அண்டார்டிகா பயணம் மேற்கொண்டு பருவநிலை மாற்றம் பற்றி தெரிந்து கொண்ட இளைஞர்கள்!

0

அண்டார்டிகா பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு விரைவாக உருகி வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

இந்த கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகுவது 2007-ம் ஆண்டு முதல் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக ’நேச்சர்’-ல் வெளியான சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் கடல் நீரின் மட்டம் உயர்ந்து வருகிறது. இது உலக வெப்பமயமாதலின் நேரடித் தாக்கமாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றவேண்டிய அவசியம் இருப்பதை இந்த கண்டம் உணர்த்துகிறது. கிரகத்தின் எதிர்காலம் குறித்த பல படிப்பினைகளையும் இது வழங்குகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹிமானி சிங்கால், சித்தார்த் மகேஸ்வரி, ரிஷப் கந்தேல்வல் ஆகிய மூவரும் பருவநிலை மாற்றம் குறித்து சிறப்பாக புரிந்துகொள்ள அண்டார்டிகாவிற்கு பயணம் மேற்கொண்டனர். இவர்கள் மூவருக்கும் வயது 26. 18 நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 90 பேரில் இவர்களும் அடங்குவர்.

இதற்கு முன்பு இழைக்கப்பட்ட தவறுகளை கவனித்து அதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே இந்த 90 பேரின் ஒற்றை நோக்கமாகும்.

”இந்த பழமையான கண்டம் ஒரு மிகச்சிறந்த ஆசான் ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்திருக்கும் என்பதை அண்டார்டிகா நமக்கு சுட்டிக்காட்டுகிறது. இந்த கண்டங்களில் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் தாக்கம் சுட்டிக்காட்டப்படுகிறது. மக்கள் வாழும் இடங்களில் அவர்கள் சூழலை சீரழித்துவிடுகின்றனர். அவற்றை இயற்கை திரும்பப்பெற அவகாசம் தேவைப்படும். அந்த அவகாசத்தைக் மக்கள் கொடுப்பதில்லை. காற்று, நிலம், நீர் ஆகியவற்றின் தூய்மையான வடிவம், இயற்கையின் அமைதியான ஒலி போன்றவை நமது செயல்களை மறுமதிப்பீடு செய்வதற்கான தளத்தை வழங்குகிறது,” என ஹிமானி விவரித்தார். 

’ஷெல் இண்டியா’ நிறுவன ஊழியர்களான இம்மூவருடனும் ஷெல் முதன்மை பருவநிலை மாற்ற ஆலோசகரான டேவிட் ஹோன் இணைந்துகொண்டார். 2003-ம் ஆண்டில் இருந்து அண்டார்டிகாவிற்கு பயணங்களை ஏற்பாடு செய்யும் லாப நோக்கமற்ற அறக்கட்டளையான '2041 ஃபவுண்டேஷன்' உடன் இணைந்து இவர் மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வுகாணும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை ஏற்றுக்கொள்ளும் சமூகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சாம்பியன்களுடன் தொடர்பில் இருந்து அவர்களுக்கு உந்துதலளிக்கவேண்டும் என்பதே நோக்கமாகும்.

“பொதுமக்களிடயே பருவநிலை மாற்றம் தொடர்பான சரியான புரிதல் இல்லை. இதனால் இது தொடர்பான விழிப்புணர்வும் இல்லாமல் போனது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண விரும்பினேன். இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாட்டில் உணவு, இருப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்குக் கூட மக்கள் போராடவேண்டிய சூழல் உள்ளது. இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் மேற்கத்திய நாடுகளின் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,” என ரிஷப் விவரித்தார்.

பயணம்

இந்த பயணத்திற்கு முன்பு இக்குழுவினர் முறையான பயிற்சியில் ஈடுபட்டனர்.

”நாங்கள் பயணம் மேற்கொண்டபோது அந்தப் பகுதி நமக்கு சொந்தமானதல்ல என்பதால் நாங்கள் அந்த கண்டத்தையும் அதிலுள்ள பல்லுயிர்களையும் மதித்தோம். எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது, குப்பைகளை தூக்கியெறியக்கூடாது போன்றவற்றில் உறுதியாக இருந்தோம். நுண்ணுயிர்களையும் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக ஆடையின் வெளிப்புறத்தையும் ஷூக்களிலும் உள்ள கிருமிகளை அழித்துவிட்டோம்,” என்றார் ரிஷப். அவர் கூறுகையில்,

”அண்டார்டிகாவில் உள்ள பாசியில் நடக்காமல் பார்த்துக்கொண்டோம். ஏனெனில் இவை மீண்டும் வளர நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். இந்தப் பகுதி தற்போது இருக்கும் நிலையிலேயே வருங்கால பயணிகளுக்கும் இருக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் சென்று திரும்பியதற்கான தடங்களே இல்லாமல் பார்த்துக்கொண்டோம். ஒவ்வொரு மனிதனும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொண்டு ஒவ்வொரு பகுதியையும் பராமரித்து வந்தால் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் நாம் எளிதாக வெல்லலாம் என்பதைத் தெரிந்துகொண்டோம்,” என்றார்.

இதில் பயணிப்பவர்கள் ட்ரேக்ஸ் பேசேஜ் வழியாகச் செல்லவேண்டும். இது தென்னமெரிக்காவின் கேப் ஹார்ன் மற்றும் அண்டார்டிகாவின் தென் ஷெட்லாண்ட் தீவுகளுக்கு இடையே இருக்கும் உலகின் கடுமையான நீர்நிலைப் பகுதியாகும்.

பயணிகள் மேம்படுத்தப்பட்ட இண்டக்ரேடட் ஹைட்ரோபைரோலிசிஸ் மற்றும் ஹைட்ரோகன்வர்ஷன் (IH2) பயோ எரிபொருளை பயன்படுத்தினர். இது கழிவுகளை எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் மரம், விவசாய எச்சம், பாசி, நீர் தாவரங்கள், செல்லுலோசு கழிவுகள் போன்ற பயோமாஸ் மூலப்பொருட்களை BS-VI க்ரேட் எரிபொருளாக மாற்றக்கூடியதாகும். இது ஷெல் டெக்னாலஜி செண்டர் பெங்களூருவில் (STCB) உருவாக்கப்பட்டது. அண்டார்டிகா பனியில் இருந்து சுத்தமான நீரை எடுக்க இந்த பயோ எரிபொருள் பயன்படுத்தப்பட்டது.

”புதுப்பிக்கப்பட்ட ஆற்றல்களை தொலைதூர மற்றும் மோசமான சூழல்களிலும் உருவாக்கமுடியும் என்பதை வெற்றிகரமாக எடுத்துக்காட்டியுள்ளது,” என்றார் ஹிமானி.

2041 ஃபவுண்டேஷன்

1991-ல் அண்டார்டிகாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஒப்பந்தத்தில் 53 நாடுகள் கையொப்பமிட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி அண்டார்டிகாவில் 50 ஆண்டுகள் எண்ணெய் ஆய்வு மற்றும் சுரங்கப் பணிகள் தடைசெய்யப்பட்டது. 50 ஆண்டுகள் கழித்து 2041-ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் மறு பரிசீலனை செய்யப்படும்.

எனவே வட துருவம், தென் துருவம் இரண்டிலுமே கால் பதித்த முதல் நபரான ராபர்ட் ஸ்வான் 2041 ஃபவுண்டேஷனை நிறுவி சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் அண்டார்டிகாவை பாதுகாப்பதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவரது நோக்கத்தை 2041-ம் ஆண்டையும் தாண்டியும் பாதுகாக்கும் தலைவர்களை உருவாக்க விரும்பினார்.

2016 ஐக்கிய நாடுகளின் பாரீஸ் ஒப்பந்தம் தொழில்மயமான காலகட்டதிற்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் இரண்டு டிகிரி வெப்பமயமாதலை குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதனை சாத்தியப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதே 2041 ஃபவுண்டேஷனின் நோக்கமாகும். முறையான தீர்வுகளையும் வாழ்க்கைமுறை மாற்றங்களையும் பின்பற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும். இந்த மாற்றத்தை நோக்கி மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் இந்த ஃபவுண்டேஷன் ஈடுபட்டுள்ளது.

கலிஃபோர்னியாவின் ஆபர்ன் பகுதியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள 2041 கடந்த 14 ஆண்டுகளில் 22 பயணத்தில் பங்கேற்ற 3,500 பயணிகளுக்கு உந்துதலளித்துள்ளனர். 2041 வாழ்க்கைமுறை, வணிகம் மற்றும் கல்வி பிரிவுகளில் தீர்வுகளை உருவாக்கி மக்களை கூடுதல் கார்பன் வெளியேற்றம் இல்லாத எதிர்காலத்தை நோக்கி இட்டுச்செல்ல விரும்புகிறது.

”நம் அன்றாட வாழ்வில் க்ரீன் மற்றும் க்ளீன் எனர்ஜி பயன்பாடு, ரெட்யூஸ், ரீயூஸ், ரீசைக்கிள் ஆகிய மூன்றையும் நடைமுறைப்படுத்துதல், கார்பன் கவுண்டிங், மரங்களை மீண்டும் நடும் முறையை ஊக்குவித்தல், பல்லுயிர்களை பாதுகாத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும்,” என்று சித்தார்த் விவரித்தார்.

ஷெல்லின் Fuelling millennials போன்ற பயணங்களின் மூலம் 2041 ஃபவுண்டேஷன் ப்ரொஃபஷனல்கள், மாணவர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் என பல்வேறு பங்குதாரர்களுக்கு மனிதநடவடிக்கைள் அண்டார்டிகாவிற்கு ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறித்தும் கிரகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் உலகம் முழுவதும் மூன்று இ-பேஸ் ஸ்டேஷன்களை வெற்றிகரமாக நிறுவியுள்ளனர். இது ஆற்றல் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றுகிறது.

அடுத்தகட்ட திட்டம்

2041 போன்ற ஃபவுண்டேஷன்களின் முயற்சியும் ஷெல் போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் முக்கியம் என்றபோதும் அரசாங்கம், தொழில்துறை, தொழில்முனைவோர்கள் என அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைந்து கிளீனர் எனர்ஜி தீர்வுகளை புதுமையான விதத்தில் உருவாக்குவதும் முக்கியமானதாகும்.

ஆற்றல் நம் வாழ்வில் இன்றியமையாததாகும். இந்த வளத்திற்கான தேவை உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உலகளவிலான கார்பன் தடத்தை குறைக்க க்ளீன் மாற்றுகளை கண்டறியவேண்டிய அவசியம் நிலவுகிறது. 

ஷெல் நிறுவனத்தின் Energizing and Enabling Energy Entrepreneurs programme வாயிலாக டிடெக்ட் டெக்னாலஜிஸ், ஐஓஎன் எனர்ஜி, ஐஓட்ரெக், ட்ரேஷ்கான், ஓசஸ் பயோரென்யூவபிள்ஸ் போன்ற ஸ்டார்ட் அப்கள் நிகழ் நேர பைப்லைன் கண்காணித்தல், பாதுகாப்பான ஸ்மார்ட்டான கட்டமைப்பு மற்றும் வெளிப்புற பணியிடங்களை உருவாக்குதல், நகராட்சி திடக்கழிவுகளை வகைப்படுத்தும் பணியை தானியங்கிமயமாக்கல், பசுமை ரசாயனங்களை கழிவு நீரிலிருந்து மீட்டெடுத்தல், ஆற்றல் சேமிப்பு அமைப்புகளையும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பையும் உருவாக்குதல் போன்ற பல்வேறு தீர்வுகளில் பணியாற்றி வருகின்றனர்.

ஒருங்கிணைத்தல், புதுப்பித்தல், இணைத்தல் ஆகிய மூன்றையும் நம் வாழ்வில் ஒன்றுபடுத்தவேண்டும். அதாவது அன்றாட வாழ்வில் சிறு தீர்வுகளை ஒன்றிணைப்பது, க்ரீன் எனர்ஜி பயன்பாடு, மேற்கூரையில் சூரிய ஒளி தகடுகளை அமைப்பது, மரங்களை நடுவதையும் பாதுகாப்பதையும் நடைமுறைப்படுத்துதல், நதிகள் மற்றும் கடற்கரையில் இருந்து ப்ளாஸ்டிக்குகளை சுத்தப்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும்,” என்று நிறைவுசெய்தார் ஹிமானி.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா