உங்களது ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் யாரை முதலில் பணியிலமர்த்தலாம்?

2

குழு என்பது புதிய கண்ணோட்டத்துடன் பலர் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு ஒப்பானது. உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் சாதிக்கவேண்டும் என்கிற துடிப்புடன் இருப்பவர்களைத் தேடிக்கண்டறிய வேண்டும். வெற்றிக்கு அதீத ஆர்வம் மட்டும் போதாது.

உங்களது இலக்கை மிகச் சரியாக உணரக்கூடிய சில குறிப்பிட்ட திறன் கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களை நீங்கள் கண்டறிந்து உங்களுடன் இணைத்துக்கொள்வது வணிகத்தின் வெற்றிக்கு உதவும்.

சில நிறுவனர்கள் ஆரம்பகட்ட பணியிலமர்த்தும் முறையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு அவசரமாக முடிவெடுப்பதைப் பார்த்திருக்கிறேன். இவற்றில் எந்தவித திட்டமிடலும் இருப்பதில்லை. உங்களது வணிகத்தின் ஆரம்பகட்டத்தில் பணியிலமர்த்தும் முறையை ஆற்றல்மிக்கதாக அமைத்துக்கொள்ள இந்த மூன்று விதமான அணுகுமுறை உதவும் என்று நம்புகிறேன். மிகவும் வலிமை வாய்ந்த இந்த மூன்று முறைகளும் ஆரம்ப கட்டமாக பணியிலமர்த்துவதற்கு மட்டுமன்றி பல ஆண்டுகள் நிலைத்திருக்கவும் உறுதியளிக்கும்.

1. மோசமான பக்கத்தையும் எதிர்பார்ப்பவரான நிதித்துறை நிபுணர்

நீங்கள் ஸ்டார்ட்அப் துவங்கும்போது சட்டம், நிதி மற்றும் அடிப்படை முறைகள் ஏராளமாக இருக்கும். வணிகத்தை நிறுவுவதில் துவங்கி கணக்குகள் மற்றும் சட்ட ஒப்பந்தங்கள் வரை தேவையான அனுமதிகளைப் பெறத் தகுதியான ஒருவர் உங்களுக்கு அவசியம். தொழிலில் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய சட்டரீதியான பிரச்சனைகளைத் தவிர்க்க அடிப்படைகளை முறையாக கையாளப்படுவது அவசியம். தொழில் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் வேளையில் கட்டுப்பாடுகள், வரி, லேபர் மற்றும் மாநில சட்டம் போன்றவற்றில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அதை சரிசெய்வதில் உங்களது நேரத்தை வீணடிக்க வேண்டாம். 

நிபுணர்கள் இதை எளிதாகக் கையாள்வார்கள். நிதியைப் பொறுத்தவரை இது போன்ற நிபுணர்கள் கட்டணங்கள் செலுத்துவது பணத்தை வசூலிப்பது போன்றவை சரியான நேரத்தில் செய்யப்படுவதை உறுதி செய்வார்கள். தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஸ்டார்ட்அப் அல்லது நுழைய தயார்நிலையில் இருக்கும் ஸ்டார்ட்அப் இரண்டிற்குமே முறையான நிதி ரெக்கார்டுகள் அவசியம். முதலீட்டாளர்களை அணுகுவதற்கு இது உதவும்.

சிறந்த பண்புகள்: உன்னிப்பாகவும் விரிவாகவும் சிந்தித்து செயல்படும் நபரே பொருத்தமானவராக இருப்பார். ஏனெனில் சின்னச் சின்னத் தவறுகள் கூட பிற்காலத்தில் பெரியளவிலான பிரச்சனைகளை நிறுவனத்திற்கு ஏற்படுத்தக்கூடும். கட்டுப்பாடின்றியும் சுயவிருப்பத்துடன் அணுகும் திறனும் கொண்டவர்களை கண்டறிந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வாறான நபர் கிடைத்தால் எப்பேற்பட்ட சூழலையும் நீங்கள் எதிர்கொள்ளலாம்.

2. யதார்த்தவாதிகளான மனிதவளத்துறை நிபுணர்

பிரச்சனைகளுக்கான மூலகாரணங்களை கண்டறியும் அணுகுமுறையும் அனைவரையும் ஒன்றிணைத்து ஒருமித்த கருத்துடன் செயல்படச் செய்யும் திறனும் கொண்டவர்கள் பணியிலமர்த்தப்படவில்லை எனில் வெவ்வேறு அணுகுமுறைகள் கொண்ட நபர்களே நிறுவனத்திற்கு கிடைப்பார்கள். பணியிலமர்த்தப்படுவதில் ஒரு தவறு ஏற்பட்டாலும் அது வணிகத்தின் போக்கை அழித்துவிடும். உங்களுடன் இணைந்து பணியிலமர்த்தும் முறையில் திட்டமிட்டு வழி நடத்தும் நிபுணரை தேர்ந்தெடுக்கவும். திறமைகள் முறையாக கையகப்படுத்தப்பட்டால் பணி, பொறுப்புகள் மற்றும் சம்பளம் போன்றவை முறையாக வரையறுக்கப்படும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நபர் மிகச் சிறப்பான தளம் போன்றவற்றின் வாயிலாக நிறுவனத்திற்கு தேவையான நபர்களை பணியிலமர்த்துவார். இதன் மூலம் நிறுவனத்தின் நோக்கங்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் ஒரு சிறந்த குழு உருவாகும். 

சிறந்தபண்புகள் : பேச்சுவார்தைகளில் திறம்பட ஈடுபடுபவராகவும் வளங்களின் பற்றாக்குறை இருப்பினும் சிறந்த திறமையைக் கண்டறியும் திறன் கொண்டவராகவும் இருக்கவேண்டும். திறமையை தன்வசம் ஈர்த்துக்கொள்ளும் குணாதிசயம் கொண்டவரையே நான் பரிந்துரைக்கிறேன். மக்களுடன் நன்றாக ஒருங்கிணையும் மனிதராக இருந்தால்தான் உங்களது நோக்கத்தை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் கொண்டுசேர்க்க முடியும்.

3. எதிர்காலம் குறித்த நம்பிக்கையுள்ளவரான தொழில்நுட்ப வல்லுநர்

தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் எனில் திறமையான ’ஃபுல்ஸ்டேக்’ குறித்த தகவல்களை நன்கறிந்த நபரை பணியிலமர்த்துவது முக்கியம். ஆபரேடிங் சிஸ்டம்ஸ், வெப்சர்வர்ஸ், டேட்டா பேஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஸ்க்ரிப்டிங் லேங்வேஜ் போன்றவற்றின் அடிப்படையில் இந்த நபர் சொல்யூஷன் ஸ்டேக்கை வரையறுப்பார். உங்களது ப்ராடக்டின் அடித்தளத்தையும் அடுத்தகட்ட பணியிலமர்த்தும் நடவடிக்கைகளையும் இந்த ஆரம்ப நடவடிக்கையே தீர்மானிக்கும்.

சிறந்தபண்புகள் : எதிர்காலம் குறித்த நம்பிக்கையுள்ளவராகவும் துணிந்து ஆபத்துகளை ஏற்றுக்கொண்டு புதிய பகுதிகளில் செயல்படும் கனவுகளைக் கொண்டவராகவும் இருக்கவேண்டும். தொழில்நுட்ப உலகம் மாற்றத்திற்கு உட்பட்டதாகும். எனவே தொடர்ந்து புதிய திறன்களை மேம்படுத்திக் கொண்டிருப்பவர்களைக் கண்டறிவதே சிறந்தது. 

இத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவர்களுள் ஒருவராவது உங்களுடன் இருப்பது சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

டிசைன் அண்ட் எக்ஸ்பீரியன்ஸ் இவன்ஜலிஸ்ட் – இவர் உங்களது ப்ராடக்டின் கன்ஸ்யூமர் அனுபவத்தை மேம்படுத்தும் திறமை படைத்த பயிற்சி பெற்ற நபர். இறுதியில் உங்களது வாடிக்கையாளர்கள் மிகவும் பயனுள்ள ஒரு ப்ராடக்டை தேர்ந்தெடுக்கப்பார்கள். அப்படி தேர்ந்தெடுக்கும் ப்ராடக்டை தொடர்ந்து வாங்கச் செய்யும் திறமை கொண்டவரை கண்டறியுங்கள்.

இமேஜ் மேனேஜர் – இவர் உங்களது நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து உங்களது வணிகத்தை சந்தையுடன் இணைக்கும் திறமை கொண்டவர். இவர்கள் உங்களது ப்ராண்ட் குறித்த மக்களின் கண்ணோட்டத்தை மாற்றி சீரமைக்கும் திறமை கொண்டவர்கள். சரியான முறையில் வாடிக்கையாளரிடம் எடுத்துரைக்கும் திறமை கொண்டவரை கண்டறியுங்கள்.

பணியிலமர்த்தும் முறையின்போது அறிமுகமில்லாத ஒருவரை உங்களுடைய நீண்ட நாள் பயணித்தில் இணைத்துக் கொள்ளவேண்டியிருப்பதால் பணியிலமர்த்தும் முறை என்பது அனைத்து விதமான வணிகங்களுக்கும் சற்று சிக்கலானதாகவே இருக்கும். தவிர்க்க முடியாத சில ஆபத்துகள் உள்ளபோதிலும் மேற்கண்ட குறிப்புகள் பணியிலமர்த்தும் முறையை சற்று எளிதாக்கி சில ஆபத்துகளை போக்க உதவும்.

ஆங்கில கட்டுரையாளர் : சோஹெல்

(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எந்த விதத்திலும் யுவர் ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)