’நம்பிக்கைகளின் பெயரால் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் யாருக்கும் இல்லை’- நரேந்திர மோடி 

0

வழக்கம் போல நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி ஆல் இந்தியா ரேடியோவில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாடினார். இதில் அவர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்தார். அதிலிருந்து ஒரு சில.

ஹரியானாவில் நடந்த கலவரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ஒருபுறம் நாடு கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கிறது, இன்னொருபுறம், இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது பற்றிய செய்தி வரும் பொழுது, தேசத்தில் கவலை ஏற்படுவது இயல்பான விஷயம் தானே. இந்த நமது தேசம் புத்தரும் காந்தியும் பிறந்த தேசம், தேசத்தின் ஒற்றுமைக்காக முழுமனத்தோடு ஈடுபட்ட சர்தார் படேல் பிறந்த மண்ணிது. பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள், பொதுவாக கடைபிடிக்கப்பட வேண்டிய வாழ்க்கை விழுமியங்களுக்காகவும், அஹிம்சைக்காகவும், பெருமதிப்பு அளித்து வந்திருக்கிறர்கள், நமது மனங்களிலும் இது நிறைந்திருக்கிறது. 

அஹிம்சை பரமோதர்ம: - இந்த வாக்கியத்தை நாம் நம் சிறுவயது முதற்கொண்டே கேட்டு வந்திருக்கிறோம், கூறியும் வந்திருக்கிறோம். நம்பிக்கை பெயரால் வன்முறையை நம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று நான் செங்கோட்டையிலிருந்து கூட கூறியிருந்தேன். 

அது மதம் தொடர்பான நம்பிக்கையாகட்டும், அரசியல் எண்ணப்பாடு தொடர்பான நம்பிக்கையாகட்டும், தனிநபர் மீது கொண்ட நம்பிக்கையாகட்டும், மரபுகள்-பாரம்பரியங்கள் தொடர்பான நம்பிக்கையாகட்டும் – நம்பிக்கையின் பெயரால் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் யாருக்கும் இல்லை. 

டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் நமக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை அளித்திருக்கிறார்; அதில் ஒவ்வொருவருக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் அனைத்து விதமான அமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சட்டத்தைத் தங்கள் கைகளிலே எடுத்துக் கொள்பவர்கள், வன்முறைப் பாதையைப் பின்பற்றுபவர்கள் – அவர்கள் தனிநபர்களாகட்டும், ஒரு சமுதாயத்தினர் ஆகட்டும், அவர்கள் யாராக இருந்தாலும், இந்த தேசமும் அதை எப்போதும் பொறுத்துக் கொள்ளாது, எந்த அரசும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று நான் நாட்டுமக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன். 

யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன்பு தலைவணங்கித் தான் ஆக வேண்டும், சட்டத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும், சட்டம் தான் முடிவு செய்யும், சட்டம் கண்டிப்பாக தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கியே தீரும், என்று கூறினார் மோடி.

அடுத்து மும்பையைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வு மையத்தில் பணிபுரியும் இளம் பெண் அனன்யா அவஸ்தி கேள்வி ஒன்றை பிரதமரிடம் கேட்டார். அதில்

”2014-ஆம் ஆண்டில் நீங்கள் ஜன் தன் திட்டத்தைத் தொடங்கினீர்கள்; இன்று 3 ஆண்டுகள் கழிந்த நிலையில், பாரதம் நிதிரீதியாக அதிக பாதுகாப்பானதாக இருக்கிறதா, சக்தி அதிகரித்திருக்கிறதா, இந்த அதிகாரப் பரவலாக்கமும், வசதிகளும் நமது பெண்களை, விவசாயிகளை, தொழிலாளர்களை, கிராமங்களை, பட்டிதொட்டிகளை எல்லாம் சென்று அடைந்திருக்கிறதா, புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது என்ன?” 

இதற்கு பதிலளித்த மோடி,  ’பிரதம மந்திரி ஜன் தன் திட்டம்’ பற்றிக் கேட்கப் பட்டிருக்கிறது. நிதிசார் உள்ளடக்கல் – இது பாரதத்தில் மட்டுமல்ல, பொருளாதார உலகெங்கும் வல்லுனர்களின் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி மனதில் ஒரு கனவைச் சுமந்து கொண்டு, நான் இந்தத் திட்டத்தைத் தொடக்கினேன்.

இந்த பிரதம மந்திரி ஜன் தன் திட்டம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு, 3 ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றது. 30 கோடி புதிய குடும்பங்கள் இதில் இணைக்கப் பட்டிருக்கிறார்கள், வங்கிக் கணக்குகள் திறக்கப் பட்டிருக்கின்றன. உலகின் பல நாடுகளின் மக்கட் தொகையை விட, இது அதிக எண்ணிக்கை. 

இன்று, எனக்கு மிகப்பெரிய நிறைவு அளிக்கும் விஷயம் என்னவென்றால், 3 ஆண்டுகளுக்கு உள்ளாக, சமுதாயத்தின் அடித்தட்டில் இருக்கும் என் ஏழைச் சகோதரன் ஒருவன் கூட, தேசத்தின் பொருளாதார அமைப்பின் பிரதான நீரோட்டத்தில் இணைந்திருக்கிறான், அவனது பழக்கம் மாறியிருக்கிறது, அவன் வங்கிக்குச் சென்று வரத் தொடங்கியிருக்கிறான், பணத்தைச் சேமிக்க ஆரம்பித்திருக்கிறான், பணம் தரும் பாதுகாப்பை அனுபவிக்கத் துவங்கியிருக்கிறான் என்பது தான். சில வேளைகளில், பணம் கையில் புழங்கினாலோ, பையில் இருந்தாலோ, வீட்டில் இருந்தாலோ, வீண் செலவு செய்ய மனம் தூண்டும். இப்பொழுது கட்டுப்பாடான ஒரு சூழல் உருவாக்கப் பட்டிருக்கிறது, மெல்ல மெல்ல பணம் குழந்தைகளின் செலவுக்குப் பயனாகும் என்று அவனுக்கும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. 

வருங்காலத்தில் ஏதாவது நல்ல காரியத்துக்கு இந்தப் பணம் உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறான். இதுமட்டுமல்ல, ஒரு ஏழை, தனது பையில் ரூபே அட்டை இருப்பதைக் காணும் பொழுது, தன்னை ஒரு செல்வந்தராக எண்ணிக் கொள்கிறான், தெம்படைகிறான்; அவர்கள் பைகளில் கடன் அட்டை இருக்கிறது, என்னிடத்தில் ரூபே அட்டை இருக்கிறது என்று எண்ணி, சுய கவுரவத்தை உணர்கிறான். 

பிரதம மந்திரி ஜன் தன் திட்டத்தின் மூலம் நமது ஏழைகள் வாயிலாக, வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் பணம் 65000 கோடி ரூபாய். ஒருவகையில் ஏழைகளின் இந்தச் சேமிப்பு, இது வருங்காலங்களில் அவர்களுடைய பலமாக இருக்கும். இத்திட்டம் வாயிலாக, யார் வங்கிக் கணக்கு திறந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு காப்பீட்டுப் பயனும் கிடைக்கிறது.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீடு, பிரதம மந்திரி விபத்துக் காப்பீடுத் திட்டம் – ஒரு ரூபாய், 30 ரூபாய் என்ற மிக எளிமையான கட்டணம் செலுத்தி, இன்று அந்த ஏழைகளின் வாழ்வில், ஒரு புதிய நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல குடும்பங்களில் இந்த ஒரு ரூபாய் கட்டணம் காரணமாக, ஏழைக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டால், குடும்பத் தலைவன் இறக்க நேர்ந்தால், அந்தக் குடும்பத்துக்கு 2 இலட்சம் ரூபாய் கிடைக்கிறது. 

பிரதம மந்திரி முத்ரா திட்டம், ஸ்டார்ட்டப் திட்டம், ஸ்டாண்ட் அப் திட்டம் – இவற்றில் தாழ்த்தப்பட்டவர்களாகட்டும், பழங்குடி இனத்தவர்களாகட்டும், பெண்களாகட்டும், படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்களாகட்டும், சொந்தக் கால்களில் நின்று சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களாகட்டும், அப்படிப்பட்ட கோடிக்கணக்கான இளைஞர்கள் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின்படி, வங்கிகளிடமிருந்து எந்த வித பிணையும் இல்லாமல், பணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது; அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்பதோடு மட்டுமல்லாமல், ஒன்றிரண்டு பேர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வெற்றிகரமான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். 

கடந்த நாட்களில் வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள் சிலர், என்னை சந்திக்க வந்திருந்த போது, ஜன் தன் திட்டம், காப்பீட்டுத் திட்டங்கள், ரூபே அட்டை, பிரதம மந்திரி முத்ரா திட்டம் ஆகியவை காரணமாக, சாமான்ய மக்களுக்கு எந்த வகையில் பயன் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றியதொரு ஆய்வை அவர்கள் மேற்கொண்ட போது, உத்வேகம் அளிக்கக் கூடிய பல விஷயங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்று சொன்னார்கள். இதனை மக்கள் படித்து உத்வேகம் அடைவார்கள். எப்படி ஒரு திட்டம் ஒரு நபரின் வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, எப்படி புதிய சக்தியை நிரப்புகிறது, புதியதொரு நம்பிக்கையை தோற்றுவிக்கிறது என்பனவுக்கான ஏராளமான எடுத்துக்காட்டுகள் என் முன்னே வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை உங்கள் பார்வைக்குக் கொண்டு வர, நான் முழு முயற்சிகளையும் மேற்கொள்வேன், என்றார் நரேந்திர மோடி.