கல்லூரி மாணவி பிரியங்கா தன் 10 லட்ச ரூபாய் சேமிப்பை எப்படி ஒரு கோடியாக உயர்த்தினார்?

0

25 வயதில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் துறைத் தலைவராக நீங்கள் இருக்கலாம், உங்களது ஆடம்பர வாழ்வை பார்த்து உங்கள் சுற்றத்தார், இணையம் உங்களை எவ்வாறு உயர்த்தி இருக்கிறது என்று முனுமுனுக்கலாம், இது தான் இலக்கு என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் படிக்கும் இந்தக் கதை உங்கள் மனநிலையை மாற்றும், உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு பேருந்தை தவறவிட்ட உணர்வை இது ஏற்படுத்தும். 10 ஆண்டு காலம் திட்டமிட்டு நாம் எட்ட நினைக்கும் இலக்கை ஒரு பெண் தனக்கான சாதனையாக அதைக் கல்லூரி காலத்திலேயே செய்து காட்டியுள்ளார்.

சரும பராமரிப்புக்கான அழகு சாதனப் பொருள் தயாரிக்கும் கல்லோஸ் நிறுவனம் பற்றிய தன்னுடைய எண்ணத்தை பகிர்ந்து கொண்ட போது பிரியங்காவிற்கு வயது 20. கல்லோஸ் தற்போது 6 வெவ்வேறு மாநிலங்களில், மாநிலத்திற்கு 100 கடைகள் வீதம் தன்னுடைய பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

திறமையான தொழில்முனைவர் பிரியங்கா அகர்வாலை சந்தியுங்கள்!

சரும பாதுகாப்புத் துறையை தன்னுடைய தொழில் திட்டமாக அவர் தேர்வு செய்தது எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்றுதான். அவர் எப்போதுமே வாழ்வில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர், அதுவும் இத்தனை சிறிய வயதில் தனியாக ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு அவருக்கு அச்சமும் இருந்தது.

“வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் படிப்புகளை என்னுடைய விருப்பத் தேர்வு, அதே போன்று விளையாட்டு மற்றும் நடனம் என்றால் எனக்கு உயிர். என்னுடைய குழந்தைப்பருவம் கூட எந்த கவலைகளும் இல்லாமல் பாதுகாப்பானதாகவே இருந்தது. அந்த மாதிரி சூழலில் வாழ்ந்த நானா இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பவராக மாறினேன் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை” என்கிறார் பிரியங்கா.

அதிர்ஷ்டம் உங்கள் கதவை தட்டும் போது அதற்கு தக்க பதிலை அளிப்பதே தலைமைக்கான பண்பு. “நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது என் அப்பாவின் அலுவலகத்திற்கு தினமும் சென்று வருவேன், அப்போது தான் எனக்கு சுயமாக தொழில் தொடங்கும் ஆர்வம் ஏற்பட்டது. சருமபராமரிப்பு அல்லது அழகுசாதனப் பொருட்களை பற்றி முதலில் எனக்கு எதுவும் தோன்றவில்லை. முதலில் நான் ஒரு சலூன் திறக்கவே விரும்பினேன். அதனால் ஒரு நல்ல பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கூந்தலை அழகுபடுத்துவது குறித்து குறுகிய காலப் படிப்பை பயின்றேன். ஒருவருக்கு எந்தத் தொழில் மீது ஆர்வம் இருக்கிறதோ அதை அவர் முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் விரும்பிய சிகை அலங்காரம் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் கூந்தல் அலங்காரத்தில் எனக்கு முழு ஈடுபாடு இல்லை என்பதை நான் பின்னர் உணர்ந்து கொண்டேன்.”

இனியும் தாமதிக்கக் கூடாது என்பதை உணர்ந்த பிரியங்கா தனக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது என்ற ஆராய்ச்சியைத் தொடங்கினார். “சில மாத தேடல்களுக்குப் பிறகு நான் என் தந்தையிடம் இது பற்றி பேசினேன், அப்போது அவர் எனக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் தொழில் மேம்பாட்டு சிந்தனையாளரை வெளிக் கொணர்ந்தார். என் அப்பா நான் சருமப் பராமரிப்புத் துறையில் ஏதாவது முயற்சிக்கலாம் என்று அறிவுறுத்தினார். இதைக் கேட்டு எனக்கு முதலில் சிரிப்பு தான் வந்தது.

“நான் தொழில் தொடங்கிய காலத்தில் வழக்கத்தில் இருக்கம் பழக்கவழக்கங்கள், முறைகள் மற்றும் FMCG மார்க்கெட்டின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது. எனக்கு அலுவலகப் பணியைத் தவிர வேறு எந்த அனுபவமும் கிடையாது. எங்கள் நிறுவனத்தில் பலர், முதலாளி மகளான நான் கோடைக்கால விடுமுறையை கழிக்கவே அலுவலகம் வந்திப்பதாகக் கருதினர். நான் பிபிஏ படித்தேனா எம்பிஏ படித்தேனா என்பதல்ல விஷயம்.”

உங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லையா?

உண்மையில் பிரியங்காவிற்கு இரண்டு மிகப்பெரிய மலைகளை ஒரே நேரத்தில் கட்டி இழுப்பது சிரமமாக இருந்தது. கல்வி, சுயதொழில் இரண்டிற்கும் சமஅளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழல் அது, அதே சமயம் சில கடுமையான விமர்சனங்களும், எதிர்மறையான சந்தேகங்களும் எழுவதை தவிர்க்க முடியவில்லை. “என்னுடைய படிப்பு முடியும் வரை என்னுடைய தொழில் அறிமுகத்தை ஒத்திவைக்க முடிவு செய்தோம். ஓராண்டு கல்லூரி படிப்பிற்கு பிறகு மீண்டும் தொழில் தொடங்குவதற்காக மக்களை பணியில் அமர்த்தும் பணியில் இறங்கினேன். எங்களது திட்டத்தை மறுஆய்வு செய்யவேண்டி இருந்தது. ஓராண்டு செயல்படாமல் இருந்ததால் அனைவரும் இது சாத்தியமல்ல, இது நடக்காது என்றே நினைத்தனர். இதனால் ஒரு குழுவை கட்டமைத்து, பொருட்கள் உற்பத்தியை தொடங்கி அவற்றை நல்ல நிலையில் சந்தையில் உலா வரச் செய்ய ஏறத்தாழ ஓராண்டு கால போராட்டம் நடைபெற்றது.”

விமர்சகர்கள் மற்றும் சந்தேகப் பார்வை பார்த்தவர்களை நான் நேர்மையான பகிர்வாளர்களாகவே பார்க்கிறேன் – சிலர் மீண்டும் மீண்டும் என்னை அச்சுறுத்தி வந்தார்கள், என் நிலையில் இருந்து தாழ்ந்து வரச் செய்ய முயற்சித்தார்கள். பாலின பாகுபாடு நிறைந்த நாட்டில் ஒரு பெண் தன்னை ஒரு வெற்றியாளராக நிரூபிப்பது உண்மையிலேயே மிகவும் கடினமானது. பணக்கார வீட்டுப் பெண்கள் திருமணத்திற்கு முன்னர், டைம் பாஸ்-க்காக செய்வது போலத் தான் நானும் செய்கிறேன் என்று சிலர் எண்ணினர். நாம் எப்போதுமே ‘தி பெஸ்ட்’டாக இருந்தாலும், சில நேரங்களில் நாம் தோல்வியை சந்திக்க நேரிடும், ஏனெனில் எங்காவது ஏதாவது சிறு தவறு நடந்திருக்கும். இவற்றையெல்லாம் முறியடிப்பதற்கான ஒரே வழி மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள், உங்கள் மீது உண்மையான விமர்சனம் வைப்பவர்களுக்கு பதிலளியுங்கள். அதுவே போதுமானது, பின்னர் உங்கள் பணியைத் தொடருங்கள். நான் எப்போதுமே எனக்காக சாதிக்க நினைப்பேன் அப்போது உங்களுக்கு கிடைக்கும் அனுபவம் ஒருவித திருப்தியை அளிக்கும், இது மற்றவர்களிடம் உங்களை நிரூபிக்க நீங்கள் போராடுவதை விடச் சிறந்தது. உங்களுக்கு ஆதரவாகவும், சக்தி கொடுப்பவராக இருப்பவரை உங்கள் அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள், மற்றவற்றை புறந்தள்ளுங்கள். அதைத் தான் நானும் செய்தேன்.”

புயலுக்குப் பின் வரும் வானவில்

மற்ற ஸ்டார்ட்அப்களைப் போல, பிரியங்கா தான் தேர்ந்தெடுத்த பணியில் ஒரு வலம் வந்திருந்தார். ஒரு இளம் தொழில்முனைவராக கால்பதித்துள்ள அவருக்கு தொழிலில் வெற்றி காண வேண்டும் என்ற அழுத்தம் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் ஒரு பெண்ணாக சவால்களை சந்திப்பது கூடுதல் நெருக்கடியாக இருந்தது. அவர் தப்பு மற்றும் தவறை திருத்திக் கொள்ளும் முறையில் அனைத்தையும் விரைவில் கற்றுக்கொண்டார். என்னுடைய தந்தையின் உணவு தயாரிப்புப் பிரிவையே நான் என்னுடைய பணிக்கும் அமர்த்திக் கொண்டது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று மற்றவர்கள் சுட்டிக்காட்டினர். “முதல் இரண்டு மாதங்கள் செயல்பாடுகள் அனைத்தும் குறைவாகவே இருந்தது, அதனால் தேக்கமும் ஏற்பட்டது. எங்களிடம் நிறைய ஸ்டாக்குகள் இருந்தன, நான் ரூ.10 லட்சம் முதலீட்டு பணத்தை வீணடித்துவிட்டதாக என் தந்தை நினைத்தார். அப்போது தான் நான் என்னுடைய சொந்தக் குழுவை உருவாக்க முடிவு செய்தேன். எனக்குக் கீழ் பணியாற்றும் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தேன், எங்களின் சிந்தனை தெளிவாக இருந்தது. நாங்கள் 2ம் மற்றும் 3ம் நகரங்களில் கவனம் செலுத்தத்தொடங்கினோம், எங்களுடைய சொந்த விநியோக நெட்வொர்க்கை கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதிகளில் ஊடுருவச் செய்தோம். எங்களின் பொருட்களை வைப்பதற்கான ஸ்டோர்கள் எத்தனை தேவை என்பதை வகைப்படுத்தினோம். மக்களிடம் எங்கள் தயாரிப்புகள் பற்றி செயல்விளக்கம் அளிப்பதற்கே நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம்.”

வானவில்லின் முடிவில் தகதகக்கும் தங்கம்

முதல்கட்ட தயாரிப்பில் தன் தந்தையின் ஆதரவுடன், அவர்கள் மைய நிதியைக் கொண்டு வருமானத்தை பெருக்கினர். “ரூ.10 லட்சம் முதலீட்டை எங்களால் சில மாதங்களிலேயே ரூ.1 கோடியாக மாற்ற முடிந்தது. நிறைய பேருக்கு இது ஒரு சாதாரண விஷயமே ஆனால் எங்களைப் பொருத்த வரை இது ஆச்சரியமளிக்கக்கூடியது. இது முற்றிலும் மார்க்கெட்டிங் தொடர்பானது, சந்தையில் மிகப்பெரிய நிறுவனங்களான HUL, P&G, டாபர் உள்ளிட்டவையோடு, நூற்றுக்கணக்கான உள்ளூர் தயாரிப்பாளர்களும் சந்தையில் உள்ளனர். இதுமட்டுமின்றி மாதமாதம் புதுவரவுகளும் இந்தத் துறையில் உள்ளன. எங்கள் தயாரிப்புகள் பற்றி சந்தேகம் கேட்க ஆளே இல்லாத நிலையில் இருந்த நாங்கள் தற்போது விநியோகிஸ்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளோம். பொருட்கள் விநியோகச் சங்கிலி மற்றும் தயாரிப்பு பற்றிய புள்ளிவிவரங்களை முறையாக சரிபார்க்கவில்லை என்றால் நாம் எளிதில் சந்தையை விட்டுவெளியேறிவிட வேண்டியது தான்.”

இந்த இளம் தொழில்முனைவர் தன் வாழ்வின் கல்வி தொடர்பான அடுத்த அடி எடுத்து வைத்துள்ளார், அவர் எஸ்.பி.ஜெயினில் எம்பிஏ படிக்கிறார். தன்னைவிட சிறந்தவர்களை பணியில் அமர்த்திக்கொண்டு அவர்களின் அனுபவங்களை அமைதியாக கேட்டுக் கொண்டு அவற்றை தன்னுடைய தொழில் முடிவுகளில் சேர்த்துக் கொள்ள சிறிதும் தயங்க மாட்டார். “நீங்கள் உங்கள் குழுவில் இளையவராகவும் தலைவராகவும் இருக்கும் பட்சத்தில் மரியாதை கொடுத்து மரியாதையை திரும்பப் பெறுவதில் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். நான் மற்றவர்களோடு தொடர்பில் இருந்து கொண்டே இருப்பேன், அமைதியாகவும், தன்நம்பிகையோடும் மற்றவர்களின் திறமைகளை மதித்து பாராட்டுபவராகவும் இருக்கிறேன். இதுநாள் வரை பாலின பாகுபாட்டை என்னுடைய வேலையில் நான் ஒருபோதும் உணர்ந்ததேயில்லை, இது தொடரவேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.”

அவர் எப்போதும் செயல்களை மதித்து அவற்றை வரவேற்கும் நபராக இருக்கிறார், இன்றைய காலகட்டத்தில் பெண் தொழில்முனைவோருக்கு மிகவும் தேவையாக இருப்பதும் அதுவே. இந்த பண்புகள் மற்ற பெண் தொழில்முனைவர் உயர்பணிகளை தேர்ந்தெடுப்பதற்கான முன்மாதிரியாக திகழ்கிறது.

“இரண்டாவது முக்கியமான விஷயம் பயம் மற்றும் உறுதியற்ற சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு பயணிப்பது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு ஸ்டார்ட் அப்கள் பெண்களால் நிறுவப்படுகிறது, இது உண்மையில் பாராட்டுக்குரியது, இந்த ட்ரென்டை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த பார்வை பெண்கள்; கணவன், தந்தை மற்றும் உடன்பணியாற்றுபவர்களுக்கு ஒத்து ஊதுபவர்கள் அல்ல உரக்கப் பேசும் தைரியம் படைத்தவர்கள் என்பதை நிதர்சனத்தில் உணர்த்துகிறது.”

கட்டுரை: பிஞ்ஜல் ஷா / தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்