மாதம் ரூ.500 சம்பாத்தித்த ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா இன்று கோடிகளில் சம்பாதிக்கும் பிரபல டிசைனர்!

0

மனீஷ் மல்ஹோத்ரா, பாலிவுட் உலகில் பிரபலமான பெயர். திரையில் மின்னும் நட்சத்திரங்கள் முதல் பேஷன் ஷோ ராம்ப்களில் நடக்கும் அழகிகள் வரை பலரையும் நேர்த்தியாக, ஸ்டைலான ஆடைகளால் அலங்கரிப்பவர் தான் இவர். மனீஷின் ஆடை வடிவமைப்புக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை பிரபலமடைந்துள்ள இவரின் கதை ஒருவர் தான் வைத்திருக்கும் துறை மீதான ஆர்வத்தினால் எந்த ஒரு உயரத்தையும் அடையமுடியும் என்பதை காட்டும்  ஊக்கமிக்க கதை. 

சிறு குழந்தையாக இருந்தபோதில் இருந்தே மனிஷுக்கு பேஷனில் ஈடுபாடு இருந்துள்ளது. தன் அம்மாவுக்கு பேஷன் அட்வைஸ்களும், அவரின் புடவைகளை லேஸ் இணைத்து ஸ்டைலாக்கி தருவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இந்த ஆர்வம் மெல்ல அதிகரித்து, பேஷன் துறை மீது காதலாக மாறியது. சுமாரான மாணவனான மனீஷ், கலை, வரைதல், டிசைனிங் செய்வதில் நாட்டம் கொண்டிருந்தார். அவரது கலைத்திறனால் பள்ளியில் பிரபலமாக இருந்தார். 

மும்பையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் மனீஷ் மல்ஹோத்ரா. ஆடை வடிவமைப்பு தான் தன் வருங்காலம் என்று தெளிவாக முடிவெடுத்த அவர், ஒரு பொடிக் வைத்து மாதம் 500 ரூபாய் வருமான ஈட்டினார். தன் கடும் உழைப்பால் அத்துறையில் தன் அறிவை மேலும் வளர்த்துக்கொண்டார். பெண்களின் ஆடை வடிவமைப்பில் தன் பணியை தொடங்கினாலும் பின்னர் ஆண்களுக்கான ஆடைகளில் கவனம் செலுத்தினார். பேஷன் துறையில் முறையான டிப்ளொமா இல்லாமல், தன் திறமையை கொண்டு மெல்ல வளர்ச்சி அடைந்தார். 

25 வயதாக இருந்தபோது, பாலிவுட் படமான ‘ஸ்வர்க்’ மூலம் 1990-ல் திரையுலகில் நுழைந்தார் மனீஷ். அப்படத்தின் ஹீரோயின் ஜூஹி சாவ்லாவுக்கு ஆடைகள் வடிவமைத்தார். 1993-ல் கும்ராஹ் படத்திற்கு ஸ்ரீதேவிக்கு ஆடைகள் டிசைன் செய்தார். அந்த காலத்து டாப் நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக வலம் வந்த மனீஷுக்கு பின் தொடர் வெற்றிப் பயணம் தான். ரங்கீலா படத்தில் ஊர்மிளா மடோண்ட்கருக்கு ஆடை டிசைன் செய்ததற்காக பிலிம்பேர் விருதை பெற்றார்.

அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களான, தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, தில் தோ பாகல் ஹே, குச் குச் ஹோத்தா ஹே, கல் ஹோ நா ஹோ, மொஹப்பதேன், அஷோகா, ஓம் சாந்தி ஓம், தோஸ்தானா, சென்னை எக்ஸ்பிரஸ் என்று பட்டியல் தொடருகிறது. சிவாஜி தி பாஸ் மற்றும் எந்திரன் ஆகிய தமிழ் படங்களுக்கும் மனீஷ் மல்ஹோத்ரா ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார்.  

2005-ல் தனது சொந்த ப்ராண்டான ‘மனீஷ் மல்ஹோத்ரா’ என்ற பெயரில் தொடங்கினார் 39 வயதான மனீஷ். அவர் சர்வதேச அளவிலும் பிரபலம் அடையத் தொடங்கினார். கேட் மோஸ், நவோமி காம்பெல், கைலி மினோக் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைத்தார். பிரபல பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனுக்கும் ஆடைகள் டிசைன் செய்துள்ளார் மனீஷ். தற்போது இவரது டிசைன்கள் லண்டன், நியூயார்க், கனடா, துபாய் மற்றும் ரியாதில் பிரபலமாக உள்ளது. 

டிஎன்ஏ இந்தியா பேட்டியில் ஒருமுறை தனக்கான ஊக்கம் பற்றி மனீஷ் பேசுகையில், 

“சவால்கள் இல்லாத வாழ்க்கை ஜாலியாக இருக்காது. 2013-ல் இந்தியாவில் சொந்த ப்ராண்ட் பெயரில் கடையை திறந்த முதல் இந்திய டிசைனர் நான். அந்த ப்ராண்டுக்கான மதிப்பு தற்போது மக்களிடையே கூடியுள்ளது. நான் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பேன். இயற்கையின் அழகு, மக்களின் வாழ்வு, அழகாக அலங்கரிக்கப்பட்ட வீடு, கலை வடிவங்கள் என எல்லாவற்றிலும் அழகு என்பது அடங்கியுள்ளது, அதிலிருந்துதான் எனக்கு ஊக்கம் கிடைக்கிறது” என்றார். 

கட்டுரை: Think Change India