஷ்டங்களை அவர் அனுபவித்துவிட்டார். ஆனால் அதையெல்லாம் கடந்து விளையாட்டின் பக்கம் நகர்ந்துவிட்டார். பள்ளியில் செஸ் விளையாட ஆரம்பித்தார். 2005ம் ஆண்டுல் முதல் இந்திய வீரராக இந்தியா சார்பில் நான்காவது உலக குள்ளர்களுக்கான போட்டியில் பங்கேற்றார். ஆறு பதக்கங்கள் – இரண்டு தங்கம். ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலங்களை வென்றார். தடகளம் மற்றும் பேட்மிண்டன் போட்டியில் வெற்றிகளைக் குவித்தார். இந்திய குள்ளர்கள் விளையாட்டு அமைப்பின் செயலராக உள்ளார்.

ஆயுசி பரேக்

பார்வைக் குறைபாடு கொண்டவர் ஆயுசி, ஆனால் 19 வயதில் எல்எல்பி, 21 வயதில் எல்எல்எம் படித்துமுடித்து பார்வையற்ற முதல் வழக்குரைஞராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார். 2012 நவம்பரில், முதல் இளைய பார்வைத் திறனற்ற பெண் வழக்குரைஞராக ராஜஸ்தான் பார் கவுன்சிலில் அங்கீகரிக்கப்பட்டார்.

அஸ்வினி அங்காடி

கர்நாடகாவில் கிராமப்புற ஏழைக்குடும்பத்தில் பிறந்த அஸ்வினி, பார்வைத் திறனற்றவர். குழந்தைப் பருவத்தில் ஊனம் காரணமாக பாகுபாடு, உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளைச் சந்தித்தவர். இந்த தடைகளை எல்லாம் தாண்டி அவர், 2012ம் ஆண்டு அவருடைய வகுப்பில் முதல் பெண்ணாக தேர்வானார். மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதற்காக 2013ல் ஐநாவின் சிறப்புத் தூதராக துணிச்சல்மிகுந்த இளையோர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். யங் வாய்ஸஸ் திட்டத்தில் பணியாற்றிய பின்னர், அஸ்வினி அங்காடி அறக்கட்டளையைத் தொடங்கினார். அது பார்வைத்திறனற்ற பெண் குழந்தைகளுக்காக தொடங்கி நடத்திவந்த பெலகு அகாதெமியின்கீழ் செயல்பட்டது.

அக்பர்கான்

ராஜஸ்தானில் உள்ள ஏழைக் குடும்பத்தில் பார்வைத் திறனற்றவராக பிறந்தவர் அக்பர்கான். அவரது பார்வைத்திறனற்ற மூத்த சகோதரரின் உதவியுடன் தன் படிப்புகளை முடித்தார். படிப்பில் சிறந்து விளங்கிய அவர், எஸ்எஸ்சி இந்தி சுருக்கெழுத்தில், ஸ்டெனோகிராபி தேர்விலும் முதல் பார்வைத்திறனற்ற மாணவராக தேர்வு பெற்றார். தற்போது அக்பர், பஞ்சாப் தேசிய வங்கியில் மூத்த மேலாளராகப் பணியாற்றுகிறார். அவர் பாடகர் மற்றும் இசையமைப்பாளராகவும் உள்ளார். இதுவரை பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, 50க்கும் அதிக இசைக்கோவைகளையும் செய்திருக்கிறார். 1989ல் மிகச்சிறந்த மாற்றுத்திறனாளி பணியாளர் என்பதற்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

ஜாவித் அஹமத் டக்

1996 இல் காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலால் பலத்த காயம்பட்டவர் ஜாவித். நூறு சதவிகித ஊனத்துடன் சக்கரநாற்காலியில் வாழ்க்கை மாறியது. அத்துடன் பல சிரமங்கள். அவருடைய துயரங்களைக் கடந்து ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். மனிதாபிமான நலவாழ்வு அமைப்பின் ஹெல்ப்லைனை தொடங்கினார். பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதுதான் அதன் முக்கிய நோக்கமாக இருந்தது. சட்டத்தின் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை மீட்டெடுத்தார். இந்தப் பணிகளுக்காக 2004ம் ஆண்டு அவருக்கு தேசிய விருது அளிக்கப்பட்டது.

ராஜிவி ரத்தூரி

கென்யாவில் கார்பரேட் நிறுவனத்தில் பணியாற்றியபோது, துப்பாக்கிக் குண்டு பாதிப்பில் முழுமையாக பார்வையை இழந்தார் ராஜிவி. குணமடைந்த பிறகு, அதே கார்பரேட் துறையில் சேர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக 13 ஆண்டுகள் உழைத்தார். அவர்களுக்காக சட்டரீதியாக போராடினார். சட்ட உதவிகளைச் செய்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகளைத் தொடர்ந்தார். 2010ம் ஆண்டில் மத்திய சமூகநீதி மற்றும் முன்னேற்றத்திற்கான அமைச்சரவை, மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்ட உருவாக்கத்தில் அவரை ஆலோசகராக நியமித்தது.

மேஜர் தேவேந்திர பால் சிங்

கார்கில் போரில் தனது இடதுகாலை இழந்தவர் தேவேந்திர பால்சிங். மேலும் காதுகேளாமையாலும் பாதிக்கப்பட்டார். பிறகு செயற்கைக் கால் பொருத்திக்கொண்டு மாரத்தான்களில் பங்கேற்றார். டெல்லியில் நவம்பரில் நடந்த பாதி மாரத்தானில் முதன்முதலில் கலந்துகொண்டார். 10 அடி உயர் மலை ஏறியும் சாதனை படைத்தார்.

இதுபோன்ற ஆளுமைகள் பல்வேறு துயரங்கள், தடைகளைக் கடந்து வாழ்க்கையின் சவாலை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த சாதனையாளர்களின் சாதனைப் பட்டியல் மறக்கமுடியாதது. தங்களுடைய அசாத்திய திறனால் உடல் ஊனத்தை வென்றவர்கள். ஸ்காட் ஹேமில்டன் சொல்வதுபோல,"வாழ்க்கையில் ஓர் ஊனம் என்றால் அது மோசமான மனநிலைதான்".

ஆக்கம்: TAUSIF ALAM |  தமிழில்: தருண் கார்த்தி