'தகவல் திங்கள்'- எளிதினும் எளிது கேள் இணையதளங்கள்!

0

ஒரு இணையதளம் எப்படி இருக்க வேண்டும்? இந்த கேள்வியுடன் சிறந்த அல்லது நல்ல எனும் அடைமொழியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இணையதளம் எளிமையாக இருக்க வேண்டும்- வடிவமைப்பு மற்றும் பயன்பாடு இரண்டுக்குமே இது பொது விதி.

இணையதளங்கள் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்றும் சொல்லலாம். எளிமையாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கூட சொல்லலாம்- அதாவது வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டில் மட்டும் அல்ல, இணையதளத்திற்கான கருத்தாக்கமும் கூட எளிமையாக இருக்க வேண்டும். இப்படி இருக்கும் இணையதளங்கள் உங்களை புன்னகைக்க வைக்கும். சந்தேகம் இருந்தால், ’அடச்சீ என்னிடம் பேனா இல்லை’ என பொருள் படும் தலைப்பை கொண்ட "IDon'thavetheDamnPen" இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.

இந்த தளத்தில் அப்படி என்ன சிறப்பு என பார்ப்பதற்கு முன்பாக, இதன் தலைப்பு குறித்து ஒரு சில கருத்துக்கள்.

இந்த இணையதளத்தின் தலைப்பு ஒரு விதிமீறல் தான். ஏனெனில் இணையதளங்களுக்கான தலைப்பு சிறியதாகவும், எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக நீட்டி முழக்கி இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் முகவரி மறந்து போகும். டைப் செய்யும் போது தப்பும் தவறுமாக எழுத்துக்கள் வந்துவிழும்.

சுருக்கமாகச் சொன்னால் இணையதள முகவரி கச்சிதமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த தளத்தின் முகவரியை பார்த்தால் வாக்கியம் போல அல்லவா இருக்கிறது.

பொதுவாக இது போன்ற நீளும் முகவரிகளை தவிர்க்க வேண்டும் என்றாலும், இது போன்ற தளங்களுக்கு விதிவிலக்காக இத்தகையை வாக்கிய முகவரிகளை அனுமதிக்கலாம். ஏனெனில் இவற்றின் உள்ளடக்கத்தின் எளிமைக்கு அழகு சேர்ப்பதே இந்த முகவரி தான். எனவே ஒரு முரண் நகையாக, இணையதளம் எளிமையாக இருந்தாலும் அதன் நீள் தலைப்பை அனுமதிக்கலாம்.

சரி, இப்போது இந்த தளம் என்ன செய்கிறது என்று பார்க்கலாம். அதற்கு முன்னர் நீங்கள் எதையேனும் குறித்து வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? எனில் அந்த எண்ணத்தை டைப் செய்ய தயாராகுங்கள். மேலே சொன்ன தளம் அதற்காகத் தான் இருக்கிறது.

ஆம், இந்த தளத்தை உங்களுக்கான டிஜிட்டல் குறிப்பேடு. இதன் முகப்பு பக்கத்தில் இந்த குறிப்பேட்டை பார்க்கலாம். குறித்து வைக்க வேண்டிய தகவலை இதில் டைப் செய்ய வேண்டும். குறிப்பேட்டின் மேலே, எழுத்துருக்களை தேர்வு செய்வது உள்ளிட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. டைப் செய்து முடித்தவுடன், அந்த எண்ணம் பயனுள்ளது என நினைக்கிறீர்களா? உடனே கீழே உள்ள முகவரி கட்டத்தில் உங்கள் இ-மெயில் முகவரியை டைப் செய்தால் அந்த குறிப்பு உங்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்படும். அந்த அளவு முக்கியம் இல்லை என நினைக்கிறீர்களா? குறிப்பை சேமிக்காமல் வேறு வேலை பார்க்க சென்றுவிடலாம்.

அவ்வளவு தான் இந்த இணையதளம்.

ஒவ்வொரு முறை தனியே நோட்பேடை உருவாக்கி அதற்கு பெயர் கொடுத்து சேமிக்க வேண்டிய தேவை இல்லாமல் இந்த தளத்தில் நினைத்த நேரத்தில் குறிப்புகளை எழுதி வைக்கலாம்.

இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும் போது அல்லது பணியில் மூழ்கியிருக்கும் போது மனதில் தோன்றும் எண்ணங்களை குறித்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் பேனாவை தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. கைவசம் பேனா இல்லையே என தடுமாறவும் தேவையில்லை. இந்த டிஜிட்டல் குறிப்பேட்டை திறந்து டைப் செய்து விடலாம்- ஆக, தளத்தின் தலைப்பு சரியாக தான் இருக்கிறது இல்லையா?

இந்த தளத்தில் அது முன்வைப்பதை விட கூடுதல் அம்சங்கள் ஒன்று கூட கிடையாது. என்ன தேவையோ அதை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.நேரம் விரயமாதல், கவனச்சிதறல் எதுவுமே கிடையாது. இந்த வகை தளங்கள் பயனாளிகளுக்கும் சிறந்தவை. இணையத்தில் எல்லையில்லாமல் குவியும் தகவல்கள் , குழப்பத்தை ஏற்படுத்தி தகவல் சுமையில் தள்ளாட வைக்கும் நிலையில் கொண்ட நோக்கத்தில் மட்டுமே தெளிவாக இருக்கும் எளிமையான கருத்தாக்கத்திலான தளங்கள் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் அளிப்பவை. இதன் காரணமாகவே புத்துணர்ச்சியையும் தரக்கூடியவை.

இணையதளம் மற்றும் இணையச் சேவைகள் கண்டறிதல் சமூகமான 'பிராடக்ட் ஹண்ட்' ProductHunt தளத்தில் சமீபத்தில் இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டு கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெஸ்ட் மிஸ் அலெக்ஸ் எனும் மென்பொருளாலர் இந்தத் தளத்தை உருவாக்கி இருக்கிறார்.

’மீண்டும் ஒரு முறை மிக மிக அடிப்படையான இணையதளத்தை உருவாக்கி கைத்தட்டல் வாங்கியிருக்கிறேன்’ என மிஸ் அலெக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மீடியம் வலைப்பதிவில் இந்த தளம் உருவான விதம் பற்றியும் அவர் எழுதியிருக்கிறார். தன்னிடம் பணி நிமித்தமாக 500 இமெயில் குறிப்புகள் மற்றும் தனிப்பட்ட விதமாக 200 மெயில் குறிப்புகள் உள்ளதாகவும் இவை தவிர ஆப்பிள் நோட்ஸ் சேவையில் 230 குறிப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இத்தனை குறிப்புகள் இருந்தும் அவற்றில் பெரும்பாலானவற்றை மீண்டும் ஒரு முறை கூட திரும்பி பார்த்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நம்மில் பலருக்கும் கூட இந்த அனுபவம் இருக்கலாம் தானே!

குறிப்புகளை டைப் செய்து தானாக அவற்றை சேமித்து வைக்கும் வசதி இருக்கும் தைரியம் தான் காரணம் என்கிறார். மனதில் தோன்றுவதை எல்லாம் குறித்து வைத்துவிட்டு பின்னர் ஒருபோதும் அவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பதில் என்ன பயன்?

இந்த கேள்வியுடன், இணையத்தில் குறிப்பு எடுப்பதை மாற்றி அமைக்கும் வகையில், இந்த டிஜிட்டல் குறிப்பேடு தளத்தை உருவாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தளம் பேனா இல்லாமல் குறிப்பெடுக்க உதவுவதோடு, அதை தானாக சேமிக்கும் வசதி இல்லாததால், நினைவுப் படுத்திக்கொள்ள வேண்டிய குறிப்பு எனில் அதை மெயிலில் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார்.

மிஸ் அலெக்ஸ் இதே வகையான எளிமையான தளங்களை உருவாக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவருடைய பிராடக்ட் ஹண்ட் பக்கத்தில் இதற்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது; https://www.producthunt.com/@justmissalex

அந்த பட்டியலில் எனக்கு மிகவும் பிடித்தது ஹெல்ப் கென்யா நாட் கான்யே எனும் தளம். கடனில் மூழ்கி உதவி கேட்ட பாப் பாடகர் கான்யே வெஸ்ட்டிற்கு உதவுவதை விட கென்யா நாட்டிற்கு உதவ வேண்டும் எனும் செய்தியை வலியுறுத்தும் இணையதளம்.

இவர் உருவாக்கியுள்ள மற்றொரு தளம், முடிவெடுப்பதில் தயக்கம் ஏற்படும் போது இரண்டு விஷயங்களை ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்ய உதவும் தளமாகும்:

இந்த பட்டியலில் உள்ள மேலும் சில அருமையான இணையதளங்கள் பற்றி தனியே குறிப்பிடலாம். எல்லாமே எளிமையை ஆதாரமாக கொண்ட தளங்கள். சில சுவாரஸ்யமானவை. சில பயனுள்ளவை. அவற்றை நீங்களே பார்த்து தெரிந்து கொள்வது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

எல்லாம் சரி, எளிமையான இணையதளங்களின் கருத்தாக்கத்தில் உடன்படுகிறீர்களா? உங்களை கவர்ந்த எளிமையான தளம் எது? பகிர்ந்து கொள்ளலாமே!

தகவல் திங்கள் தொடரும்...

தகவல் திங்கள் முந்தைய பதிவுகள்:

இணையத்தில் படித்தால் மட்டும் போதுமா? கொஞ்சம் ஆய்வும் தேவை நண்பர்களே!

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதுமையான நினைவூட்டல் சேவை!