கிராமப்புற இந்தியர்களின் தொழில்கள் சிறக்க உதவும் 'துணி சீட்’

1

நம் இந்தியாவைப் போன்ற நாடுகளை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல நவீன நுட்பத் தொழில்கள் மட்டுமே போதுமானதா…? ஒற்றைத் தன்மையிலான வளர்ச்சி நம்மை வளர்ந்த நாடாக அடையாளம் காட்டுமா..? என்று கேள்விகள் எழுப்பிப் பார்த்தால் அனேகமாக இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். எனவே மக்களை வலிமைமிக்கவர்களாக மாற்றுவதில் தான் தொழில் வளர்ச்சியின் மெய்யான வெற்றி அடங்கியிருக்கிறது.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் சரியான பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது ‘துணி சீட்’ (Thuni Seed) எனும் அமைப்பு. இந்தியாவெங்கும் கிராமப்புறங்களில் உள்ள வேலையற்ற, குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுவதை இலட்சியமாகக் கொண்டு இயங்கி வருகிறது துணி சீட் சமூகத் தொழில் அமைப்பு. சுய சிறுதொழில் நடத்துவதில் ஆர்வமுள்ள குழுக்களைத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நேரடியாகக் கண்டுபிடித்து அவர்கள் வாழும் இடங்களிலேயே தொழில் வாய்ப்பை உருவாக்கித் தருகிறார்கள். தொழில் நடத்துவதற்கான பயிற்சி அளிக்கும் மையங்களுடனும் இணைந்து பணியாற்றுகிறது துணி சீட். தொழில் நடத்தத் தேவையான தனித் திறன் பயிற்சியும் அளிக்கிறது. அதனுடன் கிராமப்புறத் தொழில்முனைவோரின் உற்பத்திப் பொருட்களை உலகம் முழுவதிலும் சந்தைப்படுத்துவதற்குத் தொழில் நிறுவனங்களுடன் கூட்டுரிமையாளர்களாகவும் செயல்படுகிறார்கள்.

கவிதாவும், மகேஸ்வரியும் சேலைக்கு முந்தாணை தைக்கின்றனர்.
கவிதாவும், மகேஸ்வரியும் சேலைக்கு முந்தாணை தைக்கின்றனர்.

கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள தென்னமநல்லூரைச் சேர்ந்த கவிதாவிற்கு அவர் வேலை செய்யும் கட்டுமான தளத்தில் விபத்து நேர்ந்து விட்டது. அவரது அப்பாவின் நாள் கூலியான ரூபாய் 350 இல் பெரும்பகுதி மருத்துவச் செலவிற்கேப் போய்விடும். கவிதா பத்தாம் வகுப்பு வரை கூட படிக்காதவள் என்பதால் வேறு வேலைக்கும் போக முடியாது. துணி சீட்’டின் உதவியுடன் இப்போது கவிதா சேலைக்கு முந்தாணை தைக்கிறார், மடிக் கணினிக்கு உறை தைக்கிறார். நிரந்தரமான வருமானத்தைப் பெற முடிகிறது. மற்றொரு பயனாளர் கோயம்புத்தூர் பகுதி புத்தூரைச் சேர்ந்த மகேஷ்வரி. வயதான அப்பா, பண்ணையில் வேலை செய்கிறார். பண்ணையாரால் தொல்லை, அம்மாவும் இறந்து விட்டதால் அப்பாவைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு மகேஷ்வரியுடையதாகி விட்டது. துணி சீட் உருவாக்கிய திட்டத்தில் கவிதாவுடன் இணைந்து மகேஷ்வரியும் சேலை முந்தாணை, மடிக்கணினி உறை தைக்கும் வேலையைச் செய்து வருமானம் ஈட்டுகிறாள்.

துணி சீட் – பெயருக்குப் பின்னுள்ள கதை

நூல் கொண்டு துணியைத் தைக்கும் வேலையை முதன் முதலாகத் துவக்கிய குழுவினரின் மூலமாக தொழில் பெயரே இத்திட்டத்திற்கு இடப்பட்டுள்ளது. ‘’சின்ன கிழிசல் உடைய அணிய முடியாத அழகான சேலையை எடுத்துக் கொள்வோம், கிழிசல் மீது நுணுக்கமான வேலைப்பாடு செய்து அதனை அழகான சேலையாக மாற்றித் தருவோம். வேலைப்பாட்டிற்கான நூலிழை பலரது வாழ்க்கைக்கான ஆதார விதையாக (seed) இருக்கிறது” என்கிறார் அனந்த் நம்மிடம்.

கவிதா, மகேஸ்வரியுடன் ஆனந்த்
கவிதா, மகேஸ்வரியுடன் ஆனந்த்

17 வயது இளைஞனின் சிந்தனை

இந்த அமைப்பைத் துவக்குவதற்கு முன் முயற்சி மேற்கொண்டது 17 வயதுப் பையன் என்றால் நம்புவதற்குக் கடினமாகத் தான் இருக்கும். தொழில்முனைப்பின் உதவியுடன் கிராமப்புற ஏழை மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கியுள்ளார் அனந்த் மஜும்தார் என்னும் இந்த இளைஞர். அதன் மூலம் அவர்களது அனாதரவான நிலையை மாற்றி, வறுமைப் பிடியிலிருந்து விடுவித்து மக்களை வலிமை மிக்கவர்களாக மாற்றும் திட்டத்திற்கு அடிகோலியவர் அனந்த், 17 வயது பள்ளி மாணவர்.

தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஹாங்காங்கில் கழித்தவர் அனந்த். அவரது குடும்பத்தில் பாதிப் பேர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள். பங்களாதேஷில் செயல்படும் லென்சேசனல் (lensational – தொண்டு நிறுவன) அமைப்புகளில் ஈடுபட்டிருந்தார் அனந்த். சமூகத் தொழிலின் ஆதாரமாக லென்சேசனல் இருப்பதை அவர் புரிந்துகொண்டார். அனந்துக்கு உதவி புரியும் எண்ணற்ற சமூகத் தொழில் அமைப்புகளுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள லென்சேசனலின் தொடர்புகள் பயன்பட்டன. ‘"கஷ்டப்படுகிற மக்களிடம் கேள்விகள் எழுப்பும் வாய்ப்பைப் பயன்படுத்தி சமூகத் தொழில்கள் பற்றியும், அவற்றில் முதலீடு செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விரிவாகப் புரிந்துகொண்டேன். சமூகத் தொழில்கள் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தை ஹாங்காங்கில் நான் கற்றுக் கொண்டேன். அது இந்தியக் கிராமப் புறங்களில் வேலை செய்வதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தது’’ என்கிறார் அனந்த்.

கார்டு அமைப்புடன் துணி சீட் பங்குதாரராக இணைவதற்கு முயற்சி மேற்கொண்ட கோயமுத்தூர் ரோட்டரி கிளப் முக்கிய உறுப்பினர்களுடன் ஆனந்த்
கார்டு அமைப்புடன் துணி சீட் பங்குதாரராக இணைவதற்கு முயற்சி மேற்கொண்ட கோயமுத்தூர் ரோட்டரி கிளப் முக்கிய உறுப்பினர்களுடன் ஆனந்த்

ஆய்வுகள்

அனந்த், கிராமப்புற மேம்பாட்டிற்காகச் செயல்படும் சின்மயா அமைப்புடன் கோயம்புத்தூர் கிராமப் பகுதிகளில் கடந்த இரண்டு கோடைகாலத்தைச் செலவிட்டார். தனது களப்பணியின் வாயிலாக பயனாளர்கள் பற்றிய நிறைய தகவல்களை அனந்தால் சேகரித்துக் கொள்ள முடிந்தது. ‘’நான் பணி புரிந்த பகுதிகளில் அதிக அளவில் இருந்த வேலையற்ற மக்களுடன் குறிப்பாகத் திரளாக இருந்த கிராமப்புற மகளிருடன் நான் நிறைய உரையாடல் நிகழ்த்த முடிந்தது. அவர்களிடம் ‘’தொழில் புரியும்’’ எண்ணம் இருப்பதை உணர முடிந்தது. ஆனால் தொழில் தொடங்குவதற்குத் தேவையான ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. சுய உதவிக் குழுக்கள் மற்றும் மகளிர் மன்றக் கூட்டங்களில் கலந்து கொண்டு தொழில் நடத்துவது பற்றி பேசினேன். அவர்களது கண்ணோட்டத்தை அறிந்து கொண்டேன். சரியான தொழிலைத் தொடங்குவதற்கான ஆதாரம் அவர்களுக்குள் உறைந்திருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்துவது தான் கடினமாக இருந்தது அவர்களுக்கு. துணி சீட் அமைப்பைத் துவக்கி கிராமப்புற தொழில் முனைவோருக்கான செயல் திட்டங்களும், ஆதரவும், சந்தைப்படுத்துதலில் உள்ள பிரச்சனையையும் வெளிப்படுத்தினேன்’’ என்றார். துணி யை முன்மாதிரியாக உருவாக்கும் அதே நேரத்தில் அனந்த், பயனாளர்களை மையப்படுத்தித் திட்டங்களை உருவாக்க வலியுறுத்தும் ஸ்டான்ஃபோர்ட் வடிவ மனிதவிய சிந்தனை" உடனும் இணைந்து பணியாற்றுகிறார்.

புடவையுடன் மகேஸ்வரி
புடவையுடன் மகேஸ்வரி

எப்படிச் செயல்படுகிறது

துணி சீட்டிற்கு கிராமப்புற இந்தியாவின் தொழில் முனைப்பு மேம்பாட்டு வளையம் அவசியமாக இருக்கிறது. தொழில் தொடங்குவதற்கான ஆரம்ப கட்ட ஆர்வத்தை உருவாக்க சிந்தனைக் கிளர்ச்சியை ஏற்படுத்தும் படக் காட்சி தொடர் வட்டுக்களும், புதிர் விளையாட்டுப் புத்தகங்களும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக கிராமப்புற மக்களிடம் வழங்கப்பட்டன. அவர்களுக்கான சந்தை ஆதரவை உருவாக்க வலைத்தளம் ஏற்படுத்தப்பட்டது. இப்போது அனந்த், தொழில் முனைவோருக்காவும், கிராமப்புற மேம்பாட்டிற்காக பணியாற்றுபவர்களுக்காகவும் படக் காட்சி வட்டு, புதிர் விளையாட்டு நூல் ஆகியவற்றை தயாரிப்பதில் ஆதார சக்தியாக விளங்குகிறார்.

அனந்த் கவனிக்கத் தகுந்த ஒரு கருத்தை முன் வைக்கிறார். ‘’தற்போது ‘தொழில் வளர்ச்சித் திட்டம்’ என்று சொல்லிக் கொண்டு மக்களுக்குத் திறன் பயிற்சியளிக்கும் பல திட்டங்கள், தையல் பயிற்சி போன்றவற்றை மட்டுமே அளிக்கின்றன. ஆனால் ஒரு தொழிலைத் துவக்கி வெற்றிகரமாக நடத்துவதற்கு அவை மட்டுமே போதுமானதல்ல. உண்மையில் ஒரு பொருளை உற்பத்தி செய்ய அதற்கும் மேலான திறன்கள் தேவைப்படுகின்றன’’ பயிற்சியை படக் காட்சி வட்டுகள், புதிர் விளையாட்டுப் புத்தகங்கள், சிந்தனைத் திரள்கள் ஆகியவற்றுடன் சேர்த்து அளிக்கப்பட வேண்டும் என்கிறார். கிராமப்புற மக்கள் தொழில் முன்னோடிகளை புனிதர்களாக வரவேற்பார்கள்.

துணி சீட்’ன் தொழிற் கூட்டாளிகளான கார்ட் உடன் இணைந்து வேலை செய்வதைப் பார்வையிட வந்த பாரதியார் பல்கலைக் கழக பெண்கள் முதுகல்வி பேராசியர்களுடன் ஆனந்த்.
துணி சீட்’ன் தொழிற் கூட்டாளிகளான கார்ட் உடன் இணைந்து வேலை செய்வதைப் பார்வையிட வந்த பாரதியார் பல்கலைக் கழக பெண்கள் முதுகல்வி பேராசியர்களுடன் ஆனந்த்.

துணி சீட் அமைப்பினர் தெளிவான திட்டத்துடன் இயங்க விரும்புகின்றனர். கிராமப்புற வளர்ச்சி அமைப்புகளுடன் பங்குதாரர்களாக செயல்படுகின்றனர். கிராமப்புற தொழில்முனைவோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் படக் காட்சி, விளையாட்டு நூல்கள் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கின்றனர். இவை பயனாளர்களின் திட்டமிடலுக்கப் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன. தொழில்முனைவோரின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைத் தேவையை நிறைவேற்றுகின்றனர் துணி சீட் அமைப்பினர். ‘’குறுகிய காலப் பயிற்சி மையங்களை நடத்துவற்கான வலைப்பின்னல் அமைப்பைக் கட்டமைக்கத் தொடங்கியுள்ளோம். இது தொழில்முனைவோர் தங்களுக்குத் தேவையான தொழிற் திறனை வளர்த்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும்’’ என்கிறார் அனந்த்.

அவருடன் நடத்தும் உரையாடலில் இந்த இளைஞனுக்கு வயது வெறும் 17 என்பதே மறந்து போகிறது. அதற்கு முதற்காரணம் அவரிடம் உள்ள சிந்தனைத் தெளிவு, தீர்க்கமான தொலைநோக்கு, குறைவற்ற நிர்வாகத் திறன். ‘’எனது தொழிற் பங்காளிகள் எனது கருத்தைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நான் அச்சப்பட்டதில்லை. அதற்குக் காரணம் நிறைவு செய்யப்பட வேண்டிய தேவைகள் இங்குள்ளன என்பதை நான் முக்கியமாகக் கருதியது தான். என்னுடைய பெற்றோர்களே இது நடைமுறைச் சாத்தியமா என்று ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார்கள். ஆனால் நான் கிராமப் புறங்களில் பல மாதங்கள் செலவிட்டேன். கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தில் பணியாற்றியவர்களுடன் நிறைய பேசினேன். கிராமப்புறப் பெண்களுக்கு உதவ வேண்டியதன் மூல காரணங்களைக் கண்டறிய முயன்றேன்’’ என்கிறார்.

மீனை ஒருவருக்கு அளிப்பதால் ஒரு நாள் உணவை அளிக்க முடியும். அவருக்கே மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அது அவரது வாழ்க்கைகே ஆதாரமாக இருக்கும்.

உலகளாவிய ஏழை மக்களின் சமூக இணைப்பில் அனந்தின் இலட்சியம் மெய்யாக இருக்கிறது. வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள ஏழ்மைக் குடிப்பிறப்பு ஒரு தடையாக இருக்கக் கூடாது என்கிறார் அனந்த்.

இந்தியாவை ஒரு ஜனநாயக குடியரசு என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் இங்கு வாய்ப்புகள் சமமாகப் பங்கிடப்படுவதில்லை. கிராமப்புற ஏழை மக்களுக்கும் நகர்ப்புறத்து நடுத்தர மக்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இருக்கிறது. இந்தியாவெங்கும் நிறைந்துள்ள கிராமப்புற மக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தங்கள் விதியைத் தாங்களே மாற்றி எழுதும் சக்தி அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன் என்கிறார் தீர்கமாக...

இணையதள முகவரி: ThuniSeed