தத்தளித்த சென்னை சிட்டிசன்களுக்கு கைகொடுத்த 'சமூக' ஊடக நெட்டிசன்கள்!

0

தமிழ் நெட்டிசன்களில் 'தல ', 'தளபதி ' புராணம் பேசுவோரின் ஆதிக்கமே அதிகம் என்ற தவறான பிம்பம் மீண்டும் ஒருமுறை மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் 'சமூக அக்கறை 'க்கே முன்னுரிமை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள், சென்னை வலைதளவாசிகள்.

தலைநகரைப் புரட்டிப் போட்ட கனமழை - வெள்ள பாதிப்பின்போது, முன்னெச்சரிக்கை தகவல்கள், அந்தந்தப் பகுதிகளின் நிலைமைகள் தொடர்பான பதிவுகள், படங்கள் மூலம் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களால் உடனுக்குடன் அப்டேட்டப்பட்டன. ஸ்மார்ட்ஃபோன் யுகத்தில் தகவல் பரிமாற்றத்தை சகமனிதர்களின் பாதுகாப்புக்காக சரியான முறையில் சமூக ஊடங்கள் பயன்படுத்தப்படுவதற்கு, தண்ணீரில் தத்தளித்த சென்னை சிட்டிசன்களுக்கு கைகொடுத்த 'சமூக' ஊடக நெட்டிசன்களே சான்று!

வரலாறு காணாத வட கிழக்கு பருவமழையால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த சென்னை மாநகர மக்களுக்கு சோதனையான நேரத்தில் சமூக ஊடகங்கள் கைகொடுத்துள்ளன என்பது மகிழ்ச்சியான தகவல். டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் மழை வெள்ளம் தொடர்பாக பகிரப்பட்ட தகவல்கள் மழை பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தியதோடு, முன்னெச்சரிக்கை செய்யும் வகையிலும் அமைந்திருந்தன. (பல பொய் செய்திகள் வலம் வந்தாலும் உண்மை பகிர்வுகளும் இருந்தன)

இதற்கு முன்னர் இப்படி ஒரு மழை பாதிப்பை கண்டதில்லை என சென்னைவாசிகளை புலம்ப வைத்த பெரு மழைக்கு நடுவே, இதற்கு முன்னர் இப்படி ஒரு தகவல் பகிர்வு நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு சமூக ஊடகங்களில் மழை தொடர்பான தகவல்கள் மிதந்து வந்தன.

மழை ஹாஷ்டேக் #

தீபாவளி பண்டிகையின் போதே தீவிரமடையத் துவங்கிய வட கிழக்கு பருவமழை 15 ம் தேதிக்குப்பிறகு உச்சத்தை தொட்டது. 16ஆம் தேதி சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை, நகரில் தாழ்வான பகுதிகளை முதலில் வெள்ளத்தில் மூழ்க வைத்ததுடன், பல முக்கிய சாலைகளையும் வெள்ளக்காடாக்கி தத்தளிக்க வைத்தது.

பருவமழை தொடர்பான வானிலை எச்சரிக்கைகளும், மீடியாக்களின் செய்திகளும் மழை பாதிப்பை அறிந்து கொள்ள உதவினாலும், சமூக ஊடகங்களில் சென்னைவாசிகள் பகிர்ந்து கொள்ளத்துவங்கிய தகவல்களே கள நிலைமையை உணர்த்துவதாக அமைந்தன. நகரில் எந்த இடங்களில் வெள்ளம் அதிகம் தேங்கியுள்ளது, எங்கெல்லாம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுத்துந்துள்ளது எனும் விவரங்களை நேரடியாக பாதிக்கப்பட்ட பலர் குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டனர். எளிதாக அடையாளம் காணப்படுவதற்காக இந்த குறும்பதிவுகள் #ChennaiRains, #சென்னைமழை எனும் ஹாஷ்டேகுடன் வெளியாயின. #StaySafe, #ChennaiFloods போன்ற ஹாஷ்டேகுகளும் உருவாக்கப்பட்டன. இந்த ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் சென்னைவாசிகள் மத்தியில் கடந்த பத்து நாட்களாக பிரபலமாக இருந்து வருகிறது.

பாதிப்பின் பதிவுகள்

அனூப் பாலசந்திரன் (@anoop_b) என்பவர் 15 ம் தேதி பகிர்ந்து கொண்ட குறும்பதிவில், "நான் விழித்திருக்கும் 7 மணி நேரத்தில் மழை கொஞ்சம் கூட குறையவில்லை. சென்னை மழையால் தாக்கப்படுகிறது” என குறிப்பிட்டிருந்தார்.

இதே போல மகேஷ் குமார் (‏@maheshkumarse) என்பவர் மழை வெள்ளத்தில் முழ்கிய குடியிருப்பு பகுதிகளின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.

கவுரவ் மோட்வானி (‏@gmots) வேளச்சேரி நீரில் மூழ்கி இருக்கும் பகுதிகளை புகைப்படமாக பகிர்ந்து கொண்டார்.

நாராயணன் (‏@snandhu ) என்பவர் ஐந்து நிமிடங்களுக்கு முன் மாம்பலம் ரெயில் நிலையத்தின் நிலை இது என தண்ணீர் சூழ்ந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து கொட்டும் மழை, அச்சமடைய செய்கிறது என பகிர்ந்தார் நெல்லை அண்ணாச்சி (@drkvm)

சென்னை இது போன்ற மழையை கண்டதில்லை, வீட்டுக்குள்ளே இருப்பதே பாதுகாப்பானது என ரங்கராஜன் (‏@rangakidambee ) எனும் டிவிட்டர் பயனாளி எச்சரித்திருந்தார்.

ருத்ரன் என்கிற குமரேசன் (VTKumarasan) கவிதை போன்று ரசிக்க வேண்டிய மழை இங்கு காட்டுமிராண்டி ஆகி மிரட்டுகிறது என்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார்.

மழை பாதிப்பு பற்றிய பொதுவான தகவல்களுடன் எந்த எந்த இடங்கள் போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை எனும் தகவல்களும் டிவிட்டரில் பகிரப்பட்டன. சென்னை தேனாம்பேட்டையில் தண்ணீர் தேங்கியுள்ளது, ஆனால் சாலையில் செல்லலாம் என செளமியா ( ‏@sowmyarao_) என்பவர் தெரிவிதிருந்தார். 

மறு பக்கத்தில் சஞ்சீவி சடகோப்பன் (@sanjusadagopan) நேற்று பெய்த தீடிர் கன மழையால் சென்னை போக்குவரத்து ஸ்தம்பித்ததை ட்வீட் செய்து படமும் வெளியிட்டு பிறருக்கு எச்சரிகை தகவலை தந்தார்.

இதைவிட முக்கியமாக, சிலர் தாங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளில் பலமணி நேரமாக மின்சாரமின்றி மாட்டிக்கொண்டதை ட்வீட் செய்து படகு உதவி கேட்டு வெளியிட்டதன் மூலம் பலர் அதை மறு பகிர்வு செய்ததன் மூலம், உதவி கிடைத்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது சமூகவலைதளத்தின் சிறப்பு என்றே சொல்லலாம்.

பிரபலங்களின் டிவீட்கள்

பொதுமக்கள தவிர பல திரை நட்சத்திரங்களும் மற்றும் பிரபலங்களும் மழை வெள்ள அப்டேட்டை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு தங்கள் சமூக பொறுப்பை வெளிப்படுத்தினர். 

இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் (‏@ash_r_dhanush ) 'சாலைகளில் கிட்டத்தட்ட கழுத்து அளவுக்கு தண்ணீர் --போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.. என ஒரு குறும்பதிவும் குறிப்பிட்டிருந்தார்.

தீவிர டிவிட்டர் பயனாளியான நடிகை குஷ்பு (@kushsundar ) மழை வெள்ளம் தொடர்பாக பயனுள்ள குறும்பதிவுகளை தனது பக்கத்தில் ரீடிவீட் செய்வதிலும் கவனம் செலுத்தினார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பட்டியலையும் அக்கரையுடன் ரீடிவீட் செய்திருந்தார்.

வானிலை பதிவர்கள்

இப்படி நெட்டிசன்கள் பாதிப்பை பதிவு செய்து பகிர்ந்ததுடன் நிற்கவில்லை, மீட்பு பணி பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டனர். மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் சேவையையும் சுட்டிக்காட்டினர். உதாரணத்திற்கு தண்ணீரில் மூழ்கிய சுரங்கப்பாதையில் வழிகாட்டிக்கொண்டிருந்த போக்குவரத்து காவலரின் கடமை உணர்ச்சியை @DEEPU_S_GIRI படம் பிடித்து காட்டியிருந்தார்.

டிவிட்டர் தவிர ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் வாட்ஸ் அப் மூலமும் மழை பாதிப்பு மற்றும் மீட்பு தகவல்களையும் இணையவாசிகள் பகிர்ந்து கொண்டனர்.

மழை உச்சத்தை தொட்ட நிலையில் ஏரிகளின் நிலவரம், தண்ணீர் திறக்கப்படும் தகவல் போன்றவற்றையும் பலர் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே வானிலை வலைப்பதிவர்களும் மழையோடு போட்டி போட்டப்படி விடிய விடிய மழை தகவல்களை வெளியிட்டு கொண்டிருந்தனர். சென்னைரெயின்ஸ்.காம் வானிலை பதிவை நடத்தி வரும் ஸ்ரீகாந்த் மற்றும் சக பதிவர்கள் @ChennaiRains டிவிட்டர் பக்கம் மூலம் மழை விவரங்களையும் அளித்தனர். ஆபத்தான பகுதிகள், அவசர கால தகவல்கள் ஆகியவற்றை வழங்கியவர்கள் குறும்பதிவுகளில் உலா வந்த தவறான தகவல்கள் பலவற்றை திருத்தும் வகையிலும் செயல்பட்டனர்.

சுமார் 8000க்கும் மேலான ஃபாலோயர்கள் கொண்டுள்ள 'தமிழ்நாடுவெதர்மேன்' என்ற ஃபேஸ்புக் பக்கம் வைத்திருக்கும் வானிலை பிளாக்குகள் எழுதும் பிரதீப் ஜான், தனக்குள்ள வானிலை பற்றிய அனுபவங்கள் மூலமாக இணையவாசிகளுக்கு அறிவுரையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். மக்களின் உடனடி சந்தேகங்களுக்கு பதிலையும் தருவது இவரது சிறப்பு. மழை விவரம் மற்றும் கணிப்புகள் வெளியாகி சரியான புரிதலை அளித்தார்.

மழை வெள்ளம் பற்றிய சமூக ஊடக தகவல்கள் பயனுள்ளதாக இருந்தாலும், பலர் வதந்திகளை அப்படியே பகிர்ந்து கொண்டது குழப்பத்தைம்யு ஏற்படுத்தியது. மதுராந்தகம் ஏரி உடைந்து விட்டது போன்ற தகவல்கள் அச்சத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கினாலும் நல்ல வேளையாக சக பயனாளிகளே அவற்றை மறுத்து உண்மை நிலையை தெளிவு படுத்தியிருந்தனர். மொத்தத்தில் சமூக ஊடகம் இது போன்ற அவசரகாலங்களில் ஆபத்பாண்டவனாய் உருவெடுத்து பலருக்கும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.