வீட்டிற்கான தானியங்கி பொருட்களை கட்டமைக்க இந்த இளைஞர்கள் ஈர்க்கப்பட்டது எப்படி?

0

உலகின் பிரபலமான அறிவியல் கற்பனைக் கதைகள் முதல் உலகின் நவீன தொழில்நுட்ப கண்காட்சியகங்கள் வரை, வீட்டிற்கான தானியங்கி இயந்திரங்கள் பற்றி கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.

பல்வேறு வேறுபாடுகள், விதவிதமான அமைப்புகள் கொண்ட நமது நாட்டில் விரைவில் எதிர்காலத்திற்கான நவீன வீடுகளை கட்டமைக்கும் தருணத்தில் இருக்கின்றோம். இதுதான் கண்டுபிடிப்புக்கான தளமாகவும் இருக்கிறது.

வித்தியாசமான ஹார்டுவேர்களை, நெட்வொர்க்குகளை, தொடர்பு சாதனங்களை ஒருங்கிணைத்து உபயோகிக்க எதிர்காலத்திற்கு Wi-Fi மற்றும் தானியங்கி ஸ்விட்ச் மட்டுமே தேவைப்படுகிறது. 

இதை நினைவாக்க, 'க்ளோவர்போர்டு' குழுவினர் அதன் நிறுவனர்களுடன் அமர்ந்து ஆய்வு செய்துவருகிறார்கள். ஜெய்ப்பூர் என்.ஐ.டியைச் சேர்ந்த ஒரு மாணவர்குழு இதை முயற்சி செய்துகொண்டிருக்கிறது, இந்த முயற்சியை ‘அறிவுப்பூர்வமான ஸ்விட்ச்சிங் முறை’ என்று அழைக்கிறார்கள்.

எதிர்காலத்தின் புதிய வகை ஸ்விட்ச்சுகள்

க்ளோவர்போர்டு சென்சார் நிறைந்தது, இவை மற்ற க்ளோவர்போர்ட்டுகளோடு சென்சார் முறையில் தொடர்பு கொள்ளும். அதனிடம் வேலையை கட்டளையிட்டால் போதும் அது உடனே செயலில் இறங்கிவிடும். இது பகல் இரவு வெளிச்சத்தை உணர்ந்து கொள்ளும் என்பதோடு பயன்பாட்டாளர்களின் அன்றாடத் தேவையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு லைட்டிங்கை கட்டுப்படுத்திக் கொள்ளும் திறன் படைத்தது. ஒரு சாதனம் தொடர்ந்து இயங்குவதால் ஏற்படும் வெப்பம் மற்றும் அதனை நிறுத்தி வைப்பதன் மூலம் கிடைக்கும் ஓய்வு போன்றவற்றால் பயனாளர்களுக்கு 10 முதல் 15 சதவீதம் பணம் சேமிப்பாகிறது, அதேப் போன்று லைட்டுகளை அடிக்கடி மாற்றத்தேவையில்லை என்பதால் 30 முதல் 40 சதவீதம் செலவு கட்டுபடுத்தப்படுகிறது.

க்ளோவர்போர்டின் மற்றொரு அவதாரம் ‘பலவகை ஸ்விட்ச்’, இதன் பட்டன்கள் கடினமானதாக இருக்காது ஆனால் இதில் பல்வேறு செயல்பாடுகளையும் செய்ய முடியும். சமையல் அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அணைக்க மறந்து விட்டு உறங்கச் சென்று விடும் பலருக்கும் படுக்கையில் இருந்து எழுந்து சென்று விளக்கை அணைப்பதென்றால் சோம்பலாக இருக்கும், இந்தக் கவலையை போக்கும் வகையில் படுக்கை அறையில் இருந்து கொண்டே லைட்டை ஆஃப் செய்யும் சென்சார் வசதி இந்த ஸ்விட்ச்சில் உள்ளது.

அதே போன்று நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அனைத்து சாதனங்களும் அணைக்கப்பட்டு விட்டதா என்று தனித்தனியாக பார்க்க வேண்டியதில்லை. இதில் உள்ள ‘அவே’ (away) தீம் பொத்தானை தேர்வு செய்தால் ஒரே தொடுதலில் வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட முடியும்.

அதே போன்று பயனாளர்கள் தங்களுக்கு ஏற்றவாறு விளக்குகள் எரியும் நேரம் மற்றும் அவை ஆஃப் செய்யப்பட வேண்டிய நேரத்தை ஒரு தீமாக செட் செய்ய முடியும். மேலும் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் மற்ற மின்சாதனப் பொருளான கீசரை(geyser) தினமும் காலை 8 மணிக்கு 10 நிமிடங்கள் தானாகவே ஆன் செய்துகொள்ளும் வகையில் செட் செய்யலாம். வீட்டை திருடர்களிடம் பாதுகாக்கும் பணியையும் இது பார்த்துக் கொள்கிறது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏதாவது மனித செயல்பாடுகள் தென்பட்டால் உடனே வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் அலாரம் அதை சென்சார் செய்து பயனாளருக்கு எச்சரிக்கை செய்யும்.

மற்ற நிறுவனத்தின் தானியங்கி பொருட்கள் இந்த சேவையை வழங்குகின்றன? என்பதை க்ளோவர்போர்டு நிறுவனர்கள் ஒப்புகொள்ளவில்லை. மற்ற நிறுவனப் பொருட்கள் பாரம்பரிய தானியங்கி வீட்டு உபயோக பொருட்களாகவே உள்ளன, அதில் வழங்கப்படும் சேவைகள் உண்மையில் தானியங்கி முறையில் இல்லை. அவர்கள் பயனாளர்களுக்கு ஸ்மார்ட் போன் மூலம் ரிமோட் முறையில் இயக்கும் வசதியை அளிக்கின்றனர், எனவே இதை தானியங்கி என்று சொல்ல முடியாது; இதை விட போனை பயன்படுத்தாமல் வீட்டு உபயோகப் பொருட்களை தானியங்கி முறையில் செயல்படுத்துவதை நினைத்துப் பாருங்கள், அதைத் தான் நாங்கள் செய்கிறோம்.

அதுமட்டுமின்றி பெரும்பாலான வீட்டிற்கு தானியங்கி பொருட்களை வழங்கும் ஆடம்பர நிறுவனங்கள், பயனாளர்களை அணுகும் போது அவர்கள் வீட்டில் வயரிங் மற்றும் அடிப்படை வசதிகளை மாற்றியமைக்க விரும்புவர், இதுவே தீர்வு என நம்ப வைப்பர், இதனால் அவை உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதோடு பண விரயத்தையும் கொடுக்கும்.

தொழில் பயணம்

இந்நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் நிஷாந்த் குமார், நிர்மலா குன்வர் மற்றும் ரித்திகா தியாவலா மூன்று பேரையும் ரோபாடிக்ஸ் மற்றும் தானியங்கி முறை ஒன்று சேர்த்தது. ரோபாடிக்ஸ் கல்லூரி குழுவில் சந்தித்துக் கொண்ட இந்த பட்டதாரிகள், தங்களது முதல் ஆண்டு படிப்பு முதலே தொழில்நுட்ப உதவியோடு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயன்று வருகின்றனர்.

தனித்தனியே அவரவர்கள் தங்களின் வேலையில் கவனம் செலுத்தியபோதும் பிரச்சனைக்கு தீர்வு காணும் ஆர்வம் மட்டும் குறையவில்லை. அவர்கள் எப்போதும் தொடர்பில் இருந்து கொண்டு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது பற்றி பகிர்ந்து கொள்வர். இவர்களின் கண்டுபிடிப்பு ஆர்வத்தை கண்டு நிஷாந்தின் சகோதரர் விவேக் ராஜும் இந்தக் குழுவில் இணைந்து கொண்டார். அவர் இணையம் வழியாக இந்தக் குழுவை மற்ற தகுதிவாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் தொடர்பு கொள்ள உதவினார்.

இந்தக் குழு நீண்ட பயணத்தை கடந்து வந்திருக்கிறது. ஹார்ட்வேர் தொடக்க நிறுவனத்தில் ஒரு நிலையான பொருளைக் கொண்டு வர பெரிய பெரிய தடைகளைத் தாண்டி வர வேண்டும் என்பதை தொழில்முனைவர்கள் உணர வேண்டும்.

நிலையான பொருள் என்பது அடிப்படை ப்ரோடோடைப் பொருளை விட மிகவும் வித்தியாசமானது என்கின்றனர் இதன் இணை-நிறுவனர்கள். ஒரு தோராய மதிப்பீடாக சொன்னால் ப்ரோடோடைப்பை உருவாக்க 10 சதவிகித முயற்சி மட்டுமே தேவை, ஆனால் அதை ஒரு பொருளாக மாற்றவும், பெருமளவில் உற்பத்தி செய்யவும் 90 சதவீத முயற்சி தேவை.

இந்த எண்ணமே ஒரு நிறுவனத்தை தொடங்கும் ஆவலை ஏற்படுத்தியது என்று சொல்கிறார் ரித்திகா. ஒரு வீடு/ அலுவலகத்தை தானியங்கி நிறுவனமாக நடத்த விரும்பினால், மூன்றாவது நபரின் தயாரிப்புகளை சீனாவில் இருந்து பெற்று பொருத்தித் தருவர். இதனால் நிறுவனம் ஒரு இணைப்புப் பாலம் போலவே செயல்படும் ஆனால் எதிர்காலத்தில் அதில் எந்தவித புதுமையையும் செய்ய முடியாது.

“பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்ட விஷயத்தில் நாங்கள் ஏதாவது செய்ய நினைத்தோம், அது புதுமையாகவும் நிலையானதாகவும் இருக்க எண்ணினோம்” என்று சொல்கிறார் அவர்.

புதுமையை நோக்கிய பயணம் தங்கள் குழுவிற்கு ஏராளமான பாடம் கற்றுத் தந்திருப்பதாக நம்புகிறார் ரித்திகா. அவர் கூறுகையில்:

“இந்தப் பயணம் ஒரு நிலையான பொருள் பற்றிய தொழில்நுட்ப அறிவை மட்டுமல்ல மக்களின் பல்வேறு கோணங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்கியது. ஒரு ஹார்ட்வேர் நிறுவனத்தை கட்டமைக்க வேண்டும் என்ற கனவை நினைவாக்குவது மிகவும் கடினமானது, பயமுறுத்தக் கூடியது. ஆனால் அதுவே ஒரு பொருளை கண்டுபிடித்து பயன்பாட்டிற்கு அளிக்கும் போது இருக்கும் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.”

முதல் தலைமுறை தொழில்முனைவர்களான இவர்களுக்கு, இந்த பயணம் கஷ்டமான நேரங்களில் பணம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தி இருக்கிறது. துவண்டு விடும் நேரங்களில் தோள் கொடுக்கவும், நம்பிக்கையற்ற நேரத்தில் உதவவும், எல்லா தடைகளையும் தகர்த்து எரிவதற்கான தேவையும் இந்த பயணத்தில் இவர்கள் கற்றுக் கொண்ட மற்றொரு பாடம்.

தற்போது முன்-வருமான நிலையில் இருக்கும் இந்த நிறுவனம் அடுத்த காலாண்டில் வரையரைக்குட்பட்ட பொருட்களை மட்டுமே வெளியிடத் திட்டம் வகுத்துள்ளது. 2016 இன் இரண்டாம் காலாண்டில் முழு வெளியீடு இருக்கும் என தெரிவித்துள்ளது. 

“இந்தியர்களால் நன்கு வடிவமைக்கப்பட்ட ஹார்டுவேர் பொருட்களை உருவாக்க முடியாது என்ற எண்ணம் பொதுவாகவே உள்ளது. அது மெல்ல மறைந்து வருகிறது. விரைவிலேயே இன்னும் சில மாதங்களில் எங்கள் நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.” என்கிறார் ரித்திகா.

சுயமுதலீட்டு முறையிலேயே நீண்ட காலமாக செயல்பட்டு வந்த இந்நிறுவனத்திற்கு, ஐஐஎம் அகமதாபாத் ADB மூலம் ரூ.10 லட்சம் கிடைத்துள்ளது. க்ளோவர்போர்டை இந்தியாவின் டாப் எட்டு நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் திறமையான முதலீட்டாளர்கள் மற்றும் குறிப்பிட்ட பங்குதாரர்களிடம் இருந்து 1.5மில்லியன் டாலர் வியாபாரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. க்ளோவர்போர்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்டர்களைப் பெற்றதையடுத்து வீடுகளை எரிசக்தி, சூரிய சக்தி மற்றும் உயர்நிலை பேட்டரி தொழில்நுட்பம் மூலம் இணைப்பது போன்ற மரபுசாரா விஷயங்களை சொந்தமாக உருவாக்குவதில் இந்நிறுவனம் நம்பிக்கையோடு செயல்பட்டு கொண்டிருந்தது.

இந்த நிறுவனர்களின் அடுத்த மிகப்பெரிய இலக்கு வீடுகளையும் ஒரு மனிதனாக நினைத்து அவற்றுடன் பேசும் முயற்சி. அதாவது, குரலை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதனையும் வீட்டையும் இணைக்கும் முயற்சி அது என்று முடிக்கின்றனர் அவர்கள்.

இணையதள முகவரி: Cloverboard

கட்டுரை: தருஷ் பல்லா | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்