இயற்கை மருத்துவத்தை நாடு முழுதும் பரப்ப கனவு காணும் கோவை பெண்!

1

சுகாதாரம், உடற்பயிற்சி, சிகிச்சை; இந்த தொழில்முனைவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான அம்சங்கள் இவை. மாற்று மருத்துவ சிகிச்சை முறையை பாரம்பரியமாகச் செய்து வரும் ஒரு குடும்பத்தில் பிறந்த டிம்ப்பிள் லல்லு, அந்தப் பாரம்பரியத்தை ஒரு அற்புதமான திருப்புமுனையோடு முன்னோக்கிக் கொண்டு சென்றார். லல்லு, ஆயுர்வேதம் சார்ந்த பொருட்களை தயாரிப்பவர். நாடு முழுவதும் அவற்றைக் கொண்டு செல்வதுதான் இவரது இலக்கு. லல்லு ஒரு இயற்கை விரும்பி. பறவைகளை மட்டுமல்லாமல் காடுகளில் காணக் கிடைக்கும் பல்வேறு வகை உயிரினங்களைக் கவனிக்கவும், அவை குறித்து அறிந்து கொள்ளவும் ஞாயிற்றுக் கிழமைகளில் காடுகளுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் டிம்ப்பிள்.

டிம்ப்பிள் ஒரு மாரத்தான் ஓட்டக்காரர். உடலைக் கட்டுக்கோப்பாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க நாளொன்றுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறார்.

மாற்று மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்துடன் டிம்ப்பிளுக்கு உள்ள உறவு குறித்து அவர் யுவர் ஸ்டோரியிடம் உரையாடினார். அவரது உரையாடலில் இருந்து…

ஆயுர்வேதத்துடன்தான் வளர்ந்தேன்

கடந்த ஐந்து தலைமுறையாக மாற்று மருத்துவ சிகிச்சை செய்து வரும் ஒரு மருத்துவக் குடும்பத்தில் பிறந்தவள் நான். என் தாத்தா ஹோமியோபதி மருத்துவர். அப்பா ஆயுர்வேதத்தில் நிபுணர். இந்த சிகிச்சை முறைகள்தான் எனது ஜீனில் கலந்து அதுவே எனக்குள் வேலை செய்து, ஆயுர்வேத பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை துவக்க எனக்கு உதவி செய்திருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் முதலில் நடன வகுப்பில்தான் சேர முடிவு செய்தேன். ஆனால் மனமும் உடலும் பலமாக இருப்பதற்கு என்னை கராத்தே வகுப்புக்கு அனுப்பினார்கள். கோவையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில்தான் படித்தேன். போட்டிகளில் ஆர்வமாகக் கலந்து கொள்வேன். குறிப்பாக பேச்சுப் போட்டி, விவாதங்கள் போன்றவற்றில் பங்கேற்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். அது எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்து மேடை பயத்தைப் போக்கியது.

அதன் பிறகு கல்லூரிப் படிப்பு. பிஎஸ்சி விலங்கியல், அதைத் தொடர்ந்து அக்குபங்ச்சரில் முதுநிலைப் படிப்பை (M.Acu) முடித்தேன். 25 வயதில் அக்குபங்ச்சர் மருத்துவரானேன். கோவையில் மருத்துவமனை ஒன்றையும் துவங்கினேன். முக பக்கவாதம், வாதம், சைனஸ் எனப்படும் புரையழற்சி, தண்டுவட எலும்பு பாதிப்பு, நாள்பட்ட தலைவலி, வலி, மூட்டுவலி, கீல்வாதம், கருவுறாமை போன்ற நாட்பட்ட நோய்களை என்னால் குணமாக்க முடிந்தது.

இப்படித்தான் தொடங்கியது

அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியர், தொழில் முனைவோர் குறித்துப் பேசிய ஒரு ஊற்சாகமூட்டிய பேச்சு எனக்கு உத்வேகம் அளித்தது. அதன்பிறகு நான் எனது ஆராய்ச்சியைத் தொடங்கினேன். ஆயுர்வேத மருத்துவரான அப்பாவின் ஆசீர்வாதத்திலும் அவரது வழிகாட்டுதலின் கீழும் ஆயுர்வேதப் பொருட்கள் தயாரிக்கும் தொழில் கூடத்தைத்(ஃபகுல் பார்மா) தொடங்கினேன்.

ஆயுர்வேத தயாரிப்புகளில் தனிச்சிறப்பு வாய்ந்த நிறுவனமான "ஃபகுல் பார்மா" (Fugle Pharma) மருந்து நிறுவனம் தொடங்கப்பட்டது. நோவி (NOVY) என்ற பெயரில் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டன. எங்களது மிக முக்கியமான தயாரிப்பு வலி நிவாரணி எண்ணெய். மூலிகைகளை கைகளால் பறித்து தயார் செய்யப்படுவது அது. தலைவலி, கீல்வாதம், மூட்டு வலி, ஜலதோஷம், தலைவலி, முதுகுவலி மற்றும் சைனஸுக்கு உடனடி நிவாரணம் தரும் மருந்து அது. இந்த மருந்து ஒரு பன்முகப் பயன்பாட்டைக் கொண்டது. இது வீட்டில் இருந்தால் அடிக்கடி மருத்துவரை நாட வேண்டியிருக்காது. நோவி ஒரு நம்பகமான வீட்டு மருத்துவராக விரைவில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கப் போகிறது.

எங்களிடம் 50 விதமான ஃபார்முலாக்கள் உள்ளன. பாரம்பரிய ஆயுர்வேத அடிப்படையில் புதிய தயாரிப்புகளைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறோம்.

சவால்கள்

எல்லா தொழில்முனைவரைப் போலவே உரிமம் பெறுவது உள்ளிட்ட அரசு சார்ந்த அனுமதிகளைப் பெறுவது எனக்குக் கூட சிரமமாகவே இருந்தது. அதற்கு கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. எனினும் நான் நம்பிக்கையை விடவில்லை. கஷ்டமாயிருந்தாலும் வெற்றியை நோக்கித்தான் போய்க்கொண்டிருந்தேன்.

அதே போல் ஆரம்பத்தில் எல்லோருக்கும் வரும் பிரச்சனையான நிதிப் பிரச்சனை எங்களுக்கும் இருந்தது. தேவையான மூலதனத்தைத் திரட்டுவது கடினமாக இருந்தது. நெருங்கிய நண்பர் ஒருவர், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்து எங்களுக்கு அளப்பரிய உதவியைச் செய்தார்.

நிதிப் பிரச்சனை தவிர, சில்லறை வர்த்தக சந்தைக்கு எங்கள் பொருட்களைக் கொண்டு செல்வதும் சந்தையை விரிவு படுத்துவதும் சிரமமாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் இது போன்ற தடங்கல்கள் இருந்த போதும், தற்போது கோவையில் மட்டும் எங்களுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. கோவைக்கு வெளியே ஈரோடு, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பழனி, சேலம் மற்றும் நீலகிரியிலும் எங்களுக்கு கடைகள் உள்ளன. தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அதை விரிவு படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இன்று கடின உழைப்பு காரணமாக நோவி தமிழகத்தில் ஒரு அறியப்பட்ட பிராண்டாக வளர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் வளர்ந்து, கட்டுபடியான விலையில் உயர்ந்த தரத்தில் ஆயுர்வேத மருந்துகளை நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும் என்பதும் ஃபகுல் பார்மாவின் கனவு.

குடும்பத்திற்கும் தேவையான நேரம் ஒதுக்குவேன்

நான் ஒரு பெண். ஆண்களை விட குறைவு என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. என் குடும்பத்தினர் என்னை தைரியசாலியாகவும் பலம் மிக்கவளாகவும் வளர்த்தனர். எனது குடும்பத்தையும் வேலையையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை. இரண்டுக்கும் போதிய நேரம் ஒதுக்குவேன். எனது ஆற்றலுக்கும் ஊக்கத்திற்கும் எனது குடும்பத்தினர்தான் மிக முக்கியமான காரணம். அவர்கள்தான் எனக்கு மிகப்பெரிய உந்து சக்தி. எனவே வேலைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறேனோ அதற்கு இணையான நேரத்தை அவர்களுடன் செலவழிக்க ஒதுக்குவேன்.

ஆரம்பத்தில் எனது தொழிலுக்குத் தேவையான எந்திரங்கள், மூலப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கு மும்பை, ஐதராபாத், நீலகிரி மற்றும் மலைப்பகுதிகளுக்கெல்லாம் செல்ல வேண்டியிருந்தது. எனது நண்பர்கள் அதற்கு நிறைய உதவி செய்தனர். மூலப் பொருட்களைத் தேடிச் செல்லும் போது அவர்களும் உடன் வந்து உதவினர். இப்பொழுது எங்கள் தயாரிப்பு வேலைகளை ஒழுங்கமைத்திருக்கிறோம். இப்போது வேலை சுலபமாகி விட்டது. எனவே குடும்பத்தினருடன் செலவிட எனக்குப் போதுமான நேரம் கிடைக்கிறது.

எதிர்காலத் திட்டங்கள்

இப்போதைக்கு எனது கவனமெல்லாம், நவீன தொழில் நுட்பத்தையும் வழிமுறைகளையும் பயன்படுத்தி உயர்ந்த தரத்தில் எப்படி ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பது என்பதும், அவற்றின் சந்தையை எப்படி இந்தியா முழுவதற்கும் விரிவு படுத்துவது என்பதும்தான்.

ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி, ஹோமியோபதி, யோகா, இசை மருத்துவம், அரோமாதெரபி போன்ற அனைத்து மாற்று மருத்துவ சிகிச்சைகளையும் வழங்கும் ஒரு மருத்துவமனையை அந்தந்தத் துறையில் உள்ள மருத்துவ நிபுணர்களின் பங்களிப்போடு கட்ட வேண்டும் என்பது என் எண்ணம். அப்படி ஒரு மருத்துவமனையை கட்டுவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

எதிர்காலத்தில் ரசாயனம் கலந்த மருந்துகளைப் புறக்கணித்து, எங்கள் மருந்துகள் மூலம், இயற்கை அன்னையின் மடிக்குத் திரும்பப் போகிறோம். இயற்கை உணவுப் பொருட்களைச் சார்ந்து வாழும் நிலை உருவாகும். இப்போதே நாங்கள் இயற்கை முறையில் பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.