அரசியல் ஆதாயத்திற்காக பகத் சிங் பெயரை பயன்படுத்துவது அவருக்கு செய்யப்படும் அநீதி

0

பகத் சிங் பற்றி தான் எங்கும் பேச்சாக இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் அவரைப்பற்றி பேசுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியில் துவங்கி, ராகுல் காந்தி, அவர்விந்த் கெஜ்ரிவல் வரை எல்லோரும் அவரை புகழ்கின்றனர். பகத் சிங்கிற்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என அகாலி தளம் இப்போது தான் தெரிந்து கொண்டிருக்கிறது. இதற்காக ஜனாதிபதிக்கு கோரிக்கை வைக்கவும் தீர்மானித்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் தில்லி சட்டமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலை தலைப்பாகை இல்லாமல் இருப்பதும் அகாலி தளத்திற்கு பிரச்சனையாகி இருக்கிறது. இதே போல அகாலி தளத்தின் கூட்டணி கட்சியான பாஜகவின் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்-ம் அவரைப்பற்றி பெரிதாக பேசுகிறது. தேசியவாதம் பற்றிய விவாதத்தில் திடிரென பகத் சிங்கை தங்களில் ஒருவராக்கி கொள்ளும் முயற்சி நடக்கிறது. எவருடைய நாட்டுப்பற்றுக்கும் அவரே உரைகல்லாக கருதப்படுகிறார். சசி தரூர் போன்றவர்கள் கன்னையா குமாரை பகத்சிங்குடன் ஒப்பிட்டுப்பேசினால் நார் நாராக கிழிக்கப்படுகின்றனர். சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நான் பங்கேற்ற போது, இளம் பெண் ஒருவர் இந்த ஒப்பீட்டால் மிகவும் ஆவேசமடைந்தவராக இருந்ததை பார்க்க முடிந்தது. அவருடைய அதிருப்தி மற்றும் ஆவேசத்தை என்னால் பார்க்க முடிந்தது.

பகத் சிங் எப்போதுமே இந்தியர்களால் மிகவும் உயர்வாக மதிப்படுகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் சுதந்திர போராட்டத்தின் அடையாளச்சின்னமாக கருதப்படுகிறார். காந்தியுடன் அவர் முரண்பட்டிருந்தார் என்பதில் சந்தேகமில்லை. வன்முறை மூலம் சுதந்திரம் பெறுவதை காந்தி ஆதரிக்கவில்லை. ஆனால் 1931 ல் ராஜகுரு மற்றும் சுகதேவுடன் அவர் தூக்கிலிடப்பட்ட போது பக்தசிங்கின் தியாகம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. அப்போது அவருக்கு 23 வயது தான். அதன் பிறகு வரும் பல தலைமுறைக்கு அவர் புரட்சிக்கான ஊக்கமாக அமைந்தார். அவருக்கு முன், இதே போல சர்தார் பட்டேல் மற்றும் சுபாஸ் சந்திர போஸ் ஆகியோரை தங்களில் ஒருவராக்கி கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருவருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை. ஒரு அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதில்லை. இருவருமே காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் பட்டேலுக்கு இருந்த ஓரளவு கொள்கை நோக்கிலான தொடர்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நேத்தாஜி எதிர் துருவமாக இருந்தார். அவர் சோஷலிச சிந்தனை கொண்டிருந்த புரட்சிக்காரர்.

அது போலவே பகத் சிங்கிற்கு ஆர்.எஸ்.எஸ்/பாஜக வுடன் எந்தவிதமான கொள்கை சார்பும் இருந்தது கிடையாது. அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் மோடி அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றுக்கு எதிரான கடுமையான விமர்சகராக இருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜே.என்.யூ விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசின் நிலைப்பாடு அவரை கொந்தளிக்க வைத்திருக்கும். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசு ஜே.என்.யூ தீவிரவாதம் மற்றும் தேச விரோதிகளின் கூடாராமாக இருக்கிறது என களங்கம் கற்பிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெளிப்படையாகவே கம்யூனிஸ்ட் கொள்கையை எதிர்த்து வருகிறது. ஜே.என். யூ எப்போதுமே கம்யூனிஸ்ட் கொள்கையின் கோட்டையாக இருப்பதால் அதன் துவேஷ பிரச்சாரத்திற்கு இலக்காகி வருகிறது. இங்கு எழுப்பப்பட்ட இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் ஜே.என்.யூ வை போக்கிரிகளாக சித்தரிப்பதற்கான அருமையான வாய்ப்பாக அமைந்தது. எனவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பகத் சிங்கை தங்களில் ஒருவராக்கிக் கொண்டு அவரை தேசியவாதம் மற்றும் நாட்டுப்பற்றுக்கான உரைகல்லாக ஆக்க முயற்சிப்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பகத் சிங் ஒரு கம்யூனிஸ்ட், இளம் வயதில் அவர் காரல் மார்க்ஸ் மற்றும் லெனின் சிந்தனைகளை தனக்குள் வரித்துக்கொண்டிருந்தார். ரஷ்ய புரட்சியால் அவர் ஈர்க்கப்பட்டிருந்தார். லெனினை அவர் தனது ஆதர்சமாக கருதினார். சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் புரட்சியில் அவர் இந்திய விடுதலை மற்றும் நாட்டின் பிரச்சனைகளின் தீர்வுக்கான விதைகளை தேடிக்கொண்டிருந்தார். பாட்டாளி மக்களின் சர்வாதிகாரம் இந்திய ஏழைகளை அவர்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும் என அவர் நம்பினார். அவரும், சுகதேவ் மற்றும் ராஜ்குரு கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட காரணமாக அமைந்த, சட்ட மன்றத்தில் அவர்கள் வீசிய துண்டு பிரசுரம் மூலதனம் மற்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் அடிப்படை அம்சங்கள் பற்றி பேசியது. "மனிதர்கள் மனிதர்களால் சுரண்டப்படுவது மற்றும் ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக விளங்கும் வகையில் நாடுகள் நாடுகளால் சுரண்டப்படும் வரை மனித குலம் அதன் தீமைகளில் இருந்து விடுபட முடியாது” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் ஆட்சி மாற்றம் பற்றி பேசவில்லை, அமைப்பில் மாற்றம் பற்றி பேசி வந்தார். "முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய போரின் அழிவில் இருந்து உலகம் விடுபட்டால் தான் மனிதகுலம் விடுதலை பெறும்” என்றும் அந்த பிரசுசரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்த்து. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்து ஒற்றுமை பற்றி தான் பேசுகிறது. பாட்டாளி வர்க ஒற்றுமை பற்றி அல்ல. ஆனால் பகத்சிங் மக்கள் அரசு அமைக்க தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும் என நம்பினார்.

மதங்கள் மக்களை பிளவுபடுத்துவதாக கம்யூனிஸம் கருதுகிறது. மதம் மக்களின் அபின் என்று மார்க்ஸ் கூறினார். அவர் மதம் மற்றும் கடவுளை மறுத்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் கொள்கையில் மதம் தான் மையமாக இருக்கிறது. இந்துமதம் தான் அதற்கு ஊக்கம் அளிக்கிறது. உண்மையான கம்யூனிச மற்றும் சோஷலிசவாதியான பகத்சிங் கடவுள் மறுப்பாளராக இருந்தார். இதை அவர் ஒருபோதும் மறுக்கவில்லை. நான் ஏன் நாத்திகன் ஆனேன் எனும் அவரது விளக்க பிரசுரம் எல்லோரும் படிக்க வேண்டிய வரலாற்று ஆவணமாகும். இந்த ஆவணம் அவரது சிந்தனைகள் மற்றும் பகத் சிங் என அழைக்கப்படும் மனிதரை புரிந்து கொள்ள உதவக்கூடிய ஜன்னலாகும். அவர் கடவுள் இருப்பதையே ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுள் இருந்தால் உலகின் ஏன் இத்தனை இன்னல்கள்? ஏழைகள் இருப்பது ஏன்? என்று அவர் கேள்விகளை எழுப்புகிறார். "இந்த உலகை படைத்த எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளான கடவுள் இருக்கிறார் என்றால், இந்த உலகை அவர் ஏன் இன்னல்கள் மற்றும் துண்பங்களுடன் உண்டாக்கினார் என்று நீங்கள் விளக்க வேண்டும். ஒருவர் கூட இங்கு மகிழ்ச்சியாக இல்லையே” என்றும் அந்த பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் இதற்கு நேர் எதிரான திசையில் இருக்கிறது. பகத் சிங்கின் மதம், கடவுள் மறுப்பை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்கிறதா என கேட்க விரும்புகிறேன். பகத் சிங்கின் கம்ப்யூனிச கொள்கையை அது ஏற்கிறதா? எனில் அதன் இரண்டாம் தலைவரான குருஜி கோல்வாக்கர் தனது புத்தகமான 'தி பஞ்ச் ஆப் தாட்ஸ்' நூலில், இந்தியாவின் மூன்று முக்கிய எதிரிகளாக முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்களை குறிப்பிட்டுள்ளார். இதுவே ஒரு முரண் தான். கோல்வாக்கர் கூற்றுபடி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பகத் சிங் ஒரே பக்கத்தில் இருக்க முடியாது. இருவரும் கைகோர்க்க வாய்ப்பே இல்லை.

மேலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி அரசு நிந்திக்கும் ஜவஹர்லால் நேருவின் மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர் பகத் சிங் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. நேரு மற்றும் போஸ் ஆகிய இருவரையும் ஒப்பிட்ட பகத் சிங், போஸ் உணர்ச்சிவசப்படுபவர் ஆனால் நேரு தர்க ரீதியாக சிந்திக்கக் கூடியவர் என்று குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் இளைஞர்களின் மன நிலையை பூர்த்தி செய்யக்கூடியவர் என்பதால் நேரு மற்று போஸ் ஆகிய இருவரில் நேருவை பின்பற்றுமாறு அவர் பஞ்சாப் இளைஞர்களை கேட்டுக்கொண்டார். இது ஆர்.எஸ்.எஸ்க்கு ஏற்றதாக இருக்குமா?

நேருவை மங்கச்செய்யவே ஆர்.எஸ்.எஸ் சர்தார் பட்டேல் மற்றும் சுபாஷ் சந்திர போசை கண்டறிந்துள்ளது. அவர்கள் மூலமாக இந்திய வெகுமக்களின் மனங்களில் இருந்து நேருவின் புகழை அழிக்க முயல்கிறது. ஏனெனில் பரவலான தேசிய உரையாடலில் நேருவின் தாராளவாதம் ஆதிக்கம் செலுத்தும் வரை தனது கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் ஆதிக்கம் செலுத்த முடியாது என ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. மோடி அரசி பதவிக்கு வந்த நாள் முதல் நேரு முன்வைத்த இந்தியா கருத்தாக்கத்தை பாழாக்க முயன்று வருகிறது. எனவே பகத் சிங்கை தங்களில் ஒருவராக ஆக்கி கொள்ளும் முயற்சி நேரு பற்றிய அவரது கருத்தை ஏற்பது என நான் கருதுவது தவறானதா? ஆர்.எஸ்.எஸ் கோல்வாக்கர் கருத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது என இதற்கு பொருள் கொள்ளலாமா? பகத் சிங் நம்பியது போல் மதம் என்பது பிற்போக்குத்தனமானது எனும் கருத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கொண்டுள்ளதா?

இந்த கேள்விகளில் ஆர்.எஸ்.எஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என எனக்குத்தெரியும். அதன் செயல்கள் மற்றும் பேச்சுகள் இதை உணர்த்துகின்றன. எனவே பகத் சிங்கை தங்களில் ஒருவராக்கிக் கொள்ளும் முயற்சி அவரது தியாகத்தை கொண்டு , மற்றவர்கள் மீது களங்கம் கற்பித்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே. ஆனால் பகத் சிங் மிகப்பெரிய மனிதர். அவரது பெயரை அரசியல் மோதலுக்குள் இழக்கக் கூடாது. அவரது புரட்சி மற்றும் புகழுக்கு களங்கும் கற்பிக்கும் வகையில் அது அமைந்துவிடும்.

கட்டுரையாளர்: அசுடோஷ் | தமிழில்: சைபர் சிம்மன்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)