உங்கள் வர்த்தகம் வளர கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

1

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொழில் முனைவர்களுக்கு பயன்படக் கூடிய திட்டம்தான். ஆனால் அந்தத் திட்டத்தின் பயனை சிறிய தொழில் முனைவர்களால் பெற முடியவில்லை. காரணம் அவை மிகச் சிறிய அல்லது நடுத்தரத் தொழில்களாக உள்ளன. லைப் ஸ்டைல், பேஷன் போன்ற துறை சார்ந்து பெண்களால் நடத்தப்படும் பொட்டிக் வர்த்தகம் போன்றவை அத்தகைய தொழில்கள்தான்.

எங்களது இணைய வர்த்தக தளமான ரெட் போல்காவில் இடம் பெறும் பேஷன் தொடர்பான பல பிராண்டுகள் 90 சதவீதம் பெண்களால் நடத்தப்படுபவைதான். ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு வலிமையான ஆளுமை இருக்கிறது. ஒரு தனித்துவமான கதை இருக்கிறது. வளர்வதற்கான திறனும் உள்ளது. அந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை சிறு நிறுவனங்களாக இருப்பதில் மகிழ்ச்சியடைகின்றன. ஆனால் அவை மேலும் வளரத் தகுதியானவை. தெரிந்தோ தெரியாமலோ அதற்குப் பல தடைகள் உள்ளன. நான் இந்தக் கட்டுரையை எழுதக் காரணம், அதுபோன்ற தொழில் முனைவர்கள் அந்தச் சிறு கூட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்பதுதான். ஒரு புதிய நிறுவனம் சிறிய அளவில் தொடங்கப்பட்டாலும் அதை எப்படி ஒரு பெரிய நிறுவனமாக வளர்க்க வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

படம் உதவி: ஷட்டர் ஸ்டாக்
படம் உதவி: ஷட்டர் ஸ்டாக்

உங்கள் வர்த்தகத்தை உயர்த்த வழிகாட்டும் 10 ஆலோசனைகள்:

வானமே எல்லை: பெரும்பாலான பெண் தொழில் முனைவர்கள் குடும்பப் பொறுப்புகள் காரணமாக தங்களுக்குத் தாங்களே ஒரு லட்சுமணக் கோட்டை விதித்துக் கொண்டு அதை விட்டுத் தாண்டி வருவதில்லை. இதுவரையில்தான் தன்னால் செல்ல முடியும் என்று தொழிலைத் தொடங்குவதற்கு முன்பே கூட அவர்கள் கோட்டை வரையறுத்துக் கொள்கின்றனர். அதற்கு மேல் செல்ல அவர்களுக்குத் திறமை இல்லை என்பதில்லை. அதற்கு மேல் செல்ல நேரம் இல்லை என்கிறார்கள். இங்குதான் நீங்கள் மாற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. நம் அனைவருக்குமே ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் இருக்கிறது. ஆனால் அதை சரியாக நாம் நிர்வாகம் செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் இலக்கை ஒரு எல்லைக்குள் சுருக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்காக நீங்கள் வாழத் தொடங்கும் போது உங்கள் கனவு பெரிதாகும். உங்களை நீங்களே சுருக்கிக் கொள்ளாதீர்கள். வானமே எல்லை.

குழுவை உருவாக்குவது: எந்த ஒரு தொழிலும் அதற்கேற்ற ஒரு குழு இல்லாமல் இயங்குவது இல்லை. ஒரு சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணருக்குக் கூட ஒரு குழு அவசியம். உங்கள் சொந்தத் திறமையிலேயே நீங்கள் ஒரு ஆர்ட் ஸ்டுடியோவை நடத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்குக் கூட ஒரு டீம் அவசியம் தான். உணவு வர்த்தகம் ஒன்றை லாபகரமாக நடத்திக் கொண்டிருந்த பெண் ஒருவரைப் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். அவரது தயாரிப்பை விநியோகிக்கவும் வர வேண்டிய பணத்தை வசூல் செய்யவும் அவர் தனது டிரைவரைத்தான் சார்ந்திருக்கிறார். அவரது தொழில் செழித்து வளர்கிறது. யாரையும் நம்பாமல், தானே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்பட்ட பெண் டிசைனர் ஒருவரின் வர்த்தகம் அடுத்த கட்டத்துக்கு வளர முடியாமல் போனது. ஒரு டீம் என்பது உங்கள் வர்த்தகத்தை விரிவு படுத்துவது மட்டுமல்ல. பல புதிய வாய்ப்புக்களை அது திறந்து விடுகிறது.

செயல்முறையை உருவாக்குங்கள்: நீங்கள் வளரும் போது, உங்கள் செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என வரையறுப்பது அவசியமானது. உற்பத்தி, ஆர்டர் நிர்வாகம், அனுபவத்தை தொகுப்பது போன்ற ஒவ்வொன்றும் ஒரு நிறுவனச் செயல் முறையின் அங்கம். உங்கள் வர்த்தகத்தின் ஒவ்வொரு இடத்திலும் குழுவாக இயங்குங்கள்.

தொழில்நுட்பத்தைச் சார்ந்திருங்கள்: விளம்பரத்திற்காக சமூக ஊடகங்களை சார்ந்திருப்பது மட்டும் போதாது. பொருளைக் கொண்டு சேர்ப்பதற்கான பல்வேறு விதமான நிர்வாக உத்திகள், புதிய பொருள் அறிமுகத்திலும் தகவல் தொடர்பு முறைகள் மற்றும் செயல்பாட்டிலும் விதவிதமான உத்திகளையும் கையாள வேண்டும்.

நிதி திரட்டல்: சிறிய தொழில்களைப் பொருத்தவரையில் உரிய நேரத்தில் நிதித் தேவையைப் பூர்த்தி செய்வது வளர்ச்சிக்கு அவசியம். பெரும்பாலான சிறு தொழில் நடத்துபவர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே நின்று விடுகின்றனர். அதைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

படைப்பாக்கத் திறனை பாதுகாத்திடுங்கள்: ஒரு குறிப்பிட்ட வகை சேலைக்கு ஆர்டர்கள் குவிந்தது. இது நல்ல செய்திதான். ஆனால் அளவு கடந்த ஆர்டர்களைச் சமாளிக்க முடியாமல் தொழில்முனைவர் சோர்வடைந்தார். இப்படி படைப்பாக்கத் திறனுடன் கூடிய தொழிலில் ஈடுபடும் பெண்கள் புதிய டிசைன் அறிமுகங்களை அவ்வப்போது இடைவெளி விட்டு செய்ய வேண்டும். பேஷன் டிசைனரில் இருந்து டெய்லர் வரையில் ஒரு சில வாடிக்கையாளர்களை அது மாறச் செய்யும்.

ஒரு பிராண்ட்டை வளருங்கள்: இது எனக்கு பிடித்தான சப்ஜெக்ட். ஆனால் நான் கடந்து வந்த வர்த்தகங்களில் ஒன்று கூட பிராண்ட் நேம் பெற்றதில்லை. உங்கள் பிராண்ட் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துவது உற்சாகமளிக்கக் கூடியது. ஆனால் அது பெரும்பாலான நேரங்களில் அந்தப் பொருளின் மீது பொறிக்கப்படும் அல்லது சமூக ஊடகங்களில் பரவும் லோகோவோடு முடிந்து விடுகிறது. உங்கள் பிராண்ட்டை வளர்ப்பது அவசியம். ஒரு பிராண்ட் உருவாக்கத்திற்கு அந்த பொருள் சார்ந்து பணியாற்றும் அனைத்து நிலைகளில் உள்ளவர்களின் செயல்பாடும் அவசியம். கைத்தறி பேஷன் வர்த்தகத்தில் உள்ள ஒரு பெண்மணி தனது பிராண்ட்டின் தரத்தை மேம்படுத்துவதற்கு தனது தயாரிப்பு குறித்து குறிப்பு எழுதுவதைப் போல ஒவ்வொரு நிலையிலும் செயல்பாடுகள் அவசியம்.

கூட்டாக கற்று கொள்ளுங்கள்: பெரும்பாலானவர்கள் நெட்வொர்க்கிங் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். என்னைப் பொருத்தவரையில் கோ லேர்னிங் (கூட்டாகக் கற்றுக் கொள்ளுதல்) என்ற வார்த்தைதான் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் பணி தொடர்பான பல்வேறு துறைகளில் உள்ளவர்களோடு தொடர்பு கொண்டு பேசும் போது அந்தப் பேச்சின் முடிவில் நீங்கள் அறிந்து கொண்ட விஷயங்களைக் குறித்து வையுங்கள். அதில் இருந்து கற்றுக் கொள்ளத் தயாராகுங்கள். இந்தப் பழக்கம் கூட்டுப் படிப்பை நோக்கி உங்களைக் கொண்டு செல்லும். நீங்கள் கற்றுக் கொள்வதோடு அதை பிறருக்கும் கற்றுக் கொடுப்பீர்கள்.

சுவாரஸ்யமான கூட்டணி: பரஸ்பரம் ஒத்த புரிதல் உள்ளவர்களை இணைக்க வேண்டும். இதில் ஒருவரது வளர்ச்சிக்கு மற்றவர் துணையாக இருப்பார். பரஸ்பர வளர்ச்சி இருக்கும்.

கேட்டுப் பெறுங்கள்: கேளுங்கள். வளர்ச்சியைக் கேளுங்கள். உதவியைக் கேளுங்கள். உங்கள் பொருளையும் சேவையையும் பயன்படுத்துமாறு கேளுங்கள். உங்கள் வேலையில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். சகாக்களின் கருத்து என்ன என்று கேளுங்கள். எதற்கும் பின்வாங்காதீர்கள். பெரும்பாலான சவால்களுக்கு நீங்கள் தீர்வு காண்பீர்கள். உங்களுக்குத் தெரியுமா ப்ளீஸ் ஆர்டி (please RT) என்று ஒரு ட்வீட் செய்தால் போதும் ரீ ட்வீட்கள் குவியும்.

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியவர் விஷாகா சிங். பல்வேறு டிசைனர்களின் அனுபவங்களை உள்ளடக்கிய புதிய பேஷன்களுக்கான தளம் ரெட் போல்காவின் நிறுவனர்.

தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற தொழில்முனைவு ஆலோசனை கட்டுரைகள்:

ஏன் நல்ல பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்கள்?

நிறுவனர்கள் இடையே கூட்டு முயற்சிக்கே ஜனநாயகம் ஏற்றது; முடிவெடுக்க அல்ல!