இணையம் வழியாக மருத்துவம் வழங்கும் கோவை ஐ க்ளினிக்!

0

பொதுவாக உடம்பில் பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரைப் பார்க்க பதட்டத்தோடு நமது வாய்ப்பு வரும்வரை கால் கடுக்க நிற்க வேண்டிய நிலைதான் உள்ளது. ஆனால் இப்படியும் கூட ஒரு மருத்துவ மையத்தை நிறுவ முடியும் என சாதித்துக் காட்டியிருகிறார்கள் கோவையை சேர்ந்த ஐகிளினிக்கின் குழுவினர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம், உலகில் எந்த மூலையிலிருந்தாலும் உங்களைத் தேடி வரும் ஆலோசனைகளில் இருந்து உங்களுக்கான மருத்துவம் துவங்கி விடுகிறது . ஐக்ளினிக் இன் நிறுவனர், த்ருவ் குமாருடன் தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய சந்திப்பு இதோ...

“பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோவை தான். அண்ணா பல்கலையில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்த பிறகு டைடல் பார்க்கில் மூன்று மாதம் வேலை பார்த்தேன். அதற்கு பிறகு, நான் செய்வது சரியில்லை எனத் தோன்றியது. அதனால் திடீரென ஒரு நாள் வீட்டுக்கு கூப்பிட்டு நான் திரும்பி வரேன்னு சொல்லிட்டேன். அவங்க கேட்ட அடுத்த கேள்வி, “லூஸாடா நீ?” என்று தான்.. என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் த்ருவ்.

அப்பா ஒரு வெற்றிகரமான தொழில் முனைவர். ஆனால், காலங்கள் மாறும். வாழ்க்கையில் ஒரு விஷயம் என்னவென்றால், கீழிருந்து மேலே போவது வேறு, மேலிருந்து கீழே போனால், முன்னேற வேண்டும் என்றொரு எண்ணம் இருந்துக் கொண்டே இருக்கும். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டிருப்போம். இங்கு, வெற்றிகரமாக நிலைத்திருப்பது தான் சாதனை, பணம் சம்பாதிப்பதல்ல என்ற தன் தெளிவான எண்ணங்களை பகிர்கிறார்.

புதிய தொடக்கம்

கோவை திரும்பிய பிறகு, என்ன செய்வதென்ற ஒரு கேள்வி த்ருவ் மனதில் இருந்தது. ஐந்து லட்சம் ஒதுக்கி வைத்திருக்கிறேன், எம்.எஸ் படிக்கஅமெரிக்காவிற்கு போய்விடு என்றார் அவரது அப்பா. இன்று பெரும்பாலானவர்கள் இப்படித் தான் இருக்கிறார்கள். அமெரிக்கா போய் படித்த பிறகு திரும்பி வருவது என்பது உறுதியாக இல்லை. ஏனெனில், ஐந்து வருடம் அங்கிருந்த பிறகு திரும்பி வர பலருக்கும் தோன்றுவதில்லை என்பதே நிதர்சனம் என்கிறார் த்ருவ்.

அதனால், அந்த ஐந்து லட்சத்தை எடுத்துக் கொண்டு, நான் ஒரு நிறுவனம் தொடங்கப் போவதாய் முடிவு செய்தேன். கல்லூரியில் இருக்கும் போதே எனக்கு நானோ தொழில்நுட்பத்தில் ஆர்வம் இருந்தது. அதை முயற்சி செய்தேன், ஆனால், அது சரியாக அமையவில்லை.

இந்த சமயத்தில் தான் நான் என் துணை நிறுவனரை சந்தித்தேன். மதன், குடல் அறுவை சிகிச்சை நிபுணர், என்னுடைய தூரத்து உறவினரும் கூட. என்னைவிட பத்து வயது மூத்தவர். சிறு வயதிலிருந்தே அவரைக் கண்டால் பிடிக்காது, அவர் டாக்டர் என்பதால், எப்போதுமே, “அவன் எப்படி படிக்கிறான் பார்” என சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள் என் வீட்டினர்.(சிரிக்கிறார்)

த்ருவ் தனக்கு மதனுடன் ஏற்பட்ட ஒற்றுமை மற்றும் தங்கள் புதிய முயற்சிகளை பற்றி கூறுகையில், "எனக்கு ஆபரேஷன் ரிசர்ச் என்றொரு பாடம் இருந்தது, எனக்கு அது ரொம்ப பிடிக்கும். மதன் அப்போது எம்.பி.ஏ படித்து கொண்டிருந்தார். ஒரு கல்யாண வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது, அவருக்கு ஆபரேஷன் ரிசர்ச் பாடம் கடினமாக இருப்பதாய் சொன்னார். நான் அவரிடம் எனக்கு, ஓ.ஆர் நன்றாகத் தெரியும் என்று சொன்னேன். அப்போது தான், பத்து வருட வித்தியாசம் இருந்தாலுமே, இருவருக்கும் பொதுவானவைகள் இருப்பதை அறிந்தோம்". பின்னர் ‘நீங்கள் ஏன் ஸ்கைப் மூலமாக மருத்துவ ஆலோசனை வழங்கக் கூடாது?’ என்று கேட்டேன். ‘அதெல்லாம் எப்படிப்பா பன்றது?’ என அவர் என்னிடம் கேட்டார்? அந்த இடத்தில் உதித்தது தான் ‘ஐக்ளினிக்’.

ஐகிளினிக் (icliniq)

'ஐகிளினிக்' நிறுவ தேவைப்படும் தயாரிப்பை உருவாக்க ஒரு நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டோம். ஆறு மாதத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலையை ஒரு வருடம் இழுத்தடித்தார்கள். 2010ல் தோன்றிய எண்ணம், மூன்று வருடங்கள் அதற்கான தளத்தை உருவாக்க செலவிடப்பட்டப் பின்னர், 2013ல் தொடங்கப்பட்டது என்கிறார் த்ருவ். தொடக்கத்தில், வீடியோ மூலம் மருத்துவ ஆலோசனை மட்டும் தான் ஐக்ளினிக்கில் அறிமுகப்படுத்தினோம். அது பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்கிறார்.

"ஆரம்ப காலத்தில், நாங்கள் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தினோம். பிறகு தான் நாங்கள் தொழில்நுட்ப நிறுவனம் அல்ல, ஹெல்த்கேர் நிறுவனம் என்பதை உணர்ந்தோம். நாங்கள் எங்களுக்கு பிடித்த தயாரிப்பை உருவாக்கத் தொடங்கினோம். இதையெல்லாம் உணர்ந்த பிறகு தான் எங்கள் வளர்ச்சித் தொடங்கியது.”

ஐக்ளினிக் மூலம் மூன்று விதமாக மருத்துவர்களை தொடர்பு கொள்ளலாம். முதலில், ஒரு உடல் நலக் குறைவுப் பற்றிய கேள்வி ஒன்றை அனுப்புவது, இரண்டாவது, மருத்துவர் உங்களை அழைத்துப் பேசும் வசதி, மூன்றாவது, வீடியோ அழைப்பு. கேள்வியை அனுப்பும் முறையில், 160 வார்த்தைகளுக்கு உட்பட்டு இருக்கும் கேள்விகள் இலவசமாகவும், அதற்கு மேற்பட்டவைகளுக்கு 99 ரூபாய் கட்டணம், மற்ற இரண்டு சேவைகளுக்கு 299 ரூபாய் கட்டணம் என நிர்ணயித்தோம்.

நுணுக்கத்தில் தான் வெற்றி

“நுணுக்கத்தில் தான் வெற்றி இருக்கிறது. சிலர், ‘ஐயோ, ஐடியாவை வெளியே சொல்லக் கூடாது. யாராவது திருடிவிடுவார்கள்’ எனச் சொல்வதைக் கேட்டிருப்போம். உண்மையில் அது சாத்தியமே இல்லாத ஒன்று. வெறும் யோசனையை வைத்துக் கொண்டு எதுவுமே செய்ய முடியாது. எல்லாவற்றையும் செயல்படுத்துவதற்கு நுணுக்கங்கள் தான் அவசியம்” என்கிறார் த்ருவ்.

இந்தப் பயணத்தில் சவாலாக இருந்தது எது எனக் கேட்டால்,

“ஒவ்வொரு நாளுமே சவால் தான். இன்று எங்கள் தளத்தில் ஆயிரத்திற்கும் மேலான மருத்துவர்கள் இருக்கின்றனர். ஆனால், முதல் ஐம்பது மருத்துவர்களை சேர்த்தது தான் மிகவும் கடினமான வேலையாக இருந்தது. மருத்துவர்கள் எப்போதுமே ஓய்வில்லாமல், வேலையாகவே இருப்பார்கள். அவர்களைப் பார்க்கக் கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். அதிர்ஷ்டவசமாக, உங்களை சந்திக்க அவர்கள் ஒத்துக் கொண்டாலுமே, உங்கள் யோசனைக்கு ஆதரவளிப்பது நிச்சயமில்லாதது". 

அதற்கு பிறகு, வாடிக்கையாளர்களின் மனநிலையை புரிந்து கொள்ள சுமார் நாலாயிரம் பேரிடம் பேசியிருப்பேன் என்கிறார் த்ருவ்.

சர்வதேச அளவில் ஹெல்த் கேர் துறையில், மருத்துவரிடம் இரண்டாவது அபிப்ராயம், ஆலோசனைக்கான தேவை இருந்ததை கவனித்தோம். ஐ-க்ளினிக்கின் குழு எட்டு பேரைக் கொண்டது. தொழில்நுட்பம், தரக்கட்டுப்பாடு மற்றும் சமூக தளங்களில் செயல்பாடு என்று வேலைகள் வகுக்கப்பட்டுள்ளது.

இணைய மருத்துவம் சாத்தியம்

இணையம் மூலம் மருத்துவம் சாத்தியம் இல்லை என்பது பொதுவானக் கருத்து. ஆனால், சரியான கேள்வியை சரியானவர்களிடம் கேட்கும் பட்சத்தில், இணையம் மூலம் மருத்துவம் சாத்தியம் தான். அதற்கு உதாரணமாக,

“பிறந்து சில தினங்களே ஆன குழந்தை ஒன்றிற்கு உறக்கத்தில் மூச்சு விடும்போது சப்தம் வித்தியாசமாக வந்துக் கொண்டிருந்தது. அது ஏதோ பிரச்சனை என்று பெற்றோர்கள் பயந்தனர். குழந்தையை இன்குபேட்டரில் வைத்திருந்ததனால், வேறெங்கும் எடுத்து சென்று ஆலோசனைக் கேட்க முடியாது. அப்போது, குழந்தையின் அப்பா, அந்த சப்தத்தை ரெக்கார்ட் செய்து எங்களுக்கு அனுப்பி வைத்தார். அதை, நுரையீரல் தொடர்பான மருத்துவர் ஒருவர் பார்த்து, அதற்கான காரணத்தை தெளிவுபடுத்தினார்.” என்கிறார் சுபா, த்ருவின் மனைவி.

“எமனில் இருந்து ஒருவரின் தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. போர் நடந்துக் கொண்டிருப்பதனால், சிகிச்சைக்காக எங்கும் பயணம் செய்ய முடியாத நிலையில் எங்களை தொடர்பு கொண்டார். இதைப் போன்ற நெகிழ்வான நிமிடங்களையும் நாங்கள் கடக்கிறோம். உண்மை என்னவென்றால், எங்களுடையத் தனித்தன்மையை, இதைப் போன்ற நிமிடங்களில் தான் உணர்வோம்.” என நிறைவு செய்கிறார் த்ருவ்.

இணையதள முகவரி: icliniq