தொடங்கிய 2 வருடத்தில் கோடி மதிப்பிலான ஆர்டர்கள்- வளர்ச்சி கண்டுள்ள நிகழ்விடம் கண்டறிய உதவும் ’BigFday’

3

”என்னுடைய உறவினர் ஒருவர் அவரது அப்பாவிற்காக ஒரு மண்டபத்தை தேடிக்கொண்டிருந்தார். அவர் சென்னைக்கு புதிது என்பதால் ஒரு ஹாலை தேடிக் கண்டறிவதில் சிரமத்தை சந்தித்தார். அப்போதுதான் என்னுடைய உதவியை கோரினார். எனக்கு பலரைத் தெரிந்திருந்தபோதும் நானும் அதிக சிரமத்தை உணர்ந்தேன். சமீபத்தில் திருமணமான என்னுடைய நண்பர் ஒருவருடன் இதுகுறித்து பேசுகையில் அவரது திருமண ஏற்பாடுகளிலும் பல சிரமங்களை சந்தித்ததாக தெரிவித்தார். அந்த தருணத்தில்தான் இந்த சிரமங்களுக்கான தீர்வில் கவனம் செலுத்தவேண்டும் என்கிற பொறி தட்டியது,” என்று தொடங்கினார் கன்னியாகுமரியை பூர்வீகமாக கொண்டிருக்கும் சபின் ரோட்ரிகெஸ். 

செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் படிப்பதற்காக சென்னை வந்த இவரை இந்நகரம் அதிகம் கவர்ந்தது. மில்லியன் டாலர் கொடுத்தாலும் அவர் சென்னையை விட்டுச் செல்ல விரும்பமாட்டாராம். அந்த அளவிற்கு சென்னை பிடித்துப்போய்விட்டது என்கிறார்.

உத்கர்ஷ் (இடது), சபின் (வலது)
உத்கர்ஷ் (இடது), சபின் (வலது)

நிறுவனர்களின் பின்னணி

ஸ்டார்ட் அப் துவங்குவதுற்கு முன் சபின், ஆட்டோமெட்டிக் டேட்டா ப்ராசசிங்கில் இம்ப்ளிமெண்டேஷன் ஆலோசகராக பணிபுரிந்தார். உலகளவிலான மனித வள மாற்ற ப்ரோக்ராமிற்கு (Global HR Transformation Programme) பொறுப்பேற்றிருந்தார். தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிஜ உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் அவருக்கு அதீத ஆர்வம் உண்டானது.

நிகழ்வு மேலாண்மைப் பகுதியில் இருக்கும் இடைவெளியை சரிசெய்வதற்காக அவர் உருவாக்கியதுதான் ’பிக்எஃப்டே’ (BigFday). தற்போது குழு, மார்கெட்டிங், செயல்பாடுகள் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்று பிக்எஃப்டே-வில் முழுநேரப்பணியில் ஈடுபட்டுள்ளார். சென்னை சாப்டரின் ஸ்டார்ட் அப் லீடர்ஷிப் ப்ரோக்ராமிற்கு இரண்டு வருடங்களாக ப்ரோக்ராம் லீடராக இருந்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த உத்கர்ஷ் சிங்கானியா ஹிந்தியைக் காட்டிலும் தமிழ் நன்றாக பேசுபவர். எழும்பூரில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

தொழில்முனைவில் எம்பிஏ பட்டமும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்கில் இளநிலை பட்டமும் பெற்றார். BigFday-க்கு முன்னால் ஆட்டோமெடிக் டேட்டா ப்ராசசிங் Inc-யில் மென்பொருள் வடிவமைப்பாளராக பணியாற்றினார். மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பம் மற்றும் வெப் டெவலப்மெண்ட் குறித்த அனுபவ அறிவைக் கொண்டிருந்தார். வடிவமைத்தல், கட்டமைத்தல், உருவாக்குதல் என வணிக மேலாண்மை மென்பொருளின் பல்வேறு அம்சங்களில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சர்வதேச அளவில் சிறந்த ஒரு பி2சி நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்க விரும்பினர் நிறுவனர்களான சபின் மற்றும் உத்கர்ஷ். சென்னை மீது இவர்களுக்குள்ள அன்பு இவர்களது பெரும்பாலான தகவல் பரிமாற்றங்களிலும் ப்ராண்டிங்கிலும் தென்படும். மேலும் இவர்கள் அறிமுகப்படுத்தும் கிட்டத்தட்ட அனைத்து ப்ராடக்ட்களிலும் ’சென்னையில் அன்புடன் உருவாக்கப்பட்டது’ என்கிற வாசகத்தின் பொருள் பதிந்திருக்கும்.

இருவரும் அறிமுகமாகி தற்போது பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகிறது. 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி இருவரும் சந்தித்தனர். கல்லூரி படிப்பை முடித்த பிறகு விஷுவல் பிசினஸ் டூல்ஸ் என்கிற யூகேவைச் சேர்ந்த HRIS நிறுவனத்தில் இருவரும் சேர்ந்தனர். பயிற்சியில் ஒரே குழுவில் இருந்தனர். உத்கர்ஷ் கோடிங்கில் சேர திட்டமிட்டார். சபின் தயாரிப்பு செயல்பாட்டு குழுவில் சேர்ந்தார்.

ஸ்டார்ட் அப்பிற்கான உந்துதல்

ஸ்டார்ட் அப் குறித்து சபின் எப்போதும் சிந்தித்ததில்லை. இவர் முதல் தலைமுறை தொழில்முனைவர். இவரது பெற்றோர் அரசு ஊழியர்கள். ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சிறுவனைப் போலவே இவரும் தனது அப்பாவை பின்பற்றி பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். 9 மணியிலிருந்து 5 மணி வரை பணிபுரியும் வகையில் அமைந்திருக்கும் ஒரு வேலையை தேர்ந்தெடுக்கவே விரும்பினார். ஆனால் மூன்று வருடங்களில் ஒரே மாதிரியான பணியையே தொடர்ந்து செய்துகொண்டிருப்பதை உணர்ந்து சோர்வடைந்தார்.

சுயமாக ஏதாவது ஒன்றில் ஈடுபட விரும்பினார். பல்வேறு திட்டங்கள் குறித்து சிந்தித்தபின் இறுதியாக BigFday-வை 2015-ல் நிறுவ திட்டமிட்டார். இதை செயல்படுத்துவதில் இருக்கும் வாய்ப்புகளை அறிந்த பிறகு தொழில்நுட்ப திறன்கொண்ட மற்றொருவர் இணை நிறுவனராக உடன் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணி, உத்கர்ஷை தொடர்பு கொண்டு அவரது விருப்பத்தை அறிந்தார்.

அடுத்த நாள் மதிய உணவின்போது இருவரும் சந்திக்க திட்டமிட்டனர். சபின் வழக்கம் போல காலதாமதமாகவே சென்றார். அதற்குள் தனது பணிக்குத் திரும்ப நேரமாகும் என்பதால் உத்கர்ஷ் உணவை முடித்துவிட்டு புறப்படத் தயாராக இருந்தார். 

”நாங்கள் இருவரும் ஜீப்பில் அமர்ந்துகொண்டே பேசினோம். பத்தே நிமிடங்களில் என் திட்டத்தை விவரித்தேன். ஐடியா பிடித்துப்போக உடனே உத்கர்ஷ் சம்மதித்தார். அடுத்த சில மாதங்களில் அவரது பணியை விட்டு வெளியேறி BigFday-வில் என்னுடன் முழு நேரமாக இணைந்தார்,” என்றார் உற்சாகமாக சபின்.

BigFday அளிக்கும் தீர்வு

இவர்கள் தீர்வுகாணும் பிரச்சனைகள் உலகளவில் உள்ள பிரச்சனை என்று நம்புகின்றனர். இவர்கள் உருவாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதைப் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தலாம்.

இன்றுவரை BigFday-ன் முதல் முயற்சி நிகழ்வை திட்டமிடல். அதாவது இடத்தை கண்டறிவது. பயனர்கள் ஒரு நிகழ்விற்காக திட்டமிடுகையில் முதலில் இடத்திற்குதான் பணம் செலுத்துவார்கள்.

”எங்களது பகுதியான சென்னையில் ரெஸ்டாரண்ட் பார்ட்டி ஹால், விருந்து மாளிகை மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படுகிறோம். இடம் சார்ந்த இதே மாதிரியை நிகழ்வு சார்ந்த அலங்கரித்தல், புகைக்கபடங்கள் போன்ற பிற சேவைகளுக்கும் தற்போது பின்பற்றுகிறோம். இந்த மாதிரியானது ஆஃப்லைனில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் ஒருவர் நிகழ்வை ஏற்பாடு செய்யவேண்டுமெனில் எங்களை மட்டும் தொடர்பு கொண்டால் போதும். வேறு எங்கும் செல்லவேண்டியிருக்காது.”

சந்தித்த சவால்கள் மற்றும் முதலீடு

சபின், உத்கர்ஷ் இருவருமே நல்ல சம்பளத்துடன் கூடிய பணியிலேயே இருந்தனர். நிறுவனத்தைத் துவங்க இவர்களிடம் இருந்த சேமிப்பு உதவியது. ஆனால் வாடிக்கையாளர்களை சந்திப்பதற்கு முன்பாகவே முதலீடு தீர்ந்துவிட்டது. முதல் சில மாதங்களில் வாடிக்கையாளர்களை துரத்துவதற்கு பதிலாக முதலீட்டாளர்களை துரத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. இது இவர்கள் கற்ற மிகக்கடினமாக பாடமாகும்.

முதல் காசோலையை வாடிக்கையாளரிடமிருந்து பெறுவதற்கு முன்பாகவே கையில் இருந்த பணம் முழுவதுமாக செலவழிந்துவிட்டது. இருப்பினும் அப்போதில் இருந்து முழுமையாக சுய முதலீட்டில் இயங்கி வருகின்றனர். ஆனால் கடும் முயற்சியால் வளர்ச்சி தன்னால் வரத்தொடங்கியது. 

”ஆயிரக்கணக்கில் இருந்த வருவாய் வெகுவாக அதிகரித்து லாபம் அடைய தொடங்கிவிட்டோம். 3 பேர் அடங்கிய குழு 14 ஆக உயர்ந்தது. வீட்டின் அறையிலிருந்து பணிபுரியத் துவங்கி அலுவலகம் உருவானது. மாதத்திற்கு சில லட்சங்களாக இருந்த ஆர்டர்கள் தற்போது ஒரு கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. பணப்பற்றாக்குறைக்கு பிறகே இவை அனைத்தும் அரங்கேறியது,” என்றனர்.

செயல்படும் பகுதி

அனைத்து சந்தைகளையும் போலவே தேவை ஒருபுறமும் விநியோகம் மற்றொருபுறமும் இருந்தது. ஒரே சேவை, வெவ்வேறு விதமான வாடிக்கையாளர்களுக்கு மாற்றி அமைக்கப்படும் விதம்தான் BigFday-ன் தனித்துவம். உதாரணத்திற்கு ஒரே இடத்தை திருமணத்திற்கும் அளிக்கலாம் கருத்தரங்கிற்கும் அளிக்கலாம். விரைவில் திருமணம் ஆகப்போகிறவர்கள், தாய்மார்கள், கார்ப்பரேட்கள் என வெவ்வேறு தேவைகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரே வழங்கல் முறையில் ஒரே தளத்தின் மூலம் வழங்கலாம்.

தேவையையும் விநியோகத்தையும் சிறப்பாக ஒன்றிணைப்பதில் அடங்கியுள்ளது ஒட்டுமொத்த சவாலும். இவர்கள் தற்போது இந்தியாவில் சென்னை சந்தையில் கவனம் செலுத்தி வருகின்றனர். நிகழ்வுகளுக்கு (இடம், அலங்காரம், புகைப்படம் போன்றவை) ஒட்டுமொத்தமாக சென்னை நகரத்தில் 300 மில்லியன் டாலர்களுக்கும் மேல் செலவிடப்படுகிறது. இந்தியாவிலுள்ள பத்து நகரங்களுக்கு கணக்கிட்டுப் பார்த்தோமானால் இந்த சந்தையிலன் அளவு 4 பில்லியின் டாலர்களுக்கும் மேலாகும். உலகளாவிய ப்ராடக்டான BigFday இந்தியாவைத் தாண்டி வளர்ச்சியடையும் என்று இவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

”பயனாளிகளிடம் அதிக கவனம் செலுத்துவதுதான் எங்களது வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். எங்களது பயனாளிகள் எங்களைப் பற்றி பேசவேண்டும். சில மாதங்களுக்கு முன்பு வரை மார்கெட்டிங்கிற்காக நாங்கள் எந்த செலவும் செய்யவில்லை. எங்களது செயல்பாடுகளை பயனாளிகள் விரும்பினர். இதனால் அவர்கள் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் எங்களைப் பற்றி சொல்லி சிபாரிசு செய்தனர்,” என்றார் சபின்.

கற்றலுக்கான வாய்ப்பு

சென்னை ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் மற்றும் ஸ்டார்ட் அப் லீடர்ஷிப் ப்ரோக்ராம் (SLP) ஆகிய இரண்டும் சபினுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக இருந்தது. எந்தவித முன்னனுபவமுமில்லாத முதல் தலைமுறை தொழில்முனைவோரான அவர், தொழிலை நடத்துவதில் அதிக சிரமப்பட்டார். ஆனால் இங்குள்ளவர்கள் அந்த சிரமங்களை எதிர்கொள்ள உதவினார்கள்.

இப்படிப்பட்ட சந்திப்புகளில் மிகச்சிறந்த புத்திசாலிகளை சந்திக்கவும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இது அனைவருக்கும் தூண்டுதலாக அமைந்தது. SLP-யில் பங்கெடுப்பது ஒரு வரப்பிரசாதம். உலகெங்கிலுமுள்ள ஸ்டார்ட் அப் சமூகத்தினர் ஒன்று திரள்வதால் அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் அவர் செயல்படும் அதேத் துறையில் செயல்பட்டுவரும் ஸ்டார்ட் அப் நிறுவனர்களுடன் இணையும் வாய்ப்பு சபினுக்கு கிடைத்தது. வெவ்வேறு பகுதிகள் குறித்த கற்றலும் சர்வதேச வாடிக்கையாளர்கள் குறித்த புரிதலும் வந்தது என்று தன் அனுபவத்தை பகிர்ந்தார்.

”சென்னை ஸ்டார்ட் அப் சமூகத்தினர் ஒவ்வொருநாளும் வளர்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் சிறப்பாக வளர்வதற்கான சாத்தியங்களும் உள்ளது. இங்குள்ளவர்கள் மிகப்பெரிய அளவில் சாதனை படைக்க முடியும் என நிரூபித்துக் காட்டிய கிரீஷ், க்ரிஷ், முருகவேல் ஆகியோருக்கு நன்றி. நாங்கள் மேலும் சிறப்பாக செயல்பட இவர்கள் அனைவரும் ஊக்கமளித்தனர். அவர்களது தீவிர பங்களிப்பு ஸ்டார்ட் அப்பில் ஈடுபடும் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய உந்துதலாகும்.”
BigfDay குழுவினர்
BigfDay குழுவினர்

உலகளவில் செயல்படாத ஒரு பகுதியில்தான் இவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் பின்பற்ற எந்தவிதமான ஒப்பீடோ அல்லது தூண்டுதலோ இல்லை. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு அமேசான் ஒரு விதத்தில் தூண்டுகோலாக இருந்தது. அதே போல ஃப்ரெஷ் டெஸ்க் – செண்டெஸ்க், ஓலா – ஊபர், யெல்ப் – சொமேட்டோ. இந்த வரிசையில் BigFday-விற்கு ஒப்பிடுவதற்கு எந்த நிறுவனமும் இல்லை. இது ஒரு சிக்கலாக இருந்தது. ஏனெனில் ப்ராடக்ட் ஃப்ளோ முதல் வணிக மாதிரி வரை அனைத்தையும் புரிந்துகொண்டு தீர்வுகாண வேண்டியிருந்தது.

’பால் கிரஹம்’ என்பவரின் வலைபக்கம் இவர்களுக்கு தொடர்ந்து உத்வேகமளித்து வந்தது. அதிலிருந்து சில குறிப்புகளை மேற்கோள் காட்டுகிறார்:

ஆரம்பத்தில் அனைத்து ஸ்டார்ட் அப்களும் பொதுவாக பின்பற்ற வேண்டிய விஷயம் என்னவென்றால் பயனர்கள் உங்களைத் தேடி வரும்வரை காத்திருக்கக்கூடாது. நீங்களே அவர்களைத் தேடிப்பிடிக்கவேண்டும்.

பயனர்களை உங்களிடம் கொண்டுவருவதைக் காட்டிலும் அவர்களை மகிழ்விக்க அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். உங்களது முதல் பயனர் உங்களுடன் இணைந்துகொள்ள எடுத்த முடிவு மிகச்சரியானது என்று அவர்கள் உணரவேண்டும். அவர்களை தொடர்ந்து மகிழ்விக்க நீங்கள் புதுப்புது வழிகளை தொடர்ந்து யோசித்த வண்ணம் இருக்கவேண்டும்.

ஸ்டார்ட் அப் சமூகத்தின் வளர்ச்சியில் இவர்களின் பங்கு

சக ஸ்டார்ட் அப் நிறுவனர்களுடன் இவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அத்துடன் தொழில்முனைவோரை உருவாக்குவதில் அவர்களுக்கு ஆதரவளிப்பதிலும் முறையாக ஈடுபட்டு வருகின்றனர்.

இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதிநேர பணியாளர்கள் என சுயமாக செயல்பட விரும்பும் பலர் பங்கேற்க உகந்தது நிகழ்வு திட்டமிடல் துறை. தங்களை ப்ரொமோட் செய்துகொண்டு நிலைத்திருப்பதுதான் மிகப்பெரிய சிக்கலாகும். இவ்வாறு புதிதாக இந்தத் துறையில் நுழைவோர் வாடிக்கயாளர்களை அணுக உதவுவதுடன் அவர்களுடைய அன்றாட செயல்பாடுகளுக்கும் உதவுகின்றனர்.

ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களில் கார் ஓட்டுவதற்கு அதிக எண்ணிக்கையான ஓட்டுனர்கள் இணைந்துள்ளனர். மேலும் பகுதிநேர பணி வாய்ப்பையும் பலர் தேர்ந்தெடுத்துள்ளனர். அதே போல நிகழ்வு திட்டமிடல் பிரிவிலும் பலர் இணைவதற்கு இவர்கள் அளிக்கும் ஆதரவு உதவும்.

”நீங்கள் ஈடுபடும் நடவடிக்கைகளில் நம்பிக்கையுடனும் கவனத்துடனும் செயல்படுங்கள். உங்கள் மனதில் இருப்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது சில சமயம் கடினமாக இருக்கும். ஆகவே நீங்கள் செயலில் காட்டுங்கள்,”

என்று தங்களின் இரண்டாண்டு கால வெற்றிப்பயண அனுபவத்தை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.