சிறு, குறு விவசாயிகளின் நஷ்டத்தை குறைத்து அவர்களின் துயரைத் துடைக்க உதவும் ‘மகசூல்’ அமைப்பு!

0

’மகசூல்’ (Magasool), என்று பெயரிடப்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்பு தமிழ்நாட்டில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் 2011 இல் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு விவசாயிகளுக்கு குறிப்பாக விவசாய சம்பத்தப்பட்ட ஆலோசனைகளை அளித்து முக்கியமாக அதிக மகசூல் தரக்கூடிய பயிர்கள் பற்றியும் விவசாய செலவுகளை குறைக்கும் வழிகள் பற்றியும் எடுத்துரைத்து வருகிறது. இவர்களின் சேவையின் முதல் கட்டமாக, பரிச்சார்த்த முறையில் விவசாய நிலத்தில் பரிசோதித்தப் பின் அதை முன்மாதிரியாக விவசாயிகளிடம் கொண்டு சென்றுள்ளனர். வழக்கமான விவசாய முறைகளுக்கு மாறான எளிய இயற்கை வழிகளில் தாக்கம் ஏற்பட்டத்த முடியும் என்பதால், அந்த சேவைகளை அதிக அளவிலான சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் கொண்டு செல்ல உள்ளனர்.

மகசூல் குழு விவசாயிகளுக்கு பயிற்சி
மகசூல் குழு விவசாயிகளுக்கு பயிற்சி

2014 இல் ‘மகசூல்’ சுமார் 1000 விவசாயிகள் மற்றும் நிலமில்லா தொழிலாளர்களை சில திட்டங்கள் மூலம் சென்றடைந்து, திருத்தப்பட்ட அரிசி சாகுபடி முறைகள், புழுக்களை உரமாக்குதல் மற்றும் சமையறை தோட்டம் போன்ற பல புதிய முறைகளை அவர்களுக்கு அறிமுகம் செய்தனர். தற்போது இவர்கள் கடலூர், காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் திருச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் பணிகளை செய்துவருகின்றனர். இது பற்றி மேலும் விவரித்த ‘மகசூல்’ அமைப்பின் தன்னார்வலர் செல்வ கணபதி,

“நாங்கள் விவசாயிகளுடன் இணைந்து அவர்களின் பிரச்சனைகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். பின்னர் இயற்கை முறையில் குறைந்த உர பயன்பாட்டுடன் விவசாயம் செய்யும் முறைகளை பின்பற்ற அவர்களை அறிவுறுத்துவோம். அவர்களுக்கு பயிர் காப்பீடு, அரசின் மானியங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்,” என்றார்.

தென்-மேற்கு மற்றும் வட-கிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பொய்த்தது. மாநிலத்தில் பெரும்பாலான ஆறுகள் வற்றிக் காணப்படுகிறது. வறட்சியால் விவசாய நில பாதிப்பையும், விவசாயிகளின் நிலைகள் குறித்தும், கால்நடைகள் பற்றியும் ஆய்வுகள் நடத்தி அந்த அறிக்கையை தமிழக அரசுக்கு பரிந்துரைக்கு மகசூல் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். பல குழு விவாதங்கள் நடத்தி, விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு, மற்றும் பாதித்துள்ள விளைநிலங்களை ஆய்வு செய்தபின் இந்த பரிந்துரைகளை ‘மகசூல்’ அமைப்பினர் செய்ய உள்ளனர்.

”இன்று முக்கிய பிரச்சனையே, விவசாயிகள் விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தினால் அதன் மீதே நம்பிக்கை இழந்து, தங்கள் பிள்ளைகளை அதில் ஈடுபடுத்த விரும்பாமல் உள்ளனர். விவசாயத்தை கைவிடும் எண்ணத்தில் உள்ள அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி மீண்டும் அவர்களை விவசாயம் செய்ய ஊக்குவிக்க நாங்கள் எல்லா முயற்சிகளை எடுத்து வருகிறோம்,”

என்கிறார் செல்வ கணபதி. ஆனால் இதற்காக ‘மகசூல்’ அமைப்புக்கு தன்னார்வலர்கள் பலர் தேவைப்படுவதாகவும் கூறினார்.

மகசூல் குழுவினர்
மகசூல் குழுவினர்

வேலூர், விழுப்புரம், சிவகங்கை, விருதுநகர், ராமனாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டகளில் தங்களுடன் செயல்பட தன்னார்வலர்களை இந்த அமைப்பினர் தேடி வருகின்றனர். இவர்களுடன் இணையும் தன்னார்வலர்கள், இரண்டு, மூன்று கிராமங்களில் 10 முதல் 15 விவசாயிகளிடம் அங்குள்ள பிரச்சனைகள் என்ன, நீர் ஆதாரங்களின் நிலை, விவசாயம் மற்றும் கால்நடைகள் விவரம், தீவனங்களின் பட்டியல் என்று அனைத்து விவரங்களையும் சர்வே மூலம் சேகரித்து அளிக்கவேண்டும். கூடுதலாக தற்போதுள்ள வறட்சியின் காரணமாக அங்குள்ள நிலை குறித்து தன்னார்வலர்கள் தகவல்கள் சேகரித்து அனுப்பவேண்டும். இந்த பணிகளை செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் விண்ணப்பப் படிவம் ஒன்றில் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்தால் மகசூல் அமைப்பினர் அவர்களை தொடர்பு கொள்வார்கள்.

க்ளிக் செய்க: விண்ணப்ப படிவம் தொடர்புக்கு: ajay.tannirkulam@gmail.com, வாட்ஸ்-அப்: 9445392454