இந்திய சூழலியல் சுற்றுலா துறையில் அசத்தும் இரு அமெரிக்கர்கள்!

1

இந்தியாவின் பெரும்பாலான பகுதியில் வெப்பம் சுட்டெரிப்பதால், சுற்றுலாப் பயணம் என்று யோசிக்க ஆரம்பிக்கும்போது, வடக்குப் பகுதியில் உள்ள குளிர்மிகு மலைக் காற்றும், அமைதியானச் சூழலும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அப்படி ஓர் உயர்ந்த மலைச் சூழலை அனுபவிப்பதுடன், சூழலியல் பாதுகாப்புடன் மலையேற்றம் உள்ளிட்ட சாகசங்களுக்கும் அழைத்துச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் 'வாயஜர்' (Voygr) நிறுவனர்கள்.

பேஸாத் லாறி மற்றும் எலிஜா மன்றோ ஆகியோர் இணைந்து 2014-ல் வாயஜர் நிறுவனத்தைத் தொடங்கினர். சூழலியல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமான சாகசங்கள், கைடுகளுக்கும் மலைவாழ் சமூகத்துக்கும் உரிய வாழ்வாதாரம், மலையேற்ற சமூகத்திடையே வலுவான பிணைப்பு உள்ளிட்ட நோக்கங்களையே முக்கியக் கொள்கைகளாகக் கொண்டு உருவானது வாயேஜர். மலையேற்ற ஆர்வலர்களான இவ்விருவரும் இந்திய விண்வெளித் திட்டத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். 2012-ம் ஆண்டு சிக்கிமில் மலையேற்றத்தின்போது ஒரு கைடு உடன் சுவாரசியாமாக பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில்தான் வாயஜர் குறித்த திட்டம் சட்டென உதயமானது. இந்நிறுவனத்தின் சி.இ.ஓ. பேஸாத் கூறும்போது, "உங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்?" என்று அந்த வழிகாட்டியிடம் கேட்டேன். எல்லாரும் கேட்கும் வழக்கமான அந்தக் கேள்விக்கு கொஞ்சமும் சளைக்காத அந்த கைடு, "மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்யும் இடைத்தர்களுக்கு 60 சதவீத கமிஷன் போக மீதம் 40 சதவீத தொகை கிடைக்கும்" என்றார்.

பேஸாத் மேலும் விவரிக்கும்போது, "ஓர் அமைப்பில் இடைத்தரகர்கள் மூலம் இழப்பு ஏற்படுவது சரியல்ல. இடைத்தரகர் முறையை தவிர்த்த அமைப்புகளில் ஏற்கெனவே பணிபுரிந்த அனுபவம் என்னிடம் இருந்தது. கமிஷன் என்ற சொல் இல்லாத சாகசப் பயணத் துறையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தத் துறையைப் பற்றி ஓராண்டுக்கு மேலாக ஆய்வு செய்தேன். 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் கிளின்டன் ஃபெல்லோஷிப் செயல்பாடுகள் தொடர்பான எனது வேலையை துறந்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிவிட்டேன்" என்கிறார்.

2014-ல் எலிஜாவும் குழுவில் இணைந்த பிறகு, வாயேஜர் முழு வடிவம் பெறத் தொடங்கியது. இந்நிறுவனம் கொண்டுள்ள இரண்டு முக்கியப் பகுதிகள்: Voygr.com என்பது மலையேற்றம், படகு ஓட்டுதல், மலைப் பயணங்கள், புகைப்படப் பயிலரங்குகள் ஆகியவை மூலம் வருவாய் ஈட்டுகிறது; இன்னொரு பகுதியைப் பார்த்தோமென்றால், இது ஒரு லாப நோக்கமற்ற நிறுவனமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. லீவ் நோ ட்ரேஸ் (Leave No Trace) மற்றும் இன்டர்நேஷனல் எகோ-டூரிஸம் சொசைட்டி (International Ecotourism Society) ஆகியவற்றின் அதிகாரபூர்வ பார்ட்னராகவும் செயல்படுகிறது. voygr.com வழியாக கட்டணம் செலுத்தி மேற்கொள்ளப்பட்டும் எல்லா பயணங்களுமே பாரம்பரிய முயற்சிகள் மூலம் கார்பன் வெளியீட்டைத் தவிர்ப்பதில் பங்கு வகிக்கப்படுகிறது.

நிலையானதும் நம்பகத்தன்மை மிக்கதுமான மலைச் சுற்றுலாவுக்கான ஒற்றை வழியாக கம்பீரமாக நிற்கிறது Voygr.com. வாயேஜரின் ஒவ்வொரு பயணத்திலும் உள்ளூர்வாசிகள், உள்ளூர் கைடுகள் கூட்டாளிகளாக அங்கம் வகிக்கின்றனர். இதன்மூலம் பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும் தரமான சுற்றுலா அனுபவம் கிடைத்திட வழிவகுக்கப்படுகிறது. உள்ளூர்களில் நம்பகமானவர்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு, பயணம் முழுவதுமே சரியான செலவில் தரமானதாக அமையச் செய்கின்றனர். அதேபோல், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செயல்படுவதுடன், அனைத்துத் தரப்பினருக்கும் சரியான வருவாயும் சம்பளமும் கிடைப்பதை பேஸாத், எலிஜா ஆகியோர் உறுதி செய்கின்றனர். லீவ் நோ ட்ரேஸ் மற்றும் இன்டர்நேஷனல் எகோ-டூரிஸம் சொசைட்டி ஆகியவை குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மலையேற்றத்திலும் கண்டிப்பாக பின்பற்றப்படுகிறது.

நேர்மையான அணுகுமுறையாலும், சுற்றுச்சூழலைக் காக்கும் வகையிலும் ஊரக மக்களின் வாழ்வாதாரத்துக்கு துணைபுரிந்து சூழலியல் சுற்றுலா (Ecotourism) துறையை மேம்படுத்துவதில் Voygr.org அக்கறையுடன் செயல்படுகிறது. அதாவது, தங்களுக்குக் கிடைக்கும் லாபத்தின் பெரும் பங்கினை சூழலியல் பாதுகாப்பு தொடர்பானவற்றில் மட்டுமே முதலீடு செய்கிறது. மலையேற்றங்களின்போது வெந்நீருக்காக விறகுகள் பெருமளவில் எரிக்கப்படுகின்றன. இதை முற்றிலும் தடுக்கும் வகையில், வாட்டர் ஃபில்டர்களில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த கிராமங்களுக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்து பயன்படுத்துவதற்கு அதிக செலவு பிடிக்கும். எனவே, உள்ளூர்வாசிகளில் பெரும்பாலானோர் காடுகளில் இருந்து மரக்கட்டைகளை எடுத்துப் பயன்படுத்துகின்றனர். சுற்றுலாப் பயணிகள் வரத்து மிகுதியான காலங்களில், லாட்ஜ்களிலும் தேநீர் கடைகளிலும் நாளொன்றுக்கு 100 கிலோவுக்கும் மேலான மரக்கட்டைகள் பயன்படுத்தப்படும். காடுகளின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் இது மிக மிக அதிகம். இந்த நிலையை மாற்றுவதில் வாயேஜர் சிரத்தையுடன் செயல்படுகிறது.

தங்குமிட வசதிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் கைடுகளுக்கு நேர்மையான கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் மிகக் கவனமாக செயல்பட்டு வருகிறது வாயேஜர்.

தங்களது சிறப்பு அம்சங்களின் எதிரொலியாக, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் வாயேஜர் முழுமையாக புரிந்துவைத்துள்ளது. குறிப்பாக, கட்டணங்களைச் சொல்லலாம். மலையேற்ற நிறுவனங்கள் பலவும் மிகக் குறைந்த கட்டணங்களில் பயணிகளை அழைத்துச் செல்கின்றன. கைடுகளுக்கும், தொழிலாளர்களுக்கும் குறைவான சம்பளம் கொடுப்பது, சுற்றுச்சூழலைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் அவை சமாளிக்கின்றன. இதனால், மலையேற்றப் பயணிகளுக்கு மிக மோசமான சேவைகளே அளிக்கப்படுகின்றன. ஆனால், எந்தச் சூழலிலும் வாயேஜர் தன் கொள்கைகளில் சமரசம் கொள்வது இல்லை. இயற்கை விரும்பிகள் அனைவருக்குமே அற்புதமானதும் மறக்க முடியாததுமான அனுபவத்தை வாயேஜர் தந்து வருவதாகச் சொல்கிறார் பேஸாத்.

வாயேஜரின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மிகக் கடினமான அம்சம் என்றால், அது ஊரகப் பயணத்தில் உள்ள இடர்பாடுகள்தான். அந்த சமூகத்தினர் அனைவரின் வாழ்வாதாரமும் சுற்றுலாப் பயணிகளை நம்பித்தான் இருக்கிறது. அதேவேளையில், சுற்றுலாப் பயணிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒத்துழைத்து, அவர்களது வாழ்வாதாரத்துக்கும் வகை செய்ய வேண்டும். "காலடித் தடங்கள் இல்லாமல் சுற்றுலாத் துறையே இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் நேர்மையான முறையிலும் மிகக் கவனமாக செயல்பட்டாலும், மாற்று வழிகள் நிறைய இருந்தாலும் கூட சாத்தியம் என்பது இல்லை. அதையும் மீறி மிகக் கட்டுப்பாட்டுடன் பேண வேண்டும் என்றால், ஒருபோதும் பயணிக்காமல் இருப்பதுதான் வழி. ஆனால், நம் பயணத்தின் காலடிச் சுவடுகளைக் கட்டுக்குள் வைக்கும்பட்சத்தில் சூழலியல் சுற்றுலா என்பது சாத்தியமாகும்" என்கிறார் அவர்.

பேஸாத், எலிஜா இருவரும் ஒரு முக்கியப் பாடத்தைக் கற்றுக்கொண்டு தங்கள் வேலைகளின் பரிணாமத்தை மேலும் வடிவமைத்துக்கொண்டனர். முதலில், எளிதில் அணுக முடியாத ரிமோட் பகுதிகளில் கைடுகளுடன் இணைந்து செயல்பட்டு, சுற்றுலா மூலமாக கிடைக்கும் வருவாய் தொகையை மறுவிநியோகம் செய்யலாம் என்று வாயேஜர் முடிவு செய்திருந்தது. ஆனால், தொடர்புவசதிகள் எதுவும் இல்லாத ஊரகப் பகுதிகளில் செயல்படுவது என்பது அப்போதையச் சூழலில் தொழில் முன்னேற்றத்துக்கு சரியாக இருக்காது என்பதை உணர்ந்தனர். அதன் காரணமாக, தொடர்புவசதிகள் உள்ள பகுதிகளில் மட்டும் ஏற்கெனவே உள்ள கைடுகளுடன் இணைந்து சிறப்பான சேவையை அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதன்பின், உள்ளூரில் மண்டல மேலாளர்களை நியமித்து, அவர்கள் மூலம் ரிமோட் பகுதிகளில் கைடுகளுக்கும் உள்ளூர் சமூகத்துக்கும் பிணைப்பை உருவாக்க நடவடிக்கைகள் தொடங்கின. அதாவது, அவர்களை சுற்றுலாத் துறையில் இணைக்கும் முயற்சிகள் இவை.

பாரம்பரியம், பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, நிலையான மலையேற்றங்கள் மற்றும் சுற்றுலா சேவையை அளித்து, சர்வதேச அளவில் மிகப் பெரிய சுற்றுலா நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்வதுதான் வாயேஜரின் இலக்கு. வாயேஜர் நினைவுகூர விரும்பும் ஒரு முக்கிய அம்சம்: "சர்வதேச பயணத் துறையை நம்மால் தடுத்திட முடியாது; எனவே, அதை சிறப்பாக மேம்படுத்துவோம்."

வாயேஜரில் மலையேற்றப் பயணத்துக்கு முன்பதிவு செய்யவும், அவர்களது பணிகள் குறித்து முழுமையாக அறியவும் நாட வேண்டிய வலைதளம் Voygr.com. சூழலியல் சுற்றுலா, சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயணங்கள் குறித்தும் மேலும் அறிய https://lnt.org மற்றும் http://www.ecotourism.org ஆகிய வலைதளங்களை நாடலாம்.

ஆக்கம்: கேஸ்ஸி டென்போ | தமிழில்: கீட்சவன்