இந்திரா காந்தி போல் அரசியல் ஆளுமையை வெளிப்படுத்த முயற்சிக்கிறாரா மோடி?- ஆம் ஆத்மி கட்சி அசுடோஷ் 

0

எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. வங்கிமுறைகள் சரிவின் விளிம்பில் உள்ளது. வருங்காலம் இருண்டு காணப்படுகிறது என்றும் கறுப்புப்பணத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவ்வாறு இருந்தும் பிரதமர் மோடி வருந்தவும் இல்லை, பணமதிப்பு நீக்கத்தை திரும்பப்பெறவும் இல்லை. மோடியின் பதவிக்காலத்தில் இதுவரை அவர் மேற்கொண்ட தீர்மானங்களில் இது மிகவும் புதிரான தீர்மானமாக உள்ளது.

அவரது உண்மையான நோக்கம் கறுப்புப்பணத்தையும் கறுப்புப் பண உலகில் நடமாடுபவர்களையும் ஒழிப்பதாக இருந்தால், தற்போது நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது அவரது நோக்கம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த நேரத்தை எதற்காக தேர்ந்தெடுத்தார் என்பதும் எந்த விதமான முன்னேற்பாடுகளும் இன்றி ஏன் தீர்மானத்தை வெளியிட்டார் என்பதும் புதிராகவே உள்ளது. 

இப்படிப்பட்ட தீர்மானத்திற்கு மிகப்பெரிய திட்டமிடுதலும் உள்கட்டமைப்புகளும் அத்தியாவசிமானதாகும். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் நடைமுறைப்படுத்த தேவையான அம்சங்கள் குறித்து முறையாக திட்டமிடப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தத் தீர்மானம் வெளியிடப்பட்ட நேரம் குறித்து பல சர்ச்சையான கருத்துக்கள் கூறப்படுகிறது. 

முதலாவதாக இருபெரும் தொழில்துறையைச் சார்ந்தவர்களிடமிருந்து மோடி பணத்தை பெற்றுக்கொண்டதால் மோடி முன்கூட்டியே இதை தீர்மானித்து அவர்கள் மோடியை குற்றம் சாட்டுவதற்குள் இந்த அறிவிப்பை அவசரமாக வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் உத்திரப்பிரதேசத்தின் பாராளுமன்றத் தேர்தலில் 73 இடங்களைக் கைப்பற்றிய இவர் சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

ஏனெனில் இதில் தோல்வியடைந்தால் தனிப்பட்ட முறையில் அது அவருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அவரது ஆட்சிக்காலம் பாதி நிறைவுற்ற நிலையில் அவர் எந்த வாக்குறுதிகளையும் காப்பாற்றாததால் இப்படிப்பட்ட அறிக்கை அவர் எதையும் சாதிப்பார் என்கிற பிம்பத்தை மக்களிடையே ஏற்படுத்தும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரச்சாரத்தின்போது கருப்புப்பணத்தை திரும்பப் பெறப்போவதாக அறிவித்தார். ஆனால் கடந்த இரண்டரை வருடங்களில் அவரது வாக்கை காப்பற்ற எந்தவித தீவிர முயற்சியும் எடுக்கவில்லை. அடுத்ததாக 2019-ம் ஆண்டு அடுத்த தேர்தலுக்கு போட்டியிடும் போது பொருளாதார வளர்ச்சி போதுமானதாக இல்லாததால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சலுகைகளை அறிவிக்க முடியாத நிலையில் உள்ளார். இந்நிலையில் பண மதிப்பு நீக்கம் வாயிலாக எதிர்பாராத நிதி ஏதேனும் பொது நிதியில் சேருமாயின் அவற்றிலிருந்து ஒரு பகுதியை இலவசமாக மக்களுக்கு அளித்து வாக்கு சேகரிக்கலாம் என்று நினைத்திருக்கலாம்.

இருந்தும் எந்த ஒரு திடமான பதிலையும் அளவிட முடியவில்லை. ஒரு விஷயம் மட்டும் தெளிவாக உள்ளது. திருமதி. இந்திரா காந்தி அரசியலில் ஆரம்ப கட்டத்தில் செயல்பட்டது போலவே இவரும் செயல்படுகிறார். மோடியைப் போலவே இந்திராகாந்தியும் தீர்கமாகவும் தந்திரமாகவும் அரசியலில் செயல்பட்டார். காங்கிரஸ் கட்சியினரால் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரது எதிர்கட்சியினரான ராம் லோஹிலால் போன்றோரால் மட்டுமல்லாது அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு சில மூத்த தலைவர்களாலும் அதிகாரவாதிகளாலும் ‘ஊமை பொம்மை’ என்றே அழைக்கப்பட்டார். பிரதமரின் முதன்மை செயலாளரான எல்.கே.ஜாஅவரைப்பற்றி கூறுகையில், 

”இந்திரா காந்தி அவரது ஆரம்ப நாட்களில் பாராளுமன்ற உறுப்பினராக திறமையற்றவராகவே இருந்தார்.” நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற அரசியல் பாரம்பரியம் காரணமாக அவர் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. உள்ளூர் பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பார் என்றே நம்பப்பட்டது. 

ஆனால் மோடிக்கு இப்படிப்பட்ட பாதிப்பு இல்லை. குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்தே அவரது தனிப்பட்ட பாணியில் தலைமை பதவியை வகித்தார். கட்சி உறுப்பினர்களும் ஆர்எஸ்எஸ் சேர்ந்த சிலரும் சற்றே தயங்கியபோதும் தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினார். அவரும் ஊமை பொம்மையாகவே இருந்தார், இருக்கிறார். மோடி எப்போதுமே தன்னை தீர்க்கமான, வலிமையான தலைவராகவே காட்டிக்கொண்டார்.

பாதகமான சூழ்நிலைகளை எதிர்த்து போராடுவதை விரும்புபவராகவே சொல்லப்பட்டார். மேற்கத்திய நாடுகளால் விசா மறுக்கப்பட்டு இந்திய அரசியலில் வில்லனாக பார்க்கப்பட்டார். வளர்ச்சிக்காக பாடுபடுபவர் போன்ற பிம்பத்தை மக்களிடையே ஏற்படுத்தினார். பிரதமராக அவரது பதவிக்காலம் சிறப்பாக இருந்தாலும் இரண்டாவது முயற்சிக்கு நிச்சயம் போதுமானதாக இல்லை என்றே சொல்லலாம். இதனால் இந்திரா காந்தியைப் போலவே எதிர்கால சிக்கல்களை மனதில் கொண்டு ஒரு சில உத்திகளை கையாண்டார்.

1960-ன் இறுதியில் நீலம் சஞ்சீவா ரெட்டி இந்திய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரதமர் பதவிக்கு ஆபத்து வரலாம் என திருமதி. இந்திரா காந்தி யூகித்தார். இதனால் சுயேட்சையாக போட்டியிட்ட வி.வி.கிரி என்பவரை ஆதரித்து குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க வாக்களர்களை கேட்டுக்கொண்டார். தனது கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராகவே இந்திரா காந்தி உட்பூசலை ஏற்படுத்தினார். இது எந்த ஒரு தலைவரும் மேற்கொள்ளாத துணிச்சலான அரசியல் உத்தியாகும். முதல் சுற்றில் கிரி தோல்வியடைந்தபோது குழுவினர் மன அழுத்தத்திற்கு ஆளானார்கள். ஆனால் அவரது நண்பர்களிடம், ’கவலைப்படாதீர்கள்’! இன்னும் அதிகமாக போட்டியிடவேண்டும். அதற்கு நான் தயார்” என்றார். இறுதியில் கிரி வெற்றிபெற்றதும் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

பிரதமர் பதவியிலிருந்து அவரை விலக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சியின் பெரும்பாலான வாக்குகளை பெற்றதோடு மட்டுமல்லாமல் பாராளுமன்றத்தின் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் முறியடித்தார். மக்கள் நினைத்ததுபோலல்லாமல் எளிதில் யூகிக்கமுடியாதவர் என அவர் நிரூபித்தார். மூத்தவர்களுடன் சித்தாந்த மோதலை ஏற்படுத்தினார். அந்த கூட்டத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் வலதுசாரிகள். மொரார்ஜி தேசாய், எஸ்.நிஜ்லிங்கப்பா, கே.காமராஜ், எஸ்கே.படீல், அதுல்யா கோஷ் போன்றோர் மிகப்பெரிய வலதுசாரி ஜாம்பவான்கள். இந்திரா காந்தி ஒரு புதிய பார்வையை அளித்தார். 

நேருவின் மகள் என்பதால் இடதுசாரி புத்திசாலிகளின் ஆதரவு இருப்பதை அவர் நன்கு அறிவார். அது பனிப்போர் காலம். வலது, இடது என உலகம் இரண்டாக பிளந்தது. சோவியத் யூனியன் தலைமையிலான இடதுசாரி வலிமையாக இருந்தது. இந்தியாவிலும் இடதுசாரி சித்தாந்தம் ஓங்கி இருந்தது. சோஷியலிச பாதையை அவர் தேர்ந்தெடுத்தார். வங்கிகளை தேசியமயமாக்குதல் மற்றும் மானிய ஒழிப்பு இந்த இரண்டையும் முன்னெடுத்தார். அதன் பிறகும் அவரை பதவியிலிருந்து நீக்கும் முயற்சி தொடர்ந்ததால் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை பொறுத்திராமல் அதற்கு மாறாக ஆட்சியை கலைத்தார். 

தேர்தல் நடைபெற்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெற்றார். ”அவர்கள் என்னை வெளியேற்ற விரும்புகிறார்கள். ஆனால் நான் வறுமையை வெளியேற்ற விரும்புகிறேன்” என்பதே அவரது முழக்கம். நிச்சயமற்ற காலம் முடிந்துவிட்டது. அவரது விதியை அவரே தீர்மானித்து அமைத்துக்கொண்டார். இதே உத்தியைத் தான் மோடியும் முயற்சி செய்கிறார். 

கறுப்புப் பணத்தை எதிர்ப்பது போன்ற ஒரு முழக்கத்தை வெளிப்படுத்துகிறார். எதிர்கட்சிகள் அவருடன் சண்டையிடுகின்றனர். அவர் ஊழலை வெளியேற்ற விரும்புகிறார். ஆனால் எதிர்கட்சியினர் அவரை வெளியேற்ற விரும்புகிறார்கள். இந்திரா காந்தியுடன் ஒப்பிடுகையில் அவரைப் போலல்லாமல் மோடிக்கு அதிர்ஷ்டம் உள்ளது. ஏனெனில் அவரது கட்சியினர் அவருடன் இருக்கின்றனர். அவருக்கு எதிராக எந்தவித கிளர்ச்சியிலும் ஈடுபடவில்லை. ஒரு சின்ன முணுமுணுப்புக் கூட இல்லை. பண மதிப்பு நீக்கலின் போது எதிர்கட்சியினர் கடுங்கோபம் கொண்டு அவரை பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியேயும் தாக்க முற்பட்டபோது அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை பாதுகாக்கின்றனர். இதனால் எதிர்கட்சியினர் குறித்து அவர்யோசிக்கவேண்டிய அவசியமில்லை. 

ஆனாலும் அவர் கையாண்ட உத்தி ஏனோ பலனளிக்கவில்லை. ஐம்பது நாட்களில் நிலைமை சீரடையும் என்று உறுதியளித்தார். தேசத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையின் தொடக்கமாகவே இதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினார். அவர் புத்திசாலித்தனமாக பண மதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட கவலைகளை தேசத்தின் பெருமையுடன் இணைக்கிறார். பாதிப்பு முடிவடையவில்லை. ஐம்பது நாட்கள் என்பது அதிக காலம். அரசு தனது ஆணையையும் நோக்கங்களையும் ஒவ்வொரு நாளும் மாற்றிக்கொண்டே இருக்கிறது. தற்போது ரொக்கமில்லா சமூகம் பற்றி பேசுகிறது. அவர் வேறோரு கனவை முன்னிறுத்துகிறார். 

நோக்கம் நேர்மையாக இருக்கும்போது லட்சியம் நிச்சயமாக நிறைவேறும் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. பண மதிப்பு நீக்கம் தோல்வியடைந்து விட்டது. அது மாற்று முறையை உருவாக்கியுள்ளது. ஊழல் புரியும் வங்கி அதிகாரிகளும் இடைத் தரகர்களும் வளர்ந்துவிட்டனர். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் இந்த புதிய நபர்கள் மூலம் தங்களது சொத்துக்களை வெளிப்படையாக வெள்ளையாக மாற்றியுள்ளனர். அரசால் இவர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை. ஊழலுக்கு எதிராக பிரச்சாரம் செய்பவராக காட்டிக்கொள்ள விரும்புகிறார் மோடி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அவரது கட்சியே தனது எண்பது சதவீத நிதிக்கான சான்றை வெளியிடவில்லை. அவர் லோக்பாலை நியமிக்க விரும்பவில்லை. 

இப்போது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது. பாராளுமன்றத்தை சந்திக்க அவர் துணிச்சல் காட்டவில்லை. அதன் வெளியேதான் பேசுகிறார். அவரது ஆதரவாளர்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் பொதுமக்களை கேலிசெய்கின்றனர். இந்திரா காந்தி வெற்றிபெற்றதற்கு பொதுமக்கள் அவர் மேல் கொண்டிருந்த நம்பிக்கையும் ஆதரவுமே காரணம். துரதிர்ஷ்டவசமாக மோடி பொதுமக்களின் நம்பிக்கையை சிதறடித்துவிட்டார்.

கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)