தொழிலில் பல முயற்சிகளுக்கு பின் வெற்றிச் சுவையை ருசித்த 'ஆரோ பீட்சா' சுப்பராஜ்!

3

நாகரீகம் வளர நாம் உண்ணும் உணவும் அதற்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகிறது. நம் பாரம்பரிய உணவில் ஏற்படும் சில மாற்றங்கள் ஒரு பக்கம் இருக்க, மேற்கத்திய உணவுகளையும் நாம் நம் அன்றாட உணவோடு சேர்த்துக்கொண்டோம். அந்த வகையில் 'ஆரோ பீட்சா' என்னும் உணவகம் மேற்கத்திய உணவான பீட்சாவை நம் பாரம்பரிய முறையில் தயாரித்து தருகின்றனர்.

இவ்வுணவகத்தின் நிறுவனர்கள் துரைராஜ் மற்றும் சுப்பராஜ், ஆரோ பீட்சா உருவான கதையையும் தான் தொழில்முனைவராய் வளர்ந்த தன் பயணத்தையும் நம்முடன் பகிர்கிறார் ஆரோ பீட்சாவின் துணை நிறுவனர் சுப்பராஜ்.

“நான் படித்தது சமையல் கலை, அதனால் உணவு சார்ந்த ஏதேனும் ஓர் நிறுவனத்தை துவங்க வேண்டும் என நினைத்து இருந்தேன். பல முயற்சிகள் தோற்று அதன் பின் கிடைத்த வெற்றியே இந்த ஆரோ பீட்சா.”

என்றார் சுப்பராஜ். பட்டபடிப்பு முடிக்காத சுப்பராஜ் சமையல் கலையில் சான்றிதல் படிப்பை முடித்துள்ளார். படிப்பை முடித்த இவருக்கு சமையல் துறையிலே கை நிறைய சம்பளத்துடன் அயல்நாட்டில் வேலை கிடைக்க அங்கு சென்று எட்டு வருடம் பணியாற்றியுள்ளார். 5 ஸ்டார் உணவகம் என பல பெரும் உணவகங்களில் பல வருடங்கள் பணிபுரிந்த இவர் இந்த அனுபவத்தை வைத்து சுய தொழில் தொடங்க முடிவு செய்தார்.

நிறுவனர்கள் துரைராஜ் மற்றும் சுப்பராஜ்
நிறுவனர்கள் துரைராஜ் மற்றும் சுப்பராஜ்
“2013-ல் என் வேலையை விட முடிவு செய்தேன், நல்ல சம்பளம், நல்ல வாழ்க்கை முறை, பிடித்த வேலை இருந்தும் கூட தொழில்முனைவராக வேண்டும் என்ற எண்ணம் என்னை இந்தியாவிற்கு வர செய்தது.”

தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்த சுப்பராஜ்கு துணையாய் இருந்தது அவரது மனைவி மட்டும். வழிகாட்ட நண்பர்கள் உறவினர்கள் என எந்த ஒரு ஆதரவும் தன்னுடன் இல்லை என்கிறார். தன் மனைவியின் துணையோடு தொழில் தொடங்க முடிவு செய்து தன் மனைவியின் சொந்த ஊரான அந்தமான் நிக்கோபாரில் முதல் உணவகத்தை துவங்கினார்

“அந்தமான் சுற்றுலா தளம் என்பதால் அங்கு ஒரு சிற்றுண்டி உணவகத்தை 2014-ல் துவங்கினோம். அங்கு சுற்றுலா சீசன் முடிந்துவிட்டதால் இந்தியாவிற்கு திரும்பி விட்டோம்...”

அடுத்த சுற்றுலாவின் போது மீண்டும் அந்தமான் சென்று தங்கள் உணவகத்தை தொடர வேண்டும் என்று சென்னை திரும்பிய இவர்கள் சென்னையிலே தொழில் தொடங்கலாம் என முடிவு செய்து தங்கிவிட்டனர்.

சென்னை வந்த சுப்பராஜ் தன் சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் இருந்து சிற்றுண்டிகளை பெற்று ஆன்லைனில் விற்க முடிவு செய்தார் ஆனால் சில காரணத்தினால் அந்த யோசனையையும் கைவிட்டார். அதன் பின் பல முயற்சிகள் செய்து அதிலும் தோல்வி அடைந்தார் சுப்பராஜ். இருப்பினும் தொழில்முனைவர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் அவர் கை விடவில்லை.

“நான் அதிகம் பயணம் செய்வேன், அப்படி ஒரு முறை நான் பாண்டிச்சேரிக்கு பயணம் செய்தபோது உணவகத்தில் ஏற்பட்ட உறவால் கிடைத்ததே இந்த ஆரோ பீட்சா.”

ஆரோ பீட்சாவின் தொடக்கம்:

பாண்டிச்சேரியில் துரைராஜ் என்பவரால் 2013-ல் துவங்கப்பட்டதே இந்த உணவகம். தற்செயலாக அங்கு உணவு உண்ண சென்ற சுப்பராஜ் இன்று அந்நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆவார். பாண்டியில் ஒரு சிறிய பீட்சா கடையான ஆரோ பீட்சாவை விரிவாக்க துறைராஜுடன் கைகோர்த்து பல கிளைகளாக வளர்த்துள்ளார் சுப்பராஜ்.

பீட்சா தயாரிக்கும் விறகு அடுப்பு 
பீட்சா தயாரிக்கும் விறகு அடுப்பு 

மற்ற பீட்சா போல் மின் அடுப்பில் தயாரிக்காமல் தாங்களே உருவாக்கிய அடுப்பில் விறகை கொண்டு பீட்சா தயாறிக்கின்றனர். இதுவே இவர்கள் உணவகத்தின் முக்கிய அம்சம் என்கிறார் சுப்பராஜ். இது உணவின் சுவையை இன்னும் மெருகேற்றும் என்கின்றனர்.

“என் துனை நிறுவனருக்கு தற்போதிய சந்தை நிலவரம் தெரியாததால், மார்கெடிங், உணவக கட்டமைப்பு என சகலதையும் நான் பார்த்துகொள்கிறேன். உணவு பட்டியலை கூட முற்றிலுமாக சந்தைக்கு ஏற்ப மாற்றியுள்ளேன்..”

பாண்டியை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் சென்னை உத்தண்டியில் ஒரு கிளையை திறந்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் சென்னை உள்புறத்தில் இரண்டு கடைகள் திறக்க உள்ளனர். அது மட்டுமின்றி பிரான்சைஸ் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

உணவகத் துறையில் தனக்குக் கிடைத்த அனுபவத்தால் சிறியதாய் இருந்த ஆரோ பீட்சாவை ஓர் தனி பிராண்டாக மாற்ற முயல்கிறார் சுப்பராஜ். சென்னைக்கு ஏற்ற உணவு பட்டியல், ஆன்லைன் விற்பனை, சமூக ஊடக மார்கெட்டிங் என பல பரிமாணத்தில் இந்த உணவகத்தை தனி பிராண்டாக பிரபலப் படுத்துகிறார். இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தைகளுக்கான பீட்சா பயிற்சி பட்டறையையும் நடத்தியுள்ளார்.

“வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு பாதி சைவம் மறு பாதி அசைவம் கொண்ட பீட்சாவும் இங்கு கிடைக்கும். இது போன்ற பல புதுமைகளை புகுட்ட விரும்புகிறோம்,”

என்கிறார் தங்கள் நிறுவனத்தை வளர்க்கும் நோக்கில். சொந்தமாக இன்னும் இரண்டு அல்லது மூன்று கிளைகள் திறந்த பிறகு பிரான்சைஸ் கொடுக்க முடிவு செய்துள்ளனர். மேலும் தற்பொழுது பீட்சா தயாரிக்க கொடைக்கானலில் இருந்து சீஸ் வரவைகின்றனர். இன்னும் சில நாட்களில் சொந்தமாக தாங்களே சீஸ் தயாரிக்க உள்ளனர். 

தற்பொழுது வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைப்பதால் எதிர்காலத்தில் நிச்சயம் இது ஒரு சிறந்த பிராண்டாக வளரும் என நம்புகின்றார் சுப்பராஜ்!

Related Stories

Stories by Mahmoodha Nowshin