வீடியோ பாடல்: உங்களையும் நொறுக்கக் கூடும் இந்த 'கண்ணாடி உலகம்'!  

3

எதிர்பாராத வெள்ள சேதத்தைக் காட்டிலும் பயங்கரமாக புரட்டிப் போடக்கூடியது, முன்னறிவிப்பின்றி வேலையில் இருந்து 'விடுவிக்கப்படும்' நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவரின் வாழ்க்கை. இது தற்காலிக வலிதான் என்றாலும் எளிதில் எதிர்கொள்ளத்தக்கது அல்ல.

கடந்த சில ஆண்டுகளாகவே இளம் தலைமுறையினர் பலரும் வேலைக்குச் சேர்ந்து 24 மாதங்கள் கூட பூர்த்தியடையாத நிலையில், சில பல காரணங்கள் சொல்லப்பட்டு திடீரென வீட்டுக்கு அனுப்பப்படுவது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

பணியில் உறுதித்தன்மை என்பதே இல்லாத சூழலில், அப்படி முன்னறிவிப்பின்றி வேலையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஓர் இளம்பெண்ணின் அந்தக் கொடூர நாளின் எஞ்சிய பொழுதுகள்தான் 'கண்ணாடி உலகம்' வீடியோ பாடல்.

சென்னை வெயிலுடனான ரயில் பயணத்தில் கரையத் தொடங்கும் அந்நாளில், தனிமையுடன் கூடிய மன அழுத்தத்தில் தவிக்கும் அந்தப் பெண்ணை, புறச்சூழலே எப்படி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வழிவகுக்கிறது என்பதே எல்லாமும்.

”கண்ணாடி உலகம்
கண் முன்னாடி நழுவும்
தரை தொடும் முன்
கைகளில் யார் பிடிப்பார்..?”

இப்படித் தொடங்கும் பாடலும் காட்சிகளும் நம் மனத்தையும் அழுத்தக் கூடும். ஆனால், அந்த அழுத்தம் நீண்ட நேரம் நீடிக்காது மீண்டெழுவது நிச்சயம்.

'உனக்கும் கீழே உள்ளவர் கோடி' என்று கூறி மறைமுகமாக தெம்பூட்டுகிறார்கள், ரயில் நிலையத்திலும், ரயிலிலும் கடக்கும் எளிய மனிதர்கள்.

”நதியில் மிதக்கும் நிலவின் பிம்பமே
அதை அள்ளி எடுக்க ஆயிரம் கைகள் இருந்தென்ன?
நீந்தும் நிலவின் உடன் நீந்த பார்க்கிறாய்
நான் கரையேற அது உடன் ஏறுமோ?”

குட்டி ரேவதியின் பாடல் வரிகள் நம் மனதை பதம் பார்த்து பின்னர் இதம் சேர்த்துள்ளது.

சந்தோஷ் ஆர்.பி.யின் இசை கச்சிதம். குறிப்பாக, பாடகர்கள் சின்னப் பொண்ணு மற்றும் சஞ்சனா ஆகிய இருவரின் குரலைப் பயன்படுத்திய விதம் சிறப்பு. கவலை மிகுந்த சூழலால், உடைந்துபோன குரலில் பாடலைத் துவக்கி, பின்னர் உத்வேகம் தரும் குரலைப் புகுத்தியது இந்த வீடியோ பாடலுக்கு வலு சேர்த்துள்ளது.

தீபாவின் நடிப்பு எந்த இடத்திலும் இயல்பு மீறவில்லை. முத்துவேல் ஜனகராஜனின் இந்த வீடியோ கான்செப்ட்டில் துளியும் செயற்கைத்தனம் இல்லாதது கவனிக்கத்தக்கது. பேரிடரில் இருந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை எவ்வித நாடக பாணியையும் பின்பற்றாமல் சொன்னதுதான் நமக்கு நெருக்கத்தைக் கூட்டுகிறது. விரிந்த கடலை விழிகளில் தரிசிக்கும்போது எந்தக் குறுகிய மனமும் பறந்து விரியத் தொடங்கும் என்ற இயற்கை உளவியலை பக்காவாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

வீடியோ பாடலை இயக்கிய தீபக் பாகவந்த் ஒளிப்பதிவையும் செய்திருக்கிறார். வண்ணத்தைத் தவிர்த்துவிட்டு கருப்பு - வெள்ளையில் உருவாக்கியிருப்பதுதான் இந்த வீடியோ பாடல் மீது அதிக கவனம் குவிய வகைசெய்கிறது. அழுகாச்சி காட்சிகளையும், ஓவர் டோஸ் ஊக்க மருந்துகளையும் முற்றிலும் தவிர்த்துவிட்டு, இருக்கின்ற உணர்வுகளை இருக்கின்றபடி பதிவு செய்திருப்பதில் தெரிகிறது இயக்குநரின் திறன்கள். அன்பழகனின் எடிட்டிங் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஃப்ரேமையும் ஸ்கிரீன் ஷாட் அடித்தால் பல அசத்தல் கவர் ஃபோட்டோக்கள் கிட்டுவது உறுதி. அந்த அளவுக்கான அழகியல் தன்மை மிக்க காட்சிகள் இருந்தாலும், பார்வையாளர்களை ஒட்டுமொத்தமாகவே பார்க்க வைத்திருப்பது, ஒரு நல்ல குறும்படத்தை ரசித்த உணர்வைத் தருகிறது.

நம் கண்ணாடி உலகமும் எப்போது வேண்டுமானாலும் உடையக் கூடும். ஆனால், அந்தத் தற்காலிகப் பின்னடைவில் மனம் நொறுங்காமல் இப்படி மீளலாம் என்றுச் சொல்லும் அந்த வீடியோ பாடல் இதோ...