வீட்டிற்குள் திரையரங்கை கொண்டு வரும் ஹீரோடாக்கீஸ்.காம்

0

சினிமாவுக்குச் செல்வது ஒரு சந்தோஷமான அனுபவம். இந்த அனுபவத்தை வீட்டிற்கே கொண்டு வந்து சேர்ப்பது குறித்துச் சிந்தித்தார் வி.எஸ்.பிரதீப். தமிழ் திரைப்படங்களை, சட்டப்பூர்வ அனுமதியோடு, இணைய வழியில், சாத்தியமான கட்டணத்தில், அற்புதமானதரத்தில், தேவையில்லாத இடையூறுகள் இல்லாமல் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் பிரதீப்பின் நோக்கம்.

இந்த யோசனை எப்படி வந்தது?

ஐதராபாத்தின் மதிப்பு மிக்க கல்வி நிறுவனமான இன்டியன் ஸ்கூல் ஆப் பிசினஸ்-சில் எம்பிஏ படித்தவர் பிரதீப். வார இறுதி நாள் ஒன்றில் புதிதாக வெளியான துப்பாக்கி தமிழ்ப்படத்திற்குப் போக விரும்பினார். ஆனால் அதன்பிறகு ஒரே வாரத்தில் அந்தப் படம் தியேட்டரை விட்டு போய் விட்டது. கடைசியாக அவர் ஒரு திருட்டு டிவிடியில் மோசமான தரத்தில்தான் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டியிருந்தது. இந்த அனுபவம்தான் அவரை மாற்று வழியில் இணையத்தில் திரைப்படத்தைத் திரையிட வேண்டும் என்ற யோசனைக்குக் காரணமாக அமைந்தது. அப்படிப் பிறந்ததுதான் "ஹீரோடாக்கீஸ்.காம்" (HeroTalkies.com).

ஆரம்பித்த போது

இந்தியாவிற்கு வெளியே உள்ள தனது உறவினர்களையே தனது முதல் வாடிக்கையாளர்களாகக் கொண்டு ஹீரோ டாக்கீஸ்-இணைய தளத்தை ஆரம்பித்தார் பிரதீப். ‘டாக்கீஸ்’ என்ற சொல் நெடுங்காலமாக இந்தியாவில் நிறைய சினிமா தியேட்டர்களோடு சம்பந்தப்பட்டது. இப்போதும் கூட அந்தக் காலத்து சினிமா தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் அனுபவத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது இந்த வார்த்தை.

“இந்த யோசனை தோன்றியதும், சினிமாத் துறையோடு சம்பந்தப்பட்ட இணையதளங்களை தேடத் தொடங்கினோம். எங்கள் வர்த்தகத்திற்கு ஏற்ற நல்ல வார்த்தையை தேடினோம். கடைசியாக ஹீரோ டாக்கீஸ்.காமிற்கு வந்து சேர்ந்தோம்” என்கிறார் பிரதீப். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்தான் இந்த இணையதளத்தின் பிரதான இலக்கு.

2014 ஜூலை 10ம் தேதியன்று இயக்குனர் கே.பாலச்சந்தரும் தானுவும்தான் இதைத் தொடங்கி வைத்தனர். இந்தத் தளத்தின் மூலம் வெளிவந்த முதல் படம் அரிமா நம்பி. ஹீரோ டாக்கீஸ்.காமின் முகப்புப் பக்கத்தில் “We stream Tamil movies legally, in 1080p HD and 5.1 surround sound” (5.1 ஒலியமைப்பில் 1080பி எச்டி தரத்தில் உங்களுக்கு தமிழ்ப் படங்களை சட்டப்பூர்வமாக வழங்குகிறோம்) என்ற வாக்கியம்தான் பெரிதாக இடம் பெற்றிருக்கும்.

வர்த்தக மாதிரி 

ஆரம்பத்தில் ‘பணம் கட்டினால் ஒரு முறை பார்க்கலாம்” என்ற திட்டத்துடன்தான் தொடங்கினார்கள். அது வரவேற்பைப் பெறவில்லை. பிறகு ஹீரோ டாக்கீஸ் சந்தா திட்டத்திற்கு மாறியது. அதன்பிறகு ஏராளமான வரவேற்பு. நல்ல வருமானம்.

அசந்தர்ப்பவசமாக இந்தச் சேவை இந்தியாவில் உள்ள சினிமா ரசிகர்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை. வெளிநாட்டில் உள்ளவர்கள் மட்டுமே சந்தா கட்டி சினிமா பார்க்க முடியும். அவர்கள் நாட்டில் பார்க்க முடியாத படங்களை மாதத்திற்கு 7.99 டாலர் அல்லது வருடத்திற்கு 79.99 டாலர் சந்தா கட்டி பார்க்கலாம். சந்தாதாரர்கள் ஹீரோ டாக்கீஸ் நூலகத்தில் உள்ள கணக்கிலடங்கா படங்களில் அவர்கள் விரும்பிய படங்களைப் பார்க்க முடியும்.  

வி.எஸ்.பிரதீப்
வி.எஸ்.பிரதீப்

சந்தா திட்டத்தைக் கொண்டு வந்த நான்கே மாதங்களில் ஹீரோ டாக்கீசில் 36 நாடுகளில் இருந்து 4 ஆயிரத்து 500 வாடிக்கையாளர்கள் வரை வந்து சேர்ந்து விற்பனையில் 300 சதவீத வளர்ச்சியைக் கொண்டு வந்தனர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில்தான் ஹீரோ டாக்கீசுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். ஈராக், சிலி, நைஜிரியாவில் சிறிய அளவில் உள்ளனர். “தமிழ் சினிமா உலகில் ஒரு பெரும் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய முன்னோடியாக இருப்பதில் நாங்கள் சந்தோஷப்படுகிறோம்” என்கிறார் பிரதீப்.

ஒரு புதிய படம் வெளி வந்து மூன்று அல்லது நான்கு வாரங்களில் ஹீரோ டாக்கீஸ் அந்தப் படத்தை தனது இணைய தளத்தில் சேர்த்து விடுகிறது. மிகப்பெரும் தமிழ் சினிமாக்கள் நூலகத்தை உருவாக்குவதுதான் அதன் நோக்கம். இதுவரையில் ஹீரோ டாக்கீஸ் தனது இணைய தளத்தில் 220 படங்களை பதிவேற்றம் செய்துள்ளது. “திரைப்படங்களை வீட்டிற்கே நேரடியாக வாடிக்கையாளருக்குக் கொண்டு சேர்ப்பதன் மூலம் திரைப்பட விநியோகச் சங்கிலியில் உள்ள இடைவெளியை நாங்கள் நிரப்புகிறோம்” என்று விளக்குகிறார் பிரதீப்.

பிரதீப்புக்குப் பெரிய போட்டியே திருட்டு டிவிடி இணைய தளங்கள்தான். வாடிக்கையாளர்களை திருட்டு இணைய தளங்களில் இருந்து சட்டப்பூர்வ தளங்களுக்கு மாற்றுவது அவசியம் என அவர் நினைக்கிறார். எனவே உயர் தரத்தில் திரைப்படங்களைக் கொடுப்பதன் மூலம் தனது தளத்தை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது ஹீரோ டாக்கீஸ். ‘எங்கள் தரத்தை ருசித்துப் பார்த்து விட்ட பிறகு மோசமான தரத்தை நோக்கி யாரும் ஒரு போதும் போக மாட்டார்கள்’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பிரதீப்.

எதிர்காலத் திட்டங்கள்

ஹீரோ டாக்கீஸ் தனது எதிர்கால வளர்ச்சி குறித்து உற்சாகமாக இருக்கிறது. தொடர்ச்சியான திட்டங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களை அதிகரிப்பது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆர்வமுள்ள முதலீட்டாளர்களை ஈர்ப்பது என நிறைய திட்டங்கள் உள்ளன. ஆர்வமுள்ள தனி நபர்களிடமிருந்து சிறு முதலீடுகளை ஈர்ப்பது குறித்த பேச்சுவார்த்தையும் நடக்கிறது.

தமிழ்த் திரைப்பட உலகம் ஆரம்பம்தான். விரைவில் மற்ற தென் மொழிப் படங்களுக்கும் விரிவடைய உள்ளது ஹீரோ டாக்கீஸ். வெளிநாட்டில் உள்ள 30 லட்சம் இந்தியர்களை சென்றடைய இலக்கு வைத்திருக்கிறது ஹீரோ டாக்கீஸ்.காம்.

புதிய தொழில் முனைவோருக்கு பிரதீப் சொல்லும் அறிவுரை இதுதான்: “உடனடியாக உங்கள் தயாரிப்பை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் அனுமானத்தைப் பரிசோதியுங்கள்.” ஒரு பாரம்பரியமான தொழிலை இணைய தளத்திற்குக் கொண்டு செல்வதைச் சாத்தியமாக்கியிருக்கிறது ஹீரோ டாக்கீஸ். அதன் மூலம் பார்வையாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கிறது. இது போல் மகத்தான யோசனை ஏதுவும் உங்கள் கைவசம் உள்ளதா? உடனடியாக செயலில் இறங்குங்கள். டாட் காம் உதவியுடன், பெரிதாக.. உலகம் முழுக்கச் செல்லுங்கள்!

ஆக்கம்: TAUSIF ALAM | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா