சிறப்பான கல்வி பெற சக மாணவர்களே பயிற்சி அளிக்கும் முறையை அறிமுகம் செய்த மாணவர்!

0

இந்திய பள்ளி அமைப்பில் மனப்பாடம் செய்யும் முறையும் பாடப்புத்தகம் சார்ந்த தேர்வு முறையும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் காலகட்டத்தில் ஐஐடி மெட்ராஸைச் சேர்ந்த 21 வயது மாணவர் மாணவர்களிடம் அறிவு கொண்டு சேர்க்கப்படும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.

ஹார்வேர்ட் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற ’சக மாணவர்கள் கற்பிக்கும் மாதிரியை’ பயன்படுத்தி திவான்ஷு குமார் ‘இன்வால்வ்’ (Involve) என்கிற தனது ஸ்டார்ட் அப் வாயிலாக மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த விரும்புகிறார்.

”சிறப்பான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை வகுப்பறையில் நியமிப்பதன் மூலம் கற்றலின் தரத்தை மேம்படுத்த முடியும் என்பதே பலரின் நம்பிக்கையாகும். இது உண்மையெனில் ஒரு முக்கியத் தேவைக்கு இது தீர்வளிப்பதில்லை. மாணவர்களின் திறன் உருவாக்குதல். மாணவர்கள் கற்றலின் முக்கியத்துவத்தை உணரும் வரையிலும் உள்ளார்ந்து உந்துதல் ஏற்படுத்திக்கொள்ளும் வரையிலும் இது சாத்தியமல்ல,” என்கிறார் திவான்ஷு.

இன்வால்வ் முயற்சியின் கற்பிக்கும் முறை ஒன்பது மாதகால ஃபெலோஷிப்பைக் கொண்டது. இதில் எட்டாம் வகுப்பில் இருந்து படிக்கும் மாணவர்கள் தங்களது இளையவர்களுக்கு கற்றுக்கொடுத்து வழிநடத்தலாம். ஏற்கெனவே படித்த மாணவர்களையும் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் இணைப்பதன் மூலம் தேர்வு சார்ந்து மட்டுமின்றி ஒட்டுமொத்த பாடம் மற்றும் தனித்திறன் அடிப்படையிலும் ஒரு மாணவரின் திறனை வரையறுக்கும் சுற்றுச்சூழலை இன்வால்வ் உருவாக்க விரும்புகிறது.

துவக்கம்

பீஹாரின் கயா பகுதியில் வளர்ந்த திவான்ஷு, தரமான கல்வியின் மதிப்பை நன்கறிந்தவர். நிதி நெருக்கடி காரணமாக எட்டாம் வகுப்பு வரை குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் பள்ளியிலேயே படித்தார்.

”சில சமயம் மூன்று மாதம் வரை கூட குறிப்பிட்ட பாடத்திற்கென தனிப்பட்ட ஆசிரியர் இருக்கமாட்டார்,” என நினைவுகூர்ந்தார்.

எனவே ஐஐடி மெட்ராஸில் மெக்கானிக்கல் பொறியியல் மற்றும் ரோபாடிக்ஸ் பிரிவில் சேர்ந்த பிறகும் கல்விப் பிரிவில் பணியாற்றவேண்டும் என்கிற ஆர்வம் தொடர்ந்து இருந்து வந்தது. இதுவே ’அவந்தி ப்ரோக்ராமில்’ இணைய உந்துதலளித்தது. இந்த திட்டத்தில் குறைவான வருவாய் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த சிறப்பாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு உயர்தர கல்வி வழங்க ஐஐடி மற்றும் என்ஐஐடி மாணவர்கள் ஒன்றிணைகின்றனர்.

இராண்டாம் ஆண்டு திவான்ஷுவிற்கு வழிகாட்டுதலுக்கான மேலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு வழிகாட்டும் 25 கல்லூரி மாணவர்கள் அடங்கிய குழுவை கையாளும் பொறுப்பு வழங்கப்பட்டது. மாணவர்கள் சவால்களை எதிர்கொண்டு பாடங்களை சிறப்பாக புரிந்துகொள்ள உதவும் வகையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து பதினோறாம் வகுப்பு மாணவர்கள் கற்றுக்கொள்ளும் முறையை ஆதரித்தார்.

”மூத்த மாணவர்களிடமிருந்து இளைய மாணவர்கள் கற்றுக்கொள்ள உதவும் இந்த முறையானது பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டால் கற்றுக்கொள்பவர்கள் பாடங்களில் சிறந்து விளங்குவதுடன் மூத்த மாணவர்களுக்கு சிறப்பான புரிதல் கிடைக்கவும் வாய்ப்பாக அமையும்,” என்றார். 

எனவே 2016-ம் ஆண்டு திவான்ஷு தனது நண்பர்கள் மற்றும் இணை நிறுவனர்களான அவ்னிஷ் ராஜ் மற்றும் சம்யக் ஜெயினுடன் இணைந்து டெல்லியில் அவர் படித்த ஏஎஸ்என் மேல்நிலைப் பள்ளியின் முதல்வரான சோனியா லூத்ராவிடம் தங்களது மாதிரியை முன்வைத்தனர். இதுவே இன்வால்வின் முதல் சோதனை திட்டமானது. இங்கு ஆண்டு விடுமுறையின்போது தேர்வு செய்யப்பட்ட மூத்த மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதில் இளைய மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது குறித்தும் நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு வாயிலாக பாடங்களை புரிந்துகொள்ள உதவுவது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.

அந்த சமயத்தில் திவான்ஷுவும் அவரது குழுவினரும் பதின்ம வயது முடியும் பருவத்தில் இருந்தனர்.

”எங்களது சோதனை முயற்சியில் கற்றுக்கொண்டவர்களிடம் வெறும் ஆறு வாரங்களில் 20 சதவீத முன்னேற்றம் காணப்பட்டது. இந்த திட்டம் முடிந்ததும் நான் ஒரு தொழில்முனைவர் ஆகவேண்டும் என்பதை உணர்ந்தேன். பலரும் தீர்வுகாண முன்வராத ஒரு சிக்கலான பிரச்சனைக்கு தீர்வுகாணவேண்டும் என நினைத்தேன். என்னுடைய நோக்கத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒத்த சிந்தனையுடைய நபர்கள் அடங்கிய குழுவை உருவாக்க விரும்பினேன்,” என்றார் திவான்ஷு.

ஈடுபடுத்துதல்

’இளம் மாணவர்கள் தலைமை ஃபெலோஷிப்’ என்கிற வடிவில் ’பள்ளி நேரத்திற்கு பிறகான சக மாணவர்கள் பயிற்சி திட்டம்’ வாயிலாக பள்ளிக் கல்வி முறையில் புரட்சியை உருவாக்க விரும்புகிறது இன்வால்வ்.

பள்ளி நேரத்திற்கு பிறகு குறைவான கட்டணத்தில் மாணவர்கள் பாடங்களை புரிந்து கொள்ள உதவுவதற்காக இன்வால்வ் குறைவான கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுடன் இணைந்துள்ளது. இதில் 12 வயது முதல் 16 வயது வரையிலும் உள்ள மூத்த மாணவர்களை தங்களைக் காட்டிலும் இளம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க பயிற்சியளித்து வழிகாட்டுகிறது.

”இன்று 47 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர். எண்ணிக்கை அளவில் இது 150 மில்லியனுக்கும் அதிகமாகும். இதற்கான காரணத்தை ஆழமாக ஆராய்கையில் இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கைத் திறன் இல்லாதது என்பது தெளிவாகும். இன்று படிப்பு என்பது மதிப்பெண் எடுப்பதை மட்டுமே மையமாகக் கொண்டு பார்க்கப்படுகிறது. ஆனால் கல்வியின் முக்கிய நோக்கம் அதுவல்ல,” என்றார் திவான்ஷு.

மூத்த மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த தொடர்பு கொள்வது, சிக்கல்களுக்கு தீர்வு காண்பது, திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய மூன்று நிலைகளைக் கொண்ட மாதிரியை இன்வால்வ் பின்பற்றுகிறது. 

இன்வால்வ் உருவாக்கும் பாடதிட்டம் மற்றும் பயிற்சி தொகுப்பைத் தாண்டி சிந்திக்கவும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். அத்துடன் இளம் மாணவர்கள் கணித பாடத்தை சிறப்பாக புரிந்துகொள்ள உதவும் வழிமுறைகளை மூத்த மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து பரிந்துரைக்கவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். 

உதாரணத்திற்கு நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கணிதத்தில் ’பேட்டர்ன்ஸ்’ என்கிற பகுதியை கற்றுக்கொடுக்க அவர்கள் பேட்டர்ன்களை காட்சிப்படுத்தி பார்க்க உதவும் விதத்தில் அந்த குழந்தைகளை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் தலைவர் பல்வேறு இடங்களில் நிற்கவைப்பார். சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் தலைவர், மாணவர்கள் கூட்டலையும் கழித்தலையும் சிறப்பாக புரிந்துகொள்ள ’பரமபதம்’ விளையாட்டை உருவாக்கியுள்ளார்.

இன்வால்வ் முயற்சி வாயிலாக கற்றுக்கொள்ளும் மாணவர்கள் நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளவர்கள். இவர்கள் மெதுவாக கற்றுக்கொள்பவர்களாக இருப்பார்கள் அல்லது படிப்பில் முன்னேற விரும்பும் மாணவர்களாக இருப்பார்கள். இதற்கு முக்கியக் காரணம் உந்துதல் இல்லாததுதான் என்கின்றனர் இக்குழுவினர்.

”ஆகவே மாணவர்களுக்கு உந்துதலளிக்கும் விதத்தில் பாடத்தின் ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலும் மாணவர்கள் எதற்காக இந்தத் தலைப்பை படிக்கின்றனர் என்பதையும் அந்த பாடத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தோம்,” என திவான்ஷு விவரித்தார்.

இன்வால்வ் குழுவினர் மற்றும் கற்றுக்கொடுக்கும் மாணவர்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து சென்னையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஒருங்கிணைப்பாளரான திருமதி வேதபட்டி குறிப்பிடுகையில், 

“கற்றலில் வழிமுறைகளுடன்கூடிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துகின்றனர். இருபது நாட்களிலேயே என்னால் மாற்றத்தை உணர முடிந்தது. பயிற்சியளிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் தலைவர்களாக மாறிவிடுகின்றனர். கற்றுக்கொள்ளும் மாணவர்களில் ஆர்வமின்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக கற்பவர்களாக மாறிவிடுகின்றனர்,” என்றார்.

சவால்களை எதிர்கொள்ளுதல்

மாற்றத்தை ஏற்படுத்துவதில் இளைஞர்களுக்கு இருக்கும் திறன் மீது எவரும் நம்பிக்கை வைப்பதில்லை. இதுவே திவான்ஷுவும் அவரது குழுவினரும் சந்தித்த மிகப்பெரிய சவாலாகும். மக்கள் ஆரம்பத்தில் இந்த முயற்சியை பெரிதாக அங்கீகரிக்கவில்லை.

முதல் சோதனை திட்டம் முடிந்து ஓராண்டிற்குப் பின்னர் 2017-ம் ஆண்டு சென்னையில் உள்ள குறைவான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் இன்வால்வ் பணிபுரியத் துவங்கியது. திவான்ஷு, அவ்னிஷ், சம்யக் மூவரும் பல்வேறு கல்லூரி விழாக்களில் வென்ற தொகையையும், பள்ளி மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் டியூஷன் எடுப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் சீட் தொகையாக பயன்படுத்தினர். எனினும் டிசம்பர் மாதம் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது.

”ஒரு மாதத்தில் மொத்த தொகையும் செலவாகிவிடும் என்பதை உணர்ந்தேன். சம்பளம் கொடுக்கத் தேவையான தொகைகூட எஞ்சியில்லாத நிலை மிகவும் மோசமானதாகும். எனக்கு அப்போது 20 வயது. பல தூக்கமற்ற இரவுகளைக் கடந்தேன்,” என திவான்ஷு நினைவுகூர்ந்தார்.

எனினும் அவர் மனமுடைந்து போகவில்லை. Mantra4Change-இடமிருந்து நிதி உதவிக்கும் வழிகாட்டலுக்கும் விண்ணப்பித்தார். இதன் இணை நிறுவனரான குஷ்பூ அவஸ்தி மூன்று மாதங்கள் இன்வால்வ் முயற்சிக்கு ஆதரவளித்தார். இன்வால்வின் ப்ராடக்ட் தொடர்பான செலவுகளுக்கு ஐஐடி மெட்ராசின் இன்குபேஷனுக்கு முந்தைய நிலை மையமான ’நிர்மான்’ உதவியது.

பின்னர் திவான்ஷு கூட்டுநிதி பிரச்சாரம் வாயிலாக ஒரு மாதத்தில் 6 லட்ச ரூபாய் உயர்த்தினார். லாப நோக்கமற்ற இன்குபேட்டரான N/Core-ன் ’இந்தியாவின் முன்னணி 8 லாப நோக்கமற்ற முயற்சிகளின் தொகுப்புகளில்’ இக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் மூலம் சீட் மானியமாக 10 லட்ச ரூபாய் கிடைத்தது. ’சிங்கப்பூர் இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன்’ தலைமையிலான ’இளம் சமூக தொழில்முனைவோர் திட்டம் 2018’-ன் ஒரு பகுதியான உலகளவிலான 16 தொழில்முனைவோரில் இன்வால்வ் முயற்சியும் ஒன்றாகும்.

வருங்கால திட்டம்

தற்போது இன்வால்வில் மாணவர் தலைவர் மற்றும் கற்போரின் விகிதம் 1:4. மேலும் கற்றல் முறை திறம்பட பின்பற்றப்படுவதை உறுதிசெய்யவும் மாணவர்களிடையே சண்டை, சச்சரவு, கேலி செய்தல் போன்ற நடத்தைகளை கண்காணிக்கவும் இன்வால்வ் குழு உறுப்பினர் ஒருவர் முழு நேரமாக பள்ளியில் இருப்பார்.

இன்று வரை இக்குழுவினர் சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள நான்கு பள்ளிகளில் 400-க்கும் அதிகமான மாணவர்களுடன் பணியாற்றியுள்ளனர். இதில் நூற்றுக்கும் அதிகமான மாணவர் தலைவர்களும் அடங்குவர். இந்த ஆண்டு இறுதிக்குள் ஆறு பள்ளிகள் வரை செயல்படவும் சுமார் 600 மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். அடுத்த ஐந்தாண்டுகளில் 150 பள்ளிகளில் செயல்படவும் 5000 மாணவர் தலைவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்டங்கள் குறித்து ஆராய வித்யதான் பள்ளிகளை நடத்த வரும் ஸ்வதந்திரா ட்ரஸ்ட் உடன் இக்குழு இணைந்துள்ளது.

வார்ஹார்ஸ், எண்டர்கான்.இன், அப்னி ஷாலா ஃபவுண்டேஷன், ட்ரீம் ஏ ட்ரீம், க்யூமேத், இக்னைடர் லெர்னிங் போன்ற நிறுவனங்கள் இதே பிரிவில் செயல்பட்டு குறைவான வருவாய் கொண்டவர்களுக்கான பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பெற உதவினாலும் இன்வால்வ் பின்பற்றும் சக மாணவர்கள் வாயிலாக கற்றுக்கொடுக்கும் மாதிரியை யாரும் பின்பற்றவில்லை என்கிறார் திவான்ஷு.

”கல்வி போன்ற மிகவும் சவாலான பிரிவில் இருக்கும் சிக்கல்களுக்கு போட்டியிடுதன் மூலம் தீர்வுகாண முடியாது. ஒருங்கிணைந்தே தீர்வு காண முடியும். இதை நான் தெளிவாக உணர்ந்தேன். நாம் ஒன்றிணைந்து இந்தியாவில் உள்ள வெவ்வேறு நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களின் கூட்டுமுயற்சியை உருவாக்குவது அவசியம். நிறுவன ரீதியாக பார்த்தோமானால் எனக்குத் தெரிந்த வரை கல்வி சார்ந்த சந்தையில் 5% அதிகமாக பங்களிக்கும் நிறுவனங்கள் எதுவும் இல்லை. எனவே இது வெறும் துவக்க நிலை மட்டுமே,” என்றார் திவான்ஷு.

இன்வால்வ் பார்ட்னர்ஷிப்களை வரவேற்கிறது. இந்த மாதிரியை மற்ற நிறுவனங்களும் பின்பற்ற உதவும் வகையில் இன்வால்வ் அனைத்து பாடதிட்டங்களையும் ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL