மூன்று கல்லூரி மாணவர்கள் தொடங்கிய நிறுவனம்: பேச்சாற்றல் மூலம் தனிப்பட்ட திறனை மேம்படுத்த உதவும் ’Warhorse’

4

2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் பொறியியல் படித்துக் கொண்டிருந்த ஆறு நண்பர்கள் ஜாலியாக பீச்சுக்கு சென்றபோது, பாப்கார்னை சாப்பிட்டுக் கொண்டே பேசத் தொடங்கினர். விளையாட்டாக தொடங்கியது, இந்திய கல்வி முறை பற்றியும் அதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் சீரியசான விவாதமாக மாறியது. மாணவர்களாகிய தாங்கள் கல்விமுறையில் மாற்றங்கள் கொண்டுவர என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டனர். கம்யூனிகேஷன் அதாவது தொடர்பு கொள்ளுதல், தன்னம்பிக்கையுடன் பேசுதல் போன்றவற்றில் பலரும் பின் தங்கி இருப்பதே பெரிய குறைபாடு என எண்ணிய நண்பர்கள் அது தொடர்பாக நிறுவனம் தொடங்க முடுவெடுத்தனர். 

மேடையில் சிறப்பாகப் பேசக் கற்றுக்கொண்டால் எங்குவேண்டுமானாலும் சிறப்பாக பேச ஒருவரால் முடியும். பொதுவாகவே ஒருவர் நன்றாக பேசினால் அவருக்கு பல சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பீச் சந்திப்புக்கு பின், விவாதங்கள், மேடைப்பேச்சு, கல்வி போன்றவற்றில் அதீத ஆர்வம் கொண்ட அந்த நண்பர்கள் கூட்டத்தின் மூன்று பேர் மீண்டும் சந்தித்து கொண்டபோது, மேடைப்பேச்சில் மாணவர்களுக்கு பயிற்சியளிப்பது குறித்து பேசினர். இவர்களுக்கு இதில் ஆர்வமும் வல்லமையும் இருந்தது. இருந்தும் தங்களின் திட்டத்தைச் செயல்படுத்த அதிகம் பேரை இணைத்துக்கொண்டு ஒரு குழுவை உருவாக்க திட்டமிட்டனர். ஐந்து பேர் கொண்ட குழு உருவானது. 

விஷால், சித்தாந்த் மற்றும் ராஹுல்
விஷால், சித்தாந்த் மற்றும் ராஹுல்

ஸ்டார்ட் அப்பிற்கான உந்துதல்

கல்வி முறையில் இருக்கும் பலவிதமான மூட நம்பிக்கைகள்தான் இந்த ஸ்டார்ட்-அப்பை துவங்க மூன்று கல்லூரி நண்பர்களான விஷால், சித்தாந்த் மற்றும் ராஹுலுக்கு உந்துதலாக அமைந்தது. முக்கியமாக கல்வி முறையில் இருக்கும் தரப்படுத்தும் முறையை மாற்ற நினைத்த இந்த நண்பர்கள் ‘வார்ஹார்ஸ்’ Warhorse என்ற நிறுவனத்தை தொடங்கினர். 

”கன்வேயர் பெல்ட் வழியாக பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டு குவிப்பதுபோல மாணவர்களிடம் தகவல்கள் திணிக்கப்பட்டு மாபெரும் குவியலாக குவிக்கப்படுகின்றனர்,” என்கிறார் நிறுவனர்களின் ஒருவரான விஷால்.

வார்ஹார்ஸ் குழுவினர் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக உரையாடுவது, இவர்களுக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்தனர். அனைவருக்கும் இந்தத் திறமை இருக்கவேண்டும் என்று விரும்பினார்கள். கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற இவர்களது விருப்பமே மிகப்பெரிய உந்துதலாக அமைந்தது.

சந்தித்த சவால்கள்

”தொடக்கத்தில் எங்களது ஐடியாவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிக சிரமத்தை உணர்ந்தோம். 22 வயது நிரம்பிய இளைஞர்களின் வார்த்தைகளை நம்பி எங்கள் முயற்சியை ஒப்புக்கொள்ள மறுத்தனர்.” 

முதலீட்டிற்காக யாரையும் அணுகவில்லை. அதற்கான தேவையும் இல்லை. எங்களது அறிவு மற்றும் திறன் நிறுவனத்தின் முதலீடு.  எங்கள் முயற்சியில் பங்களித்து மிகச்சிறப்பாக முழு அர்பணிப்புடன் செயல்படுபவர்கள் குழுவில் உள்ளனர் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர் நிறுவனர்கள். 

Warhorse செயல்பாடுகள்

கல்வித்துறையில் செயல்படும் ’வார்ஹார்ஸ்’ மக்கள் சிறப்பாக பேசவும், சிறப்பாக சிந்திக்கவும், அதிகம் கற்கவும் உதவுகின்றனர். முதலில் மேடைப்பேச்சு வொர்க்‌ஷாப் மட்டுமே நடத்தி வந்தனர். அதன்பிறகு விவாத முகாம்களிலும் ஈடுபட்டனர். 

கடந்த ஜூன் மாதம் ஒரு புதிய ப்ராஜெக்ட்டை துவங்கியுள்ளனர். 24 வார காலம் நீண்ட இந்த மாட்யூலில்; விவாதங்கள் (Debating), பேசும்திறன் (Elocution), கலை (Liberal Arts), சிந்தனை (Thinking) மற்றும் பகுப்பாய்வு (Analysis) ஆகியவற்றை உள்ளடக்கி டெல்டா (DELTA) என்று பெயரிட்டுள்ளனர். இவர்களின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததும், அதை ஒரு கல்வி அகாடமியாக மாற்றினர் நிறுவனர்கள். 

இந்த அகாடமி ஒரு கல்வி நிறுவனம் போன்றது. இதில் முக்கிய பாடதிட்டமாக மேடைப்பேச்சு இருக்கும். விருப்பப் பாடங்களில் மாணவர்கள் தங்களுக்கேற்றவற்றை தேர்வு செய்துகொள்ளலாம்.

கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் கார்ப்பரேட் பயிற்சி (ஸ்டார்ட் அப்பிற்கான மாட்யூல் உட்பட) ஆகியவற்றிற்காக ’ஐடியல் கேண்டிடேட்’ என்கிற ப்ரோக்ராமும் வார்ஹார்ஸில் உள்ளது. வார்ஹார்ஸ் இதுவரை 12 நிறுவனங்களுடன் பணிபுரிந்துள்ளது. 272 செஷன்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. 850 தனிநபர்களுக்கு பயிற்சியளித்துள்ளது.

குழு விவரம்

விஷால், சித்தாந்த், ராகுல் ஆகிய மூவரும் இணை நிறுவனர்கள். இவர்கள் அனைவரும் மேடைப்பேச்சு, விவாதம், மாடல் யுனைடட் நேஷன்ஸ், தியேட்டர், ஸ்டாண்ட்-அப் காமெடி போன்றவற்றில் அனுபவமுள்ள பொறியாளர்கள். கல்வி என்பது ஒருவரது மனதை வடிவமைக்கத்தானே தவிர வாழ்க்கைப் பாதையை வடிவமைக்க அல்ல என்று இவர்கள் நம்புகின்றனர். 

”கல்லூரியின் இரண்டாமாண்டு படிக்கையில் ’வார்ஹார்ஸ்’ தொடங்கினேன். நான்காம் ஆண்டு பயிலும்போது சித்தாந்த் என்னுடன் இணைந்துகொண்டான். விரைவில் ஆறு நபர்களைக் கொண்ட குழுவாக மாறியது. தற்போது வார்ஹார்ஸில் 10 நபர்கள் உள்ளனர்,” என்றார் விஷால். 

நாங்கள் பத்து பேரும் பயிற்சியளிக்கிறோம் நான் கூடுதலாக அன்றாட செயல்பாடுகள், திட்டமிடல் போன்றவற்றில் ஈடுபட்டுவருகிறேன். பாடதிட்டங்கள் வடிவமைக்கும் பணிக்கு சித்தாந்த் தலைமையேற்றுள்ளார். செயல்திட்ட வல்லுநராகவும் மார்கெட்டிங் தலைவராகவும் ராகுல் பொறுப்பேற்றுள்ளார், என்று விளக்கினார் விஷால். 

’தி அகாடமி’ – கல்வி முறையின் மாற்றத்திற்கான தீர்வு

கடந்த நூறாண்டுகளில் கல்வி முறையில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. தொலைபேசிகள் செல்ஃபோன்களாக மாறிவிட்டது. கார்கள் தானியங்கி கார்களாக மாறிவிட்டது. இருந்தும் கல்வி மட்டுமே நூறாண்டுகளுக்கு முன் எவ்வாறு இருந்ததோ அதேபோல்தான் இன்றும் உள்ளது. இவர்கள் இதில் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தனர். கல்வி முறையிலுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முனைகின்றனர்.

இதற்கான தீர்வை ’தி அகாடமி’ என்றழைக்கின்றனர். இது ஒரு கண்டுபிடிப்பு சார்ந்த கல்விமுறையாகும். ஒருவர் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய பாடதிட்டமும் தேர்வு செய்யும் விதத்தில் விருப்பப் பாடங்களும் உள்ளது. வரலாறு, தத்துவம், அரசியல் அறிவியல், தியேட்டர், நடனம் போன்றவற்றிலிருந்து விருப்பப் பாடத்தை தேர்வு செய்துகொள்ளலாம். மேடைப்பேச்சு, விவாதங்கள் போன்றவவை நீண்ட கால பாடமாக கற்றுத்தரப்படும். ’தி அகாடமி’ முக்கிய பாடதிட்டத்திற்கான கட்டணம் 9000 ரூபாய்.

தங்களின் அகாடமி மற்றும் நிறுவனத்தை மேலும் விரிவுப்படுத்தி, பிரபலப்படுத்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சம்மர் கேம்ப் நடத்த திட்டமிட்டுள்ளனர் நிறுவனர்கள். இதில் பேச்சுத் திறமை, விவாதங்கள், மேடைப் பேச்சு போன்ற பல விஷயங்களை கேம்ப் மூலம் பயிற்சி அளிக்க உள்ளனர். இது ஏப்ரல் 24 முதல் மே 26-ம் தேதி வரை கட்டண அடிப்படையில், சென்னையில் 7 மையங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

தொலைநோக்கு பார்வையுடன் கல்வியில் மற்றும் ஒருவரின் திறமையை மெருகேற்ற தொடக்கப்பட்டுள்ள இந்த கல்வி அகாடமி மற்றும் வார்ஹார்ஸ் நிறுவனம் மேலும் புதிய திட்டங்களை வகுத்து, செயல்பாடுகளை விரிவுப்படுத்துவார்கள் என்று தெரிகிறது.