மாற்று பாலின உரிமைகள் குறித்து ஸ்பெயின் சர்வதேச மாநாட்டில்  சிறப்புரையாற்ற இருக்கும் முதல் தமிழர்!

0

ஸ்பெயினில் நடைபெற உள்ள ’சர்வதேச மாற்றுப்பாலினத்தவர் மற்றும் மாற்று பாலியல் ஒருங்கிணைவு மனித உரிமைகள் உச்சி மாநாட்டில் (The WorldPride Madrid 2017), பங்குபெற   மதுரையைச் சேர்ந்த பாலின சமத்துவ போராளியான கோபி ஷங்கர் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்கிறார். ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் துணையுடன் நடக்கும் இந்த விழாவில் 12 ஐரோப்பிய ஐக்கிய ஒன்றிய தலைவர்களோடு கோபி உரையாற்றுகிறார். இவ்விழாவில் சிறப்புரையாற்ற செல்லவிருக்கும் முதல் தமிழர் இவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

14 நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் முன்னிலையில் பாலியல் சிறுபான்மைச்யினருக்கான உரிமைகள் குறித்து வரும் ஜூன் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடக்க உள்ள விழாவில் கோபி ஷங்கர் பேசவுள்ளார். இவரது உரை ஜூன் 29 தேதி பொது பார்வைக்காக ஸ்பெயின் பாராளுமன்றத்தில் வைக்கப்படும். 

கடந்த 2016-ம் வருடம் கோபி இளம் சேவகர்களுக்கான காமென்வெல்த் விருது பெற்றவர். மாட்ரிட் பல்கலைக்கழத்தில் 3 நாட்கள் 4 தலைப்பில் கோபி உரையாற்ற உள்ளார். இவரது உரை ஸ்பெயின் நாட்டு பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்படும்.  

கோபி ஷங்கர் பின்னணி

கோபி ஷங்கர், இடையலிங்கத்தவர் (Inter-sex) ஆவார். பிறக்கும்போது வேறு பாலினத்தவராக இருந்து பருவ வயதில் வேறு பாலினமாக மாறுபவர்கள்தான் திருநங்கைகள் அல்லது மாற்று பாலினத்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். பிறக்கும்போதே இருபால் உறுப்புகளுடன் பிறக்கும் சிலர் இன்டர்செக்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்.   

மதுரை மாவட்டம் செல்லூரில் 1991-ல் பிறந்தார் கோபி ஷங்கர். பட்டதாரியான இவர் யோகா பயிற்றுனரும்கூட. 'சிருஷ்டி மதுரை' என்ற பாலின விழிப்புணர்வு அமைப்பை நடத்தி வருகிறார். யுஜிசி, ஐசிஎஸ்எஸ்ஆர் போன்ற குழுக்களாக நடத்தப்படும் தேசிய கருத்தரங்குகளில் கலந்து கொண்ட இளைஞர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நல்ல பேச்சாளரும்கூட.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு மாற்று பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டமாக இருக்கிறது. மதுரை மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாலினம் தொடர்பான வகுப்புகளை மிகுந்த போராட்டத்துடன் நடத்தி வருகிறார்.

பாலினம் சார்ந்த புரிதல் இந்திய சமூகத்தில் சாதாரண மக்களிடம் மட்டுமல்ல அரசியல்வாதிகள், ஏன் மருத்துவர்கள் சிலரிடம்கூட தெளிவாக இல்லை எனக் கூறுகிறார் கோபி ஷங்கர். ஆஸ்திரேலியாவில் டோனி ப்ரிஃப்பா என்ற இடையிலிங்கத்தவர் மேயராக இருப்பதை சுட்டிக் காட்டும் கோபி, இந்தியாவிலும் மாற்று பாலினத்தவர் குறித்த புரிதல் தேவை என்கிறார்.

மாட்ரிட் சர்வதேச விழாவில், திருக்குறளுடன் தொடங்கி ‘இடையலிங்கர் உரிமைகள் மற்றும் மருத்துவ அத்துமீறல்களும்,’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார் கோபி ஷங்கர்.