17 வயதில் ஆறரை லட்சம் - ஷீல் சோன்ஜியின் சாதனை பயணம்!

0

முதல் பார்வைக்கு, ஷீல் சோன்ஜி மற்ற 17 வயது பையன்களைப் போல சாதாரணமாகவே காட்சியளிக்கிறார். ஆனால் அவருடன் பேச்சுக் கொடுக்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே நம்மையறியாமல் ஆச்சரியத்தில் வாய்பிளந்துவிடுவோம். பின்னே? இந்த 17 வயதில் தனியாளாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக ஆறரை லட்சம் ரூபாய் திரட்டியிருக்கிறார். இப்போது உங்களையும் ஆச்சரியம் அள்ளுமே?

கற்பிக்க வயது தடையில்லை!

பத்தாம் வகுப்பிற்கு பிறகு வேறு பள்ளிக்கு மாறினார் ஷீல். பள்ளி மாற்றம் தன் வாழ்கையையும் மாற்றும் என அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. சர்வதேச பாடத்திட்டங்களுடனான அறிமுகம் அவருக்கு பல்வேறு அம்சங்களை கற்றுத் தந்தது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அவரிடம் வளர்ந்தது.

பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்தின் ஒருபகுதியாய் தன் நண்பர்களோடு இணைந்து அருகிலிருந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார் ஷீல். “தடங்கலற்ற மொழியறிவோடு, கால்பந்து, நடனம், ஓரிகாமி ஆகியவற்றையும் அந்த மாணவர்களோடு பகிர்ந்துகொண்டோம்” என்கிறார் ஷீல். தற்காலிக ஆசிரியர் வேலை மிகவும் பிடித்துவிடவே தொடர்ந்து விடுமுறை நாட்களில் அந்த மாணவர்களுக்கு கற்றுத் தர முடிவு செய்தார் ஷீல். ஆனால் அதற்குள் தேர்தல் வேலைகளுக்காக அந்த பள்ளி அரசின் கண்காணிப்பிற்குக் கீழ் சென்றது. ஷீலின் முயற்சியும் தடைப்பட்டது. பின், தனக்கு வாய்ப்பளிக்கக் கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணையத்தில் தேடினார். “பின்னர் சமிக்ஷா பவுண்டேஷனோடு கைகோர்த்தேன். பெங்களூரு கிட்வாய் மருத்துவமனையில் இருக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக்கொடுத்தேன்” என நிறைவோடு சொல்கிறார் ஷீல்.

கைகொடுத்த ஆறரை லட்சம்!

கற்பித்தல் மட்டும் போதாது, அந்தக் குழந்தைகளுக்கு இன்னும் நிறைய சேவை செய்யவேண்டும் என ஷீலுக்குத் தோன்றியது. “அவர்கள் என் மனதிற்கு நெருக்கமானவர்கள் ஆனார்கள். இதனால் அவர்களுக்கு மேலும் உதவிகள் செய்ய விரும்பினேன்” என்கிறார் ஷீல். அந்தக் குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக பெரிய அளவில் கால்பந்து போட்டித் தொடர் ஒன்றை பெங்களூருவில் நடத்தத் திட்டமிட்டார். “கால்பந்து மேலான என் தீராக்காதலை வெளிப்படுத்தவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன்“ என கண்கள் மின்ன கூறுகிறார் ஷீல்.

முயற்சி திருவினையாக்கும்!

திட்ட மேலாண்மை, வர்த்தக மேலாண்மை என தான் பள்ளியில் படித்த பாடங்களை செயல்முறைக்கு கொண்டு வந்தார் ஷீல். குறைந்த நேரத்தில் திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்தினார். “புகழ்பெற்ற நிறுவனங்களின் ஹெச்.ஆர் அதிகாரிகளுக்கு லிங்க்ட்இன்னில் தகவல்கள் அனுப்பினேன். என் நண்பர்களும் என்னுடன் களத்தில் இறங்கினார்கள். நாங்கள் எங்கள் பகுதியில் வீடு வீடாக சென்று நிதி திரட்டினோம். மாற்றாக நிதியளித்தவர்களுக்கு சான்றிதழ் கொடுத்தோம்” என தன் திட்டம் நடைமுறைக்கு வந்தவிதம் குறித்து பகிர்ந்துகொள்கிறார் ஷீல்.

பின், ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட கோச் ஒருவரை போட்டித்தொடரின் நடுவராக நியமித்தார் ஷீல். “விளையாட்டு வீரர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க சக்ரா மருத்துவமனை உதவி செய்தது. எங்களின் மெடிக்கல் பார்ட்னரும் அந்த மருத்துவமனைதான். ‘பிளே’ அரங்க நிர்வாகிகள் விளையாட இடம் கொடுத்ததோடு பல சலுகைகளும் அளித்தார்கள். பின்னர், அணிகளை பதிவு செய்யும் வேலைகள் வேகம் பெற்றவுடன், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியை நாடினேன்” என படிப்படியாக திட்டம் நிறைவேறியதை நினைவுகூர்கிறார் ஷீல்.

அதிகபட்ச நிதியைத் திரட்டுவதற்காக இந்தத் திட்டத்தில் பல்வேறு அம்சங்களை சேர்த்திருந்தார் ஷீல். கால்பந்து தொடர், வீடு வீடாக சென்று நிதி திரட்டியது, கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவி என மொத்தமாய் ஆறரை லட்ச ரூபாய் நிதி சேர்ந்தது.

குவியும் பாராட்டு!

“ஷீல் எனக்கு தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டே இருந்தார். இப்படியான நிதி திரட்டுதல் பற்றிய கோரிக்கைகள் எங்களுக்கு அடிக்கடி வருமென்றாலும் இந்த இளைஞனின் கோரிக்கை கொஞ்சம் வித்தியாசமானதாய் இருந்தது. ஒரு 17 வயது பையனால் இத்தனை நிறுவனங்களை ஒன்று சேர்க்க முடிந்தது பற்றித் தெரிந்து ஆச்சரியமடைந்தேன். வயதில் மூத்தவர்கள் கூட இவ்வளவு தெளிவாய் திட்டமிட முடியாது. மெடிக்கல் உதவிகள், ஆம்புலன்ஸ் என எல்லா கோணங்களையும் யோசித்து செயல்படுத்தி இருந்தார் ஷீல். அவர்களுக்கு நிதி வழங்க முடியுமா என எனக்கு அப்போது தெளிவாக தெரியவில்லை. ஆனால் அவரை பற்றி எங்கள் தளத்தில் எழுத அப்போதே முடிவு செய்துவிட்டேன்” என்கிறார் ஸ்போர்ட்ஸ்கீடா(sportskeeda) இணையதளத்தின் நிறுவனர் போரூஸ். அந்தத் தளத்தின் ‘கீடாலஜி’ தொடரில் ஒரு அத்தியாயம் ஷீல் பற்றியது. வீடியோ பதிவு இதோ...

இரண்டாம் ஆட்டம்!

நவம்பர் 2014ல் தனக்கான பல்கலைக்கழக விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக்கொண்டிருந்தார் ஷீல். அதில் ‘பொருளாதார நிலைத்தன்மை’ என்ற பகுதியில் மாணவரின் சுய பொருளாதார நிலைத்தன்மை பற்றிய கேள்விகள் இருந்தன. அவற்றுக்கு ஷீலால் பதிலளிக்க முடியவில்லை. மே 2015ல் ஒரு வங்கிக்கு தன் தந்தையோடு சென்றிருந்தார் ஷீல். அப்போது, மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் சகிதம் கல்விக்கடன் கேட்டு வருவதை பார்த்தார். “முதல் முயற்சியில் என்னால் நிதி திரட்ட முடிந்தது என்றால் அடுத்தடுத்த முயற்சிகளிலும் என்னால் நிதி திரட்ட முடியுமே. எனக்கான படிப்புச் செலவுகளில் நானும் பங்களிப்பேன்” என தன் தந்தையிடம் சொன்னார் ஷீல். ஷீலுக்கு தனது அடுத்த குறிக்கோள் தெளிவாய் தெரிந்தது. “யாரையும் சார்ந்து வாழாமலிருக்க பழக வேண்டும். பொறுப்பாய் இருக்கவேண்டும். என் சொந்த முயற்சியில் முன்னேறினால் அது மேலும் நான்கு இளைஞர்களுக்கு தைரியமளிக்கக் கூடும்” என முடிவெடுத்தார் ஷீல். அவரால் 1.1 லட்ச ரூபாய் நிதியாக திரட்ட முடிந்தது. சுயதொழில் நிறுவனங்களோடு, ஃபிளிப்கார்ட்(Flipkart), ப்ரொகேட்(Brocade), பிரிஸா(Brisa), சடி(Sati), பிலாங்(Belong), சிஸல்(Chisel) போன்ற பெரு நிறுவனங்களும் நிதியளித்தன.

ஒரு தொழில்முனைவர் உருவாகிறார்!

இப்போது கனடாவில் இருக்கும் சைமன் ப்ரேஸர் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்க உள்ளார் ஷீல். வருங்காலத்தில் சுயதொழில் தொடங்குவாரா ஷீல்? “இந்த எல்லா அனுபவங்களில் இருந்தும் நிறையக் கற்றுக்கொண்டேன். நான் நடத்திய நிகழ்ச்சிகள் தந்த அனுபவங்கள் காரணமாக எதிர்காலத்தில் ஈவன்ட் ஆர்கனைஸ் செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்க ஆசைப்படுகிறேன். அந்த நிறுவனம் முதல்கட்டமாக கனடாவில் செயல்படும் என நினைக்கிறேன்” என தன் திட்டங்கள் குறித்து பகிர்கிறார் ஷீல்.

டெல் அனாலிட்டிக்ஸின் இயக்குனர், டெக்காத்லான் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பிரிஸா நிறுவனத்தின் இயக்குனர் போன்றோரிடமிருந்து தகவல் பகுப்பாய்விற்காக விருதுகளும் வாங்கியுள்ளார் ஷீல். “தகவல் பகுப்பாய்விற்கென பிரத்யேக நிறுவனம் ஒன்றை சீக்கிரமே தொடங்க உள்ளேன். இளைஞர் சமுதாயத்தை மேம்படுத்துவதன் மூலம் சமூகத்தையும் மேம்படுத்த முடியுமென்பதால் அதற்கான முயற்சிகளில் இறங்க இருக்கிறேன். மற்றவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் என்னுடைய உழைப்பு இருக்கும்” என நம்பிக்கையோடு கூறுகிறார் ஷீல்.

ஆக்கம்: Snigdha Sinha | தமிழில்: சமரன் சேரமான்