விளையாட்டின் மூலம் குழந்தைகள் கற்க உதவும் பொம்மைகளை தயாரிக்கும் ’ஸ்கோலா டாய்ஸ்’

குழந்தைகள் விளையாட்டு வாயிலாக தொடர்ந்து முயற்சிப்பதன்  மூலம் வெற்றியடைய கற்க உதவுகிறது பெங்களூருவைச் சேர்ந்த ஸ்கோலா டாய்ஸ்

1

மிருதுளா ஸ்ரீதர், விகே மணிகண்டன், நிதீஷ் அகர்வால் ஆகியோரால் 2016-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஸ்கோலா டாய்ஸ் (Skola Toys). கல்வித் துறையில் செயல்படும் பெங்களூருவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் சுயநிதியில் இயங்குகிறது.

1992-ம் ஆண்டு குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்றும் அதற்கான தேவை இருப்பதையும் உணர்ந்தார் கல்வியாளரான கீதா ஸ்ரீதர். விளையாட்டு வாயிலாகவும் பொருட்களைத் தொட்டு உணர்தலின் மூலமும் குழந்தைகள் சிறப்பாக கற்பார்கள் என்று நினைத்தார். எனினும் கல்வி சார்ந்த பொம்மைகள் சந்தையில் இல்லை. குழந்தைகள் விளையாட்டு வாயிலாக கற்க அனுமதிக்கும் மாண்டசரி பள்ளிகளுக்கு கல்வி சார்ந்த தயாரிப்புகளை உருவாக்கத் தீர்மானித்தார்.

அவ்வாறு உருவானதுதான் ’கிடோ எண்டர்பிரைஸ்’ (Kido Enterprises). அவரது வீட்டிலேயே சிறியளவில் செயல்படத் துவங்கினார். பல வகையான கல்வி சார்ந்த பொம்மைகளை தயாரித்தது ’கிடோ’. இந்தத் தயாரிப்புகள் மாண்டசரி பள்ளிகளில் 500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

கீதாவின் மகள் மிருதுளா ஐஐஎம் பட்டதாரி. 2000-ம் ஆண்டு இவர் கிடோவில் இணைந்தார். சிக்கல்சந்திரா பகுதியில் இந்தக் குழுவினர் ஒரு உற்பத்திப் பிரிவைத் திறந்தனர். 2002-ம் ஆண்டு இவர்களது தயாரிப்புகள் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. மிருதுளாவின் கணவர் வி எஸ் மணிகண்டனும் ஐஐஎம் பட்டதாரி. நான்காண்டுகள் தகவல் தொழில்நுட்ப அனுபவம் பெற்ற இவர் 2004-ம் ஆண்டு கிடோ-வில் இணைந்துகொண்டார். 

மழலையர் பள்ளிகளுக்கு கல்வி சார்ந்த பொம்மைகளை விற்பனை செய்துவந்த சமயத்தில்தான் குழந்தைகள் எளிதாக கற்க வெவ்வேறு விதமான தீர்வுகள் வழங்கப்படுவதற்கான தேவை இருப்பதை மிருதுளாவும் மணிகண்டனும் உணர்ந்தனர்.

”ஐந்து வயது வரை உள்ள பருவம்தான் குழந்தைகள் அதிகம் கற்றுக்கொண்டு வளர்ச்சியடைத் துவங்கும் பருவம். மழலயர் பள்ளிக்கு செல்லவிருக்கும் குழந்தைகளுக்கு ஏற்றவாறான பாடதிட்டம் அவசியம் என்பதை உணர்ந்தோம். அதன் பிறகு 2012-ம் ஆண்டு க்ரெடோ (Kredo) உருவாக்கினோம். இது ப்ராண்டிங், ஆசிரியர் பயிற்சி, பாடதிட்டம் உருவாக்குதல் என அனைத்து நிலைகளிலும் பள்ளியுடன் இணைந்து செயல்பட்டு பல்வேறு தீர்வுகள் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது,” என்றார் மிருதுளா.

விளையாட்டில் கவனம் செலுத்துதல்

கிடோ பொம்மைகள் தயாரித்து வருகிறது. க்ரெடோ மழலயர் பள்ளிகளுக்கான தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஒரு குழந்தை பள்ளியில் கற்பது போலவே வீட்டிலும் தொடர்ந்து கற்றுக்கொண்டு வளர்ச்சியடைய வேண்டும் என்று இந்தத் தம்பதி விரும்பினர்.

அனைத்து பொம்மைகளும் சோதனை முறையில் கற்பதற்கான வாய்ப்பும் குழந்தைகளுக்கு பள்ளியில் கிடைக்கிறது. ஆனால் வீட்டில் குழந்தைகள் எவ்வாறு கற்பது என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேள்வியெழுப்புவதாக தெரிவித்தார் மிருதுளா.

குழந்தைகள் பத்தில் ஒரு பங்கு நேரம் மட்டும்தான் பள்ளியில் செலவிடுகின்றனர். மீதமிருக்கும் பெரும்பாலான நேரத்தை வீட்டில்தான் செலவிடுகின்றனர். இங்குக் குழந்தைகள் விளையாடுகின்றனர் அல்லது சாதனங்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர். சந்தையில் போதுமான பொம்மைகள் இருப்பினும் அவை குழந்தையின் வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இல்லை. எனவே பெற்றோர் இதற்கான தீர்வை தேடுகின்றனர்.

இந்த சமயத்தில்தான் மிருதுளாவும் மணிகண்டனும் ஒரு பள்ளியைத் துவங்கினார்கள். இதனால் பெற்றோர்களின் தேவை குறித்தும் சந்தையில் கிடைக்கக்கூடிய தீர்வுகள் குறித்தும் இவர்களால் அதிகம் தெரிந்துகொள்ள முடிந்தது. ஏற்கெனவே கிடோ மற்றும் க்ரெடோ மூலம் செயல்பட்டு வருவதால் இவர்கள் இருவரும் இணைந்து குழந்தைகள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொம்மைகளை உருவாக்கினர். இவ்வாறு நேரடியாக வாடிக்கையாளர்களை சென்றடையக்கூடிய பி2சி சந்தையில் கவனம் செலுத்தும் ஸ்கோலா (Skola) துவங்குவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது. அவர்களது நண்பரான நிதீஷ் அகர்வாலை இணை நிறுவனராக இணைத்துக்கொண்டனர்.

”பள்ளியின் பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைத்து தொடர்ந்து இயக்குவதில் விருப்பமில்லாத காரணத்தால் அதை மூடிவிட்டோம். நானும் மணிகண்டனும் முழுமையாக கவனம் செலுத்தி ஸ்கோலாவை உருவாக்கினோம்,” என்றார் மிருதுளா.

அவர் விவரிக்கையில்,

“குழந்தைகள் ஒரு பொருளைத் தொடுவதன் மூலமாகவும் உணர்வதன் மூலமாகவும் கற்றுக்கொள்வார்கள். மனப்பாடம் செய்து கற்பது சரியல்ல. ஒரு பாடலை பாடிவிட்டு அதையே தொடர்ந்து பாடச் செய்தால் அது கற்றல் ஆகாது. நடைமுறையில் ஒன்றை செய்துபார்க்கும்போது குழந்தை கோட்பாடுகளை எளிதாக கற்றுக்கொள்ளும். இரண்டுடன் இரண்டைக் கூட்டினால் நான்கு என்பதுதான் சரியான பதில். ஐந்து என்பது தவறான விடை என்று ஒருவர் சொல்வதைக் காட்டிலும் குழந்தை ஒரு பொம்மையின் மூலம் தவறு இழைத்து அதன் பின்னர் அதைத் திருத்திக்கொண்டு சரியாக கற்றுக்கொள்ளும். அந்த விடை சரி என்கிற முடிவை குழந்தைதான் எடுக்கவேண்டும். அந்த முடிவை குழந்தை எடுக்க பொம்மை உதவும். அவ்வளவுதான். 

இவ்வாறு ஒரு குழந்தை தானே கண்டறிந்து சுயமாக கற்க உதவுகிறது ஸ்கோலா.  ஸ்கோலாவில் உள்ள பொம்மைகள் சுயமாக திருத்திக்கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொம்மைகள் ஒன்றோடொன்று தொடர்புடையது. அத்துடன் கற்றல் என்பது ஒரு பயணம் போன்றது என்றார் மணிகண்டன். 

பெற்றோர் தனது குழந்தை கணிதம் கற்க உதவவேண்டும் என நினைத்தால் எந்த பொம்மையை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். அதன் தொடர்ச்சியாக எந்த பொம்மையை வாங்கவேண்டும் என்பதும் தெரியும். ஒரு கருத்தை கற்றுக்கொள்ள அடுத்தடுத்து எதைப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கான வரிசை உள்ளது.

கிடோவின் உற்பத்தி அமைப்பை இக்குழுவினர் பயன்படுத்திக் கொள்வதால் பொம்மைகளை தயாரிப்பது எளிதாக உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் தற்போது 300-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் 10-க்கும் அதிகமான ஊழியர்கள் ஸ்கோலாவின் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொம்மைகளின் விலை 400 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கிடைக்கிறது.

கல்வி சார்ந்த பொம்மைகளுக்கான சந்தை

“பொம்மையின் ஒவ்வொரு தொகுப்பையும் ஒரு குழந்தை சராசரியாக மூன்று மாதங்கள் பயன்படுத்தலாம். இந்த பொம்மைகள் குறைந்தது ஒன்றரை வருடங்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும். பொம்மையைக் கொண்டு கற்கும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் கையேட்டில் கொடுக்கப்பட்டிருக்கும். ஒருமுறை பெற்றோர் அவற்றை குழந்தைக்கு செய்து காட்டலாம். பின்னர் குழந்தை அதைப் பயன்படுத்தத் துவங்கும்,” என்றார் மணிகண்டன்.

2021-ம் ஆண்டு வரை கல்வி சார்ந்த பொம்மைகளுக்கான உலகளாவிய சந்தையின் சிஏஜிஆர் 10 சதவீதமாக இருக்கலாம் என டெக்நெவியோ (Technavio) அறிக்கை தெரிவிக்கிறது. கல்வி சார்ந்த சந்தையில் கே-12 மற்றும் ஸ்டெம் முறை போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுவதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

லெகோ, மேட்டல், லெர்னிங் ரிசோர்சஸ், என்ஜினோ போன்றவை இந்தப் பிரிவில் செயல்படும் நிறுவனங்களாகும். Playabo, ஃப்ளிண்டோ லெர்னிங் போன்றவை இப்பிரிவின் பிற நிறுவனங்களாகும். ஸ்கோலா பொம்மைகள் 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை கிடைக்கிறது. இரண்டு வயது முதல் ஆறு வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கான பொம்மைகள் ஆன்லைனில் நிறுவனத்தின் வலைதளம் வாயிலாகவும் அமேசான், ஃப்ளிப்கார்ட், ஃபர்ஸ்ட்க்ரை போன்ற தளங்கள் வாயிலாகவும் பெறலாம்.

சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடனும் இக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தற்போதுள்ள சராசரியான ஆர்டர் அளவு 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை ஆகும். வழக்கமான பள்ளிகள் தங்களது பாடதிட்டத்தில் ஸ்கோலா பொம்மைகளை இணைத்துக்கொள்ளவும் பள்ளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் மேலும் கூடுதலான சந்தைப்பகுதிகளில் இணைந்துகொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அமேசான் வாயிலாக அமெரிக்க சந்தையை எட்டியுள்ளது. மதிப்புமிக்க நியூரம்பெர்க் பொம்மை கண்காட்சியிலும் பங்கேற்க உள்ளது.

”பாதுகாப்பு சார்ந்த இணக்கம் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுள்ளோம். நாங்கள் உலகளவில் சென்றடைய நியூரம்பெர்க் பொம்மை கண்காட்சி உதவும்,” என்றார் மிருதுளா.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப்