டிஜிட்டல் வடிவில் ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி?

வண்டி ஓட்டும்போது டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி.புக்  கையில் இல்லையா..? கவலை படாதீங்க... உங்கள இனி டிராபிக் போலீஸ் பிடிக்க மாட்டாங்க. மொபைலை எடுத்து டிஜிட்டல் வடிவில் ஆவணங்களை காட்டிவிட்டு ஃப்ரீயாக வண்டிய ஓட்டிச் செல்லுங்கள்! 

0

வாகன சோதனை செய்யும் போது, இனி ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆர்.சி சான்றிதழை டிஜிட்டல் வடிவில் காண்பித்தாலே போதுமானது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது. டிஜிலாக்கர் இணையதளம் மற்றும் 'எம்-பரிவாஹன்' 'mParivahan' செயலி மூலம் இந்த ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பெற்றுக்கொள்ளலாம்.

கடந்த 2015 ம் ஆண்டு மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தது. அரசு நிர்வாகம் முதல் பயனாளிகளுக்கான சேவை வரை அனைத்தையும் டிஜிட்டல் வடிவில் வழங்கும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இணைய சேமிப்பு வசதியான டிஜிலாக்கரும் அறிமுகம் செய்யப்பட்டது.

டிஜிட்டல் பெட்டகம் என சொல்லக்கூடிய டிஜிலாக்கரில் சான்றிதழ் மற்றும் முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பாதுகாத்து வைக்கலாம். மதிப்பெண் சான்றிதழ், ஆவணங்கள், பேன்கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றை இதில் சேமித்து வைக்கலாம். ஆவணங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் நகலாக சேமிக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட துறை மூலமாக டிஜிட்டல் வடிவிலும் பெறலாம். இவற்றுக்கு இ-சிக்னேச்சர் பாதுகாப்பு அளிக்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.

முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, அவற்றை காகித வடிவில் கையில் எடுத்துச்செல்லும் தேவையையும் இல்லை. இந்த ஆவணங்களே நேர்முகத்தேர்வு போன்றவற்றில் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதே போலவே வாகனங்களுக்கான ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆர்.சி புக் போன்ற ஆவணங்களையும் டிஜிட்டல் வடிவில் பயன்படுத்த வழி செய்யப்பட்டது.

இதே போலவே, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உருவாக்கிய ஸ்மார்ட்போன்களுக்கான mParivahan செயலியிலும், டிஜிட்டல் வடிவில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சேமித்து வைத்து பயன்படுத்தும் வசதி அளிக்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் ஆவணங்களை வாகன சோதனையின் போது ஏற்றுக்கொள்ள வேண்டும் என அண்மையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. 

வாகன சோதனையின் போது இவை ஏற்கப்படுமா? என்பது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் வந்ததை அடுத்து இது குறித்த அறிக்கையை அமைச்சகம் வெளியிட்டது.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 படி, காகித ஆவணங்கள் போலவே, டிஜிலாக்கர் மற்றும் எம்-பரிவாஹன் டிஜிட்டல் ஆவணங்கள் சட்டப்பூர்வமாக செல்லும் என அந்த குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் இந்த டிஜிட்டல் ஆவணங்களை ஏற்றுக்கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஜிலாக்கர் பயன்பாடு

டிஜிலாக்கர் மூலம் டிஜிட்டல் வடிவில் ஓட்டுனர் உரிமம் பெற, இந்த சேவையில் கணக்கு இருக்க வேண்டும். இல்லை எனில் புதிதாக ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம். அதன் பிறகு, டிஜிலாக்கர் இணையதளத்தில் நுழைந்து (digilocker.gov.in ) அளிக்கப்படும் ஆவணங்கள் எனும் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து, ஆவணங்களை எடுக்க எனும் வசதியை கிளிக் செய்து சாலை போக்குவரத்து துறையை தேர்வு செய்து, ஆவண வகையில் ஓட்டுனர் உரிமத்தை தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களை சமர்ப்பித்தால், டிஜிட்டல் வடிவத்தை பெறலாம்.

பின்னர் டிஜிலாக்கரில் இந்த ஆவணத்தை பார்வையிட்டு சேமித்து வைத்துக்கொள்ளலாம்.  டிஜிலாக்கர் இணையதளம் தவிர செயலி வடிவிலும் இருக்கிறது. செயலியிலும் இதே முறையில் டிஜிட்டல் ஆவணத்தை பெற்றுக்கொண்டு பயன்படுத்தலாம்.

mParivahan செயலி

இதே போலவே பரிவாஹன் செயலியிலும் டிஜிட்டல் உரிமம் பெறலாம். முதலில் பிளேஸ்டோரில் இருந்து இந்த செயலியை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, இதில் ஓட்டுனர் உரிமம் அல்லது ஆர்சி ஆவணம் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அப்போது உரிய எண்ணை சமர்பிக்க வேண்டும். பின்னர் டிஜிட்டல் வடிவில் ஆவணம் தோன்றும்.

இந்த ஆவணத்தை வாகன சோதனையின் போது காண்பிக்கலாம். போக்குவரத்து காவலர்கள் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து இதை உறுதி செய்து கொள்வார்கள்.

டிஜிட்டல் ஆவணம் தவிர இந்த செயலி போக்குவரத்து துறைக்கான பல்வேறு வசதிகளையும் அளிப்பது குறிப்பிடத்தக்கது. 

mParivahan செயலி செயலியை தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.nic.mparivahan&hl=en

பேரிடர் பாதுகாப்பு

பொதுவாகவே டிஜிட்டல் வடிவில் ஆவணங்களை சேமித்து வைப்பது மிகவும் பாதுகாப்பானது என கருதப்படுகிறது. ஏதேனும் காரணத்தால் ஆவணம் தொலைந்துவிட்டால் கூட, டிஜிட்டல் வடிவம் கைகொடுக்கும். மேலும் புயல் வெள்ளம் போன்ற பேரிடர்களின் போதும், காகித வடிவிலான ஆவணங்கள் பாதிக்கப்பட்டாலும் டிஜிட்டல் ஆவணம் கைகொடுக்கும். எனவே முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்க வேண்டும். டிஜிலாக்கர் இதற்கு வழி செய்கிறது. காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களையும் கூட டிஜிட்டல் வடிவில் சேமிக்க காப்பீட்டு ஆணையம் வழி செய்துள்ளது.

Related Stories

Stories by cyber simman