மகள்கள் அளித்த ஊக்கத்தால் 40 ஆண்டுகள் கழித்து படிப்பைத் தொடரும் எம்எல்ஏ!

0

55 வயதான பூல் சிங் மீனா ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படிப்பைத் தொடர்ந்துள்ளார். தனது மகள்கள் அளித்த ஊக்கத்தினால் படிப்பைத் தொடரும் இவர் சமீபத்தில் பி.ஏ முதலாம் ஆண்டு தேர்வு எழுதியுள்ளார்.

பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்த இவர் கல்வி கற்காத காரணத்தால் பள்ளிகளில் மேடையில் பேசும்போது தனது உரை முழுமையாக இல்லாததை உணர்ந்து படிப்பைத் தொடர தீர்மானித்தார். ஏழாம் வகுப்பு வரை படித்திருந்தவர் தனது ஐந்து மகள்கள் அளித்த ஊக்கத்தினால் படிக்கத் தயாரானார்.

ராணுவத்தில் பணிபுரிந்த இவரது அப்பா இறந்துவிட்டதால் இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்புகளை ஏற்பதற்காக விவசாயப் பணி மேற்கொண்டார்.

”பல அதிகாரிகளுடனும் தலைவர்களுடனும் நான் உரையாட வேண்டியிருப்பதால் கல்வி முக்கியமானது என என்னுடைய மகள்கள் கூறினார்கள். என் வயதைக் கருத்தில் கொண்டு இது சாத்தியமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது,” என்றார் மீனா. ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’-க்கு அவர் தெரிவிக்கையில்,

”நான் மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பேன். ஆனால் நானே கல்வி கற்காதவன். என் மனசாட்சி உறுத்தியது. எனவே நான் படிப்பைத் தொடரலாம் என முடிவெடுத்தேன்.”

அவரது மகள் தீபிகா குறிப்பிடுகையில், “என் அப்பா விடாமுயற்சியுடன் செயல்பட்டார். பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்ற பிறகு தற்போது பட்டப்படிப்பு மேற்கொள்கிறார். அவரை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்,” என்றார்.

அவரது பரபரப்பான பணி வாழ்க்கையிடையே வகுப்புகளுக்குச் செல்லப் போதுமான நேரம் கிடைக்கவில்லை. அவரது ஆசிரியரான சஞ்சய் லுனாவத் உதய்ப்பூர் அருகே உள்ள மண்வகேடா பகுதியைச் சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆவார். இவர் எம்எல்ஏ படிப்பதற்குத் தேவையான பாடக்குறிப்புகளை வழங்கி உதவுகிறார். இவர் கூறுகையில்,

”அவரது தொகுதியில் பயணிக்கும்போது நான் அவருக்கு கற்றுக்கொடுப்பேன். ஆடியோ வாயிலாக வகுப்பெடுத்து அதை வாட்ஸ் அப்பில் அனுப்புவேன். அவர் பயணம் செய்யும்போது அந்தப் பாடங்களைக் கேட்பார்.”

எம்எல்ஏ அர்ப்பணிப்பு நிறைந்த பணிவான மாணவர். மன உறுதி கொண்டவர். இந்த வயதில் படிப்பைத் தொடர்ந்தாலும் அவரது பரபரப்பான பணிவாழ்க்கைக்கிடையில் தேர்வுகள் எழுதத் தவறியதே இல்லை என்றார் லுனாவத்.

இத்துடன் படிப்பை நிறுத்திவிடப் போவதில்லை என்றும் மேற்கொண்டு முதுகலைப் பட்டமும் பிஎச்டி-யும் படிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார் இந்த எம்எல்ஏ.

கட்டுரை : THINK CHANGE INDIA