காமன்வெல்த் 2018-ல் துப்பாக்கி சுடுதலில் சாதனை படைத்து தங்கம் வென்ற ஹீனா சித்து!

0

ஹீனா சித்து, காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று இந்தியாவை பெருமைப் படுத்தியுள்ளார். பெண்கள் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் சிறப்பாக போட்டி போட்டு 38 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது இவருக்கு இந்த போட்டியில் கிடைத்த முதல் தங்கம்; இதற்கு முன் இதே போட்டியில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் இந்த லூதியானா பெண். மேலும் இவர் 2010-ல் நடந்த காமன்வெல்த் துப்பாக்கி போட்டியில் குழுவாக தங்க பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று 8 பேர் கொண்ட இறுதி சுற்றில் பங்கேற்ற இந்த 28 வயது நாயகி மிக சரளமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளார். அதிலும் மிகத் துல்லியமாக சுட்டு இரண்டு முறை முழு வெற்றிமதிப்பை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா விராங்கனை எலனா கலியாபோவிச் உடன் போட்டிபோட்டு 5, 5, 4, 4, 3 மற்றும் 4 புள்ளிகளை பெற்று தங்கத்தை வென்றுள்ளார்; எலனா வெள்ளி பதகத்தை பெற்றார்.

ஹீனாவின் காமன்வெல்த் போட்டி வரலாற்றை பார்த்தால் 2010ல் பத்து மீட்டர் பிஸ்டல் சுடுவதில் குழுவுடன் தங்கமும், தனியாக வெள்ளியும் வென்றுள்ளார். ஆனால் 2014ல் ஹீனா இறுதி சுற்றில் பங்கேற்றாலும் எந்த பதக்கத்தையும் வெல்ல முடியவில்லை. ஆனால் தற்பொழுது தனியாக தங்கம் மற்றும் வெள்ளி என இரு பதக்கங்களை வென்றுள்ளார்.

25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் 38 புள்ளிகள் பெற்று சாதனை படைத்த இவருக்கு இந்த ரெகார்ட் ப்ரேக் புதிதல்ல. 2013ல் நடந்த ஐ எஸ் எஸ் எஃப் உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் இவர். இவர் இந்திய அரசிடம் இருந்து அர்ஜுனா விருது பெற்றுள்ளார்.

ஆங்கில கட்டுரையாளர்: பிஞ்சல் ஷா | தமிழில்: மஹ்மூதா நெளஷின்