புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஒரு வெற்றி தொழில்முனைவோர் ஆன எழுத்தாளர் மாயா!

0

"ஒரு சாதாரண பெண்ணுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்கள் எதுவும் எனக்கு மகிழ்ச்சியளிக்காது,” என்கிறார் மாயா பதிஜா. 

இவர் தன்னுடைய வாழ்க்கை, புத்தகங்கள், புற்றுநோயை எதிர்த்து போராடிய தருணம் என அனைத்தையும் பகிர்ந்துகொண்டார்.

சாதாரண விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளத் தயங்கும் இந்தப் பண்புதான் சிறிய நகரைச் சேர்ந்த இந்தப் பெண்ணை தொடர்ந்து போராடும் வெற்றிகரமான தொழில்முனைவோராகவும் எழுத்தாளராகவும் உருவாக்கியுள்ளது.

சிந்தி மக்கள் எவ்வாறு தொழில் புரிகின்றனர் என்பதை விவரிக்கும் ’பைசோ : ஹவ் சிந்திஸ் டூ பிசினஸ்’ என்கிற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். தெஹ்ராதூனில் இருந்து ஹெர்ஸ்டோரி உடன் உரையாடினார். வெற்றிகரமாக தொழில் புரிந்து பல ஆண்டுகளாக தொழிலில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஐந்து சிந்தி நபர்களின் அசாதாரண வாழ்க்கை குறித்து எழுதியுள்ளார் மாயா.

மாயாவின் வாழ்க்கை அசாதாரணமானது. பழமைவாதம் நிறைந்த சிந்தி குடும்பத்தில் பிறந்தார். பிரிவினைக்குப் பிறகு இவரது குடும்பம் சேலத்தில் குடியேறியது. மாயாவின் அப்பா வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். சேலத்தில் நல்ல பள்ளிகள் இல்லாத காரணத்தால் ஏர்காட்டில் படித்தார்.

மாயாவின் பெற்றோருக்கு மூன்று குழந்தைகள். மாயா இரண்டாவது குழந்தை. அவர் வெளி உலகத்துடன் அதிகம் ஒன்றிணையாமல் கூச்ச சுபாவத்துடன் இருந்ததால் இளம் வயதிலேயே அதிக புத்தகங்கள் படிப்பார். அவர் ஆர்டர் செய்த புத்தகங்களை கொடுக்க வரும் தபால்காரர் இவரது நெருங்கிய நண்பரானார்.

”மாணவர்கள் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை எங்கள் பள்ளி ஊக்குவித்தாலும் புத்தகங்கள் தேர்ந்தெடுப்பதை ஊக்குவிப்பதில்லை. பள்ளி நூலகத்தில் எண்ணற்ற புத்தகங்கள் இருக்கும். அவை பெரும்பாலும் இலக்கியப் புத்தகங்களாகவோ அல்லது வகுப்பறையில் எடுக்கப்படும் பாடம் தொடர்பான புத்தகங்களாகவோ இருக்கும். நான் பெங்களூருவிலிருந்தே புத்தகங்களை ஆர்டர் செய்வேன்,” என்றார் மாயா. 

புத்தகங்கள் மீது மாயாவிற்கு இருக்கும் இந்த ஆர்வமே அவர் தனது வாழ்க்கையில் என்ன செய்ய நினைத்தாரோ அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

1980-ம் ஆண்டு அவரது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்துகொண்டு இந்த தம்பதி மும்பைக்கு மாற்றலான பிறகு அவரது வாழ்க்கை ஒரே மாதிரியான சலிப்பூட்டும் விதமாக மாறியது.

மாயாவிற்கு புத்தகங்கள் மீதிருந்த அலாதியான பிரியம் காரணமாக புத்தகக்கடையில் பணிபுரிய கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். இந்தப் புத்தகக்கடை பிரித்வி தியேட்டர் நிறுவிய ஜெனிஃபர் கபூரால் இயக்கப்படும் சமகால கலை மற்றும் கைவினை ஸ்டோரின் ஒரு பகுதியாகும்.

பின்னர் பாந்த்ராவில் உள்ள தனாய் பகுதியின் மற்றொரு புத்தகக்கடையிலும் பணியாற்றினார்.

இவ்வாறு மாயா சிறிது காலம் புத்தகக்கடையில் பணியாற்றியதால் அதன் செயல்பாடுகள் குறித்தும் அந்தப் பிரிவில் உள்ள குறைபாடுகள் குறித்தும் அவருக்கு புரிதல் ஏற்பட்டது.

 ”ஒருவர் தனக்குத் தேவைப்படும் புத்தகத்தை ஆர்டர் செய்யமுடியாது. கடையில் இருக்கு புத்தகங்களில் இருந்தே தேர்வு செய்யவேண்டும். புத்தகக்கடையின் கிடங்கில் இருக்கும் புத்தகங்கள் குறித்து எனக்கு தெரிந்திருந்ததால் புத்தகங்கள் படிப்பவர்கள் தங்களுக்கு பிடித்த தலைப்பை தேர்ந்தெடுக்க வாய்ப்புகளை வழங்கி ஒரு சிறப்பான அனுபவத்தை வழங்க விரும்பினேன். ஆர்டர் வந்ததும் அந்த தலைப்பு தொடர்பான புத்தகங்களை கிடங்கிலிருந்து கொண்டு வருவேன்,” 

என்றார். இப்படிப்பட்ட தேவை இருப்பதையும் இடைவெளியையும் கருத்தில் கொண்டே மாயாவிற்கு ஒரு வணிக திட்டம் உருவானது. விரைவில் “மாயாஸ் டயல்-ஏ-புக்” சேவையை 1989-ம் ஆண்டு துவங்கினார். இதில் புத்தகம் படிக்க விரும்புபவர்கள் அவர்களுக்கு பிடித்த புத்தகங்களை தேர்ந்தெடுக்கலாம். இந்த புத்தகங்கள் 48 மணி நேரத்தில் அவர்களது வீட்டிலேயே டெலிவர் செய்யப்படும். மும்பையைச் சேர்ந்த புத்தகப் பிரியர்கள் நேரடியாக கடைகளுக்குச் சென்று புத்தகங்களை தேடி வாங்குவதற்கு அங்குள்ள வானிலையும் பரபரப்பான நகர வாழ்க்கையும் உகந்ததாக இருக்காது. அவர்களுக்கு இந்தச் சேவை ஒரு வரம் எனலாம்.

விரைவிலேயே டயல்-ஏ-புக் சேவை மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. 

“நான் ஏழு வருடங்கள் வெற்றிகரமாக இந்த வணிகத்தில் செயல்பட்டேன். புத்தகங்களை டெலிவர் செய்வது மட்டுமல்லாமல் ’மேக்ஸ் டச்’ என்கிற தொலைபேசி சேவை நிறுவனத்தின் கூடுதல் சேவைக்காக அந்த நிறுவனத்துடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டோம்,” 

என்றார். பெரும்பாலான புத்தகக்கடைகள் சொந்த டெலிவரி சேவையில் ஈடுபட்டதால் மாயா இந்த வணிகத்தை நிறுத்திக்கொள்ள தீர்மானித்தார்.

அடுத்ததாக மாயா எழுதும் பணியில் ஈடுபட்டார். அவரது கணவர் ‘தி சிந்தியன்’ என்கிற மாத இதழை வெளியிட்டார். இதில் உலகெங்கும் உள்ள சிந்தி மக்களின் வாழ்க்கை பதிவு செய்யப்பட்டிருந்தன. 

“நான் என்னுடைய வாழ்க்கை முழுவதும் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்ததால் என்னால் எழுத முடியும் என நம்பினேன். பத்திரிக்கையின் உள்ளடக்கத்தை தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்,”

என்றார் மாயா. மாயாவின் வாழ்க்கை இவ்வாறு நகர்ந்துகொண்டிருக்கையில் அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

”நான் சோர்ந்து விடவில்லை. தலையில் விக் அணியவில்லை. பெரிய பொட்டு வைத்துக்கொண்டேன். என்னை சிறப்பாக வெளிப்படுத்திக்கொண்டேன்,” என்றார் அவர்.

எழுதும் பணியிலிருந்து சற்று ஓய்வெடுத்து மக்கள் தொடர்பு பணியில் ஈடுபட தீர்மானித்தார். உயர்தர வெள்ளி விற்பனை நிறுவனமான ஃப்ரேசர் அண்ட் ஹாஸ் (Frazer and Haws) நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இணைந்தார். “அவர்கள் அலுவலகத்திற்குச் சென்று பணி கேட்டேன். என்னுடைய தோற்றம் காரணமாகவே எனக்குப் பணி கிடைத்தது என நினைக்கிறேன்,” என்று நினைவுகூர்ந்தார் மாயா.

மாயாவிற்கு சிகிச்சை முடிந்தபிறகு ’தி சிந்தியன்’ பத்திரிக்கை பணிகளில் மீண்டு ஈடுபடத் துவங்கினார். ”பத்திரிக்கையில் 14 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு எழுத்தாளர் ஆகவேண்டும் என்கிற விருப்பத்தோடு அந்தப் பணியை கைவிட்டேன்,” என்றார்.

எழுத்தாளர் ஆகவேண்டும் என்கிற கனவு சிறு வயது முதலே இருந்ததால் அதை முயற்சிக்கத் தீர்மானித்தார். பென்குயின் வெளியீட்டாளரை அணுகினார், “அதிர்ஷ்டவசமாக வர்த்தக பிரிவின் தலைவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது,” என்றார். பென்குயின் வெளியீட்டாளர்கள் பல விதமான சமூக புத்தகங்களை சிறப்பாக விற்பனை செய்து வெற்றியாக செயல்பட்டு வந்தனர். சிந்தி மக்கள் எவ்வாறு தொழில் புரிகின்றனர் என்பது குறித்து ஒரு புத்தகத்தை எழுத தகுந்த நபரை தேடிக்கொண்டிருந்தனர். இந்த வெளியீட்டாளருக்கு மாயாவைவிட சிறந்த நபர் கிடைக்க வாய்ப்பில்லை.

மிகவும் குறுகிய காலக்கெடுவுடன் மாயாவின் முதல் புத்தகம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. 

பல தடங்கல்களை உற்சாகமாக எதிர்கொண்ட மாயா ஒவ்வொரு வாய்ப்பையும் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஆர்த்தி மேனன்