சென்னை வெள்ளமோ, ரூபாய் நோட்டு தடையோ- இக்கட்டான சூழ்நிலைகளில் மக்களுக்கு உதவிடும் சென்னை இளைஞர்கள்! 

1

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவு வந்து ஒரு வார காலம் ஆகியுள்ள நிலையில், மக்கள் தங்கள் அருகாமை வங்கிகளுக்கு சென்று தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இன்னமும் வங்கிகளின் வாசல்களில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. முதியோர், பெண்கள், மாற்றுத்திறானாளிகள் என்று இதுவரை வங்கிக்கு செல்ல அவசியம் இல்லாதவர்களும் நீண்ட வரிசையில் நின்று தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிவருவதை காணலாம். இந்த நிலை இந்தியா முழுதும் நிலவிவருகிறது. 

பட உதவி: IANS
பட உதவி: IANS

மோடியின் இந்த அறிவிப்பை கடந்த வாரம் கேட்டு தானும் தன்னிடம் இருந்த 500,1000 ரூ நோட்டை மாற்ற வங்கிக்கு சென்ற சென்னையை சேர்ந்த செந்தில் நாயகம் தன்னைப்போல் பலரும் க்யூவில் காத்திருப்பதைக் கண்டார். ஆனால் வரிசையில் நின்றுகொண்டிருந்த மூத்த குடிமக்களும், படிப்பறிவில்லாத ஏழை மக்களும், வங்கிகளில் தரப்படும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சரியான கவுண்டரில் பணத்தை மாற்றிக்கொள்ள தெரியாமல் தவிப்பதை கண்டார். தன்னுடைய நோட்டுகளை மட்டும் மாற்றிவிட்டு வீட்டுக்கு போய் தனது மற்ற வேலையை கவனிக்க செல்லாமல், இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிறருக்கு உதவவேண்டும் என்று முடிவெடுத்தார் ஃபிக்ஸ்நிக்ஸ் நிறுவனத்தின் சிடிஒ செந்தில் நாயகம். இது பற்றி கூறிய அவர்,

“டெபிட், க்ரெடிட் கார்ட் உள்ள மேல்தட்டு மக்கள் பலரும் சுலபமாக இந்த பிரச்சனையை கழிக்க, படிப்பறிவில்லாதோரும், மூதியோர்களும் வங்கிகளின் முன் தவிப்பதை கண்டு மனம் வருந்தினேன். என் உறவினர் நவீன் உடன் கடந்த ஞாயிறு அருகில் உள்ள வங்கிக்கு சென்று முழு தினத்தையும் அங்கே செலவிட்டு க்யூவில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு உதவினோம். படிவத்தை நிரப்ப, சரியான கவுண்டரை அணுக, சந்தேகத்தை தீர்க்க என்று பல வழிகளில் எங்களால் முடிந்த உதவியை செய்தோம்,” என்றார். 

இவர்களின் முயற்சியை கண்ட நண்பர் அனந்த் இவர்களுடன் இணைந்தார். இதனிடையே தொழில்முனைவரான விஜய் ஆனந்த் ரூபாய் நோட்டு மாற்றம் குறித்தான தன்னார்வ பிரச்சார நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்தார். செந்தில் நாயகத்தின் பணியை கண்ட விஜ்ய ஆனந்தும் அவருடன் சேர்ந்து இந்த பணிகளை ஒரு குழுவாக செய்ய முடிவெடுத்தார்.

செந்தில் நாயகம் தன் நண்பர்களுடன் எஸ்பிஐ வங்கியில்
செந்தில் நாயகம் தன் நண்பர்களுடன் எஸ்பிஐ வங்கியில்

”சென்னை ட்ரைகலர் இனிஷியேட்டிவ்” (Chennai Tricolor Initiative) என்று இந்த பணிக்கு பெயரிட்டுள்ளனர் இவர்கள். அதிக கிளைகளை கொண்ட எஸ்பிஐ வங்கிக்கிளைகளில் உதவி புரிவது சிறந்தது என்று எண்ணிய இவர்கள், உடனடியாக மும்பையில் உள்ள எஸ்பிஐ தலைவரை தொடர்பு கொண்டு சென்னையில் தங்களது குழுவினர் தன்னார்வ உதவிகளை வங்கி கிளைகளில் செய்ய அனுமதி வாங்கினர். மொத்தம் 210 எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் இந்த குழுவினருக்கு அனுமதி கிடைத்தது மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தந்துள்ளது.  

வங்கிகள் தன்னார்வ சேவை புரிவோருக்கு ஒரு சிறிய பயிற்சி கொடுத்து தகவல்களை விளக்குவார்கள். அதன்படி ஒரு கிளையில் 2 தன்னார்வ உதவியாளர்கள் இருப்பார்கள். 

“இதுவரை சுமார் 160 உதவியாளர்கள் எங்களுடன் சேர்ந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் 25-35 வயதுடைய இளைஞர்கள். பலர் தங்கள் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு எங்களுக்கு உதவ முன்வந்துள்ளது மேலும் ஊக்கத்தை தருகிறது,” என்றார் விஜய் ஆனந்த்.  

இவர்கள் தங்கள் முகநூல் பக்கம், ட்விட்டர் மற்றும் ஸ்டார்ட்-அப் குழுக்களில் தன்னார்வ சேவை புரிய முன்வர அழைப்பு விடுத்துள்ளனர். பலரும் தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்கான பிரத்யேக விண்ணப்பப் படிவத்தை தயார் செய்துள்ள இந்த குழு, அதில் உதவ முன்வருவோர் தங்களுக்கு தகுந்த நாள், இடம், நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தலாம். 

தன்னார் சேவை புரிவோர் வங்கிகளில் செய்யவேண்டிய பணிகள்: 

1. ஒரு நாள் முழுதும் குறிப்பிட்ட வங்கிக் கிளையில் நேரத்தை செலவிடவேண்டும். 

2. முதியோர்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களுக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய உதவிடவேண்டும்.

3. கூட்டத்தை சமாளித்து வரிசையில் அனுப்பவேண்டும்.

இதைத்தவிர இவர்கள் மேலும் பல சேவைகள் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்:

* பணமில்லா ஏடிஎம்’கள் பற்றிய தகவல்கள்

* அவசர சேவைகள் (மருந்து, உணவு) ஒருங்கிணைத்தல்

* அரசுத்துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்

* வதந்திகளை தடுத்து சரியான தகவலை அளித்தல் 

* தகவல் மையம் ஒன்றை அமைத்தல்

வரும் நாட்களில் வங்கிகளில் பழைய நிலை திரும்பிவிடும், இருப்பினும் மக்கள் அதுவரை சந்திக்கும் இன்னல்களை களைந்து அவர்களுக்கு போதிய உதவிகளை வழங்கினால் மேலும் சிக்கல்களை தவிர்க்கமுடியும் என்று கருதுகின்றனர் இவர்கள். 

வங்கிகளில் தன்னார்வ சேவை புரிய விரும்புவோர் இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யலாம்: ChennaiTricolor 

சென்னையில் இந்த தன்னார்வ சேவைக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் பிற நகரங்களிலும் இதை செய்ய திட்டமிட்டுள்ளனர் இந்த குழுவினர். மேலும் எஸ்பிஐ தவிர பிற வங்கிகளையும் தொடர்பு கொண்டு அனுமதி பெற்று இந்த உதவிகளை செய்ய முயற்சித்து வருகின்றனர். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை சந்தித்த பெரும் வெள்ளத்தின் போது, இதே போன்ற இக்கட்டான சூழ்நிலையில் அரசு மற்றும் அதிகாரிகளுக்கு காத்திருக்காமல், பிறரை குறை சொல்லி நேரத்தை வீணடிக்காமல், தங்களுக்குள்ள பொறுப்புகளை உணர்ந்து சக குடிமக்களுக்கு உதவ முன்வந்த இளைஞர்கள் மீண்டும் நம் ஞாபகத்துக்கு வந்துள்ளனர். சென்னையின் பெருமையை தங்களின் சேவைகள் மூலம் நிலைநாட்டிவரும் இந்த இளைஞர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!