சகோதரனை இழந்த ஜென்பூ, நாகலாந்தில் போதைக்கு எதிராக தொடங்கிய அமைப்பு 'கேன்'

0

ஜென்பூ ரோஞ்மெய் கடந்து வந்த குழந்தைப் பருவமும் விடலைப் பருவமும் பிரச்சனைகள் நிறைந்தவை. அவரது தந்தை ஒரு குடிநொயாளி; இன்னொருபுறம், குடும்ப வன்முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தாய். நிதி நெருக்குடி காரணமாக, கல்லூரி படிப்பைப் பாதியிலே முடித்துக்கொண்டார் ஜென்பூ. இவற்றுக்கெல்லாம் உச்சமாக இருந்தது, போதைப்பொருள் பயன்படுத்தியதன் விளைவாக மரணத்தைத் தழுவிய சகோதரன் டேவிட்டின் இழப்பு. தன்னை நோக்கிப் பாய்ந்த பாதிப்புகளால் எந்தச் சூழலிலும் இவர் முடங்கிவிடவில்லை. கடப்பது கடினமாகத்தான் இருந்தது என்றாலும், தான் சரியானப் பாதையைத் தேர்வு செய்ததாகச் சொல்கிறார் ஜென்பூ. ஆம், அவர் இலக்குடன் கூடிய இளம் தலைவராகவே உருவெடுத்தார்.

ஜென்பூ-க்கு இப்போது வயது 30. இந்தியாவின் வடகிழக்கில் உள்ள நாகலாந்தின் திமாபூரைச் சேர்ந்த ஓர் இளைஞர் வழிநடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனமான கம்யூனிட்டி அவென்யூ நெட்வொர்க் (கேன் - CAN - Community Avenue Network) அமைப்பின் நிறுவனத் தலைவரும் இவரே. எச்.ஐ.வி. / எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை அரவணைத்தல், ஏழை இளைஞர்களுக்கு திறன்சார் பயிற்சி அளித்தல், பல்வேறு கல்லூரிகள் மற்றும் கிராமங்களில் இருந்தும் இளைஞர்களை ஒருங்கிணைத்து சமூகப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திட்டங்களை இந்த அமைப்பு செயல்படுத்தி வருகிறது. ஜென்பூ தற்போது நாகலாந்து அல்லயன்ஸ் ஃபார் சில்ரன் அண்ட் உமன் ரைட்ஸ்-சின் தகவல் செயலராக இருக்கிறார்.

"என் கடந்த கால வாழ்க்கைதான் என்னை ஊக்கப்படுத்துகிறது. வாழ்க்கையில் எப்படிப் போராட வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஒரு சகோதரனின் இழப்பின் வலியை அறிவேன். என்னைப் போலவே வலிகளுடனும் போராட்டங்களுடன் இளைஞர்கள் பலர் தவிக்கின்றனர். என் வலிமிகு கடந்த காலத்தை தள்ளிவைத்துவிட்டு, உரிய முறைகளில் ஊக்கங்கள் பெற்று ஏற்றப்பதையில் பயணிக்கத் தொடங்கினேன்" என்கிறார் ஜென்பூ.

அக்யூமென் இந்தியா ஃபெல்லோ (Acumen India Fellow) 2015-ம் ஆண்டு தன்னை பட்டைத் தீட்டிக்கொண்டார். அங்கு பெற்ற அனுபவம் குறித்து குறிப்பிடும்போது, "என் எல்லா கேள்விகளுக்கும் விடைகள் கிடைக்க அவர்கள் உதவினர். அதுவே எனக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருந்தது. தலைமை என்பதற்கான உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன். குறிப்பாக, சக மாணவர்களுடன் என்னால் இயல்பாகவும் நெருக்கமாகவும் பழக முடிந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், வடகிழக்குப் பகுதிகளுக்கும், பிரதான இந்தியாவுக்கும் இடையே நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால், அங்கே என் சகாக்கள் என்னிடம் மரியாதையுடனும் அன்புடனும் பழகினார்கள். அது, வடகிழக்குக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான பாலமாகவே தோன்றியது" என்கிறார் 'கேன்' இளைஞர்.

'கேன்' அமைப்பு உருவானதன் பின்னணி

போதைப்பொருட்களுக்கு அடிமையாகி துரதிர்ஷ்டவசமாக மடிந்த தன் சகோதரனைப் பார்த்தவர், இந்த மோசமான நிலைக்கு எதிராக போராட தீர்மானித்தார். "பள்ளிப் படிப்பை முடித்த இளம் வயதினர் பலரும் போதைக்கு அடிமையாவதைப் பார்க்கிறேன். எத்தனை நாள்தான் மக்களையும் அரசையும் குற்றம்சாட்டிக் கொண்டிருப்பது? ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படித் தொடங்கப்பட்டதுதான் 'கேன்' அமைப்பு.

ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லை. நான் 'கேன்' அமைப்பைத் தொடங்கியபோது என்னிடம் போதிய பணம் இல்லை. ஆனால், அப்போது தீவிரமாக இருந்த பிரச்சனைதான் உடனே ஏதாவது செய்தாக வேண்டிய சூழலை ஏற்படுத்தியது. மக்களைச் சந்திக்க ஆரம்பித்தேன். இளம் வயதினருடன் செயலாற்றத் தொடங்கினேன். குறிப்பாக, படிப்பைப் பாதியிலேயே விட்டவர்களைக் குறிவைத்து இயங்கத் தொடங்கினேன். மன அழுத்தம் மிகுந்த அத்தகைய இளம் வயதினர்தான் எளிதில் போதைக்கு இரையாகிவிடுகின்றனர் என்பது அனுபவம் எனக்குக் கற்றுத் தந்த பாடம்" என்கிறார் ஜென்பூ.

தனக்குத் தூண்டுதல் தந்த மற்றொரு சம்பவந்தை நினைவுகூர்ந்த ஜென்பூ, "2011-ம் ஆண்டு எய்ட்ஸ் தினம் அன்று, மிகப் பெரிய முகாம் ஒன்று நடந்தது. மக்கள் பலரும், அமைச்சர்களும், தன்னார்வலர்களும் வந்திருந்தனர். அப்போது, அங்கே ஓர் ஏழைத் தம்பதி குழந்தைகளுடன் பரிதாபாமான நிலையில் நின்றிருந்ததைப் பார்த்தேன். அவர்களிடம் விசாரித்தபோது, அவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாகவும், அரசு மருத்துவ சிகிச்சைக்காக வந்ததாகவும் கூறினார்கள். அவர்களிடம் மருந்து வாங்கவும், குழந்தைகளைப் படிக்கவைக்கவும் பணம் இல்லை என்பதை அறிந்தேன். அந்தச் சம்பவம்தான் என்னைப் புரட்டிப் போட்டது. மக்களுக்கு உதவ விரும்பினேன். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்" என்கிறார்.

ஏழை மற்றும் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கு உறுதுணை

ஜென்பூ நடத்துவது ஆதரவற்றோர் இல்லம் அல்ல. இங்கு உள்ள குழந்தைகள் பலருக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அல்லது பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள். "ஒரு குடும்பத்தில் அம்மாவோ அல்லது அப்பாவோ இறந்தவிட்டால், குழந்தைகளை ஆதரவற்றோர் இல்லத்துக்கு அனுப்புகின்றனர். குடும்பத்தில் வறுமை நிலை காரணமாக, குழந்தைகள் ஆதரவற்றோர் இல்லத்துக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது." இந்தக் குழந்தைகள் ஆதரவற்றோர் இல்லத்துக்கு அனுப்பாமல், வீட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள் என்று கோரும் ஜென்பூ, அந்தக் குழந்தைகளுக்கான கல்வி, ஊட்டச்சத்து உள்ளிட்ட மாதாந்திர செலவுகளுக்கு உதவுகிறார். இவ்வாறாக, 2012-ல் 9 குழந்தைகளுடன் தொடங்கியது இந்த சேவை. இப்போது மொத்தம் 25 குழந்தைகளை அவர் கவனித்து வருகிறார்.

படிப்பை பாதியில் நிறுத்திய இளம் வயதினருக்கு பயிற்சிகள் அளிக்க தனியார் அமைப்புகள் சிலவற்றுடன் இணைந்து செயலாற்றி வருகிறார். பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு தனியார் அமைப்புகள் மூலம் உரிய உதவிகள் கிடைக்க வழிவகுக்கிறார். "சில நேரங்களில் இந்த யோசனைகளைப் புரியவைப்பதே சிரமமாகும். எனினும், கடைசியில் அவர்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொள்வார்கள்."

சவால்கள்

"உதவும் வல்லமை படைத்தோரிடம் இந்தக் குழந்தைகளைப் பற்றி எடுத்துக்கூறி உதவுமாறு கோருவேன். ஒரு 40 பேரை சந்தித்தால், மூன்று அல்லது நான்கு பேர் உதவ முன்வருவார்கள்" என்று தொடர்ச்சியாக நிதி நெருக்கடியைச் சந்திப்பதைப் பகிர்ந்த ஜென்பூ, "நான் வாழும் சமூகத்திடம் இருந்து போதுமான தார்மிக ஆதரவும் இல்லைதான், ஆனால், இவற்றையே நான் சவால்களாக எடுத்துக்கொள்கிறேன். எனக்கு இலக்கும் நோக்கமும் உண்டு. அதை நோக்கிய என் பயணத்தில் பாதகங்களில் முடங்க மாட்டேன்" என்கிறார்.

ஓர் அமைப்பாக, மென்மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்களின் ஈடுபாடு தேவை எனும் ஜென்பூ, "மக்கள் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். நம் சமூகத்தில் நடப்பதை உணர வேண்டும். நல்ல தீர்வுக்கான பாதையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்" என்கிறார். தன்னுடைய சமூக நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து பணிபுரியவும் தொடங்கிவிட்டார். ஆனால், இப்போதைக்கு அரசிடம் இருந்து எவ்வித உறுதுணையும் இல்லை.

படிப்பை பாதியில் நிறுத்தியோருக்குப் பயிற்சி

சமூகத்தில் ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதைக் காட்டிலும், அந்தப் பிரச்சனையின் வேரை அறிந்து, அதை அடியோடு களைவதுதான் சாலச் சிறந்தது என்று வாதிடும் ஜென்பூ, "இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று பேசும் மக்கள், பள்ளியில் பாதியிலே படிப்பை நிறுத்துவது பற்றி எதையும் யோசிப்பதில்லை. வன்முறையாளர்களால் பாதிப்பு கொண்ட மாநிலம் நாகலாந்து. மன அழுத்தங்களும், எழுத்தறிவு இல்லாமையும்தான் சமூக விரோத செயல்களில் ஈடுபட தூண்டுகிறது. பள்ளிப் படிப்பை பாதியில் விடுவதற்கு குழந்தைகள் காரணமல்ல; அவர்கள் அத்தகைய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

பெருங்கனவு

அனைவருக்கும் கல்வி என்பதும், எல்லா தரப்பினருக்கும் சமவாய்ப்புகள் வழங்கப்படுவதும்தான் என்னுடைய முக்கிய இலக்கு. முன்னேற்றம் பற்றி நாம் பேசும்போது, பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள், ஏழைக் குழந்தைகள், எச்.ஐ.வி. பாதித்தவர்களும் என அனைத்து தரப்பினரும் சம வாய்ப்புடன் முன்னேற்றம் காணவேண்டும். இளைஞர்களுக்கு அதிகாரமளித்து அவர்களுக்கு முன்னுக்குச் செல்வதற்கு உறுதுணைபுரிய வேண்டும்.

கனவை நனவாக்குவது சாத்தியமா?

என் கனவுகளை நனவாக்குவது எளிதல்ல. ஆனால், முன்கூட்டியே தோல்வியை முடிவு செய்தால் முயற்சி செய்வதும் முன்னேறுவதும் சாத்தியம் இல்லாமல் போய்விடும். என்னால் இயன்றதைச் சிறந்த முறையில் செய்கிறேன். நான் ஒரு கட்டத்தில் இல்லாமல் போய்விட்டாலும், என் முயற்சிகளில் விளைவால் சமூகத்தில் மாற்றம் நிகழ்வது உறுதி என்று என் இதயம் சொல்கிறது. சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி உணர்ந்து பேசத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஆரோக்கியமான போக்கு. இது கிராமங்கள், நகரங்கள் என எல்லா பகுதிகளிலும் பரவி வருவது நிச்சயம் நல்ல அறிகுறியே" என்கிறார் நாகலாந்தின் நம்பிக்கை இளைஞர்!

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்