இந்தியப் பெண் தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்கு எது தடையாக உள்ளது?

ஸ்டார்ட் அப்களின் புனித ஸ்தலமான சிலிக்கான் வேலிக்கு பெண் தொழில்முனைவோர் குழு பயணித்தனர். அங்கிருந்து திரும்புகையில் தாங்கள் ஒரு கலாச்சாரத்தை கண்டறிந்ததுடன் அதைத் தங்களது சக ஆண்களிடமும் கொண்டு சேர்க்க விரும்பினர்.

0
”பெண்கள் உயரத்தை எட்ட அதிகம் போராட வேண்டிய சூழல் உள்ளது. அத்துடன் தொழில்முனைவு என்கிற சவாலில் இணையும்போது வெற்றியை எட்டுவது மேலும் அதிக கடினமாகிறது,”

என்றார் ஸ்டோர்மோர் ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் நிறுவனரான பூஜா கொத்தாரி. Anita Borg Institute (ABI) India-வின் flagship போட்டியில் வெற்றிபெற்ற மற்ற ஒன்பது Women Entrepreneur Quest (WEQ) 2016 வெற்றியாளர்களுடன் இணைந்து பூஜா, கலிஃபோர்னியாவிலுள்ள சிலிக்கான் வேலிக்குப் பயணம் மேற்கொண்டார். 

தொழில்நுட்ப நிறுவனங்கள், வென்ச்சர் கேப்பிடலிஸ்ட் மற்றும் வேலி ஸ்டார்ட் அப்கள் ஆகியவை குறித்து அறிந்துகொள்வதற்காகவே இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் திறன் மேம்படுத்தும் வொர்க்ஷாப்களில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்துகொள்வதற்காகவும் அவர்களது பயணம் வாயிலாக ஆண், பெண் என அனைத்து இந்திய தொழில்முனைவோரும் எவ்வாறு பலனடையமுடியும் என்கிற நுண்ணறிவையும் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதற்காக யுவர் ஸ்டோரி அவர்களை அணுகியது.

முற்றிலும் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களாயினும் இந்த 10 பெண்களும் நேர்காணலில் விவாதிக்கப்பட்ட பெரும்பாலான விஷயங்களில் ஒத்த கருத்தை வெளிப்படுத்தினர்.

பெண் முன்மாதிரிகளுக்கான தேவை

இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு வலுவான முன்மாதிரிகள் தேவைப்படுகிறது என்கிற கருத்தை அனைவரும் வலியுறுத்தினர். 

”உதவி பெற்றுக்கொள்ளவும் வழிகாட்டுதல் பெறவும் இந்தியாவில் வெகு சில பெண் தொழில்முனைவோரே உள்ளனர்.” என்றார் Anaxee Technologies நிறுவனர் ஆர்த்தி அகர்வால். 

பூஜா உள்ளிட்ட மற்ற தொழில்முனைவோரும் இந்தக் கருத்தை ஆமோதித்து, 

“தொழில்முனைவராக இருந்தாலும் அல்லது பெரிய கார்ப்பரேட் அதிகாரியாக இருந்தாலும் பெண்கள் மற்ற பெண்களுக்கு ஊக்கமளிக்கவேண்டும்.” என்றனர்.

அவர்களது பயணத்தில் முன்மாதிரியான நபர்கள் இல்லாதது குறித்த வருத்தத்தை உதாரணத்துடன் பலர் பதிவு செய்தனர். VC நிறுவனமான ’சார்லஸ் ரிவர் வென்சர்ஸ்’ நிறுவனத்தை இந்தப் பெண்கள் அணுகியபோது, “பெரிய அளவில் திட்டத்தை வெளிப்படுத்துவதில் 10 நபர்களும் தீவிரமாக இல்லை.” என்றும், 

”இந்தியப் பெண் தொழில்முனைவோர் ஒரு மில்லியன் டாலர் எதிர்பார்க்கும் அதே வணிகம் மற்றும் செயல்முறைக்கு ஐந்து மில்லியன் டாலர்களாக எங்கள் தரப்பு எதிர்பார்ப்பை நாங்கள் முன்வைத்திருப்போம்.” என்று சார்லஸ் ரிவர் வென்சர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), WEQ 2016-ன் ஸ்பான்சர்களில் ஒருவர். தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப தொழில் மேம்பாடு வாரியத்தின் (NSTEDB) இயக்குனர் மற்றும் துணைத் தலைவர் அனிதா குப்தா இந்தப் பெண் தொழில்முனைவோருடன் இணைந்திருந்து உந்துதலளித்தார். “இளம் தலைமுறையினர் தங்களது திறனை உணர்ந்துகொள்வதற்கு மூத்தவர்கள் உதவவேண்டும் என்பதற்கு WEQ-வில் அவர் செயல்பட்டது ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது.” என்றார் பூஜா.

இன்றுவரை இது ஆண்களின் உலகமே!

அவர்களது பயணத்திற்கு முன்பு வேலியிலுள்ள பெண் தொழில்முனைவோர் சிறப்பான நிலையில் இருப்பார்கள் என்கிற மறைமுக அனுமானம் இருந்தது. வேலியில் நிலவிய இகோசிஸ்டத்தைப் பொருத்தவரை சற்று முதிர்ச்சியாக காணப்பட்டாலும் அங்குள்ள சவால்களை இந்தியப் பெண்களும் சந்திப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

”அங்கும் பாரபட்சம் நிறைந்த அணுகுமுறையை பெண்கள் எதிர்கொள்ளவேண்டிய சூழல் இருந்தது. ஆணாதிக்க சூழல் ஆழமாக பதிந்திருப்பதையே அவை காட்டுகிறது.” என்றார் க்ரீனோபியா நிறுவனத்தின் நிறுவனர் மயூகினி பாண்டே. 

மற்றவர்களும் இதை ஆமோதித்தனர். அகயா நிறுவனர் மற்றும் இயக்குனர் ஸ்ரிஷ்டி சாஹு கூறுகையில், “உலகம் முழுவதும் ஆண்களின் நெட்வொர்க் சிறப்பாக உள்ளது. இந்தியாவைப் போலவே சிலிக்கான் வேலியிலும் காணப்படுகிறது. பெண்களிடையே நெட்வொர்கிங் மற்றும் அறிமுகங்கள் போதுமானதாக இல்லை.” என்றார்.

வழிகாட்டிகளை எளிதாக அணுகமுடிவதில்லை. பெண் முதலீட்டாளர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். இப்படிப்பட்ட சப்போர்ட் சிஸ்டம்தான் இந்தியாவில் காணப்படுகிறது. இவை நிதியை உயர்த்தும் திறனிலும் முன்மாதிரிகளிடமிருந்து கற்றுக்கொள்ளும் திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அனைத்து தொழில்முனைவோரும் கருதினர். ஆனால் வேலியில் இப்படிப்பட்ட குறைகள் இன்றி சிறப்பான சூழல் உள்ளதாக தெரிவித்தனர்.

பெண் தொழில்முனைவோர் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எவ்வாறு சிறப்பாக எதிர்கொள்ளலாம் என்பது போன்ற சில விஷயங்களில் மாற்றுக் கருத்துக்களும் காணப்பட்டது. தொழில்முனைவோராக தகுதி பெறுவதற்கு ‘பெண்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவதே அசௌகரியமாக இருப்பதாகவும் சிலர் கருதினர்.

”பெண்களைத் தொழில்முனைவோர்களுக்கு எதிராக பாரபட்சமில்லாத ஒரு கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும். எனவே அது குறித்து பேசுவது அவசியம். ஆனால் அதை எப்படி பேசுகிறோம் என்பதுதான் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆண்கள் மற்றும் பெண்களை எதிரெதிராக முன்னிறுத்தி பேசினால் அது மேலும் பிரிவினையை வலுவாக்கும். பாலின பாரபட்சத்தை மேலும் ஊக்குவிக்கும். மாறாக ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரு கூட்டு நிலைப்பாட்டை எடுத்தால் அது பலனளிக்கக்கூடியதாக அமையும்.” என்றார் மயூகினி.

பெண் தொழில்முனைவோர் என்கிற வார்த்தை தேவையற்றதா?

மயூகினி மேலும் ஆராய்ந்து குறிப்பிடுகையில், “இந்தியா மற்றும் அமெரிக்காவில் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல பெண்கள், பெண் தொழில்முனைவோர் சந்தித்த சவால்கள் குறித்து உரையாட மறுக்கின்றனர்,” என்றார். உரையாடல் தொழில்முனைவோர் குறித்ததாக இருக்கவேண்டுமே தவிர ஆண் அல்லது பெண் என்பது குறித்து இருக்கக்கூடாது என்று சில பெண்கள் தெரிவித்தனர்.

”நிஜ உலகில் இருக்கும் பெண் கதாநாயகிகளின் கதைகளை எடுத்துரைத்து பெண்களை ஊக்குவிக்கவேண்டும். இருப்பினும் ஆண்களை முற்றிலும் தவிர்த்துவிடாமல் அவர்களையும் ஒன்றிணைத்த உரையாடலாக அவை அமையவேண்டும்.” என்றார் ஸ்ரிஷ்டி. யுவர் டாஸ்ட் (YourDost) இணை நிறுவனரான ரிச்சா சிங் கூறுகையில், ”ஒட்டுமொத்த கலவையான குழுவாகவே நாங்கள் பார்த்தோம். வெறும் பெண் தொழில்முனைவோர்களை அல்ல. பெண்கள் அதிகம் ஒருங்கிணைய வேண்டும் என்பதே நாங்கள் கற்ற மிகப்பெரிய பாடமாகும்.” என்றார்.

பெண் தொழில்முனைவோர் பெரிய இலட்சியங்களைக் கொண்டு தங்களையும் தங்களது நிறுவனத்தையும் சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சிலர் குறிப்பிட்டனர். ”நமக்கான ஒரு ப்ராண்டையும் நமது தயாரிப்பிற்கான ப்ராண்டையும் எவ்வாறு உருவாக்கிக்கொள்வது எனபதை நாம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்.” என்றார் சரல் டிசைன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சுஹானி மோஹன்.

பெண்கள் மட்டுமே பங்குபெரும் ஃபோரம்களுக்கான தேவையில்லை என்று சிலர் நினைத்தபோதும் பெண்களின் தொழில்முனைவு கனவை ஊக்குவிக்க அனைவரும் இடம்பெற்றிருக்கும் குழு மட்டுமே போதாது என்று மற்றவர்கள் குறிப்பிடுகின்றனர். உதாரணத்திற்கு ஊர்ஜன் க்ளீண்டெக் (Oorjan Cleantech) நிறுவனர் ரோலி குப்தா குறிப்பிடுகையில் ’பெண்கள் மட்டுமே’ பங்கேற்றால் ஒரு பயமற்ற சூழலில் பெண்களுக்கு வழிகாட்டுதல் கிடைக்கும்.” என்றார்.

தோல்வி பயம் உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஒருவேளை தோல்வியடைந்தால் தொழில்முனைவோர்கள் (ஆண் மற்றும் பெண்) தவறு இழைத்துவிட்டதாகவே பார்க்கப்படுகின்றனர். 

”அப்படிப்பட்ட களங்கம் எதுவும் அங்கு காணப்படவில்லை. இதனால் அவர்கள் அதிக ரிஸ்க் எடுக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.” என்றார் பூஜா.

மாற்றம்

பயணத்தின் தொடக்கத்தில் யாருக்கும் பரிச்சயமில்லாத நபர்களாக இருந்து இறுதியில் தங்களுக்கான ஒரு சப்போர்ட் சிஸ்டத்துடன் மாறிவிடுவதாக பல்வேறு தொழில்முனைவோர் குறிப்பிட்டனர். அவர்கள் சந்தித்தவர்களில் அனிதா குப்தா போன்ற பலர் அவர்களுக்கு உத்வேகமளித்துள்ளனர். ஆர்த்தி குறிப்பிடுகையில், “WEQ வெற்றியாளராக தற்போது 10 சக தொழில்முனைவோரை என்னால் அணுக முடியும். இந்த சமூகம் மெல்ல மெல்ல வளர்ச்சியடையும்.” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : ராகினி ஸ்ரீகிருஷ்ணா