ரூ.1.25 கோடி ஆண்டு சம்பளம்: டெல்லி பொறியியல் மாணவருக்கு உபெர் வேலைவாய்ப்பு!

0

இஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளில், வேலைவாய்பு முகாம் நடக்கும் காலமே முக்கியமான, டென்சனான பகுதியாகும். இந்த ஆண்டு நடைப்பெற்ற ப்ளேஸ்மெண்ட் முகாம், மாணவர் ஒருவருக்கு தான் நினைத்துக்கூட பார்க்கமுடியாத சந்தோஷத்தை தந்துள்ளது. சித்தார்த் ராஜா என்ற 21 வயது கம்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் பட்டதாரியான இவருக்கு ரூ.1.25 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்துடனான அமெரிக்க வேலை கிடைத்துள்ளது. டெல்லி தொழில்நுட்ப பல்கலைகழக மாணவனான சித்தார்த் ராஜாவுக்கு அமெரிக்க உபெர் கேப் நிறுவனம் இந்த வேலைவாய்ப்பை அளித்துள்ளது. 

சித்தார்த் டெல்லி பப்ளிக் பள்ளியில் பயின்றவர். இவரது தந்தை ஒரு திட்டப்பணியாளர் மற்றும் தாயார் ப்ரீலான்ஸ் ட்ரான்ஸ்கிரைபர். சித்தார்த் 12-ம் வகுப்பில் 95.4 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். பின், ஜேஈஈ (JEE) தேர்வில் வெற்றிப் பெற்று டெல்லி தொழில்நுட்ப பல்கலையில் சேர்ந்தார். 

சித்தார்த்திற்கு உபெர், சாப்ட்வேர் இஞ்சினியர் பணியை வழங்கியுள்ளது. இதற்கு ரூ.1.25 கோடி சம்பளம் தர ஒப்புக்கொண்டுள்ளது. 71 லட்சம் ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், இதர சலுகைகள் மற்றும் அனைத்தும் சேர்த்து இந்த மொத்த தொகையை ஆண்டு சம்பளமாக உபெர் இவருக்கு அளிக்கவுள்ளது. இதுபற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கூறிய சித்தார்த்,

“இந்த வேலை எனக்கு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இதற்காக சான் ப்ரான்சிஸ்கோ செல்ல ஆயத்தமாகி வருகிறேன். நான் ஏற்கனவே உபெர் நிறுவனத்தில் ஏழு வார இண்டெர்ன்ஷிப் செய்திருந்தேன். அப்போதே என்னை பிடித்துப்போய் வேலை தருவதாக உத்திரவாதம் தந்திருந்தனர். என்னோடு ஐஐடியை சேர்ந்த மற்றொரு மாணவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று நம்புகிறேன்.”

சித்தார்த் தன் வருங்கால திட்டம் மற்றும் இந்த வேலைவாய்ப்பை பற்றி பிடிஐ-யிடம் தெரிவிக்கையில்,

”உபெரில் என் தொழில்நுட்ப திறமையை மேலும் மெருகேற்றிக்கொள்ள விரும்புகிறேன். என் நீண்டகால கனவான சொந்த ஸ்டார்ட்-அப் தொடங்குவது பற்றி யோசிப்பதற்கு முன் இந்த பணி அனுபவத்தை பெற விரும்புகிறேன்,” என்றார்.

டெல்லி தொழில்நுட்ப பல்கலைகழக மாணவர் இதுபோன்று அதிக சம்பளத்தை பெறுவது இது இரண்டாவது முறை என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் 2015-ல் சேத்தன் கக்கர் என்ற மாணவருக்கு ஆண்டு வருமானமாக கூகிள் ரூ.1.27 கோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரை: Think Change India