ஏசி ரிப்பேர் மெக்கானிக் சச்சின் கோடீஸ்வர தொழில்முனைவராக மாறிய வெற்றிக் கதை!

0

கடின உழைப்பால் எதையும் சாதிக்கலாம் என்கிற வாக்கியம் பொலிவிழந்து வருகிறது. ஏனெனில் நமது இலக்கு எட்டாத உயரத்தில் உள்ளது. அதன் செயல்திட்டம் எங்கோ கற்பனையாக இருப்பதால் நமக்கான ப்ராண்ட் மதிப்பும் காற்றில் மிதக்கிறது.

20 பைசா… 

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) பழுது பார்க்கும் பணிபுரிந்தவர் சச்சின் ஷிண்டே. சிறு வயதில் அன்றாடம் 20 பைசா மட்டும் கொண்டு வாழ்ந்தி்ருந்தார். நேர்மைக்கும், பணிவிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர்.

அவர் ஒரு மில்லியன் டாலர் நிறுவனத்தை எப்படி மெல்ல மெல்ல உருவாக்கினார் எனும் நினைவுகளை யுவர் ஸ்டோரியுடன் பகிர்ந்து கொண்டார்.

48 வயதான் சச்சின் ஷிண்டேவின் தந்தை மில் வேலை செய்பவர். அம்மா இல்லத்தரசி. வோர்லியின் பிடிடி சால் என்ற பகுதியில் ஒரு சிறிய அறையில் வசித்தனர். தினசரி செலவிற்காக அவருக்கு 20 பைசா கிடைக்கும். மிக சொற்பான அந்த பணத்துடன் வாழ்ந்த நினைவுகள்தான் பின்னாளில் அவருக்கு பலமான உந்துதலாக அமைந்தது. 

”அப்போது பேருந்து கட்டணமே 20 பைசா. அதனால் என்னுடைய பங்கை என் சகோதரியிடம் கொடுத்து அவரை பேருந்து வரச்சொல்லிவிட்டு நான் நடந்து பள்ளிக்கு செல்வேன். இந்த சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தது. அதற்குப் பின் நான் நிச்சயம் ஒருவரிடம் பணிபுரியாமல் தொழிலதிபராகத்தான் வளரவேண்டும் என்று முடிவெடுத்தேன்.” என்கிறார் சச்சின்.

அவரது திட்டம் செயல்பட சில காலம் பிடித்தது. ப்ளூஸ்டார், BARC ஆகிய நிறுவனங்களில் பயிற்சியாளராக சேர்ந்தார். முழுமையாக பணியில் ஈடுபடுவதற்கு முன் இரண்டு ஆண்டுகள் பயிற்சியளிக்கப்படும். தொழில்நுட்பச் சேவை வடிவமைப்புப் பிரிவில் தொழில்நுட்ப மேற்பார்வையாளராக பணியைத் தொடங்கினார். அவரது பணி BARC உள்ளே இருக்கும் ஏசி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட சாதனங்களை பராமரிப்பதாகும்.  

”என் வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பியூன், துப்புரவு பணியாளர்கள்  உள்ளிட்டோர் வாழ்க்கையில் வெற்றிபெற படித்து PWD தேர்வெழுத உதவினேன். பின்னாளில் அவர்களும் தொழில்நுட்பச் சேவை பிரிவில் தேர்வானார்கள்” என்று நினைவுகூர்ந்தார்.

20,000 ரூபாய்…

சச்சினின் தொழில்முறை முன்னேற்றத்திற்கு மூன்று சம்பவங்கள் படிக்கல்லாக அமைந்தது. மும்பையில் பந்த் நடந்த சமயம் அது. அப்போது BARC இயக்குநர் திரு.சிதம்பரம் அவர்களது காரில் இருந்த AC பழுதடைந்துவிட்டது. அது அரசாங்க வண்டி என்பதால் BARC-ன் விதிப்படி வெளியாட்களிடம்தான் பழுதுபார்க்கும் பணி ஒப்படைக்கப்படவேண்டும்.

ஆனால் பந்த் காரணமாக யாரையும் வரவழைத்து சரிபார்க்க முடியவில்லை. இந்த வேலையை முடிப்பதற்கு சச்சினை அழைத்தனர். ஆனால் பழுதுபார்க்கும் பணியில் ஏதாவது தவறு நேர்ந்தால் அவர்களது துறையின் பெயர் கெட்டுவிடும் என்று மூத்த அதிகாரிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

”நான் துணிந்து வெற்றிகரமாக வேலையை செய்து முடித்தேன். இந்த சம்பவத்திற்குப்பின் அவர்களின் வேலைகளை வெளியாட்களிடம் ஒப்படைப்பதை நிறுத்திவிட்டனர். ஏற்கெனவே அவர்களது குழுவில் பணிபுரியும் ஊழியர்களின் திறமையை இப்படிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தனர்.” என்று நினைவுகூர்ந்தார் சச்சின்.

இவ்வாறாக சச்சினுக்கு புதிய பணிகளுக்கான பாதையும் பதவி உயர்விற்கான வாய்ப்பும் கிடைத்தது. அவரையும் அவரது பணியையும் பல அதிகாரிகள் அங்கீகரித்தனர். மூன்று வருடங்கள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கிடைக்கும் சம்பள உயர்வு இரண்டு வருடங்களுக்குள்ளாகவே சச்சினுக்கு கிடைத்தது.

“1999-ல் என்னுடைய மாதச் சம்பளம் 20,000. நான் திருப்தியடையவில்லை. எனக்கு ஒதுக்கப்பட்டது வழக்கமான பணியாகவே தோன்றியது. என்னுடைய வேலை சவால் நிறைந்ததாகவோ வாழ்க்கை அசாதாரணமானதாகவோ இல்லை.” என்றார்.

40 ஆண்டுகள் BARC நிறுவனத்தில் பணிபுரிந்த மற்றொரு தொழில்நுட்ப மேற்பார்வையாளரான சக ஊழியர் ஒருவரைப் போல தனக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்று சச்சின் எண்ணினார். அந்த ஊழியர் தங்குவதற்கு நான்கு அறைகள் கொண்ட பெரிய குடியிருப்பை நிறுவனம் வழங்கியிருந்தது. 

பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதே நாள் அந்த குடியிருப்பிலிருந்து காலி செய்யப்பட்டார். அவருக்கு வைப்பு நிதியாக 15 லட்ச ரூபாய் கிடைத்தது. அவருக்கு கிடைத்த கடன் தொகையில் 240 சதுர அடி கொண்ட ஒரு குடியிருப்பிற்கே அவரால் செல்லமுடிந்தது.

“அவரது நிலைமையை பார்த்ததும் நான் சிந்தித்தேன். 40 வருடங்கள் பணிபுரிந்த பிறகு வரி பிடித்தம் போக கிட்டத்தட்ட என்னுடைய வாழ்நாள் முழுக்க என்னால் சேமிக்க முடிந்த தொகை 2 கோடி ரூபாய். இன்னும் இருபது வருடங்களுக்கு பிறது இந்தத் தொகையின் மதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும்.” என்றார். பணத்திற்காக; வாழ்க்கையை சுதந்திரமாகவும் முழுமையாகவும் அனுபவிக்க முடியாதோ என்று இளம் வயதில் இருந்த அதே பயம் அவருக்கு மறுபடியும் தோன்றியது. 

மீண்டும் 10,000...

தொழில்முனைவோராக வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்ற எண்ணினார். ஆனால் குடும்பத்தினர் பலர் அரசு வேலையில் இருந்தவர்கள். மத்திய அரசு வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்குவது என்பது அவராகவே அழிவை தேடிக்கொள்வதற்கு சமம் என்று குடும்பத்தினர் அனைவரும் எண்ணினர்.

”என் அம்மா என்னிடம் முழுதாக நான்கு மாதங்கள் பேசவில்லை. என்னுடைய விருப்பம் குறித்து கேட்டார். நான் உறங்கும்போது கூட பணம் வந்துகொண்டிருக்கும் வகையான வாழ்க்கை எனக்கு வேண்டும் என்று அவரிடம் சொன்னேன்.”

சச்சினிடம் இருந்தது அனுபவம் மட்டுமே. அந்த அனுபவம் அவருக்கு பல நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய சொத்தானது. அவருக்கு நன்கு தெரிந்த துறையிலேயே தொழில் தொடங்க எண்ணினார். ப்ளூ ஸ்டார் லிமிடெட் நிறுவனத்திற்கு ஏசி, வாட்டர் கூலர், டீப் ஃப்ரீசர், பாட்டில் டிஸ்பென்சர், கோல்ட் ரூம் போன்றவற்றிற்கு வருடாந்திர மெயிண்டனென்ஸ் செய்யும் ‘ஸ்பேன் ஸ்பெக்ட்ரம்’ எனும் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தை தொடங்க முடிவெடுத்தார்.

தொடங்குவதற்கு நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் ரூபாய் 10,000 சேகரித்தார். அவர் சம்பாதித்த தொகையிலிருந்து மற்ற செலவுகளை சமாளிக்கத் திட்டமிட்டார்.

”இந்த துறையில் பொதுவாக பலரும் வீட்டிலிருந்தே பணிபுரிவார்கள். நான் ஒரு அலுவலகத்தை தொடங்கினேன். முறையான கணிணிமயமாக்குதல், உள்ளீடுகள், ஃபேக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்புகளை அமைத்தேன்.” என்று விவரித்தார்.

நேரடியான வாடிக்கையாளர்கள் முதலில் இல்லை. அப்போதுதான் ஏற்கெனவே நடந்த ஒரு சம்பவம் மறுபடி அவருக்கு உதவியது. 1990-ல் வேலையாட்கள் பந்த் நடத்திய நேரத்தில் ப்ளூஸ்டாரில் பணிபுரிந்தபோது மூத்த இயக்குநரின் ஏசியை சரிசெய்தார் சச்சின். சச்சின் BARC-க்கு மாறிய நெடுநாட்களுக்கு பின்னும் அவர் சச்சினுடன் தொடர்பில் இருந்தார். 

தொழில்தொடங்க சச்சின் திட்டமிட்டபோது அவரை தொடர்பு கொண்டார். இயக்குநராக இருந்து தற்போது துணைத் தலைவராக இருந்த அவர் சச்சினுக்கு தேசாய் என்பவரை அறிமுகப்படுத்தினார். அவர் ஏதாவது சிபாரிசு செய்வார் என்று சச்சின் நினைத்தார். ஆனால் மூன்றாண்டுகள் அவர் எந்தவிதமான வாடிக்கையாளர்களையும் சிபாரிசு செய்யவில்லை. 

”அவர் உதவவில்லை. இனி அவரை மறந்துவிடலாம் என்று அனைவரும் கூறினார்கள். ஆனால் நான் தொடர்ந்து முயன்றேன்” என்று நம்பிக்கையுடன் கூறினார் சச்சின். அவரது நம்பிக்கை பலித்தது. WHO, UNICEF இரண்டிற்கும் ப்ளூஸ்டார் நிறுவனம்தான் ஒப்பந்ததாரர்கள்.  மஹாராஷ்ட்ராவில் இவர்கள் நடத்திய மருத்துவ மற்றும் தடுப்பூசி முகாமின் போது ஃப்ரிட்ஜை சர்வீஸ் செய்வதற்கு உதவி தேவைப்பட்டது. குறைவான நேர அவகாசம் கொடுத்ததால் ப்ளூஸ்டாரினால் செய்யமுடியவில்லை. 

ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று ஃப்ரிட்ஜ்ஜை பார்பதற்கு ஒரு நிறுவனத்தின் உதவி தேவைப்பட்டது. அப்போது தேசாய் சச்சினை அணுகினார். “நான் அந்த பணியை ஏற்றுக்கொண்டேன். குறுகிய நேரத்தில் பணியை முடித்துக்கொடுத்தேன். அந்த குறிப்பிட்ட சில மாதங்கள் வீட்டில் இருந்ததைவிட நான் வீதியில் அதிக நேரம் செலவிட்டேன். மாநகரப் பேருந்துகள்கூட அதிகம் இயங்காத தீவிரவாதிகள் நடமாட்டம் இருக்கும் பகுதியான காத்சிரோலி எனும் பகுதிக்குக்கூட பயணித்தேன். இந்த பணியை முடித்த பிறகு ப்ளூஸ்டாருடனான நட்பு 43 வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் தொடர்கிறது.“ என்கிறார் சச்சின்.

20 கோடியை நோக்கி

ப்ளூஸ்டாருடன் இணைந்த பிறகு அவரது ப்ராண்ட் இமேஜ் வலுவானது. கோத்ரேஜ், எல்ஜி, வீடியோகான், ஹிடாச்சி போன்ற பெரிய நிறுவனங்களுடன் பணிபுரிய தொடங்கியது ஸ்பேன் ஸ்பெக்ட்ரம். முதல் ஐந்து வருடம், ஸ்பேன் வாடிக்கையளர்களுடன் நேரடி தொடர்பில் இல்லை. மேலே குறிப்பிட்ட நிறுவனங்களிடம் வாங்கியவர்களுக்கு சேவையளித்து வந்தது. அந்த ஐந்து வருடங்களில் நிறுவனம் 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.

எதிர்பாராத நேரத்தில் பிரச்சனை தோன்றியது. ஸ்பேனின் 70 சதவீத வருமானம் கோத்ரேஜ் மூலமாகவே கிடைத்தது. ஸ்பேனின் ஊழியர் ஒருவர் செய்த தவறின் காரணமாக கோத்ரெஜ் நிறுவனத்தை ஸ்பேன் இழந்தது. 

“நான் மிகவும் மனமுடைந்தேன். சச்சின் ஷிண்டேவும் அவரது நிறுவனமும் விரைவில் காணாமல் போகும் என்று மக்கள் பேசினார்கள்.” என்று நினைவுகூர்ந்தார்.

மக்களின் நம்பிக்கையைத் திரும்பப்பெற ப்ளூஸ்டாரின் உதவியைக் கேட்காமல் மூலதனத்தை அதிகரித்து நிலமையை சரிசெய்ய வேண்டியிருந்தது. சேதத்தை கட்டுப்படுத்த செயல்திட்டங்களை புதுபுக்கவேண்டியிருந்தது. 2006-ல் இந்தத் துறை சம்பந்தப்பட்ட பணிக்காக தனியாக நிதியை ஒதுக்கும் நிறுவனங்களை அணுக திட்டமிட்டார் சச்சின். 

”அப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு உதவி செய்யலாம் என நினைத்தேன். ஒரு சில ஆய்வுகள் அடிப்படையில் FMCG என்கிற பெரிய துறைக்குள் நுழைய திட்டமிட்டேன். உதாரணத்திற்கு குளிர் பானங்கள் தயாரிப்போர் எப்போதும் இருப்பார்கள். ஏனெனில் அவற்றிற்கான தேவை எப்போதும் குறைவதில்லை. தற்போது இந்த நிறுவனங்கள் அவர்களது பாட்டில்கள் குளிர்ச்சியான இடத்தில் வைப்பதற்காக அவர்களது விநியோகஸ்தர்களுக்கும் சில்லறை வியாபாரிகளுக்கும் வைசி-கூலரை அளிக்கிறது. அதனால் 2007-ல் கோகோ கோலா நிறுவனத்தை அணுகினேன். 

மும்பை பகுதியில் கூலர் புதுப்பிப்பதற்கும் சொத்து மேலாண்மைக்கும் முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இதுதான் பெரிய அளவிலான தொழிலில் விரிவடைதற்கு வழிவகுத்தது. வெகு விரைவில் சாக்லேட் நிறுவனமான கேட்பரியின் தயாரிப்பு மற்றும் சில்லறை கூலிங் தேவைகளுக்காக அந்நிறுவனத்துடன் கைகோர்த்தார். கேட்பரி நிர்வாகிகளுக்கு ஆலோசகராகவும் பொறுப்பேற்றார். விற்பனையாகும் இடங்களில் வைப்பதற்கு வெளியிலிருந்து பார்க்கும்போது தெரியும் வகையில் இருக்கும் வைசி-கூலர்ஸைக் கொண்டுவருவதற்கு அவரது ஆலோசனையை பெற்றனர். கிராமப்புறங்களில் வெண்டிங் மெஷினைப்போன்று இரு மடங்கு கூலர்ஸை வைப்பதற்கும் உதவியது என அனைத்தும் சேர்ந்து அவரது பார்ட்னர்களுடன் நல்லுறவு ஏற்படுத்தியது. 

வாழ்க்கைப் பாடம்

சந்தையில் அவரது நிலையை தக்கவைத்த பிறகு மூன்றாவது சம்பவம் நடந்தது. கோத்ரெஜ் நிறுவனம் சமாதானத்திற்கு வந்தது.

”உங்கள் தரப்பில் தவறு நடந்தது போல எங்கள் தரப்பிலும் தவறு நேர்ந்துவிட்டது. நாம் பழைய விஷயங்களை மறந்துவிடுவோம். மறுபடி நாம் இணைந்துகொள்வோம்.” என்றனர். ஆனால் சச்சின் மறுத்துவிட்டார். ”நான் யோசித்தேன். ‘என்னுடைய கஷ்டமான நேரங்களில் அவர்கள் என்னுடன் இல்லை. இப்போது நான் வெற்றிகரமான சூழலில் இருக்கும்போது திரும்பவருகிறார்கள். நான் மாறவில்லை. அதே நபர்தான். என்னுடைய சூழ்நிலைதான் மாறியுள்ளது. என்னுடைய சூழ்நிலைக்கேற்றவாறு ஒருவரின் வார்த்தைகள் மாறுமானால் அவர்களை அருகில் வைத்திருப்பது நல்லதல்ல” என்று தோன்றியது. அதனால், அமைதியாக மறுத்துவிட்டேன். ஆனால் கோத்ரெஜ் எப்படியாவது எங்கள் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பினார்கள்,” என்றார்.

இதுவரை இல்லாத அளவு அதிக உழைப்புடன் முதல் ஐந்து ஆண்டுகளில் 5 கோடியாக இருந்த வருமானத்தை அடுத்த ஐந்து வருடங்களில் 20 கோடியாக மாற்றினார்.

”அடுத்த ஐந்தாண்டுகளில் 100 கோடி ரூபாய் அடைவதே தற்போது எங்கள் நோக்கம்” என்றார்.

சச்சின் வெற்றிக்காக பெரிதாக அசாதாரணமாக எதுவும் செய்துவிடவில்லை என்றும் சின்னச் சின்ன கோட்பாடுகளில் கவனம் செலுத்தினால் அனைவரும் இந்த வெற்றியை அடையமுடியும். எப்போதும் பயம் வேண்டாம். உங்கள் குழுவினரையும் பார்ட்னரையும் நம்புங்கள். எப்போதும் அவர்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். அவர்களை சிறப்பாக உணர வையுங்கள். அவர்ளின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு இக்கட்டான நேரத்தில் உதவுங்கள்” என்றார்.

மொத்தத்தில் ”எங்கிருந்து வந்தோம் என்று நினைக்காதீர்கள். எங்கே செல்கிறோம் என்பதில் கவனம் செலுத்துங்கள்” என்றார் சச்சின். 

ஆன்கில கட்டுரையாளர்: பிஞ்சல் ஷா