"தொழில் வாய்ப்புகளை வீட்டிலும், கணினியிலும் தேடாதீர், வீதியில் இறங்கி தேடுங்கள்"- ஃபாஸ்துரா டெக்னாலஜீஸ் கார்த்திகேயன்

3

கச்சா எண்ணெயோ, தங்கம், வெள்ளியோ அல்லது விளைபொருளோ எதுவாக இருந்தாலும் அவற்றின் விலையை நிர்ணயிப்பதில் உற்பத்தியாளர்கள், விவசாயிகளைவிட, கமாடிட்டி அதாவது விளைபொருள்கள் சந்தை முக்கிய பங்காற்றுகின்றன. இந்திய அளவில் விளைபொருள்களுக்கான சந்தையில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதை மையப்படுத்தி இணையவழியில் முதலீட்டாளர்களுக்குத் தகவல்களைத் தரும் தரகு நிறுவனங்கள் ஏராளம், அவற்றிலிருந்து மாறுபட்டு செயலியில் முதலீட்டாளர்களுக்குத் தகவல் தரும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் மதுரை மண்ணின் மைந்தன் கார்த்திகேயன்.

நாஸ்காமின் 10,000 ஸ்டார்ட் அப்களுக்கான தேர்வு பட்டியலில் இடம் பிடித்த ‘கமாடிட்டி மார்க்கெட் டிராக்கர்" செயலியை தயாரிக்கும் "ஃபாஸ்துரா டெக்னாலஜீஸ்" நிறுவனர் கார்த்திகேயனிடம் பிரத்யேகமாக நேர்காணல் கண்டது தமிழ் யுவர் ஸ்டோரி:

கமாடிட்டி சந்தை பற்றிய விவரத்தோடு தன்னுடைய கலந்துரையாடலைத் தொடங்கினார் கார்த்திகேயன். “கமாடிட்டி சந்தை நிலவரங்களை பெற எம்சிஎக்ஸ்(MCX) மற்றும் என்சிடிஈஎக்ஸ்(NCDEX) என்று இரண்டு முறைகள் உள்ளது, இவை எந்தப் பொருளுக்கு என்ன விலை என்பதை தெரிவிக்கும். கமாடிட்டி சந்தையில் மொத்தமுள்ள உற்பத்தி பொருட்களில் 85 சதவிகித பங்குகளை எம்சிஎக்ஸ் வைத்துள்ளது. அதனால் முதலில் நாங்கள் எம்சிஎக்ஸ் சந்தையை மையப்படுத்தியே எங்களது செயலியின் செயல்பாட்டைத் தொடங்கினோம்”.

2013ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட ஃபாஸ்துரா டெக்னாலஜீஸ், ‘எம்சிஎக்ஸ் மார்க்கெட் டிராக்கர் (MCX Market Tracker)’ (தற்போது 'கமாடிட்டி மார்க்கெட் டிராக்கர்') என்னும் செயலியை அறிமுகப்படுத்தியது. இது முதலில் வரவேற்பு பெறவில்லை. ஆனால் அடுத்த மாதத்திலேயே அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டது அவர்களுக்கு ஆச்சரியத்தையும் ஊக்கத்தையும் அளித்தது. 

“முதலீட்டார்கள் இணையவழியில் மட்டுமே சந்தை நிலவரங்களைப் பெறும் நிலையை மாற்றி பயணத்தின் போதும் கூட எளிமையான முறையில் அவற்றை பெறும் முயற்சியே இந்த செயலி. தங்களின் செல்போன் மூலம் கமாடிட்டி சந்தையில் பொருட்களின் விலையை கண்டறிந்து அவற்றை கமாடிட்டி புரோக்கர்கள் மூலம் முதலீடு செய்ய முடியும் என்பதும் இதன் மற்றொரு சிறப்பு” என்கிறார் கார்த்திகேயன்.

செயலியின் தொடக்கம்

'ஃபாஸ்துரா டெக்னாலஜீஸ்' தொடக்கம் பற்றியும் செயலியின் உருவாக்கம் பற்றியும் கார்த்திகேயனிடம் கேட்ட போது அவர் பெருமையுடன் சொன்ன பதில் என் மனைவி ரஞ்சிதா என்று. “என்னுடைய மனைவி ரஞ்சிதா மைக்ரோபயாலஜியில் எம்.பில்(M.Phil) முடித்து விட்டு இரண்டு ஆண்டு காலம் கல்லூரியில் பணியாற்றினார். பின்னர் குடும்பத்தை பராமரிக்க வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் வீட்டிலிருந்தே ஏதாவது செய்யலாம் என்று கேட்டதால் அவருக்கு நான் கமாடிட்டி சந்தை பற்றி அறிமுகம் செய்தேன். நாளடைவில் ரஞ்சிதாவிற்கு அதில் ஆர்வம் அதிகரித்தது, ஆனால் இதில் தகவல்களைப் பெறுவதில் இருக்கும் இடர்பாடுகளை சரி செய்ய அவர் விரும்பினார். அப்போது அவர் அளித்த ஐடியா தான் இந்த செயலி எண்ணம்” என்று கூறும் கார்த்திகேயன், நானும் அந்த சமயம் செயலி வடிவமைப்பில் தீவிரமாக இருந்ததால் இரண்டும் ஒத்துபோய்விட்டது என்று சொல்கிறார்.

பெயர்மாற்றத்திற்கான காரணம் என்ன?

தொடக்கத்தில் நாங்கள் எம்சிஎக்ஸ் சந்தை நிலவரங்களை பற்றிய விவரங்களை மட்டுமே தெரிவிக்கும் முடிவில் செயலி உலகில் கால் பதித்ததால் அதன் பெயரிலேயே எம்சிஎக்ஸ் மார்க்கெட் டிராக்கர் என்று செயலியையும் அறிமுகம் செய்தோம் என்கிறார் கார்த்திகேயன். சரியாக 2013 டிசம்பரில் ஆன்ட்ராய்டு மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வகையில் இந்த செயலியை வடிவமைத்து அறிமுகம் செய்தோம், முதல் மாதம் பெரிய அளவில் யாரும் கண்டுகொள்ளவில்லையே என்ற கவலை இருந்தது. ஆனால் அடுத்த மாதமே 1000 பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்தனர். அவர்களுக்கு எங்கள் சேவை பிடித்துவிட்டது, தொடர்ந்து பயனாளர்கள் கமாடிட்டி சந்தையில் உள்ள என்சிடிஈஎக்ஸ் பற்றிய தகவல்களை கேட்கத் தொடங்கினர், அதனால் இந்த செயலியின் பெயர் பொதுவானதாக இருக்கட்டும் என்ற நோக்கில் ‘கமாடிட்டி மார்க்கெட் டிராக்கர்(Commodity Market Tracker)’ என்று 6 மாதங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்று கூறுகிறார். பயனாளர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வதன் அடிப்படையிலேயே எங்களது நிறுவனம் மென்மேலும் வளர்ச்சியை கண்டு வருகிறது என்கிறார் அவர்.

செயலியில் என்னென்ன தகவல்களைப் பெற முடியும்?

இந்த செயலியில் “கமாடிட்டி சந்தையின் நேரலை விவரங்கள்(live data), சந்தையில் எதில் முதலீடு செய்யலாம் என்பதற்கான ஆலோசனைகளும், பங்குகளை வாங்கி விற்க ஏற்ற சமயம் எது என்ற அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன என்கிறார் கார்த்திகேயன். மேலும் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் எந்தப் பொருள் அதிக லாபத்தை பெற்றுத் தரும் என்பதற்கான வியூகங்களையும் இதில் கூடுதலாகப் பெற முடியும்” என்றும் சொல்கிறார். இதில் அளிக்கப்படும் தகவல்கள் 90 சதவிகிதம் இலவசம் என்று கூறும் அவர், மீதமுள்ள 10 சதவிகித மக்களுக்கு ரூ.1000, ரூ.1500 என இரண்டு கட்டணமுறைகளில் தகவல்களை அளிக்கிறோம் என்கிறார்.

சவால்கள் மற்றும் போட்டியாளர்களை சமாளித்தது எப்படி?

கமாடிட்டி சந்தையில் பல்வேறு பொருட்கள் உள்ளதால் அவற்றை செயலி வடிவில் கொண்டு வருவதே மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று கூறுகிறார் கார்த்திகேயன். 

“சந்தையில் இருந்த 20 பொருட்களில் 12 பொருட்களை மட்டுமே தேர்வு செய்த போதும் அவற்றிற்கு low, high என எண்ணிலடங்கா டேட்டாக்கள் இருந்தன. இறுதியில் MCX சந்தையில் கச்சாஎண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர் உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் NCDEX சந்தையில் விவசாய பொருட்களான கோதுமை, சோயா, பருப்பு வகைகள் என 8 பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து அது தொடர்பான டேட்டாக்களை ஒரே ஸ்கிரினுக்குள் கொண்டு வந்தோம்” என்கிறார் அவர்.

கமாடிட்டி புரோக்கரேஜ் செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது டார்க்கெட்டை அதிகமாக வைத்துள்ளன. அதாவது தகவல்களைத் தர ரூ.20 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர், ஆனால் அந்தத் தொகையே சிறுவணிகருக்கு முதலீடு செய்ய போதுமானது என்பதே எங்களின் எண்ணம் அதனால் நாங்கள் குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கி வருகிறோம். இதுவே எங்களை போட்டியாளர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி வெற்றியைத் தேடித் தருகிறது. அதுமட்டுமின்றி மற்ற நிறுவனங்கள் தங்கம் என்றால் அவற்றின் தகவல்களை மட்டுமே கொடுக்கின்றனர், ஆனால் எங்கள் செயலியில் கோல்ட், கோல்ட் மினி, கோல்ட் மைக்ரோ என அனைத்து தகவல்களும் தரப்படுகிறது. இது பயனாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகக் கூறுகிறார் கார்த்திகேயன்.

எங்களிடம் ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ரூ.1500 வரை சம்பாதித்தால் போதும் என்று நினைக்கும் நடுத்தர வர்க மக்களே அதிகம் பேர் பயனாளிகளாக உள்ளனர். கமாடிட்டி டிராக்கர் செயலியில் இது வரை 51 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர், நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பயனாளர்கள் தகவல்களைப் பெற்றுப் பயனடைகின்றனர்.

எங்கள் நிறுவனத்திற்கு போட்டியாக சிறு நிறுவனங்களை எடுத்துக் கொள்ளாமல் ஆனால் ஷேர்கான், ப்ளூஇந்தியா போன்ற பெரிய நிறுவனத்தை போட்டியாக நினைப்பதாலேயே எங்களால் மேலும் வளர்ச்சி காண முடிகிறது. அதோடு பெரிய கமாடிட்டி நிறுவனங்கள் கூட எங்களது செயலியின் செயல்பாடுகளை உற்றுநோக்கி வருவதையே எங்களின் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம் என்பது கார்த்திகேயனின் கூற்று.

செயலியின் செயல்களை இயக்கும் குழு

ஃபாஸ்துரா டெக்னாலஜீஸ் மற்றும் செயலி பற்றிய விவரங்களைத் தொடர்ந்து அவற்றை பின்னால் இருந்து இயக்கும் குழுவை பற்றி விவரிக்கத் தொடங்கினார் கார்த்திகேயன். “மொபைல் செயலி உருவாக்கும் துறையில் ஏறத்தாழ 10 ஆண்டுகள் அனுபவம் இருக்கும் கார்த்திகேயன் ஃபாஸ்துரா டெக்னாலஜீஸின் நிறுவனர். அவரின் மனைவி ரஞ்சிதா இந்நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார். ரஞ்சிதா சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிப்பதோடு அவற்றை பற்றிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு செய்து தகவல்களை அளிப்பார். கார்த்திகேயனின் கல்லூரி ஜுனியர் கார்த்திக் ராஜா பேக்என்ட்(backend service) வேலைகள் மற்றும் நிர்வாக பேனல்களை உருவாக்கும் பணியை கவனித்துக் கொள்கிறார். மற்றொருவர் கேத்தரின், இவர் பயனாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சந்தை நிலவரங்களைத் தெரிவிப்பார். இதுவே எங்களின் மையக்குழு, ஆனால் எங்களுக்கு ஒரு ஆஃப்லைன் உறுப்பினரும் உள்ளார் அவர் பெயர் கார்த்திக்பிரபு, அவர் எங்களுக்கு செயலி தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைப்பதோடு, அவற்றை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்குவார்” என்கிறார் கார்த்திகேயன்.

மாற்றங்களை விரும்பும் கார்த்திகேயன்

கார்த்திகேயன் மதுரை சிங்கம்புணரியை சேர்ந்தவர். சாதாரண பெயின்ட்டரின் மகனான அவர் தான் அந்தக் குடும்பத்தின் முதல் பட்டதாரி. அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி கற்ற அவர், காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் இளநிலை(BSc) கணிதமும், எம்சிஏவும் MCA பயின்றுள்ளார்.

“என்னை வழிநடத்திச் செல்லவோ அல்லது படிப்பு தொடர்பான ஆலோசனைகளைத் தரவோ எனக்கு யாரும் உதவவில்லை. ஆனால் அதுவே நல்லது என்று நான் நினைக்கிறேன். அதனாலேயே நான் சுயமாக நிறைய கற்றுக் கொண்டேன். எனக்கு எப்போதுமே அனைத்து மக்களிடமும் கலந்துரையாட மிகவும் பிடிக்கும் ஸ்டார்ட் அப் சூழலுக்கு அது மிகவும் அவசியம்” என்கிறார் கார்த்திகேயன்.

பட்டமேற்படிப்பை முடித்து 2004ம் ஆண்டு சென்னையில் ஒரு சிறிய நிறுவனத்தில்(Zoho) மென்பொருள் வடிவமைப்பாளராக பணியாற்றினேன். “அது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் என்பதால் எந்த வரையறையும் இல்லை, நாம் ப்ராடக்ட் டிசைன், மேம்பாடு, பரிசோதனை மற்றும் மார்க்கெட்டிங் என அனைத்தையும் செய்து பார்க்க முடியும். சிறு நிறுவனத்தில் பணியாற்றுவதில் இதில் ஒரு லாபம் உள்ளது என நான் நினைக்கிறேன்” என்கிறார் அவர். இதைத் தொடர்ந்து மைசூர், கொச்சின், கர்நாடகா என மொத்தம் 4 மாநிலங்களில் 8 நிறுவனங்களில் மாறி மாறி 11 ஆண்டு அனுபவத்தை சம்பாதித்துள்ளார் கார்த்திகேயன். ஒரு ப்ராடக்ட் உருவாக்கப்பட்ட பின் அந்த நிறுவனத்தில் வேலை இருக்காது, ஆனால் தினமும் அலுவலகம் சென்று வர வேண்டும், அப்படி வேலையில்லாமல் சென்று வர எனக்கு விருப்பம் இல்லை அதனாலேயே அடிக்கடி நிறுவனம் மாறினேன். ஆனால் அப்படி வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றியது தான் எனக்கு அந்தந்த மாநில மொழிகளை கற்றுக் கொள்ள உதவியது. இப்போது எனக்கு மலையாளம், கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் தெரியும். இதனால் அந்த மாநில வாடிக்கையாளர்களுடன் என்னால் எளிதில் உரையாட முடிகிறது என்று பெருமைப்படுகிறார் கார்த்திகேயன்.

முதலீடும் லாபமும்

எனக்கு மொபைல் செயலி உருவாக்குவதில் முன்அனுபவம் இருத்ததால் ஒரு ஸ்டார்ட் அப் தொடங்க அது போதுமானதாக இருந்தது என்று சொல்கிறார் கார்த்திகேயன். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இடம் பெறச் செய்ய மற்றும் செர்வர் ஹோஸ்ட்டிங்குக்கு என ரூ.50 ஆயிரம் முதலீடு தேவைப்பட்டது. மேலும் கமாடிட்டி சந்தை என்பது ஈக்விட்டி சந்தை போல 8 மணி நேரம் மட்டும் கிடையாது அவை ஒரு நாளைக்கு 14 மணி நேரம் செயல்படும், அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதால் வீட்டிலேயே தனி அறையை அலுவலகமாக பயன்படுத்தி வருகிறோம், இதனால் அலுவலக கட்டிடத்திற்கு வாடகை தேவைஇல்லை. “இந்த காலத்தில் மளிகைக் கடை தொடங்கவே ரூ.2 லட்சம் தேவைப்படும் நிலையில் ரூ.50 ஆயிரத்தை தாராளமாக முதலீடு செய்யலாம் என்று எனக்குத் தோன்றியது அதனால் என்னுடைய சேமிப்பில் இருந்து எடுத்து தைரியமாக செலவு செய்தேன். ஆனால் இந்த செயலி முழு வீச்சில் செயல்படத் தொடங்கியதும் எனக்கு செலவு என்பதே இல்லை. இப்போது மாதத்திற்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை லாபம் ஈட்ட முடிகிறது” என்று பெருமைப்படுகிறார் கார்த்திகேயன்.

கூடுதல் நிதி பெற மேற்கொள்ளும் முயற்சி என்ன?

கமாடிட்டி மார்க்கெட் டிராக்கர் செயலி நல்ல லாபத்தையே ஈட்டி வருவதால் நாங்கள் தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே ரூ.19 லட்சம் வரை நேரடி லாபத்தை ஈட்டியுள்ளோம் என்கிறார் அவர். எங்களின் சேவைக்கு இருக்கும் வரவேற்பின் அடிப்படையில் பல்வேறு முதலீட்டாளர்கள் அவர்கள் நிறுவனத்துடன் இணைந்து இதைச் செய்யுமாறு கேட்கின்றனர். “மதுரையில் ஓராண்டு செயல்பட்ட பின்னர், முதலீட்டாளர்களை அணுகவும், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் நாங்கள் கடந்த ஆண்டு பெங்களூருக்கு இடம் பெயர்ந்துவிட்டோம்” என்கிறார் கார்த்திகேயன். பெங்களூரு வந்த பின்னர் எங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்தது எங்களுக்கு மேலும் ஊக்கமளித்ததாக கூறுகிறார் அவர். ஆனால் முதலீட்டு நிறுவனங்களுக்கு தகுந்த வகையில் எங்களது செயலியை நாங்கள் மேலும் பல வசதிகளை செய்ய நினைப்பதால் இது வரை ‘சுய முதலீட்டு’ முறையிலேயே லாபத்தை மறுமுதலீடு செய்து வருகிறோம்.

எதிர்காலத்திட்டம்

2013ம் ஆண்டு இந்த செயலியை அறிமுகம் செய்து மதுரையில் இருந்து செயல்பட்டார் கார்த்திகேயன், ஆனால் 2014ம் ஆண்டில் முதலீட்டாளர்களை அணுகும் நோக்கில் பெங்களூருக்கு இடம் பெயர்ந்து தற்போது அங்கிருந்து செயல்டுபகிறார் அவர். “எங்களது பயனாளர்கள் செயலியிலேயே பங்குகளை வாங்கி, விற்கும் டிரேடிங் ஆப்ரேஷனை கேட்கின்றனர். ஆனால் அதற்கு எம்சிஎக்ஸ்-ன் அனுமதி வேண்டும், அதைப் பெற மட்டுமே ரூ.80 லட்சம் செலவு செய்ய வேண்டும். அதோடு இதை சிறந்த முறையில் மற்ற கமாடிட்டி புரோக்கரேஜ்களில் இருந்து மாறுபட்டு செயல்படுத்த குறைந்தபட்சம் 3 கோடி தேவைப்படுவதால் முதலீட்டு நிறுவனங்களை நாடும் முடிவை எங்கள் குழு எடுத்துள்ளது. ஆனால் நிறுவனங்களுக்கு ஏற்றாற் போல சிறந்து விளங்க வேண்டும் என்பதால் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் செயலியில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அது முடிந்த பின்னர் 2016 ஜனவரி மாதத்தில் முதலீட்டு நிறுவனங்களை நாடி இந்த செயலியை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும் என்று உறுதியளிக்கிறார்” கார்த்திகேயன்.

விருதுகளும் பாராட்டுகளும்

'கமாடிட்டி மார்க்கெட் டிராக்கர்' செயலியை மதுரையில் செயல்படுத்திய போது இருந்த சர்வர் பிரச்சனை பெங்களூர் வந்ததும் கார்த்திகேயனுக்கு போய்விட்டது . 2014ம் ஆண்டில் பிஸ் பார்க், எஃப்பி ஸ்டார்ட், கூகுள் லான்ச் பேட் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது இந்த செயலி. இதன் செயல்பாட்டை கண்டு கூகுள் நிறுவனம் பல்வேறு சலுகைகளை தங்களது பக்கத்தில் அளித்துள்ளது. சிறந்த ஸ்டார்ட்அப்க்கான 2014ம் ஆண்டு hot100 டெக்னாலஜி விருதையும் கார்த்திகேயன் பெற்றுள்ளார். நாஸ்காமின் சிறந்த பத்தாயிரம் ஸ்டார்ட் அப்க்கான தேர்வில் மூன்றாவது அரையிறுதி வரை சென்று இடம் பெற்றுள்ளது இந்நிறுவனம்.

இளம் தொழில்முனைவோருக்கு என்ன தேவை

இளம்தலைமுறையினர் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளதாகக் கூறகிறார் கார்த்திகேயன். ஆனால் அவை புத்தகத்தில் இருந்தோ கல்வி நிலையங்களில் இருந்தோ பெற முடியாது என்கிறார் அவர்.

“தொழில்முனைவை கனவாக வைத்திருப்பவர் வீட்டுக்குள்ளும், கணினிக்குள்ளும் வாய்ப்புகளை தேடக் கூடாது. வீதியில் இறங்கி நடக்க வேண்டும் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு கடையும் தொழில்ரீதியில் ஒரு விஷயத்தை நமக்கு கற்றுக் கொடுக்கும்.”

கற்றக்கொண்டே இருக்க வேண்டும், கற்றுக் கொள்வதில் தயக்கமே இருக்கக் கூடாது என்று கூறும் இந்த மதுரை பெயின்ட்டரின் மகன் தன் வாழ்வை வர்ணஜாலமாக்கிக் கொள்ள மாற்றத்தையும் கற்றலையும் தாரக மந்திரமாக கொண்டுள்ளார். வெற்றிக் கனியை ருசிக்க கல்வியோ, குடும்பச் சூழலோ முக்கியமல்ல என்பதை நிரூபித்து காட்டியுள்ள கார்த்திகேயனுக்கு தமிழ் யுவர்ஸ்டோரியின் வாழ்த்துகள்.

இணையதள முகவரி: Fastura Technologies

செயலி பதிவிறக்க: Commodity Market Tracker

Stories by Gajalakshmi Mahalingam