கண் பார்வை குறைபாடுள்ள தமிழக மாணவி 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில் 96.6% பெற்று சாதனை! 

0

சுமாரான கண் பார்வை மட்டுமே உடைய எம்.வி.தர்ஷனா, இவருக்கு வலது கண்ணில் முழுமையாக பார்வை இல்லை. ஆனால் இந்த குறைபாடு அவரது முயற்சிகளை தடுக்கவில்லை. சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் பிரமாதமாக தேர்ச்சியாகி உள்ளார். மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் 96.6 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றிப்பெற்றுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்ஷனா.

பட உதவி: தி ஏசியன் ஏஜ்
பட உதவி: தி ஏசியன் ஏஜ்

தர்ஷனா, கிருஷ்ணகிரியில் உள்ள நலந்தா சர்வதேச பப்ளிக் பள்ளியில் படித்த ஒரு காமர்ஸ் மாணவி. மைக்ரோ கார்னியா என்ற கண் நோயால் பாதிக்கப்பட்டு, லேசான கண் பார்வை மட்டுமே உடையவர். பூதக்கண்ணாடி வைத்தே அவரால் புத்தகங்களில் உள்ள நோட்சுகளை படிக்கமுடியும். IANS இடம்பேசிய தர்ஷனா,

“எனக்கு என் கண்பார்வை குறைபாடு தடையாகவே இருந்ததில்லை. பூதக்கண்ணாடியை பயன்படுத்த என் மருத்துவர் ஆலோசித்தார். ஆறாம் வகுப்பு முதல் அப்படித்தான் படித்து வருகிறேன். என் கண்களுக்கு கூடுதல் அழுத்தம் தரும் என்ற காரணத்தால், கம்யூட்டரில் படிப்பதை நான் தவிர்த்துவிடுகிறேன்,” என்றார்.

தர்ஷனா தன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளதாக கூறினார். தான் நன்கு படிக்கவும், நல்ல மதிப்பெண்கள் பெறவும் அவர்களின் ஊக்கம் உதவியதாக தெரிவித்தார். பள்ளி நிர்வாகம் மற்றும் கண் மருத்துவர் உதவியுடன், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினார் தர்ஷனா. இந்தியா டுடே பேட்டியில் பேசிய தர்ஷனா,

“நான் சந்தோஷமாக இருக்கிறேன். நான் எதை செய்தாலும் அதை சிறப்பாக செய்ய நினைப்பேன். அதனால் 12-ம் வகுப்பு தேர்வுக்கு தயார் ஆக தொடங்கியதுமே அதில் சிறப்பாக தேர்வாக வேண்டுமென்று முடிவெடுத்தேன். தீவிரமாக அதற்கு உழைத்தேன்.”

தன்னை போல கண் பாதிப்புள்ள மற்ற நோயாளிகளின் விவரத்தை தன் மருத்துவர்கள் மூலம் தெரிந்து கொண்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி தெரிந்து கொள்வார் தர்ஷனா. தன் பிரச்சனைக்கு பூர்ண குணமளிக்கும் சிகிச்சை முறைகள் இதுவரை இல்லை என்றும் அப்படி யாரேனும் குணமடைந்திருந்தால் அது பற்றி தான் தெரிந்து கொள்ள இதை செய்வதாக கூறுகிறார்.

தர்ஷனா தமிழ்நாட்டிலே தங்கி மேல்படிப்பை தொடர ஆசைப்படுகிறார். சென்னையில் உள்ள நல்ல கல்லூரியில் பி.காம் படிக்க திட்டமிட்டுள்ளார். கர்னாடக இசை கற்கவும் ஆசை இருப்பதாக கூறுகிறார். 

கட்டுரை: Think Change India