கடினமான கணிதவியல் கணக்கீடுகளுக்கு நொடியில் தீர்வுகாணும் 12 வயது சிறுவன் 

0

பல தலைமுறைகளாக பள்ளியில் 20-ம் வாய்ப்பாடு வரையிலுள்ள அட்டவணைக்கான கணக்கீடுகள் செய்ய போராடிவந்த நிலையில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதான சிராக் ரதி தனது அரிய திறன் மூலம் எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார். சிராக் எட்டு இலக்கங்கள் வரை கொண்ட எண்களின் கூட்டல், கழித்தல், பெருக்கல் ஆகிய கணித செயல்பாடுகளை அதிகபட்சமாக 20 கோடி வரை எளிதாக நொடியில் செய்துமுடிக்கிறார்.

சிராக் உத்திரப்பிரதேசத்தின் சகாரன்பூர் மாவட்டத்திலுள்ள நகுட் திரிபூதி கிராமத்தைச் சேர்ந்தவர். நலிந்த பிரிவைச் சேர்ந்த இவர்களது குடும்பத்தில் நான்கு பேர். இவரது அப்பா கட்டுமான பணியிடத்தில் தினக்கூலியாக பணிபுரிந்து வருமானம் ஈட்டுகிறார். இவரது குடும்பத்தின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு இவரது பள்ளி அதிகாரிகள் இலவச கல்வியும் புத்தகங்களும் வழங்க தீர்மானித்தனர்.

சிராக்கிற்கு கணிதப்பாடத்தில் இருக்கும் அபார நிபுணத்துவம், சக நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களைக் காட்டிலும் அதீத திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு வரையிலுள்ள பாடத்தை அவர் கற்க ஒரு சிறப்பு ஆசிரியரை பள்ளி அவருக்கென பிரத்யேகமாக நியமித்தது. அவர் அந்தப் பாடங்களை அதிக சிரமமின்றி கற்றுத் தேர்ந்தார்.

மிகக்கடினமான கணக்கீடுகளை எவ்வாறு சுலபமாக கையாள்கிறீர்கள் என்ற கேள்விக்கு ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’விற்கு அவர் பதிலளிக்கையில்,

“எண்கள் மகிழ்ச்சியளிக்கக்கூடியது. விடைகள் இயற்கையாகவே என்னை வந்தடைகிறது. சிறப்பு நுட்பத்தையோ அல்லது சூத்திரத்தையோ பயன்படுத்துவதாக சக மாணவர்கள் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் அப்படி எதையும் நான் பின்பற்றுவதில்லை.”

சிராக்கின் அப்பா நரேந்தர் ரதி ஏஎன்ஐ நியூஸ்-க்கு தெரிவிக்கையில்,

”என் மகன் நாட்டை பெருமைப்படுத்தவேண்டும் என்பதே என் விருப்பம். விஞ்ஞானி ஆகவேண்டும் என்கிற அவரது கனவை நனவாக்க என்னால் முடிந்தவரை போராடுவேன். தற்சமயம் அதற்குத் தேவையான நிதி வசதி என்னிடம் இல்லையென்றாலும் என் நிலத்தையோ அல்லது என்னுடைய சிறுநீரகத்தையோ விற்றாவது அந்தக் கனவை நிறைவேற்றுவேன்,” என்கிறார்.

கட்டுரை : Think Change India