மணம், சுவை நிறைந்த டீ தயாரிக்கும் பெண்மணி- ஆஸ்திரேலியாவின் சிறந்த பிசினஸ்வுமனாக தேர்வு! 

0

26 வயதான உப்மா விர்தி என்ற இந்திய-ஆஸ்திரேலிய வழக்கறிஞர் ‘சாய் வாலி’ என்ற இந்திய டீ வகைகளை தயாரித்து ஆஸ்திரேலியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களுக்கு ருசியான டீ தயாரித்து விற்பனை செய்யும் மையத்தை தொடங்கினார் உப்மா. அண்மையில் சிட்னியில் நடந்த இந்திய ஆஸ்திரேலிய பிசினஸ் மற்றும் கம்யூனிட்டி அவார்ட்ஸ் (IABCA) அமைப்பு, இவருக்கு ‘சிறந்த பிசினஸ்வுமன் 2016’ விருதை அளித்து சிறப்பித்துள்ளது. 

உப்மா விர்தி காலையில் வழக்கறிஞராக பணிபுரிந்து கொண்டே, ‘சாய் வாலி’ ‘Chai Walli’ என்ற பெயரில் டீ விற்பனை மையத்தை தொடங்கினார். உப்மாவின் தாத்தா ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவரிடம் இருந்து ஹெர்பல் டீ தயாரிக்க கற்றுக்கொண்டுள்ளார் உப்மா. அதன் ருசியும், மணமும் மக்களிடையே பிரபலம் அடையத்தொடங்கியது என்று SBS பேட்டியில் கூறினார். 

“நான் போகும் இடத்தில் எல்லாம் டீ போடுவேன். என் பெற்றோர்களும் என்னை டீ போடச் சொல்லி கேட்பார்கள். என் சகோதரருக்கு திருமணம் நடந்தபோது நான் சுமார் ஆயிரம் கோப்பை டீ தயாரித்து எங்கள் விருந்தாளிகளுக்கு அளித்திருப்பேன். ஆஸ்திரியா’விற்கு மேற்படிப்பிற்கு சென்றபோதும் அங்குள்ளவர்களுக்கு டீ செய்து தருவேன்.”

உப்மா தற்போது ஆன்லைன் டீ ஸ்டோர் நடத்தி வருகிறார். இதில் பலவகையான டீ, அதன் சம்மந்தப்பட்ட பொருட்கள், டீ கோப்பை, டீ வடிகட்டி, டீ கொண்டு தயாரித்த சாக்லெட்டுகள் என்று பல பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவரது தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்பும் உள்ளது. டீ தொடர்பான பயிற்சி பட்டறைகள் நடத்தி, டீ பிரியர்களுக்கு தான் தயாரிக்கும் டீயின் செய்முறையை விளக்கிக் கற்றுத்தருகிறார். மணமுடைய தனது கைப்பக்குவத்தை பிறருக்கு சொல்லித்தந்து மகிழ்கிறார் உப்மா. 

சண்டிகரில் பிறந்த இவர், ‘மெல்பெர்ன் டீ விழாவில் சிறப்பு பங்கேற்பாளராக அழைக்கப்பட்டார். அதில் கலந்து கொண்டு பேசிய உப்மா, இந்திய டீ’யை உலகெங்கும் பிரபலப்படுத்துவதே தனது ஆசை என்று கூறியுள்ளார்.  

கட்டுரை: Think Change India