மார்கெடிங் பணியை துறந்து ஆந்திராவில் முன்மாதிரி கிராமத்தை உருவாக்கிய கல்யாண் அக்கிபெடி

0

பொறியாளரான ஒருவர் வறண்ட பகுதி ஒன்றை அங்கு வசிப்பவர்களை ஊக்குவிப்பதன் மூலம் பசுமையான சோலையாக மாற்ற முயன்றபோது அது சாத்தியமில்லை என்றே அனைவரும் நம்பினர். பெங்களூருவிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம் அதிகம் பிரபலமாக பகுதியாக இருந்தது. வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு அந்தப் பகுதியை அடையாளம் காட்டும் ஒரு பலகைகூட எங்கும் காணப்படவில்லை. அங்குள்ளவர்கள் சுய சார்புடன் செயல்பட்ட காரணத்தால் தற்போது இந்தப் பகுதி பிரபலமாகி உள்ளது. இங்கு வசிக்கும் 12 குடும்பங்கள் ஆர்கானிக் முறையில் பயிர்களை வளர்க்கின்றனர். காற்றின் திறனைக் கொண்டு ஒட்டுமொத்த மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கின்றனர். தண்ணீர் தேவைக்காக மழைநீரை சேமிக்கின்றனர். சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்பைக் கொண்டு தண்ணீரை வீட்டிற்கு விநியோகித்துக் கொள்கின்றனர்.

இவை அனைத்தையும் தாண்டி இந்த கிராமத்தில் வைஃபை வசதிகள் உள்ளது. விவசாயிகளுக்கு தொழில்முனைவு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. குழந்தைகள் மனப்பாடம் செய்து கற்பதைக் காட்டிலும் தங்களது திறன்களை வளர்த்தெடுக்கும் விதத்தில் பாடதிட்டம் உருவாக்கப்படுகிறது. பல்வேறு கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் இந்தச் சிறிய கிராமம் அவர்களுக்கென தண்ணீர் சேமித்தல், மின்சக்தி உற்பத்தி, பாலின பாரபட்சமின்மை, சாதிப்பிரிவினையின்மை என இந்த சிறிய கிராமம் சுய சார்புடன் வாழ்ந்து ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.

நிலங்கள் வறண்டு தண்ணீர் வரத்து குறைவதால் விவசாயத்தில் ஈடுபட இயலாமல் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்தைத் தேடி நகர்புறங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர்.

39 வயதான கல்யாண் அக்கிபெடி ஜெனரல் எலக்டிரிக் நிறுவனத்தில் நிதி மற்றும் மார்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் கிராமங்கள் குறித்து அதிகம் தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன் தனது பணியைத் துறந்தார். ஒவ்வொரு கிராமமாக பயணித்தார். அந்த பயணத்தன் ஒரு பகுதியாக தெக்குலோடு கிராமத்தை வந்தடைந்தார்.


அவரது பயணத்தில் சந்தித்த பழங்குடி மக்களின் எளிமையான வாழ்க்கை முறையால் உந்தப்பட்டு தெக்குலோடு கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாய குடும்பம் குறித்து தெரிந்துகொள்ள விரும்பினார். இவ்வாறு அவர்களுடன் இணைந்து செயல்பட்டு 7,000 ரூபாயாக இருந்த அந்தக் குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை 14,000 ரூபாய் மாத வருமானமாக அதிகரிக்க உதவினார். பணிகளில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை புகுத்தியும் சூரியசக்தி மற்றும் காற்றின் சக்தி போன்ற இயற்கை வளங்களை பயன்படுத்த உதவியும் இதை சாத்தியப்படுத்தினார்.

2013-ம் ஆண்டு தெக்குலோடுவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தில் 12.5 ஏக்கர் நிலத்தை வாங்கினார். ராயல்சீமா மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரான ஹிந்துபூரை அடுத்துள்ள காட்டுப் பகுதிக்கு அருகில் இந்த நிலம் இருந்தது. இந்த இடம்தான் முன்மாதிரி கிராமம் என அழைக்கப்படும் இடமாக மாறியது. அக்கிபெடி IANS-க்கு தெரிவிக்கையில்,

பழங்குடியினர் சமூகத்தைப் பார்த்து எனக்கு மிகப்பெரிய உந்துதல் ஏற்பட்டது. அவர்கள் தங்களது சுற்றுசுழலுடன் ஒத்திசைந்து வாழ்கின்றனர். மண், காற்று, நீர் ஆகியவற்றின் தன்மையை சிதைக்காமல் பாதுகாப்பது, ஒன்றோடொன்று சார்ந்திருத்தல், அதன் வாயிலாக சுய சார்பு ஆகிய மூன்று எளிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அத்தகைய ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் காட்ட விரும்பினேன்.

அக்கிபெடி கிராமவாசிகளுடன் இணைந்து விவசாயத்தில் அறிவியல்பூர்வமான வழிமுறைகளையும் நிலையான வாழ்க்கை முறையையும் பின்பற்றி நான்காண்டுகளில் வறண்ட நிலப்பகுதியை சுயசார்புடனும், சுற்றுசூழலை அரவணைத்து செல்லும் விதத்திலும், சமூக ஒற்றுமையுடன் கூடிய ஒரு முன்மாதிரியாக விளங்கும் பகுதியாக மாற்றினார். அவர் குறிப்பிடுகையில்,

நாங்கள் அறிவுப்பூர்வமான சூழலில் வாழ விரும்பினோம்.

கிராமத்தை வளர்ச்சியடையச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக முன்மாதிரி கிராமத்தில் வசிப்பவர்கள் தண்ணீரை சேமிப்பதற்காக தாழ்வான பகுதிகளில் வசிப்போருடன் ஒன்றிணைந்து ஆரம்பத்தில் எட்டு குளங்களை வெட்டினர். அக்கிபெடி கூறுகையில்,

இந்தப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக உள்ளபோதும் ஒரே ஒரு நாள் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தால் இந்த குளங்களில் ஒரு மாதத்திற்குத் தேவையான தண்ணீர் நிரம்பிவிடும். இந்த முயற்சியானது அருகாமையிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரைக் கவர்ந்தது.

உள்ளூர் அதிகாரிகள் விவசாயிகள் குளங்களை வெட்ட வலியுறுத்தியும் பலனில்லை. ஆனால் மழை நீரை நாங்கள் சேமித்ததை நேரடியாகக் கண்டதும் குளங்களை வெட்ட அனுமதி கேட்டு நிர்வாதத்திடம் வரும் கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதுவே ஒரு செயலை வார்த்தைகளால் வலியுறுத்துவதைக் காட்டிலும் நிரூபித்துக் காட்டுவதன் பலனாகும்.”

இது மட்டுமல்லாமல் மேலும் பல்வேறு விதங்களில் இந்த முன்மாதிரி கிராமம் தனித்துவத்துடன் திகழ்ந்தது. பாலின வேறுபாடோ அல்லது ஜாதி, மத வேறுபாடோ இன்றி பொதுவான சமையலறையில் அனைத்து குடும்பங்களுக்கும் உணவு தயாரிக்கப்படுகிறது. ஆண்களும் குழந்தைகளை பராமரிக்கும் வகையில் ஒரு கூட்டுக் குடும்பமாகவே வாழ்கின்றனர். இவ்வாறு IANS-க்கு தெரிவித்தார் அக்கிபெடி. இந்த முன்மாதிரி கிராமத்திற்கு குடிபெயர்ந்த 28 வயதான லஷ்மி குறிப்பிடுகையில்,

மற்ற கிராமங்களில் பெண்கள் அடுப்பறைகளில் முடக்கப்படுவார்கள். சமைப்பதும் குழந்தைகளை பராமரிப்பதும் மட்டுமே அவர்களது ஒதுக்கப்பட்ட பணியாகும். இங்கு என் குழந்தையை மற்றவர்கள் கவனித்துக்கொள்வதால் நான் அதிகம் கற்றுக்கொள்ளவும் பல்வேறு பணிகளில் ஈடுபடவும் எனக்கு சுதந்திரம் கிடைக்கிறது.

இங்கு வசிப்பவர்கள் தங்களது அன்றாட பணியில் ஒரு பகுதியாக நிலத்தில் பயிர்கள், காய்கறிகள், பழங்கள், பூ ஆகியவற்றை வளர்க்கின்றனர். தச்சு வேலை, சோப் தயாரித்தல், கட்டுமானப் பணிகள் மற்றும் பிற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுவார்கள். மாலை நேரங்களில் இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட கிராமிய கலைகளில் ஈடுபடுவதும் அந்த குறிப்பிட்ட நாளில் அவர்கள் கற்ற விஷயங்களை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்த கிராமாசிகளுக்கு இருக்கும் மனநிறைவானது அடுத்தவர்களுக்கு எளிதாக பரவும் வகையில் உள்ளது. ஜப்பானியர்களின் தத்துவமான ‘இகிகாய்’ என்பதற்கு ‘வாழ்வதற்கான காரணம்’ என பொருள்படும். இது கிராம மக்களிடையே ஒரு பரவலான தத்துவமான உள்ளது. 10 வயது குழந்தை முதல் அக்கிபெடியின் மகன் ரிஷப் வரை அனைவருக்கும் இது பழக்கமான ஒன்று. இந்தக் கிராமத்திலுள்ள கற்றல் மையத்திற்கு ’இகிகாய்’ என பெயரிட்டுள்ளனர். இங்குள்ள அனைவரும் தொடர்ந்து பல விஷயங்களைக் கற்று வருகின்றனர். உதாரணத்திற்கு விவசாய முறைகள், செங்கலால் கட்டப்படும் வீடுகளுக்கு மாற்றாக மணல் உள்ளிட்ட பொருட்களால் ஆன மூட்டைகளைக் கொண்டு கட்டப்படும் வீட்டை உருவாக்குதல், காற்றாலைகள் அமைத்தல், ஒரு புதிய மொழியைக் கற்றல், அறிவியல் கொள்கைகளைக் கற்றல் என தொடர்ந்து கற்றுவருகின்றனர். இந்த கிராமத்திற்கான பாடதிட்டத்தை உருவாக்கும் அக்கிபெடியின் மனைவி ஷோபிதா கெட்லயா குறிப்பிடுகையில்,

கிராமத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ஆரம்பத்தில் கற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டினர். ஆனால் அந்த நிலை மாறி அவர்கள் தங்களது குழந்தைகளுடன் தயக்கமின்றி உரையாடுவதைப் பார்க்கமுடிகிறது. கற்பதற்கு வயதோ பாலினமோ ஒரு தடையல்ல.

குழந்தைகளுக்கு வகுப்பைறையைத் தாண்டிய கற்றலை ஊக்குவிக்கும் விதத்தில் கற்கும் முறை அமைந்துள்ளது. அவர்கள் வீடுகளை கட்ட கற்றுக்கொள்வார்கள். கற்றல் மையத்திற்கான சட்ட திட்டங்களை தாங்களே வகுத்துக்கொண்டனர். விலங்குகளை பராமரித்தனர். மென்பொருளை கோடிங் செய்யவும் கற்றுக்கொண்டனர். தாங்கள் கற்றறிந்ததை அருகாமையிலுள்ள கிராமங்களுடனும் பகிர்ந்துகொண்டனர். உணவு மற்றும் தண்ணீர், இருப்பிடம், உடை, மருத்துவம், ஆற்றல், ஒருங்கிணைத்தல், வணிகம், கல்வி, பேரிடர் மேலாண்மை என ஒன்பது அடிப்படைத் தேவைகளை நிலையான விதத்தில் தீர்த்துக்கொள்ள இந்தச் சமூகம் திட்டமிட்டு செயல்படுகிறது.

தெக்கலோடு பகுதியைச் சேர்ந்த கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பட்டதாரியான 22 வயதான ஜி. கோவர்தன் ஒரு வழக்கமான பணியைக் காட்டிலும் விவசாயப் பணியை மேற்கொள்வதில் அதிக பெருமிதம் கொள்கிறார். பசுமை சார்ந்த நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அருகிலுள்ள கிராம மக்கள் அதிக மரங்களை நடுவதற்கு ஊக்குவித்தார். அவர் குறிப்பிடுகையில்,

மரங்களும் பசுமையான நிலங்களும் நிறைந்த பகுதிதான் என் உலகம். இதை விடுத்து ஒரு பணிக்காக நான் ஏன் நெரிசல் மிகுந்த நகர்புறத்திற்குச் செல்லவேண்டும்?


அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் மற்றவர்களும் தொழில்முனைவில் ஈடுபவதற்காக இந்த முன்மாதிரியான கிராமத்தில் கிராமப்புற பொருளாதார மண்டலம் (Rural Economic Zone) அமைக்கப்பட்டுள்ளது. அக்கிபெடி கூறுகையில்,

கிராம மக்கள் கோழிப்பண்ணை வளர்த்தல், ஆடுகள் மற்றும் செம்மறியாடு வளர்த்தல், அல்லது விவசாயம் போன்றவற்றில் புதுமைகளை அணுகுவதற்கு வாய்ப்பின்றி செயல்படுகின்றனர். இவர்கள் தங்களது வணிக திறன்களை மேம்படுத்திக்கொண்டு தொழில்முனைவோர் ஆக REZ உதவுகிறது.

மற்ற கிராமப்புற இளைஞர்கள் கற்கவும் அவற்றை தங்களது பகுதியில் நடைமுறைப்படுத்தவும் இந்த முன்மாதிரி கிராமம் ஏற்பாடு செய்கிறது. அக்கிபெடி கூறுகையில்,

நாடு முழுவதுமுள்ள மக்கள் தங்களது மாவட்டத்திலும் இப்படிப்பட்ட முன்மாதிரி கிராமங்களை அமைக்க உதவுக்கூடிய ஆதரவான அமைப்பை உருவாக்க விரும்புகிறோம்.

கட்டுரை : Think Change India