’ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற  கூகுள், யூட்யூப் பெரிதும் உதவியது’- அனுதீப் துரிஷெட்டி

1

இந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி முதலிடம் பிடித்துள்ளார். இவர் யூட்யூப் மற்றும் கூகுள் தனது வெற்றிக்கு முக்கியப் பங்களித்ததாக தெரிவித்துள்ளார். பிட்ஸ் பிலானி பட்டதாரியான இவருக்கு இந்தப் பயணம் எளிதாக இருக்கவில்லை. ஏனெனில் சிவில் சர்வீஸ் தேர்வில் இது அவரது ஐந்தாவது முயற்சியாகும். 2015-ம் ஆண்டு மற்றும் 2016-ம் ஆண்டில் முதலிடம் பிடித்தவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார்.

இணையதளம் தனது வெற்றிக்குப் பெரிதும் உதவியதாக தெரிவிக்கும் இவர் பயிற்சி மையத்தில் நேரம் செலவிடுவதற்கு பதிலாக இணையத்தையே அதிகம் சாந்திருந்தாக தெரிவிக்கிறார். பெரும்பாலான தகவல்களைப் பெற கூகுளையும் யூட்யூபையும் பயன்படுத்தியுள்ளார்.

இந்திய வருவாய்த் துறையில் உதவி ஆணையராக பணியாற்றும் அனுதீப் 2012-ம் ஆண்டு, முதல் முறையாக யுபிஎஸ்சி தேர்வெழுதினார். வருவாய்த் துறை அதிகாரியாக உள்ளபோதும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோதும் ஹைதராபாத்தில் இந்திய வருவாய்த் துறைக்குத் தொடர்ந்து பணியாற்றி வந்தார். அவர் என்டிடிவி-க்கு தெரிவிக்கையில்

நான் முழுநேரமாக பணியில் ஈடுபட்டிருந்ததால் வார நாட்களில் படிக்க நேரம் கிடைக்காது. எனவே வார இறுதியில் அதிக நேரம் எடுத்துக் கடுமையாக படித்தேன்.

அனுதீப் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். NISA ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆயுத பயிற்சியில் ஐஆர்எஸ் 2013 பேட்ச்சின் சிறந்த பயிற்சி அதிகாரியாக பாராட்டப்பட்டார். தற்போது ஃபரீதாபாத்தில் உள்ள தேசிய சுங்கம், கலால் மற்றும் போதை மருந்து தடுப்பு மையத்தில் (NACEN) பயிற்சி பெற்று வருகிறார்.

அனுதீப் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ உடன் பேசுகையில் தேர்விற்குத் தயாராவதில் இணையதளம் முக்கிய பங்கு வகித்தது குறித்து பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில்,

ஒருவர் பயிற்சி நிறுவனத்தில் சேர வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் ஆன்லைனில் உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்கிற ஆர்வமும் உந்துதலும் மட்டுமே தேவை. தேவையான தகவல்களை வழங்கக்கூடிய எண்ணற்ற வலைதளங்கள், பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள் போன்றவை கிடைக்கின்றன. ஏதேனும் சந்தேகம் இருக்குமானால் யூட்யூப் உங்களுக்கு ஒரு சிறந்த ஆசிரியராக செயல்பட்டு வழிகாட்டும்.

வருவாய் துறையில் தனது பதவி வாயிலாக குறிப்பிட்ட அளவு மட்டுமே பங்களிக்கமுடியும் என அனுதீப் கருதியதால் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற தீர்மானித்தார். அவர் தனது சொந்த மாநிலமான தெலுங்கானாவில் பணிபுரிய விரும்புகிறார். மேலும் தெலுங்கானா பகுதியைத் தாண்டி பிற பகுதிகளிலும் சுகாதாரம் மற்றும் கல்வி நிலையை மேம்படுத்த விரும்புகிறார்.

கட்டுரை : THINK CHANGE INDIA