நம் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய 6 தொழில்முனைவோர்கள்! 

0

ஒரு சில தயாரிப்புகள் அதன் பயன்பாட்டைத் தாண்டி நம்முடைய மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும். இன்றைய தொழில்முனைவோர் அனைவரையும் நாம் கொண்டாடுகையில் இந்தத் தொழில்முனைவோரின் பெயரைக்கூட நாம் அறிந்துகொள்ள முற்பட்டிருக்க மாட்டோம்.

ஹிமாலயா (Himalaya) – எம் மணால்

மருந்துத் தயாரிப்பில் தாவரங்களைப் பயன்படுத்தினால் அதை வணிகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததை எம்.மணால் கண்டறிந்தார். இதன் விளைவாக ’தி ஹிமாலயா ட்ரக் கம்பெனி’ என்கிற நிறுவனத்தை 1930-ம் ஆண்டு துவங்கினார். கடந்த 87 வருடங்களாக ஹிமாலயாவின் மருந்து மற்றும் ஆயுர்வேதப் பொருட்கள் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானோர் வீட்டில் பயன்பாட்டில் உள்ளது. பல ஒப்பந்தங்களை நிராகரித்து விட்டது இந்நிறுவனம். இன்று உலகெங்கிலும் 92 நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்துவருகிறது.

ப்ரெஸ்டீஜ் (Prestige) – டிடி கிருஷ்ணமாச்சாரி

சென்னையில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் பிறந்தவர் டிடி கிருஷ்ணமாச்சாரி. டிடிகே க்ரூப் என்கிற நிறுவனத்தை 1928-ம் ஆண்டு துவங்கினார். இந்நிறுவனம் பல்வேறு தயாரிப்புகளில் ஈடுபட்டது. அவற்றில் சமையலறை சாதனங்கள் அதிக வரவேற்பைப் பெற்றது. 2014-ம் ஆண்டு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது ப்ரெஸ்டீஜ். ப்ரெஸ்டீஜ் ப்ராண்டின் குக்கர், அடுப்பு, பேன் போன்ற சாதனங்கள் நிச்சயம் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். இவற்றை நமக்கு அளித்தமைக்கு திரு. கிருஷ்ணமாச்சாரிக்கு நாம் நன்றி தெரிவித்தாக வேண்டும்.

பேட்டா (Bata) – தாமஸ் பேட்டா

கருப்பு ஷூவிற்கு பிரபலமானது பேட்டா. இந்தியாவில் கடந்த அரை நூற்றாண்டில் பள்ளிக்குச் சென்ற அனைத்து குழந்தைகளுக்கும் பேட்டா என்கிற பெயர் மிகவும் பரிச்சயமான ஒன்று. ஆனால் அதை உருவாக்கியவர் தாமஸ் பேட்டா என்பது வெகு சிலருக்கே தெரியும். ஆஸ்திரியா-ஹங்கேரி பேரரசு என்று முன்னாளில் அழைக்கப்பட்ட பகுதியில் 1876 பிறந்தார் பேட்டா. இந்த ப்ராண்டின் சந்தை மதிப்பு இந்தியாவில் மட்டும் 73800 கோடி. இதன் ஷூக்கள், ஆடை, மற்ற துணைப்பொருட்கள் போன்றவற்றை 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

போரோலின் (Boroline) – கோர்மோஹன் தத்தா

இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த சமயத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு நறுமணமிக்க கிருமிநாசினி க்ரீம் போரோலின். கோர்மோஷன் தத்தா என்கிற ஒரு பெங்காலி வியாபாரியால் 1929-ம் ஆண்டு கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. போரோலின் ட்யூப் பச்சை நிறத்தில் இருக்கும். ஒரு குறிப்பிட்ட தலைமுறையைச் சேர்ந்த அனைத்து இந்தியர்களுக்கும் தங்களது வீட்டில் இந்த ட்யூப் இருந்தது நினைவிருக்கலாம். அதன் தலைமை நிறுவனமான ஜிடி ஃபார்மா சந்தையில் இன்றும் சிறப்பாக செயல்பட்டு 2015-16 ஆண்டிற்கான வருவாயாக 150 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.

பஜாஜ் (Bajaj) – ஜம்னாலால் பஜாஜ்

பஜாஜ் சேதக் ஸ்கூட்டர் 1970-ம் ஆண்டு துவக்கம் முதல் அதன் தோற்றத்திற்கும் சத்தத்திற்கும் பிரபலமானது. அதன் தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் தற்போதைய சந்தை மதிப்பு 80,000 கோடி ரூபாய். இது பஜாஜ் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் குடையின்கீழ் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தை ஜம்னாலால் பஜாஜ் 1926-ம் ஆண்டு உருவாக்கினார். ஜம்னாலால் பஜாஜ் ஒரு ஏழை மார்வாரி குடும்பத்தில் 1889-ம் ஆண்டு பிறந்தார். அதன் பிறகு ஒரு பணக்கார ராஜஸ்தானி தம்பதி அவரை தத்து எடுத்துக்கொண்டனர். அவர் ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் மட்டுமல்ல, ஒரு சமூக சேவகர், அரசியல் தலைவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்.

அமர் சித்ரா கதா மற்றும் டிங்கிள் (Amar Chitra Katha) – ஆனந்த் பாய்

ஆனந்த் பாய் தனது இரண்டு வயதில் ஆதரவின்றி அனாதையானார். அறிவியல் பாடத்தில் மேற்படிப்பு படித்தார். இன்றைய இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது குழந்தைப் பருவத்தில் இரண்டு காமிக் புத்தகங்களை படித்த நினைவு நிச்சயம் இருக்கும். அதை உருவாக்கியவர் ஆனந்த் பாய். ஒன்று அமர் சித்ர கதா. இதில் புராண கதைகள், சரித்திரக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவை அடங்கியிருக்கும். 86 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாயின. இரண்டாவது படைப்பான ’டிங்கிள்’ புத்தகத்தில் குழந்தைகளுக்கான சிறுகதைகள் மற்றும் நகைச்சுவைகள் இடம்பெற்றிருக்கும். தற்போது ஜூன் மாதம் 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்டது அதன் 669-வது வெளியீடாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : தருண் மிட்டல்

Related Stories

Stories by YS TEAM TAMIL